27 ஆகஸ்ட் 2013

கரந்தையில் குடந்தை

   
 திங்கட்கிழமை (26.8.13) காலை 10.55 மணி. வகுப்பறையில் இருந்தேன். அலைபேசி ஒலித்த்து. மறுமுனையில் நண்பரும் உடற்கல்வி ஆசிரியருமான திரு துரைபிள்ளை நடராசன்.

     பொதுவாக ஆசிரியர்கள் வகுப்பறைக்குச் செல்லும் பொழுது அலைபேசியை தவிர்த்துவிட்டுச் செல்வதுதான் நல்லது. இருப்பினும் இந்த அவசர யுகத்தில், எந்த நேரத்திலும், யாரிடமிருந்தும் அவசர அழைப்பு வரலாமல்லவா? எனவே வகுப்பறைப் பணிகளைப் பாதிக்காதவாறு அவ்வப்போது அலை பேசியைப் பயன்படுத்துவது உண்டு.


    
தங்களின் வலைப் பூ நண்பர் சரவணன் அவர்கள், ஆசிரியர் அறையில் காத்திருக்கிறார் என்றார் நண்பர் நடராசன். அப்பொழுது இரண்டாவது பிரிவு வேளை முடிவுற்றமைக்கான மணியும் ஒலித்தது. இதோ வருகிறேன் என்றேன்.

     ஆசிரியர்கள் ஓய்வு அறைக்குச் சென்றேன். குடந்தையூர் சரவணன் அவர்கள் காத்திருந்தார். எதிர்பார்க்காத இனிமையான சந்திப்பு. வாருங்கள் வாருங்கள் என கைகளைப் பற்றிக் கொண்டேன்.

     வாழும் மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம் என்னும் உன்னத வழியில் தனது வாழ்வினை அமைத்துக் கொண்டவர். பிறந்த மண்ணை மறவா நல் மனத்தினர். குடந்தையூர் எனத் தன் வலைப் பூவில், தனது ஊரினையும் இணைத்து பெருமிதம் கொள்பவர்.

     சென்னையில் மருந்து தயாரிப்பு நிறுவனத்தில் பணி. இல்லம் இருப்பதோ குடந்தையை ஒட்டியுள்ள வலங்கைமானில். திங்கள் முதல் வெள்ளிவரை சென்னையிலும், சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் வலங்கைமானிலும் வாசம் செய்பவர்.


     
   தஞ்சைக்கு ஒரு திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக வந்தேன். உங்களைக் காண வேண்டும் என்ற ஆவலில் கரந்தை வந்தேன் என்றார். மனம் மகிழ்ச்சியில் மிதந்த்து.

     வலைப் பூவின் வாசம் எப்படியெல்லாம் புதுப்புது உறவுகளை உண்டாக்கித் தருகிறது என்பதை எண்ணி வியந்தேன்.

       சென்றிடுவீர் எட்டுத் திக்கும் கலைச் செல்வங்கள் யாவும்
      கொணர்ந்திங்கு சேர்ப்பீர்
எனப் பாடுவார் பாரதி. ஆனால் இன்று வீட்டில் அமர்ந்தவாறே உலகத்துச் சொந்தங்களை எல்லாம் ஒன்றிணைக்க முடிகிறதே. உறவாடி மகிழ முடிகிறதே.

     வலைப் பூ என்று யார் பெயர் வைத்தார்களோ தெரியவில்லை. ஆனால் என்னவொரு பொருத்தமான பெயர். உலகத்து உறவுகளை எல்லாம் வலை வீசிப் பிடித்து ஓரிடத்தில உறவாட விடுகிறதே.

     அரைமணி நேரத்திற்கும் மேலாகப் பேசிக் கொண்டிருந்தோம். நண்பர்கள்,


துரைபிள்ளை நடராசன்
http://duraipillainatarajan.blogspot.com/


கரந்தை சரவணன்
http://karanthaisaravanan.blogspot.com/

ஆகியோரை அறிமுகப் படுத்தினேன்.

     சென்னைப் பதிவர் மாநாட்டிற்கு வாருங்கள் என அழைத்தார்.

     அவ்வப்போது, ஓரிரு பதிவுலக நண்பர்களைச் சந்திக்கும் போதே, மனம் இப்படி ஆனந்தக் கூத்தாடுகிறதே, பதிவுலகச் சகோதர, சகோதரிகளை எல்லாம் ஓரிடத்தில் சந்தித்தால் எப்படியிருக்கும்?

     வலைப் பூ என்னும் பரமபத வாசலின் வழி சென்று, சொர்க்கத்தையே சொந்தமாக்கிக் கொண்ட உணர்வல்லவா ஏற்படும். சொர்க்கத்தில் கால் பதிக்க யார்தான் மறுப்பார்கள். ஆசைதான். ஆனாலும் வடபழநிக்கு வர இயலாத நிலை.

     தலைவலி என்னும் கடுமையானத் தாக்குதலுக்கு ஆளான என் மனைவி, தற்பொழுதுதான் மெல்ல, மெல்ல குணமடைந்து வருகிறார். ஆகையினால் தஞ்சையிலேயே இருக்க வேண்டிய சூழல்.

     ஆகவே நண்பர்களே, என்னை மன்னிக்க வேண்டுகிறேன்.


   தமிழ்நா டெங்கும் தடபுடல் அமளி
  தமிழின்  தொண்டர்  தடுக்கினும்  நில்லார்.
  ஓடினார்  ஓடினார்,  ஓடினார்  நடந்தே

 ஐயோ, எத்தனை அதிர்ச்சி, உற்சாகம்
  சமுத்திரம் போல அமைந்த  மைதானம்
 அங்கே கூடினார் அத்தனை பேரும்

  உள்ளம்பு ஊற்றி  ஊற்றி  ஊற்றித்
  தமிழ் வளர்க்கும்  சங்கம் ஒன்று
  சிங்கப் புலவரைச் சேர்த்தமைத்  தார்கள்

   உணர்ச்சியை, எழுச்சியை, ஊக்கத் தையெலாம்
   கரைத்துக் குடித்துக் கனிந்த கவிஞர்கள்
   சுடர்க்கவி தொடங்கினர்  பறந்த்து தொழும்பு

   கற்கண்டு மொழியில் கற்கண்டுக் கவிதைகள்
   வாழ்க்கையை வானில், உயர்த்தும் நூற்கள்
   தொழில்நூல், அழகாய்த் தொகுத்தனர் விரைவில்

    காற்றி லெலாம் கலந்த்து கீதம்
    சங்கீ தமெலாம்  தகத்தகா யத்தமிழ்

வலைப் பூ பதிவர் மாநாட்டிற்காகவே எழுதப்பட்டது போல் தோன்றுகிறதல்லவா இப்பாடல்.

