15 ஜனவரி 2012

மறதியே, உன் தாய்மொழி தமிழா ?


பென்னி குக்
     மறதி என்பது ஒரு தனி மனிதனைப் பொறுத்த வரையில் நன்மை பயக்கக் கூடியது என்று கூறுவர். ஒருவன் தனது வாழ்வின் நேற்றைய பிரச்சினைகள், சோகங்கள், நம்பிக்கை துரோகங்கள், துயரங்கள் அனைத்தையும் நிகழ்காலத்தில் நினைத்துக் கொண்டே இருப்பானேயானால், அம்மனிதனது எதிர்காலம் பாதிக்கப்படும்.

     ஒருவன் தனக்கு மற்றவர்கள் செய்த உதவிகளை, தனது முன்னோர்களின் பெருமைகளை, சாதனைகளை மறந்து விடுவானேயானால் அல்லது தனது சந்ததியினருக்கு, இத் தகவல்களைக் கொண்டு சேர்க்காமல் விட்டு விடுவானேயானால், அவனது குலப் பெருமை அவனோடு சேர்த்துப் புதைக்கப்பட்டுவிடும்.
    தனி மனிதர்கள் சேர்ந்ததுதான் சமூகம். பழமையினை மறந்த தனி மனிதர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் பொழுதும், சமுதாய ஒற்றுமை சீர்குலையும் போதும், அவன் சார்ந்த சமூகத்தின் பழம்பெருமைகளும், உரிமைகளும், மறுக்கப்படுவதும், மறக்கப்படுவதும் எளிதான செயலாக மாறிவிடும். அச்சமூகத்தின் பெருமைகள், சாதனைகள், போதனைகள் அனைத்தும், வரலாற்றின் பக்கங்களில் இருந்து அழிக்கப்பட்டு, இதுபோன்று ஒரு சமூகம் இருந்ததே வருங்காலத் தலைமுறையினருக்குத் தெரியாமல் போய்விடும் வாய்ப்புகள் அதிகமுண்டு.
     கல்தோன்றி மண் தோன்றா காலத்தே முன்தோன்றிய மூத்த குடி என்று தமிழராகிய நாம், பெருமைப்பட்டுக் கொண்டாலும், மறதி என்னும் ஒர் கொடிய தொற்று நோயின் பிடியில் சிக்கி, நம்மை நாமே மறந்து வாழ்கிறோமா? என்று எண்ணத் தோன்றுகிறது.
     கர்நாடகத்துடன் காவிதி நீர் குறித்த பிரச்சினை, ஆந்திராவுடன் பாலாற்று பிரச்சினை, கேரளாவுடன் முல்லை பெரியாறு அணை பிரச்சினை, இலங்கையுடன் கச்சத் தீவு பிரச்சினை என தமிழ் சமூகத்தின் பிரச்சினைகளின் எல்லைகள் விரிந்து கொண்டே செல்கின்றன.
     தமிழ் மக்களது உள்ளத்தில் நாமார்க்கும் குடியல்லோம் என்னும் நல்லுணர்வினை ஊட்டி, தேவாரத் திருப்பதிகங்களுக்குப் புத்துயிர் அளித்து, செந்தமிழும் சிவநெறியும் செழித்து வளர ஆக்கந்தரும் நெறிமுறைகளை உருவாக்கியவர் முதலாம் இராசராச சோழன் ஆவார்.
     தமிழர்களின் கட்டிடக் கலைச் சிறப்பிற்கும், சிற்பக் கலையின் செழிப்பிற்கும், கல்வெட்டுகளின் பெருக்கத்திற்கும் எடுத்துக் காட்டாக விளங்குவது, ஆண்டுகள் ஆயிரம் ஆகியும், மங்காத பொழிவுடன் காட்சியளிப்பது, இராசராச சோழன் எழுப்பிய கற்றளி தஞ்சைப் பெரிய கோயிலாகும்.
     ஆனால் சென்ற நூற்றாண்டு வரை, தமிழர்கள் இப் பெரியக் கோயிலைக் கட்டியவர் யாரென்று கூட  தெரியாதவர்களாக, நமது மூதாதையரின் பெருமையினை அறியாதவர்களாக இருந்திருக்கிறார்கள் என்பதுதான் மிக மிக வருத்தப்பட வேண்டிய உண்மையாகும்.
     கிருமி கண்ட சோழன் என்பவனால் கட்டப் பெற்றது என்று பிரகதீஸ்வர மகாத்மியம் என்னும் வடமொழி புராணத்திலும், காடு வெட்டிச் சோழனால் கட்டப் பெற்றது என்று ஜி.யு.போப் அவர்களாலும் தவறானத் தகவல்களே பதிவு செய்யப்பட்டன. தமிழர்கள் அதனையும் நம்பி வந்தனர்.
     ஆங்கிலேயர்களின் ஆட்சியின்போது, கல்வெட்டு ஆய்வாளராக நியமிக்கப் பட்ட ஜெர்மன் அறிஞர் ஹூல்ஸ் என்பவரே 1886 ஆம் ஆண்டு பெரிய கோயில் கல்வெட்டுக்களைப் படியெடுத்துப் படித்து, இப்பெரிய கோயிலைக் கட்டியவர் இராசராச சோழன் என்று உலகிற்கு அறித்த பெருமைக்கு உரியவராவார். ஒரு ஜெர்மானியன் சொல்லித்தான் நமது முன்னோர்களைப் பற்றி நமக்கே தெரிந்தது.
     தமிழகத்தின் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் இராமநாத புரம் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த, 1886 ஆம் ஆண்டு முதல் 1895 ஆம் ஆண்டுவரை கடுமையாகப் போராடி, தனது சொந்த சொத்துக்களை விற்று, நமக்காக முல்லைப் பெரியாறு அணையினைக் கட்டிக் கொடுத்தவர் ஒரு ஆங்கிலேயர் பென்னி குக்.
      தமிழர்களாகிய நமக்காக, தனது சொந்த சொத்துக்களை விற்று, அணையினைக் கட்டி, நமது வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொடுத்தாரே, பென்னி குக், அவரையாவது நாம் நினைவில் வைத்திருந்தோமா என்றால், இல்லை என்பதே வேதனைத் தரக்கூடிய பதிலாகும்.
     முல்லைப் பெரியாறு அணை கட்டப் பெற்று 116 ஆண்டுகள்தான் ஆகிறது. அதற்குள் பென்னி குக்கை மறந்து விட்டோம்.
ஓ.ஆண்டி
      ஆம், பதினைந்து வருடங்களுக்கு முன்பு வரை, பென்னி குக் யாரென்று நமக்குத் தெரியாது. தேனி மாவட்டத்தின், பாலார் பட்டி கிராமத்தின் அனைத்து வீடுகளிலும், பென்னி குக்கின் புகைப்படம் மாட்டப் பட்டிருந்தது. ஆனால் அவ்வீடுகளிலுள்ள மக்களுக்கும், ஏன் நமக்கும் கூட அவர் யாரென்று தெரியவில்லை. இந்தப் படம் எங்கள் வீட்டில் காலங் காலமாக மாட்டப் பட்டிருக்கிறது, ஆனால் அவர் யாரென்று எங்களுக்குத் தெரியாது என்பதுதான் அனைவரின் பதிலாக இருந்தது.
     பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர், அதே பாலார் பட்டி கிராமத்தைச் சேர்ந்த, ஓ.ஆண்டி என்பவரை, இந்தப் படம்  வெகுவாக பாதித்தது. எதற்காக நமது கிராமத்தில் உள்ள அனைவரின் வீடுகளிலும் இந்தப் படம் மாட்டப்பட்டுள்ளது? இவர் யார்? என்று பலரையும் விசாரித்தார். பதில் கூறுவார் யாருமில்லை. விடை அறியாமல் விட்டு விடவும் மனம் வரவில்லை. ஒவ்வொரு நூலகமாக நுழைந்து விடையினைத் தேடினார்.
     முடிவில் இப்படத்தில் இருப்பவர் முல்லைப் பெரியாறு அணையினை நமக்காகக் கட்டிக் கொடுத்த பென்னி குக் என்று ஊரறிய உரத்த குரலில் அறிவித்தார்.
       பாலார் பட்டி விழித்துக் கொண்டது. தங்கள் வீட்டில இருக்கும் படத்தில் இருப்பவர் யார் என்பதை உணர்ந்து கொண்டனர். அன்று முதல் பென்னி குக்கைப் பற்றி பல்வேறு கட்டுரைகள் , நூல்கள் பாலார் பட்டியை வலம் வரத் தொடங்கின. தமிழகமும் தன் துயில் கலைத்து எழுந்தது.
பாலார் பட்டியில் கர்னல் பென்னி குக் நினைவு கலை அரங்கம் கட்டப்பெற்றது. சிலை நிறுவப்பட்டது. அன்று முதல் பென்னி குக் பிறந்த நாளான சனவரி 15 ஆம் நாளினை, தைத் திங்கள் முதல் நாளினை, பென்னி குக் பொங்கலாகவே பாலார் பட்டி கொண்டாடத் தொடங்கியது. பென்னி குக்கை மீட்டெடுத்ததற்காக தமிழர்களாகிய நாமெல்லாம் ஓ. ஆண்டி அவர்களுக்கு நன்றி கூற கடமைப் பட்டுள்ளோம்.