     பாவேந்தர் பாரதிதாசன் கண்ட தமிழ்க் கனவு இப்பாடல். வலைப் பூ பதிவர் மாநாட்டின் மூலம் பாரதிதாசன் கண்ட கனவு நிறைவேறிவிட்டதாகவே எண்ணுகின்றேன். சான்றோர் கண்ட கனவு ஒருபோதும் பொய்ப்பதில்லை.

       ஞாயிற்றுக் கிழமை நான் (1.9.2013) அன்று தஞ்சையிலேயே இருந்தாலும் மனம் என்னவோ, வடபழநியைத்தான் கிரி வலம் வந்து கொண்டிருக்கும்.

      பதிவர் மாநாடு வெல்லட்டும்.     புதுமைகளைப் படைக்கட்டும்.
    

     

22 ஆகஸ்ட் 2013

கரந்தை - மலர் 19

தமிழர்களும் காந்தியும்

     மொழிகளில் எல்லாம் தூயதும், இனியதும், தொன்மையானதுமாகிய, நம் செந்தமிழ் மொழியானது, மக்களிலெல்லாம் இனியவரும், தூயவரும், பெரியவருமாகிய மகாத்மாவைப் பெரிதும் கவர்ந்ததில் வியப்பொன்றுமில்லை.  முப்பத்தி ஆறாவது வயதில், தமிழ் மொழியைக் கற்கத் தொடங்கிய காந்தி மகான், முதிய வயதில் மறையும் வரை, தமிழ் மொழியைக் கற்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார் என்பது ஒவ்வொரு தமிழரும் எண்ணி எண்ணிப் பெருமைப் பட வேண்டிய ஒன்றாகும்.


     மாக்ஸ், முல்லர், போப், பெஸ்கி, ஹீராஸ் போன்ற அந்நிய நாட்டு அறிஞர்களைக் கவர்ந்து ஆட்கொண்ட, நம் மொழி, நம் நாட்டு மகானையும் கவர்ந்தது.
சபர்மதி ஆஸ்ரமம்

     ஆசிரமத்தில் நாங்கள் தமிழர்கள் இல்லாது, சில சமயங்களில் வழிபாடு நடத்தியிருக்கலாம், ஆனால் தமிழ்ப் பாடல்கள் பாடாது நடத்தியதில்லை என்று ஆச்சார்ய கலேல்கார் கூறுகிறார் என்றால், மகாத்மாவின் தமிழ்ப் பற்றை இதிலிருந்தே அறியலாம்.

     முதன் முதலில் காந்திஜி தமிழ் கற்கத் தொடங்கினாரே அது ஏன்? இது பற்றி இருவேறு கருத்துக்கள் உள்ளன. தமிழருக்குப் பட்ட நன்றிக் கடனைத் திருப்பிச் செலுத்தவே, தமிழை மகாத்மா கற்க முற்பட்டார் என்று ஒரு சாரர் கூறுவர். திருக்குறளைக் கற்க வேண்டும் என்ற பேர் அவாவின் காரணமாகவே, அவர் தமிழ் கற்றார் என்று மற்றொரு சாரர் கூறுவர். ஆனால், இவை இரண்டுமே உண்மைதான். மகாத்மாவே இவ்விரண்டையும் ஒப்புக் கொண்டிருக்கிறார். ஆயினும் முதன்மையான காரணம் எண்ண?

     தென்னாப்பிரிக்காவில் தொடங்கப் பெற்ற போராட்டங்களில் தமிழர் அளவுக்கு, வேறு எந்த இந்திய மொழி பேசும் வகுப்பினரும் தியாகம் செய்யவில்லை. ஆக்கம் தரவில்லை என்று மகாத்மா காந்தி மனதாரக் கருதினார். ஆகவே உயிரைத் துச்சமாக எண்ணி, பொருள் இழப்பைப் பற்றிக் கவலைப் படாது, சிறைக்குச் செல்வதை விருந்துக்குப் போவதுபோல் விரும்பிப், பன்முறை முற்றுகையிட்டுத் தம்முடன் ஒத்துழைத்தத் தமிழர்களுக்கு சிறந்த முறையில் நன்றிக் கடன் செலுத்த வேண்டும் என்று விரும்பினார்.


    
மகாத்மா காந்தியின் தென்னாப்பிரிக்க ட்ரான்ஸ்வால் போராட்டக் காட்சிகள்
  இந்தியன் ஒப்பீனியன் என்னும் இதழில 5.6.1909 அன்று காந்திஜி அவர்கள், தான் எழுதிய கட்டுரையில், தாம் அக்கறையுடன் தமிழைக் கற்க வேண்டும் என்று விரும்பியதற்கானக் காரணத்தை, அவரே கீழ்க் கண்டவாறு விளக்கி எழுதியிருக்கிறார்.

இந்த ட்ரான்ஸ்வால் போராட்டத்தில் தமிழர்களுக்கு இணையான அளவு, இந்தியர்களில் வேறு எவருமே பங்கேற்கவில்லை. ஆகையால் தமிழை நான் மிகுந்த கவனத்துடன் கற்க வேண்டும் என்று எனக்குத் தோன்றியது. வேறு காரணத்திற்காக அல்லாவிட்டாலும், என் மனத்தளவிலாவது என் மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்வதற்காக நான் தமிழைக் கற்றேன். நான் அம்மொழியைப் படிக்கப் படிக்க, அதனுடைய அழகுகளை கண்டு அனுபவிக்கிறேன். அது மிக மிக எழில் நிறைந்த இனிய மொழி. அதனுடைய அமைப்பில் இருந்தும், அதில் நான் படித்தவற்றுள் இருந்தும், தமிழர்கள் மத்தியில், புத்திக் கூர்மையும், சிந்தனா சக்தியும் உள்ள, விவேகம் நிறைந்த ஏராளமான மக்கள் இருந்திருக்கிறார்கள், மேலும் மேலும் அவர்கள் தோன்றிக் கொண்டிருக்கிறார்கள் என்பதைக் காண்கிறேன் என்று எழுதியுள்ளார்.

                   கற்க கசடற கற்பவை கற்றபின்
                   நிற்க அதற்குத் தக

என்ற குறள் அவருக்கு மிகவும் பிடித்தமானதாகும்.

                   திக்கற்றவருக்குத் தெய்வமே துணை

என்ற தமிழ்ப் பழமொழியை எண்ணி எண்ணி மகிழ்வார்.

                   பிறப்புண்டேல் இறப்புண்டு

என்ற பழமொழியும் அவருக்கு மிகவும் பிடித்த பழமொழியாக விளங்கியது.

     திருக்குறளுக்கு அடுத்தாற்போன்று, அவருடைய உள்ளத்தைக் கொள்ளை கொண்ட பக்திப் பெரு நூல் மாணிக்க வாசகப் பெருமானின் திருவாசகம் ஆகும். அதிலும்

              முத்திநெறி  யறியாத  மூர்க்கரொடு  முயல்வேனைப்
              பக்திநெறி  யறிவித்துப் பலவினைகள்  பாறும்வண்ணம்
              சித்தமல  மறுவித்துச்  சிவமாக்கி  யெனையாண்ட
              அத்தனெனக்  கருளியவா  றார்பெறுவா  ரச்சோவே

என்ற பாடலினை, சேவா கிராமத்திலும், சபர்மதி ஆசிரமத்திலும் நாள்தோறும் பாடச் செய்து, கேட்டு அவர் பேரானந்தம் அடைவார். மேலும் சென்னைக்கு வெளியே உள்ளவர்களும் தமிழைக் கற்க வேண்டும் என்றும் அவர் தனது கட்டுரைகளில் எழுதியதில் இருந்தே, அவர் தமிழ் மொழியின் மேலும் தமிழர்களின் மீதும் வைத்திருந்த அன்பையும் பாசத்தினையும் உணரலாம்.

தமிழ் நாட்டில் காந்தி

     காந்திஜி அவர்கள் முதன் முதலாகத் தமிழகத்திற்கு வந்தது 1896 ஆம் ஆண்டிலாகும். அவர் கடைசி முறையாக தமிழகத்திற்கு வந்தது 1946 ஆம் ஆண்டிலாகும். இந்த ஐம்பது ஆண்டுகளில், காந்திஜி 28 முறை தமிழகத்திற்கு வருகை தந்துள்ளார்.

     காந்திஜியின் வாழ்வில் தமிழகம் எத்துனையோ முதன்மைகளை அடைந்திருக்கின்றது. காந்திஜி தோற்றுவித்த புது சகாப்தத்தில், எதிரி மீது, ஆத்திரமோ கோபமோ கொள்ளாது மனம் உவந்து உயிர் நீத்த உண்மைத் தியாகிகளின் முதல் வரிசையில் வள்ளியம்மா, நாகப்பன், நாராயண சாமி ஆகிய தமிழர்கள்தான் தலைமை இடத்தினைப் பெற்றார்கள்.

     1932 ஆம் ஆண்டில் கொடியேந்தி ஊர்வலம் சென்றபோது, போலீசாரால் அடிபட்டு உயிர் நீத்த, கொடி காத்த குமரனை தமிழகம் உள்ளவரை மறக்க இயலுமோ? தென்னாப்பிரிக்காவில் பாமர மக்களின் நண்பரான காந்தியிடம், முதன் முதலாக பாமர மக்களை, கூலிகளைக் கொண்டு வந்து இணைத்து வைத்தவன் பாலசுந்தரம் என்ற ஒரு தமிழன் அல்லவா.

     முதன் முதலாக இந்தியா முழுமைக்குமான ஒரு போராட்டத்தை எவ்வாறு தொடங்குவது என்பதில் விடைகாண இயலாமல் தவித்துக் கொண்டிருந்த, அகிம்சா வீரருக்குக் கனவு மூலம் விடை கிடைத்தது தமிழகத்தில்தான். வாழ்நாள் எல்லாம் மாணவர்களுடன் இணைபிரியாத நட்பு கொண்டிருந்த வள்ளலுக்கு, மாணவர்களின் தொடர்பு முதன் முதலில் கிடைத்தது தமிழகத்தில்தான்.

     மேல் அங்கியைக் கழற்றி எறிந்து விட்டு, அரை ஆடை உடுத்தி தரித்திர நாராயணர்களுடன் அவர் ஐக்கியமடைந்தது தமிழகத்தில்தான்.

     முதன் முதலாக அவருக்குத் தேசப் பிதா என்ற பட்டத்தைச் சூட்டியவர்கள் தமிழக மாணவர்கள்தான். இவ்வாறு பல முதன்மைகள் தமிழகத்திற்கு உண்டு.

     காந்தியடிகள் தென் ஆப்பிரிக்காவிலிருந்து வந்து இந்திய அரசியலில் கால் பதித்தபோது, தமிழக அரசியலில் பாரப்பணரல்லாதார் இயக்கம் வீச்சுடன் மேலெழுந்து கொண்டிருந்தது.

தஞ்சையில் காந்தி

     தமிழகத்திற்கு 28 முறை வந்த காந்தியடிகள், அதில் ஏழு முறை தஞ்சைக்கு வருகை புரிந்துள்ளார். 1919 ஆம் ஆண்டில் மார்ச் 24 மற்றும் 28 தேதிகளிலும், 1920 ஆம் ஆண்டு ஆகஸ்ட்டு 16 ஆம் தேதியும், 1921ஆம் ஆண்டில் செப்டம்பர் 18 ஆம் தேதியும், 1927 ஆம் ஆண்டில் செப்டம்பர் 16 ஆம் தேதியும், 1934 ஆம் ஆண்டில் பிப்ரவரி 15 ஆம் தேதியும், 1946 ஆம் ஆண்டில் பிப்ரவரி 4 ஆம் தேதியும், என ஏழு முறை தஞ்சைக்கு வருகை தந்துள்ளார்.