 
     ஹூல்ஸ் வந்தார் பெரிய கோயிலைக் கட்டியவரை நமக்குக் காட்டினார். ஆண்டி வந்தார், முல்லைப்பெரியாறு அணையினைக் கட்டியவரை கண்டுபிடித்துக் கொடுத்தார். இன்றும் எதை எதை எல்லாம் மறந்திருக்கின்றோமோ? தெரியவில்லை. யாராவது கண்டுபிடித்து நினைவு படுத்தினால்தான் நமக்கே தெரியவரும்.
      யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று உரைத்து உலகையே தமிழன் ஆண்டது ஒரு காலம். நமக்குச் சொந்தமானதைப் பெறுவதற்குக் கூட போராட வேண்டியிருப்பது இந்தக் காலம்.
தீதும் நன்றும் பிறர் தர வாரா.

      -----------------------------------------------------------
 சனவரி 15 ஆம் நாள்
கர்னல் பென்னி குக்கின் பிறந்த நாள்.
இந்நன்நாளில் பென்னி குக்கின் 
நினைவினைப் போற்றுவோம்

                  ___

தமிழர் திருநாளாம் பொங்கல் எனும் இப்
பொன்நாளில் புதிதாய் ஓர் சபதமேற்போம


பென்னி குக்கின் செல்வத்தையும் -வற்றா
நல் உள்ளத்தையும் அடித் தளமாக்கி,
தமிழர்களின்  உழைப்பால் உதிரத்தால் உயர்ந்த
முல்லைப் பெரியாறு அணையினைக் காக்க ...