       1927 ஆம் ஆண்டு கதர் திட்டத்தை விளக்குவதற்காகத் தமிழகத்தில் சுற்றுப் பயணம் செய்த காந்தியடிகள், கதர் வளர்ச்சியைப் பற்றி மட்டுமல்லாமல், பிராமணர் பிராமணரல்லாதார் சிக்கலைப் பற்றியும் விவாதிக்க வேண்டியிருந்தது. அந்த அளவுக்கு இந்த சிக்கல் 1927 இல் தமிழகத்தில் விசூவரூபம் எடுத்திருந்தது.  ஆகையால் இந்த சிக்கலைத் தீர்த்து வைக்க அவர் உதவி வேண்டுமென்று பலர் கேட்டுக் கொண்டனர்.

            தனது சுற்றுப் பயணத்தின் ஒரு பகுதியாக மன்னார்குடி வந்த காந்திஜி அவர்கள், மன்னார்குடியிலிருந்து, நாகப்பட்டிணம் பாசஞ்சர் தொடர் வண்டி மூலம் 16.6.1927 ஆம் நாள் காலை, தனது குழுவினருடன் தஞ்சைக்கு வந்து சேர்ந்தார். ஒவ்வொரு பெரிய நகருக்கு வரும்போதும, கூட்டத்தைத் தவிர்ப்பதற்காக, அதற்கு முந்தைய ரயில் நிலையத்தில் காந்திஜி இறங்கி விடுவார் என்பதை அறிந்திருந்த, தஞ்சை மக்கள், தஞ்சைக்கு கூட்டுரோடு வழியாக நுழையக் கூடிய இடத்தில் கூடி நின்றார்கள். ஆனால் காந்திஜி இம்முறை அவ்வாறு இறங்கவில்லை. திட்டமிட்டபடி தஞ்சாவூர் இரயில் நிலையத்திலேயே வந்து இறங்கினார். தஞ்சையில் காந்திஜி குழுவினர் உக்கடை இல்லத்தில் தங்கினர்.

     தஞ்சாவூரில் நடைபெற்ற முக்கிய காரியம், நீதிக் கட்சியைச் சார்ந்த உயர் தலைவர்களான, சர் ஏ.டி.பன்னீர் செல்வம் அவர்களும் உமாமகேசுவரனார் அவர்களும் காந்தியைச் சந்தித்து உரையாடியதே அகும்.

.... வருகைக்கு நன்றி நண்பர்களே. மீண்டும் சந்திப்போமா.


15 ஆகஸ்ட் 2013

கரந்தை - மலர் 18





----- கடந்த அத்தியாயத்தில் -------
தமிழ் மொழியை விட்டால் தமிழர்க்கு வேறு சிறப்பில்லை. தங்கள் முயற்சி நன்கு நடைபெறுக வென்று திருவருளை வேண்டுகிறேன்.
---------------------------------------
 தமிழ்ப் பொழில் இதழினைக் கண்ணுற்ற புலவர் அ.வரத நஞ்சைய பிள்ளை அவர்கள், இவ்விதழினை வாழ்த்தி இயற்றியப் பாடலைப் பாருங்கள்

              வாழ்க நம் தமிழ்த்தாய்  வாழ்க நம்  தனிமொழி
              ஓங்குக  மேன்மேல்  ஓங்குக  நாடொறும்
              ஊழியோர்  கணமா  வுலப்பில்பல்  லாண்டெலாம்
              வாழியர்  தமிழகம் மக்களொடு  மகிழ்ந்தே
              புகழ்பொருள்  வேட்காத  கடமை  பேணி
              முன்னைநாள்  நிலைமை  நன்னாராய்ந்  திந்நாள்
              அன்னையாந்  தமிழண்ங்  கரந்தை  கூரப்
              பிறமொழி  கவர்ந்த  புறமொழி  நாணித்
              தஞ்செயல்  மீட்ப  தாமெனத்  துணிவுறீஇக்
              கரந்தை  யூன்றிய  கழகந்  தொடங்கின
              நான்முத  லிதுகாறு  நற்றமிழ்க்  குழைத்த
              தொண்டின்  பயனாத்  தோன்றித்  தழைத்தது
              தமிழ்ப்  பொழில் அம்ம தமிழர்காள்  வம்மின்
              தாயடி  நிழலிற்  றங்கிவெப்  பொழிமின்
              ஆண்டு  தோறும்  நீண்டுவளர்  துணராற்
              றிங்கட்  கோர்  செழுமலர்  பூத்து
              நறுமணம்  வீசி  நலிவுதீர்க்  கும்மே
              தலைமிசைப்  புனைமின்  விழியி லொற்றுமின்
              மார்புற  அணைமின் தோண்மிசை  தாங்குமின்
              காட்சிக்  கினியது  கைக்குமெல்  லியது
              நாவிற்கினிய  நறுந்தேன்  சுரப்பது
              கேட்குஞ்  செவிபிற  கேளாது  தகைவது
              உற்றுநோக்  குளத்துக்  குவகைமிக்  கீவது,
              இம்மை  மறுமை  யிரண்டுமிங்  களிப்பது

தமிழ்ப் பொழில் தொடங்கிய காலத்தில், இவ்விதழின் ஆண்டு சந்தா, சங்க உறுப்பினர்களுக்கும், மாணவர்களுக்கும் ரூ.2 மட்டுமே ஆகும். ஏனையோருக்கு ரூ.3 ஆகும்.

     தமிழ்ப் பொழிலில் வெளிவரும் கட்டுரைகள், தூய தமிழில் வெளி வந்தன. எனினும் நடை கடினம் என்று அவ்வப்போது சிலர் குறை கூறியதுண்டு. அதற்கு உமாமகேசுவரனார் அவர்கள் அளித்த விளக்கம்,  இன்றும் நாம் அனைவரும் எண்ணி எண்ணிப் பெருமைப்பட வேண்டிய ஒன்றாகும்.