தமிழர் திருநாளாம்  பொங்கல் எனும் இப்
பொன்நாளில் புதிதாய் ஓர் சபதமேற்போம்...

 _______________________________________
நன்றி - டெக்கான் குரோனிக்கல்
சிந்தனை செய் மனமே
கேட்டதில் பிடித்தது

ஆசிரியர் என்னும் சொல் ஐந்து எழுத்துக்களை உடையதாகும்.

முதல் எழுத்து
ஆ எனில்  பசு, அமைதியானவர், பொறுமை மிக்கர்

முதல் இரண்டு எழுத்துக்கள்
ஆசி எனில் மாணவர்கள் நல்வாழ்வு வாழ வாழ்த்துபவர்

இரண்டு மற்றும் மூன்றாம் எழுத்துக்கள்
சிரி எனில் எப்பொழுதும் சிரித்த,மலர்ந்த முகத்துடன் இருப்பவர்

இரண்டாம் எழுத்து தவிர மற்றைய எழுத்துக்கள்
ஆரியர் எனில் நன்கு படித்தவர், உலகியல் அறிவு பெற்றவர்

ஒன்று, நான்கு மற்றும் ஐந்தாம் எழுத்துக்கள்
ஆயர் எனில் மாடுகளை மேய்த்துக் காப்பர் ஆயர், மாணவர்களை ஓரிடத்தில் அமரச் செய்து,கல்வி புகட்டி நல்வழி படுத்துபவர்

(கடந்த 16.1.2012 அன்று தஞ்சாவூர், பெசண்ட் அரங்கில் நடைபெற்ற உலகத் திருக்குறள் பேரவையின் விழாவில், முனைவர் இரா.கலியபெருமாள் அவர்கள் வரவேற்புரையின் போது உரைத்தது)


கேட்டதில் பிடித்தது

      மனிதனின் விவசாயப் பணிகளில் உடனிருந்து உழைப்பவை மாடுகள். விளைந்த நெற்பயிர்களை அரிசியாக்கி மனிதன் உணவாய் உண்ண, மாடுகளோ மீதமிருக்கும் பதர்களையும், வைக்கோல்களையும் உண்டு, நமக்காக பால் வழங்கி உதவுகின்றன. மாட்டுச் சாணம் தான்,  திருநீறாக நமது நெற்றியினை அலங்கரிக்கின்றது. இம் மாடுகளைக் கட்டி வைக்கும் இடத்திற்கு தமிழர்கள் தொழுவம் என்று பெயரிட்டனர். இந்த தொழுவம் என்ற சொல்லானது தொழுவோம் என்ற சொல்லில் இருந்து பெறப்பட்டதாகும்.
     கோவிலின் கருவறையில் இருக்கும் இறைவனை வணங்குதலை தொழுதல் என்று கூறுவர். நம்மைப் படைத்து, காத்து அருளும் தெய்வத்தைத் தொழுகிறோம். அதனைப் போலவே, நாம் உயிர் வாழ்வதற்காக மேற்கொள்ளும் விவசாயப் பணிகளில், பெரும்பங்காற்றி வரும் மாடுகளையும் தொழ வேண்டும் என்றும் நோக்கிலேயே, மாடுகள் தங்குமிடத்திற்கு தொழுவோம், தொழுவம் என்று தமிழர்கள் பெயர் சூட்டியுள்ளனர்.

(கடந்த 16.1.2012 அன்று தஞ்சாவூர், பெசண்ட் அரங்கில் நடைபெற்ற உலகத் திருக்குறள் பேரவையின் விழாவில், தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் பேராசிரியர் முனைவர் மு. சிவச்சந்திரன் அவர்கள் தனது சிறப்புரையின்போது உரைத்தது)





01 ஜனவரி 2012

முல்லை பெரியாறு - தமிழ் மானுடம் வெல்லும்


பென்னி குக்
             பென்னி குக், முல்லைப் பெரியாறு அணையின் நாயகன். ஆங்கிலேயரான இவர் 1841 ஆம் ஆண்டு சனவரி மாதம் 15 ஆம் நாள், தமிழர்களின் திருநாளான பொங்கல் தினத்தன்று மராட்டிய மாநிலத்தின் புனே நகரில் பிறந்தவர். இவரது தந்தை பிரிகேடியர் ஜெனரல் ஜான் பென்னி குக் இந்திய இராணுவத்தில் பணிபுரிந்து வந்த காலத்தில் இந்தியாவில் பிறந்தவர்தான் பென்னி குக். இலண்டனில் பொறியியல் படித்து முடித்தவுடன் 1858 இல் இந்தியாவில் கால் பதித்தார்.  மூன்றாண்டுகளுக்குப் பிறகு உயர் கல்வி கற்பதற்காகத் தாயகம் திரும்பினார். 1862 இல் மீண்டும் இந்தியா திரும்பி மாவட்ட உயர் பொறியாளராகப் பணியில் சேர்ந்தார்.
     அபிசீனியாவில் போர் மூளவே, ஆங்கிலேய இராணுவத்தில் இணைந்து போர்முனைக்குச் சென்றவர், மீண்டும் 1867 இல் இந்தியா திரும்பினார். ஆங்கிலேயராக இருந்த போதிலும் இந்தியா இவரை வா, வா என்று அழைத்துக் கொண்டேயிருந்தது, இந்தியாவின் மீதும், குறிப்பாகத் தமிழர்களின் மீதும் மாறா பாசம் கொண்டவர் பென்னி குக். இந்தியா திரும்பிய பென்னி குக் அவர்களிடம், அன்றைய ஆங்கிலேய அரசால், பெரியாறு அணை சர்வே திட்ட அலுவலர் பொறுப்பு வழங்கப் பெற்றது.
முல்லை பெரியாறு பருந்துப் பார்வை
பெரியாறு அணையினை எங்கே கட்டினால் சரியாக இருக்கும் என்பதைக் கண்டுபிடிக்க வேண்டிய பெரும் பணியினை மகிழ்வுடன் ஏற்றார். காடு மேடு என மெய்வருத்தம் பாராமல் அலைந்து, பெரியாறு அனணக்கான இடத்தினைத் தேர்வு செய்து, அணையின் உயரம், தேங்கும் தண்ணீரின் அளவு, அணையின் வரைபடம், திட்ட மதிப்பீடு முதலான பணிகளில் தன்னை முழுமையாக அர்ப்பணித்தார். இந்நிலையில் 1869 இல் மீண்டும் இலண்டனிலிருந்து அழைப்பு வரவே இலண்டன் பயணமானார்.
     மீண்டும் 1872 இல் இந்தியா திரும்பினார். இம்முறை தென் ஆற்காடு மாவட்ட பொறியாளர் பொறுப்பு இவருக்காகக் காத்திருந்தது. மேலும் இரண்டாண்டுகளில் முல்லைப் பெரியாறு பொறுப்பும் வந்து சேர்ந்தது.
     அணையின் கட்டுமானப் பணிக்கான அனைத்துக் கோப்புகளுக்கும் அனுமதி வழங்கப் பட்ட நிலையில்,1876 மற்றும் 1877 ஆம் ஆண்டுகளில் இந்தியவே மாபெரும், கொடிய கோரப் பஞ்சத்தின் பிடிகளில் சிக்கித் தினறிப் போனது. பஞ்சத்தினைப் போக்க அதிக அளவில் பணம் செலவிடப்பட்டதால் அணை கட்டும் பணி தள்ளிப் போடப் பட்டது. இதனால் ஆறு ஆண்டுகள் அணை கட்டும் பணியாணது எழுத்து வடிவத்தில், தாட்களிலேயே முடங்கிப் போனது.
     1882 ஆம் ஆண்டு மே மாதம் 8 ஆம் நாள் முல்லைப் பெரியாறு தொடர்பான கோப்புகள் மீண்டும் பென்னி குக்கிடம் ஒப்படைக்கப் பட்டன.
     1886 ஆம் ஆண்டு நவம்பர் 22 ஆம் நாள் , திருவாங்கூர் மகாராசாவுடன் 999 ஆண்டுகாலக் குத்தகைக்கு ஒப்பந்தமும் கையெழுத்தாகியது. 1887 ஆம் ஆண்டு ஆங்கிலேய அரசாங்கம் பணியினைத் துவக்க அனுமதி அளிக்கவே பென்னி குக், தனது கனவுத் திட்டத்திற்கு உருவம் கொடுக்கும் செயலில் வரிந்து கட்டிக் கொண்டு இறங்கினார்.அணையின் கட்டுமானப் பணிகள் தொடங்கின.
     1889 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 17 ஆம் நாள் பெய்த மழையினை, சாதாரணமாக மழை என்று கூறக் கூடாது, பேய் மழை என்றே கூறலாம். ஒரு விநாடி கூட இடைவெளி விடாமல், நான்கு மணிநேரம் மழை ஆடிய கோரத் தாண்டவத்தின் விளைவாக வேரோடு அடித்துச் செல்லப் பட்ட பல மரங்களுடன் சேர்ந்து,  அனணயின் இரண்டு நீர் போக்கிகளும் அடித்துச் செல்லப் பட்டன.சற்றும் மனம் தளராத பென்னி குக், எப்பாடு பட்டாகினும் அணையினைக் கட்டியேத் தீர்வது என்னும் உறுதியான நிலைப் பாட்டில். பணியினை மீண்டும் தொடங்கினார்.
    1894 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அணைக் கட்டுப் பகுதியில் பரவிய காலரா நோயானது, ஆங்கிலேயப் பொறியாளர்கள் உட்பட, சுமார் 45 பணியாளர்களைப் பலிவாங்கியது. கட்டுமானப் பணியின் போது இறந்தவர்களின் கல்லறைகள் இன்றும் அங்கே, தியாகச் சின்னங்களாய் நிலைத்து நிற்கின்றன.
     1890 ஆம் ஆண்டு ஜுன் மாதத்தில் பேய் மழையானது தனது கோரத் தாண்டவத்தை மீண்டும் ஒரு முறை அரங்கேற்றியது. இதன் விளைவாக தடுப்புக்காக வைக்கப்பெற்றிருந்த மணல் மூட்டைகள் அத்தனையும் சிதறியதோடு, அணையின் தரைத் தளமுமம் மிகுந்த பாதிப்புக்குள்ளாகியது.
     பென்னி குக் பல ஆண்டுகள் உயிரைப் பணயம் வைத்து உழைத்த உழைப்பு ஒரே நாளில் வீணானது.
     முல்லைப் பெரியாறு என்பது பென்னி குக்கைப் பொறுத்தவரையில், கட்டிடமல்ல, தண்ணீரைச் சேமித்து வைக்கும் சேமிப்புக் கிடங்குமல்லை,அது அப்பகுதி மக்களின் வாழ்வாதாரம். பல ஆயிரம் ஏக்கர் வறண்ட நிலங்களில், தென்றலாய் தவழ்ந்து, பயிராய் எழுந்து, உணவாய் உருப்பெற்று, இலட்சக் கணக்கான மக்களின் வயிற்றுப் பசியைப் போக்கக் கூடிய அட்சய பாத்திரம். பென்னிக் குக் வாய்விட்டுக் கதறினார். அனலிடைப் புழுவாய்த் தவித்தார். இயற்கையே ஏன் இவ்வாறு செய்தாய்? நல்ல நோக்கத்திற்காகச் செய்யும் செயலுக்கு இவ்வளவு தடைகளை ஏன் உருவாக்குகிறாய்? எனக் கொதித்தார்.