     இறைவன் திருவருளாலும், தமிழ் மக்கள், தமிழ்ப் புலவர்கள் ஆதரவாலும், பொழில் பதினாறு ஆண்டு, இப்பங்குனித் திங்களோடு நிறையப் பெற்றுள்ளது. பொழில் தோன்றிய காலத்தும், பின்னும், எந்தெந்த வழிகளிலெல்லாம் பொழில் தமிழகத்திற்குப் பயன்பட வேண்டுமென்று எண்ணினோமோ, அந்தந்த வழிகளிலெல்லாம் பயணித்துள்ளது என்று கூறுவதற்கில்லை. ஒருவாறு காலந்தள்ளி வந்தது என்றே நாம் கூறலாம்.

     ஆறாயிரம் மைலுக்கு அப்பாலுள்ளள ஆங்கில மொழியையும், ஐயாயிரம் ஆண்டுகட்கு முன்பெழுந்த வடமொழி நூல்களையும், இடர்பாடு சிறிதுமின்றிக் கற்கவும், கற்று மகிழவும், பிறர்க்குக் கூறிப் பரப்பவும் ஆற்றலுடைய நம் தமிழகத்துத் தமிழ் மொழியின் தூய சொற்கள், பொருள் விளங்கிப் பயன்தர ஆற்றாவாயின், அது யாவர் குறை? பயிற்சிக் குறைவன்றோ? சொல்லாலும் பொருளாலும் பேசவும் எண்ணவும் இனிமை தரும் எம் தாய்மொழி, இன்று இவ்வாறாயிற்றே என்று யாம் வருந்துதல் பயனென்ன? தமிழோடு தொடர்புடைய வேற்று நாட்டவரும், இம்மொழியின் நன்மை உணர்ந்து போற்றுமிடத்து, நம்மவர் யாம் பொருளுணர மாட்டோம், யாம் பொருளுணர ஆற்றேம் எனக் கூறுவது, இதுகாறும் ஏழு வியப்போடு நின்ற இவ்வுலகத்து எழுந்த எட்டாவது வியப்பென்றே எண்ணுகிறோம்...பொழிலின் நறுமணம் நாற்றிசையும் பரந்து உலகை மகிழ்விக்கத் தமிழ்த் தெய்வம் துணை செய்வதாக.

     பிற மொழிக் கலப்பில்லாத தூய தமிழைப் பற்றி தமிழ் மக்கள் அறியாதிருப்பது குறித்து உமாமகேசுரனார் கொண்ட துயரம் இதில் புலனாகிறது.
 
1925, 1950, 1986 மற்றும் 2014 இல் தமிழ்ப் பொழில் 
     தமிழ்ப் பொழில் இதழின் தொடக்க இதழ்கள் தஞ்சை, லாலி அச்சுக் கூடத்தில் அச்சிடப் பெற்றன. ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தேதிகளில் பொழில் இதழானது அச்சாகி வெளி வருவதில் தாமதமேற்பட்டது. தமிழ் மாதத்தின் முதல் நாளில் பொழில் இதழ் வெளிவர வேண்டும் என்று உமாமகேசுவரனார் விரும்பினார். ஆனால் அச்சகத்தில ஏற்படும் தடங்கல்கள் காரணமாக, இதழினை குறிப்பிட்ட தேதிகளில் வெளிக் கொணர்வதில் தொடர்ந்து தடைகள் தோன்றத் தொடங்கின. இத் தடைகளிலிருந்து மீண்டு வருவதற்கு உமாமகேசுவரனார் வழி ஒன்றும் கண்டார். அதுவே இன்றைய கூட்டுறவு அச்சகமாகும்.

     நீதிக் கட்சியின் முக்கியத் தூண்களில் ஒருவராக விளங்கிய உமாமகேசுவரனார்,  கூட்டுறவு இயக்கத்தில் மிகுந்த ஈடுபாடு உடையவர்.  கூட்டுறவு சங்கங்கள் மூலம் வேளாளர், வணிகர், நடுத்தர மக்கள் முதலானோர்க்குக் கடன் கொடுத்து, மிகுந்த வட்டி வாங்கும் லேவா தேவிக்காரர்களின் பிடியிலிருந்து மக்களை விடுவித்து, அவர்களுடைய கடன் சுமையைக் குறைப்பதோடு, அவரவரும் தொழில் செய்து முன்னேற வேண்டும் என்பது நீதிக் கட்சியின் கொள்கைகளுள் ஒன்றாகும்.  சில தொழில்களைக் கூட்டுறவுச் சங்கங்களே ஏற்று நடத்த வேண்டும் என்பது அக்கட்சியினரது திட்டமாகும். எனவே நீதிக் கட்சியின் ஆட்சி காலத்தில், பல கூட்டுறவு சங்கங்கள் தோன்றின. மக்களுக்கு உதவி புரிந்தன. உமாமகேசுவரனார் அவர்களும் கூட்டுறவு இயக்கத்தில் பங்குகொண்டு, கூட்டுறவுச் சங்கங்கள் பலவற்றைத் தோற்றுவித்தார்.

திராவிட கூட்டுறவு வங்கி

      உமாமகேசுவரனாரின் அரிய முயற்சியால் 1919 ஆம் ஆண்டு, கரந்தையில், திராவிடக் கூட்டுறவு வங்கி ஒன்று தொடங்கப் பெற்றது.

கூட்டுறவு நிலவள வங்கி

     கூட்டுறவு வங்கியினைத் தொடர்ந்து, 10.9.1926இல் உமாமகேசுவரனார் அவர்களால், தஞ்சையில் கூட்டுறவு நிலவள வங்கி ஒன்றும் தொடங்கப் பெற்றது. இவ்வங்கி தற்போது தஞ்சை, இராசப்பா நகரில் செயல்பட்டு வருகின்றது.

தஞ்சை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தி விற்பனைக் கழகம்

     1939 ஆம் ஆண்டு உமாமகேசுவரனார் அவர்களின் முயற்சியால், தஞ்சாவூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தி விற்பனைக் கழகம் ஒன்றும் தொடங்கப் பெற்றது. மானோஜியப்பா வீதியில் தொடங்கப் பெற்ற இக் கழகம், தற்போழுது நாஞ்சிக் கோட்டை சாலையில் இயங்கி வருகின்றது.