            
ஒருவாறு மனதைத் தேற்றிக் கொண்ட பென்னிக் குக், அணையின் கட்டுமானப் பணியினை மீண்டும்  தொடங்குவதற்காக ஆங்கிலேயே அரசுக்கு கடிதம் எழுதி, பண உதவி கோரினார். ஆனால் ஆங்கிலேயே அரசாங்கமோ எதிர்பார்த்ததைவிட செலவு அதிகமாகிக் கொண்டே போவதை உணர்ந்து இனியும் செலவு செய்ய தயாராக இல்லை என இரு கைகளையும் விரித்து விட்டது.
                    தேடிச் சோறுநிதந்  தின்று - பல
                          சின்னஞ்  சிறுகதைகள் பேசி மனம்
                     வாடித்  துன்பமிக  வுழன்று - பிறர்
                         வாடப்  பல செயல்கள்  செய்து - நரை
                    கூடிக்  கிழப்பருவ  மெய்தி  - கொடுங்
                         கூற்றுக்  கிரையெனப்  பின்மாயும் - பல
                    வேடிக்கை  மனிதரைப்  போலே - நான்
                        வீழ்வே  னென்றுநினைத்  தாயோ?
நான் வீழ மாட்டேன், சாம்பலில் இருந்து மீண்டும் உயிர்ப்பெற்று எழும் பீனிக்ஸ் பறவை போல, மீண்டு எழுவேன், தொடங்கிய செயலினை முடிக்காமல் கண் துஞ்ச மாட்டேன் என்று வீறு கொண்டு எழுந்தார் பென்னி குக்.
      தொடங்கிய வேலையினை முடிக்காமல் இங்கிருந்து நகரக்கூடாது, எத்துனையோ தடைகளைத் தகர்த்தெறிந்துத விட்டோம், இத் தடையையும் கடக்க வேண்டும், நிச்சயம் இதுவும் கடந்து போகும். ஏனெனில் காலத்தைக் கடந்து நிற்கப் போகும் அணை இது, கேவலம் பணம் இல்லை என்பதால் இத்திட்டத்தைக் கைவிடுவதா? பணத்தினை அரசு தராவிட்டால் என்ன? மக்கள் இருக்கிறார்கள், மக்களோடு இணைந்து இத்திட்டத்தினை நிறைவேற்றியே தீருவது என்று தீர்க்கமாய் முடிவு செய்து களத்தில் இறங்கினார்.
      செல்வந்தர்கள் பலரை அணுகி நிதியுதவி செய்யுமாறு வேண்டினார்.சுருளியாறும், கொட்டக்குடி ஆறும் சந்திக்கும் தேனி என்னும் கூட்டுரோடு பகுதிக்கு அருகே வசித்து வந்த பழனிச் செட்டி என்னும் ஒரு தமிழர் முதல் உதவிக் கரத்தை நீட்டினார். ஏலச் சாகுபடி செய்து வந்த பழனிச் செட்டி அவர்கள் ஒன்றல்ல, இரண்டல்ல, இரண்டாயிரம் வெள்ளி நாணயங்களை தனது அன்பளிப்பாக பென்னி குக்கிடம் வழங்கினார். மெய் சிலிர்த்துப் போனார் பென்னி குக். பின்னாளில் பழனிச் செட்டிப் பட்டி என்னும் ஊருக்கு தடுப்பு அணை ஒன்றினை கட்டி, அதற்கு காலவாய் ஏற்படுத்தி, அந்தக் காலவாய் மூலம், பழனிச் செட்டி வசித்த இடத்தைச் சுற்றியுள்ள நிலங்கள் பாசனம் பெற எற்பாடு செய்தார். தடுப்பு அணையினைப் பராமரிக்கும் உரிமையினை பழநியப்பச் செட்டிக்கே வழங்கினார். இன்றும் கூட பழனியப்ப பாசன பரிபாலன சபை என்னும் பெயரில் வளர்ந்து நிற்கின்றது அந்த அணை.
       நிதியுதவி கிடைக்கக் கிடைக்க முல்லைப் பெரியாறு அணையும் உயர்ந்தது. நிதி கிடைக்காதபோது பணி நிறுத்திவைக்கப் பட்டது. நிதி கிடைத்தால் பணி செய்வதும், மற்ற நேரங்களில்  நிதி திரட்ட அலைவதுமாக பென்னி குக்கின் நேரம் கழிந்தது.ஒரு நாள் பென்னி குக்கின் மனதில், மின்னலாய் ஒரு எண்ணம் பளிச்சென உதயமாயிற்று. இப்படி ஓடி, ஓடி நிதி திரட்டினால் அணையின் கட்டுமானப் பணியானது தனது ஆயுட்காலத்தில் நிறைவேறாது என்பது புரிந்தது. உடனே இலண்டன் சென்றார். தனது அத்தனைச் சொத்துக்ளையும் விற்று, பணம் திரட்டிக் கொண்டு வந்து, அணையின் கட்டுமானப் பணியினைத் தொடர்ந்தார்.
பாலார் பட்டியில் பென்னி குக் பொங்கல்(நன்றி- குமுதம்)
     அரசாங்கம் செய்திட வேண்டியப் பணியினைத் தனியொரு ஆளாக, தன் தோளில் சுமந்து, தனது சொந்த நிதியினைக் கொண்டு அணையினைக் கட்டி முடித்தார்.
      இன்று தலை நிமிர்ந்து கம்பீரமாய் காட்சியளிக்கும் முல்லைப் பெரியாறு அணை, பென்னி குக்கின் உதிரத்தாலும், வேர்வையாலும் கட்டப் பெற்ற அணையாகும்.அப்பகுதி மக்களின் வேர்வையும், உழைப்பும், செல்வமும், உயிரும் முல்லைப் பெரியாறு அணையின் ஒவ்வொரு கல்லிலும், ஒவ்வொரு மணல் துகளிலும் கலந்திருக்கின்றது.
 ( நன்றி குமுதம் , 11,1,2012)
     