தஞ்சாவூர் கூட்டுறவு அச்சகம்

     தமிழ்ப் பொழில் இதழினை திங்கள்தோறும் தவறாது வெளிக் கொணர விரும்பிய உமாமகேசுவரனார் அவர்கள், தமிழன்பர்கள் பலரின் உதவியோடு, கூட்டுறவு முறையில் அச்சகம் ஒன்றைத் தொடங்கினார். இக் கூட்டுறவு அச்சகம், 16.2.1927 முதல், கரந்தைத் தமிழ்ச் சங்கத்திற்கு அருகிலேயே, இராமர் கோவிலுக்கு அருகில் செயல்படத் தொடங்கியது. தற்சமயம் இவ்வச்சகம் தஞ்சைக் கூட்டுறவு அச்சகம் என்னும் பெயரில் மருத்துவக் கல்லூரி சாலையில் இயங்கி வருகின்றது. இன்றும் இந்த அச்சகத்திற்குச் செல்வோர், உமாமகேசுவரனாரின் திருஉருவப் படம், இவ்வச்சகத்தின் வரவேற்பறையை அலங்கரிப்பதைக் காணலாம்.

     கூட்டுறவு அச்சகத்தின் தோற்றத்திற்குப் பின், சங்கத்தின் அனைத்து அச்சுப் பணிகளும், இந்த அச்சகத்திலேயே மேற்கொள்ளப்பட்டன. தமிழ்ப் பொழில இதழும் காலந் தாழ்த்தாது வெளிவரத் தொடங்கியது.

     1925 ஆம் ஆண்டு தொடங்கப் பெற்ற தமிழ்ப் பொழில் இதழானது, வணிக நோக்கமின்றி, விளம்பரங்கள் ஏதுமின்றி இன்றும் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றது.
.....வருகைக்கு நன்றி நண்பர்களே. மீண்டும் சந்திப்போமா



09 ஆகஸ்ட் 2013

முத்துச் சிதறல் மனோ சாமிநாதன் அவர்களுடன் சில நிமிடங்கள்

             பொன்னும்  துகிரும்  முத்தும்  மன்னிய
             மாமலை  பயந்த  காமரு  மணியும்
             இடைப்படச்  சேய  ஆயினும்  தொடை  புணர்ந்து
             அருவிலை  நன்கலம்  அமைக்கும்  காலை
             ஒருவழித்  தோன்றி  யாங்கு  என்றும்  சான்றோர்
             சான்றோர்  பாலர்  ஆப
             சாலார்  சாலார்  பாலர்  ஆகுபவே
இப்பாடல் கண்ணகனார் என்னும் பெரும் புலவர் இயற்றிய புறநானூற்றுப் பாடலாகும்.

     பொன்னும், பவளமும், முத்தும், நிலைத்த பெரு மலையில் பிறக்கும் மாணிக்கமும், தோன்றும் இடங்களால் ஒன்றுக்கொன்று தொலைவில் இருப்பினும், மாலையாகக் கோத்து மதிப்பு மிக்க அணிகலனாக அமைக்கும்போது, தம்முள் ஒருங்கு சேரும். அதுபோல சான்றோர் என்றும் சான்றோர் பக்கமே இருப்பர்.

      இப்பாடல் வரிகளுக்கு ஏற்ப, எங்கோ பிறந்து, எங்கோ வளர்ந்த மன்னன் கோப்பெருஞ் சோழனும், புலவர் பிசிராந்தையாரும், ஒருவரை ஒருவர் நேரில் சந்திக்காமலேயே, பண்பார்ந்த செயல்களால், ஒருவரை ஒருவர் அறிந்து, உணர்ந்து, நட்புப் பாராட்டி, இறப்பில் ஒன்றிணைந்த  உன்னத நிகழ்வு பற்றி, பள்ளி நாட்களில் படித்துப் பரவசப்பட்டு மெய் சிலிர்த்திருக்கின்றோம்.

     நினைத்துப் பாருங்கள் நண்பர்களே, நினைத்துப் பாருங்கள்.

     ஆம். நினைத்துப் பார்த்தால் நாமும் இப்படித்தான். ஒருவரை ஒருவர் பாராமலும், பாராமல் மட்டுமல்ல, சில வேலைகளில் சகோதரரா, சகோதரியா என்று கூட அறியாமலும், இப்புவிப் பந்தில், மூலைக்கு ஒருவராய் சிதறிக் கிடந்த போதிலும், எழுத்து என்னும் நட்புச் சங்கிலியால் ஒன்றாக பிணைக்கப் பட்டிருக்கிறோம். இந்த உன்னத உறவு என்றென்றும் நிலைத்து நிற்கும் என்பது உறுதி.

     மன்னன் கோப்பெருஞ் சோழனும், புலவர் பிசிராந்தையாரும் வாழும் வரை ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொண்டதே இல்லை என்பது வரலாற்று உண்மை.

     ஆனால் நாம் அவ்வாறில்லை. வலைப் பூ வழி, வாசித்த, நேசித்த உறவை, நேரில் காண அவ்வப்பொழுது வாய்ப்புகள் கிடைத்துக் கொண்டுதான் இருக்கிறது.

     எழுத்தின் வழி அறிந்தோரை, அகத்தின் வழி மனக் கண்ணால் கண்டு பழகியவரை, நேரில் கண்டு உரையாட இயலுமாயின், ஏற்படும் மகிழ்விற்குத்தான் எல்லை ஏது?

      அவ்வாறு ஓர் இனிய வாய்ப்பு எனக்குக் கிட்டியது நண்பர்களே. பள்ளியில் இருந்து வீடு திரும்பியதும், வழக்கம் போல், கடந்த ஜுலை 21 ஆம் தேதி மாலை, கணினி முன் அமர்ந்து, வலைப் பூவைத் திறந்தேன்.

 
முத்துச் சிதறல் மனோ சாமிநாதன்
மனோ சாமிநாதன்,
அன்புச் சகோதரர் அவர்களுக்கு,

       தஞ்சை வருவதால் தங்களையும் தங்கள் குடும்பத்தினரையும் சந்திக்க ஆவலாயுள்ளேன். தங்கள் தொலைபேசி எண்ணை என் ஈமெயில் விலாசத்திற்குத் தெரியப்படுத்தவும். ஊருக்கு வந்ததும் தங்களை தொடர்பு கொள்கிறேன்.