    தமிழக வரலாற்றில் நீங்கா இடம் பெற்ற பெயர் பென்னி குக். இன்றும் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதி மக்கள் தங்கள் குழந்தைகளுக்கு பென்னி குக் என்று பெயரிடுகின்றனர். முல்லைப் பெரியாறு அணையினால், தங்களின் வாழ்வாதாரம் உயர்ந்ததை எண்ணி, இன்றும், பாலார் பட்டி மற்றும் ஏனைய கிராம மக்கள் பென்னி குக் பிறந்த
நாளான, சனவரி 15 ஆம் தேதியினை, பொங்கல் விழாவிற்குப் பதிலாக, பென்னி குக் விழாவாக கொண்டாடி மகிழ்கின்றனர். பொங்கல் வைத்து படையலிட்டு மகிழ்கின்றார்கள். கேட்டால் இதுதான் தமிழர் திருநாள் என்கிறார்கள்.
(நன்றி -குமுதம் 11.1.2012)
       ஆம் ஒரு ஆங்கிலேயர், தமிழராக போற்றப் படும், தெய்வமாக வணங்கப்படும்  மாபெரும் வரலாற்று நிகழ்வு என்றே இதனைக் கூறலாம்.
     விவசாயிகரளுக்காகக் கட்டப்பெற்ற அணை முல்லைப் பெரியாறு. எந்தவொரு  அரசாங்கத்திற்காகவும் அது கட்டப் படவில்லை. மக்கள் நீர் வளம் பெற்று வாழ வேண்டும் என்பதே பென்னி குக்கின் கனவு. அக் கனவை நிறைவேற்றத்தான் தன் சொத்துக்களை விற்று அணையை உருவாக்கினார்.
                        
                        இப்புவியில்
                        நான் வந்த செல்வது
                        ஒரு முறைதான்
                        எனவே
                        நான் இங்கே
                        ஒரு நற்செயல் புரிந்திட வேண்டும்
                        இதனை
                        தள்ளி வைப்பதற்கோ
                        அல்லது
                        தவிர்ப்பதற்கோ இடமில்லை
                        ஏனெனில்
                        மீண்டும் ஒரு முறை
                        நான்
                        இப்புவியில் வரப் போவதில்லை
பென்னி குக்கின் இக் கவிதை வரிகளைப் பாருங்கள், உதடுகளால் உச்சரித்துப் பாருங்கள்,முல்லைப் பெரியாறு அணையின் நீர்போல மனதில் தேக்கிப் பாருங்கள், ஒரு நற்செயலை தள்ளி வைப்பதற்கோ, தவிர்ப்பதற்கோ இடமில்லை என்று எண்ணி, பென்னி குக் செயலில் சாதித்துக் காட்டிய அணையினைப் பாருங்கள்.
2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கல்லணை
       கேரளாவில் 44 ஆறுகள் ஓடுகின்றன. இவற்றுள் பாம்பார்,பவானி, கபினி ஆகிய மூன்று ஆறுகள் மட்டுமே கிழக்கு நோக்கிப் பாய்கின்றன. மீதமுள்ள 41 ஆறுகளும் மேற்கு நோக்கிப் பயணித்து அரபிக் கடலிலோ அல்லது ஏரிகளிலோ தங்கள் பயணத்தை முடிக்கின்றன.
     தமிழகத்தின் சிவகிரி மலையில், கடல் மட்டத்திலிருந்து 1830 மீட்டர் உயரத்தில் தோற்றம் பெறுவது பெரியாறு நதியாகும். பெரியாறு நதி பயணிக்கும் மொத்த தொலைவு சுமார் 300  கி.மீ., ஆகும். தமிழகத்தில் 56 கி.மீ, தொலைவிற்கும், கேரளாவில் 244 கி.மீ., தொலைவிற்கும் பயணிக்கும் பெரியாறு, இரண்டாகப் பிரிந்து அரபிக் கடலிலும், கொச்சியின் வேம்பநாடு ஏரியிலும் கலக்கின்றது.
     44 ஆறுகள் பாயும் கேரளாவில் 18 அணைகள் உள்ளன. இவற்றுள் மழம்புழா அனணயானது, நமது தமிழக அரசால் கட்டப்பெற்ற அணை என்பது பலருக்கு வியப்பைத் தரலாம் அல்லது விந்தையாகத் தோன்றலாம். ஆனால் மறுக்க முடியாத உண்மை.
      கேரளாவின் நெற்களஞ்சியம் என்று பாலக்காடு போற்றப் படுகிறது. இதற்குக் காரணம் மழம்புழா அணையாகும். இந்த அணையானது இன்று கேரளாவின் மாபெரும் சுற்றுலாத் தலமாகவும், சுமார் 50 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பளவிற்கு பாசனத்திற்கும் உதவி நெற்களஞ்சியம் என்னும் பெயரினை பாலக்காட்டிற்குப் பெற்றுத் தந்திருக்கின்றது.
    அன்றைய சென்னை அரசாங்கத்தின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியாகவே பாலக்காடு விளங்கியது. 1949 ஆம் ஆண்டு மார்ச் மாதம், சென்னை அரசாங்கத்தின் பொதுப் பணித்துறை அமைச்சரும், பின்னாளைய தமிழக முதல்வருமாகிய கே.பக்தவசலம் அவர்களால் மழம்புழா அணைக்கு அடிக்கல் நாட்டப் பட்டது. ஆறே ஆண்டுகளில் அணையின் கட்டுமாணப் பணி நிறைவுற்றது. 1955 ஆம் ஆண்டு அக்டோபர் 9 ஆம் நாள் மழம்புழா அணையின் திறப்பு விழா, கோலாகலமாக நடைபெற்றது. இந்த அணையினைத் திறந்து வைத்தவர் யார் தெரியுமா? அவர் வேறுயாருமல்ல, அன்றைய தமிழக முதல்வர் கர்ம வீரர் காமராசர் அவர்கள்தான்.
      தமிழகத்தின் இத்தகுப் பெருந்தன்மைக்கு கேரளம் காட்டும் நன்றியுணர்வைத்தான் நாம் இன்று பார்த்துக் கொண்டிருக்கின்றோம். 44 ஆறுகள் ஓடியும், 18 அணைகள் இருந்தும், இத்தண்ணீரின் வெறும் 8 சதவீ நீரைத்தான் கேரளம் இன்றளவும் பயன்படுத்தி வருகின்றது. இது மறுக்க முடியாத உண்மை. மீதமுள்ள 92 சதவீத நீரும் அரபிக் கடலுக்குள் தஞ்சம் புகுகின்றது.
     கேரளத்தவர் தாங்கள் உண்ணும் சோற்றுக்கும் குழம்புக்கும், காய்கறிகளுக்கும், தின்னும் பழங்களுக்கும், பூஜைக்குப் பூவிற்கும், சமையலுக்கு கறிவேப்பிலைக்கும் கூட தமிழகத்தை நம்பித்தான் இருக்கின்றார்கள். எனவே கேரளத்தவர்கள் தங்கள் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டாவது, தேவையில்லாத இந்த முல்லை பெரியாறு அணை பிரச்சினையினைக் கைவிடல் வேண்டும்.
                     யாதும் ஊரே யாவரும் கேளிர்