     அடுத்த நொடியே, மின்னஞ்சல் அனுப்பினேன். தங்களைச் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்,
     அடுத்த நாள் காலை, கணினியில், பதில் மின்னஞ்சல் தயாராய் காத்திருந்தது.

அன்புள்ள சகோதரர் அவர்களுக்கு,
      தங்களின் உடனடி பதில் மிகவும் மகிழ்வைத் தந்தது. உங்களின் விலாசம், தொலைபேசி எண்ணைக் குறித்துக் கொண்டு விட்டேன். இந்த தடவை லாப்டாப் ஊருக்கு எடுத்து வரவில்லை என்பதால் தங்களை நான் வந்த பின், தொலைபேசி மூலமாக தொடர்பு கொள்கிறேன்.
     இன்று இரவு தஞ்சை கிளம்புகிறேன். நாளை வந்த பின் உறவினங்கள் எல்லோரும் வந்து போய்க் கொண்டிருப்பார்கள். அதனால இரண்டு நாட்களில் உங்களுக்கு போன் செய்கிறேன்.
     எங்கள் இல்லம், உங்கள் இல்லம் இருக்கும் அதே சாலையில், நடராஜபுரம் தெற்கில் ஐந்தாவது குறுக்குத் தெருவில் 62ம் எண்ணில் உள்ளது.
     தங்கள் இல்லத்தில் அனைவருக்கும் என் அன்பினைத் தெரியப் படுத்துங்கள்.
அன்பு சகோதரி,
மனோ சாமிநாதன்

    சில நாட்கள் கடந்த நிலையில், 25 ஆம் தேதி வியாழக் கிழமை காலை, பதினோரு மணியளவில் என் அலைபேசி ஒலித்தது. மறு முனையில் சகோதரியார். அப்பொழுது நான் தஞ்சையில் இல்லை. சென்னை அப்போலோ மருத்துவ மனையில் இருந்தேன்.

     பதினைந்து நாட்களுக்கும் மேலாக எனது மனைவிக்குத் தலைவலி. விடவேயில்லை. தஞ்சையில் உள்ள கண் மருத்துவரைப் பார்த்தோம். குறையொன்றுமில்லை எனக் கூறிவிட்டார். மூளை நரம்பியல் மருத்துவரைப் பார்த்தோம். எம்.ஆர்.ஐ. ஸ்கேன் செய்தோம்.

     பயப்படுவதற்கு ஒன்றுமில்லை. மைகிரேன் பிரச்சினைதான் எனக் கூறி மாத்திரைகளை எழுதிக் கொடுத்தார். பத்து நாட்கள் கடந்த பிறகும் முன்னேற்றமில்லை. மீண்டும் மருத்துவரைச் சந்தித்தோம். பத்து நாட்கள் மாத்திரைகள் சாப்பிட்டும் வலி குறையவில்லை என்றவுடன், இதற்குமேல் தஞ்சையில் மருத்துவம் கிடையாது. உடனே அப்போலா மருத்துவமனைக்குச் செல்லுங்கள். மூளை நரம்பியல் மருத்துவர் டாக்டர் ஏ. பன்னீர் அவர்களைப் பாருங்கள் என்றார்.

     அன்று இரவே, சென்னையில் இருக்கும் நண்பர் அனந்த ராமன் அவர்களைத் தொடர்பு கொண்டேன்.
 
நண்பர் அனந்த ராமன்
     1995 ஆம் ஆண்டு தஞ்சையில், ஒரு அச்சகத்தில் முதன் முறையாக திரு அனந்த ராமன் அவர்களைச் சந்தித்தேன். அன்று தொடங்கிய நட்பு. வாழ்வில் சோதனைகளைச் சந்திக்கும் பொழுதெல்லாம் தூணாய் இருந்து, என்னைத் தாங்கிப் பிடித்து துயர் துடைக்கும் உத்தம நண்பர். நான்காண்டுகளுக்கு முன், வேதனை மிக்க வேலையில், எனது மகளின் மருத்துவத்திற்காகச் சென்னை சென்ற பொழுது, சென்னையில் கால் பதித்த நொடி முதல், என் மகளுக்கு குறையொன்றுமில்லை என்ற மகிழ்வானச் செய்தியினைக் கேட்டு, நெகிழ்ச்சியுடன், தஞ்சைத் திரும்ப, தொடர் வண்டியில் ஏறிய நிமிடம் வரை, ஐந்து நாட்களும், தனது பணிகள் அத்தனையினையும் ஒதுக்கி வைத்து விட்டு, அச்சகத்தின் பக்கமே செல்லாமல், ஒவ்வொரு நொடியினையும், ஒவ்வொரு நிமிடத்தினையும் எங்களுக்காகவேச் செலவிட்ட நல் நட்பு உள்ளத்திற்குச் சொந்தக்காரர்.

     சென்னையில் உறவினர்கள் பலர் இருந்த போதிலும், நண்பரின் வீட்டில் தங்கினால், சொந்த வீட்டில் இருப்பதைப் போலவே ஓர் உணர்வு. எனவே இப்பொழுதும் அவரையே தொடர்பு கொண்டேன்.

    மறுநாள் காலை முதல் வேலையாக அப்போலோ மருத்துவ மனைக்குச் சென்று, அடுத்த நாள் (25.7.13) வியாழக் கிழமை மருத்துவரைப் பார்க்க முன் பதிவு செய்து விட்டு, என்னை அழைத்தார். இன்று மதியமே புறப்பட்டு, சென்னைக்கு வந்து விடுங்கள். நாளை காலை மருத்துவரைச் சந்திக்கலாம் என்றார்.

    அன்று மதியமே வாடகைக் கார் மூலம் சென்னை புறப்பட்டு, இரவு சென்னை வளசரவாக்கத்தில் இருக்கும் நண்பர் அனந்தராமனின் இல்லம் அடைந்தேன்.

     மறுநாள் காலை அப்போலோ மருத்துவ மனையில் இருந்த போதுதான், சகோதரியார் அலைபேசியில் அழைத்தார். விவரம் கூறினேன். கவலைப் படாதீர்கள், இன்றைய மருத்துவ முறைகளால் தீர்க்க முடியாத பிரச்சினைகளே இல்லை, உங்கள் மனைவி விரையில் குணமடைவார் கவலை வேண்டாம் என்று கூறினார்.