                  தீதும் நன்றும் பிறர் தர வாரா
போன்ற அமுத மொழிகளை உலகிற்கு வழங்கிய தமிழ் மொழியிலிருந்து பிரிந்து சென்ற, தமிழின் சேய் மொழி மலையாளம். அவ்வகையில் கேரளத்தவர்கள் யாவரையும், நம் உடன் சகோதரர்களாய் இதுவரை நாம் போற்றி வந்திருக்கின்றோம். அதுபோல் அவர்களும் நம்மை அவர்களது சகோதரர்களாய் போற்றாவிடினும், அன்னியர்போல் கருதாமலாவது இருத்தல் இருவருக்கும் நலம் பயக்கும்.
      தஞ்சைப் பெரிய கோயில் கட்டப் பெற்று ஆயிரம் ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. இருந்தும் தனது மெருகு குலையாமல் கம்பீரமாய் காட்சியளிப்பதைப் பாருங்கள். கரிகாலச் சோழனால் கட்டப் பெற்ற கல்லணையின் வயது ஆண்டுகள் இரண்டாயிரத்தைக் கடந்து விட்டது, இருந்தும் கல்லணை என்ன தண்ணீரில் கரைந்தா போய்விட்டது?.
       தமிழனுக்காகக் கட்டப் பெற்ற அணை முல்லைப் பெரியாறு. பல நூறு தமிழர்கள் தம் இன்னுயிரை இழந்து, தங்களின் சமாதிகளின் மேல், தங்களின் சந்ததியினருக்காக, நமக்காகக் கட்டிய அணை முல்லைப் பெரியாறு. ஒரு ஆங்கிலேயரின் முயற்சியினால், உதிரத்தால், பல நூறு தமிழர்களின் வியர்வையை, உதிரத்தை, சுண்ணாம்புக் கலவையோடு கலவையாய் சேர்த்து கலந்து உருவாக்கிய அணை முல்லைப் பெரியாறு.இக்காலத் தமிழர்களான நம்மால் ஒரு அணையினைக் கட்டத்தான் முடியவில்லை, ஒரு ஆங்கிலேயன் நமக்காகக் கட்டிய அணையினைப் பாதுகாக்கக் கூடவா நம்மால் முடியாது?
கல்லணை
      நாம் நமது சாதி, மத, இன, அரசியல், பொருளாதார பிரிவினைகளைக் கடந்து தமிழன் என்ற ஒரே உணர்வுடன், வீறு கொண்டு எழுந்து, நமது ஒன்றுமையினை, நமது ஒற்றுமையின் வலிமையினை, இவ்வுலகிற்குப் பறைசாற்ற வேண்டிய கால கட்டம் இது.
1000 ஆண்டுகளைக் கடந்த தஞ்சைப் பெரிய கோயில்
     அகிம்சையினை உலகிற்கே போதித்த காந்திய தேசம் இது. ஒத்துழையாமையே, அணுகுண்டினைவிட மிகப் பெரிய ஆயுதம் என்று உலகிற்குக் உணர்த்திய தேசம் இது வன்முறைத் தவிர்ப்போம், காந்திய வழியில் கரம் கோர்த்து ஒன்றிணைவோம். நாங்கள் ஒன்றிணைந்து விட்டோம் என்பதை உணர்த்தினாலே போதும், முல்லைப் பெரியாறு பிரச்சனை ஒரு நொடியில் தீரும். நாம் நமது ஒற்றுமையினை, ஒற்றுமையின் வல்லன்மையினை கேரளாவிற்கு மட்டுமல்ல் உலகிற்கே உணர்த்துவோம். ஓரணியில் திரள்வோம்.
                       வீழ்ச்சியுறு  தமிழகத்தில்  எழுச்சி  வேண்டும்
                              விசைஒடிந்த  தேகத்தில்  வன்மை  வேண்டும்
                       சூழ்ச்சிதனை  வஞ்சகத்தைப்  பொறாமை  தன்னைத்
                             தொகையாக  எதிர்நிறுத்தித்  தூள்தூ   ளாக்கும்
                       காழ்சிந்தை,  மறச்செயல்கள் மிகவும்  வேண்டும்
                                                            - பாரதிதாசன

பென்னி  குக் மணிமண்டபம்
முல்லைப் பெரியாறு அணையின் லோயர் கேம்ப் பகுதியில், பென்னி குக் அவர்களின் நினைவினைப் போற்றும் வகையில் ரூபாய் ஒரு கோடி மதிப்பீட்டில் நினைவு மண்டபம் கட்டப்பெறும் என்றும், அம் மணிமண்டபத்தில் பென்னி குக் சிலையினை அமைத்து, பென்னி குக் பெயரனால் அந்த நினைவு மண்டபம் திறப்பு விழா நடைபெறும் என அறிவித்த தமிழக முதல்வரின் அறிவிப்பினை வாழ்த்தி வரவேற்போம்.


--------------------------------------------------------------------------------
சிந்தனை செய் மனமே ...
(படித்ததில் பிடித்தது)

    நம்முடைய பள்ளிக் கூடங்களிலே கணக்குச் சொல்லிக் கொடுக்கிறபோது, கடன் வாங்கிக் கழித்தல் என்று ஒரு கணக்கு இருக்கிறது. இந்த எண்ணிலே இதைக் கழிக்க முடியாது, என்ன செய்யலாம்.... பக்கத்திலே இருக்கிற எண்ணிலே கடன் வாங்குங்கள்....கடன் வாங்குவதற்கு அங்கேயே நாம் கற்பிக்கப் படுகிறோம். வாங்கிய கடனை இந்த எண் அந்த எண்ணுக்கு எப்போதாவது திருப்பிக் கொடுத்ததா என்றால் இல்லை. ஆனால் இதே கணக்கு சீனத்திலே எப்படிச் சொல்லிக் கொடுக்கப்படுகிறது என்பதைச் சீனாவிற்குப் போய் வந்த பேரா.நாகநாதன் போன்றவர்கள் சொல்கிறார்கள். அங்கே அந்தக் கணக்குக்கு கடன் வாங்கிக் கழித்தல் என்ற பெயர் இல்லை. இங்கே குறைவாக இருக்கிறது, அங்கே தேவைக்கும்மேல் கூடுதலாக இருக்கிறது, எனவே அங்கே இருந்து எடுத்துக் கொள்ளுங்கள் என்று பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுக்கிறார்கள் என்கிறார். இந்த இரண்டு பாடமும் ஒன்றுதான். ஆனால் இரண்டையும் பயிற்றுவிக்கிற முறைகளிலே இரண்டு பிள்ளைகளுக்குள்ளேயும் இடையிலே ஏற்படுகிற விளைவுகள் வேறு வேறாக இருக்கும் என்பதை நம்மால் உணர முடிகிறது. எனவே ஏற்றுக் கொள்ளப் பட்ட செய்திகளைக் கூட மறு ஆய்வுக்கு உள்ளாக்குவது என்பது இன்றைக்கு வளர்ந்து கொண்டிருக்கிற படிப்பு முறையாக இருக்கிறது. 
நன்றி
ஒன்றே சொல் நன்றே சொல் (தொகுதி 3),பக்கம் 98 - பேரா.சுபவீ