     அன்று மாலையே திரும்பவும் அலைபேசியில் அழைத்தார். மருத்துவரைப் பார்த்துவிட்டீர்களா? மருத்துவர் என்ன கூறினார், என அக்கறையுடன் விசாரித்தார்.

     மருத்துவரைப் பார்த்துவிட்டோம். பயப்படுவதற்கு ஒன்றுமில்லை. தலையில் இரத்தக் குழாயில அடைப்பு எதுவும் கிடையாது. மாத்திரைகளைத் தொடர்து சாப்பிட்டு வந்தால், சரியாகிவிடும் என்று கூறினார் எனத் தெரிவித்தேன்.

      காலையில் பேசியதற்கும், இப்பொழுது பேசுவதற்கும், உங்களின் குரலிலேயே ஒரு தெளிவு தெரிகிறது கவலைப் படாதீர்கள் என மகிழ்ச்சியுடன் கூறினார். மேலும் நான் ஆகஸ்ட் 15 வரை தஞ்சையில்தான் இருப்பேன். எனவே விரையில் உங்களின் இல்லத்திற்கு வருகிறேன் என்றார்.

     3.8.2012 சனிக் கிழமை நண்பகல் 12 மணியளவில், தனது பள்ளிக் காலத் தோழி ஒருவருடன், எனது இல்லத்திற்கு வருகை தந்தார், சகோதரியார் முத்துச் சிதறல் மனோ சாமிநாதன் அவர்கள்.

             உலக  வாழ்க்கையி  னுட்பங்கள்  தேரவும்
             ஓது  பற்பல  நூல்வகை  கற்கவும்
             இலகு  சீருடை  நாற்றிசை  நாடுகள்
             யாவுஞ்  சென்று  புதுமை  கொணர்ந்திங்கே
             திலக  வாணுத  லார்நங்கள்  பாரத
             தேச  மோங்க  வுழைத்திடல்  வேண்டுமாம்
             விலகி  வீட்டிலொர்  பொந்தில்  வளர்வதை
             வீரப்  பெண்கள்  விரைவி  லொழிப்பாராம்

என்று, தான் காண நினைத்த புதுமைப் பெண் பற்றிப் பாடுவான் பாரதி. முத்துச் சிதறல் மனோ சாமிநாதன் அவர்களும், ஓர் பாரதி கண்ட புதுமைப் பெண்ணாகத்தான் தோன்றினார்.

     தமிழகத்தில், தஞ்சை மாவட்டத்தில் பிறந்து, இல்லத்தரசியாய் முப்பதாண்டுகள் பாலைவன நாட்டில் வாழ்ந்து வருபவர். வெளிநாடு சென்ற போதிலும் வீட்டிலோர் பொந்தில் முடங்கி விடாமல், வாழ்வியல் அனுபவத்தில் கண்டெடுத்த, எத்தனையோ முத்துக்களில் நல் முத்துக்களாய் தேடி எடுத்து, முத்துக் குவியலாய், முத்துச் சிதறலாய் இணையம் வழி பகிர்ந்து வருபவர்.

     ஓவியம், இலக்கியம், விளையாட்டு, இசை, கவிதை, தையற் கலை, சமையற் கலை என பல துறைகளிலும் கால் பதித்து, பாங்குடன் பணியாற்றி வருபவர்.

    சார்ஜா. அராபிய பாலைவன நாட்டில் வாழும் தமிழர்களின் உணவுத் தாகத்தை தணிக்கும் சபையர் ஹோட்டல் உணவு விடுதியின் உரிமையாளர். இவரது கணவர் சுவைமிகு உணவுகளை உணவு விடுதியில் மட்டுமே வழங்குவார். ஆனால், ஒவ்வொரு வீட்டின் சமையலறையிலும் நுழைந்து, இலட்சக் கணக்கானத் தமிழர்களின், மனத்தினையும், வயிற்றினையும் சுகமாக நிரப்பி வருவது, இவரது
கைமனம்
என்னும் வலைப் பூவாகும்.

Mano’s Delicious kitchen
தாயின் கை பக்குவத்துடன், உணவு வகைகளை வாரி இறைக்கும் இவரது ஆங்கில வலைப் பூ இது.

     இதுமட்டுமல்ல, கடந்த எட்டு வருடங்களில், பத்து இலட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களைக் கொண்ட, சமையல் குறிப்புகளுக்கானத் தனித் தளம் ஒன்றும் இவருக்குண்டு,

    புரூட் ரைஸ், பொங்கல் குழம்பு, மலபார் ப்ரான் கறி, பீர்க்கங்காய் துகையல், செட்டியாட்டு சிக்கன் கிரேவி, வறுவல், முட்டை பணியார குழம்பு, மைசூர் ரசம், விவிகா, செமோலியா அல்வா, மீன் கட்லெட், அக்கார வடைசல், தென்கை பால் என நீ.......ண்......டு கொண்டே செல்கிறது இவரது சமையல் குறிப்புகள். மலைப்புதான் மிஞ்சுகிறது. நாம் உண்ணும் உணவில் இத்தகை வகைகள் இருக்கிறதா? பல உணவு வகைகளின் பெயரைக் கூட இதுவரை கேள்விப் பட்டதில்லையே? என வியக்கத் தூண்டும் வலைப் பூ, இவரது வலைப் பூ.
 
எனது மனைவியுடன் திருமதி மனோ சாமிநாதன்
     முப்பது நிமிடங்களுக்கும் மேல் எங்களது சந்திப்பு நீண்டது. இவரது தாத்தா சோம சுந்தரம் பிள்ளை அவரகள் ஒரு பெரும் தமிழறிஞர் என்பதை அறிந்தேன். கரந்தையோடு தொடர்புடையவர். உமாமகேசுவரனாரின் சமகாலத்தவர் என்ற செய்தி அறிந்து மகிழ்ந்தேன். தொல்காப்பியம் குறித்து, இவரது தாத்தா நூல் ஒன்று எழுதியிருப்பதை அறிந்து வியந்தேன்.


     
எனது மனைவியிடம் அன்போடு பல நிமிடங்கள் பேசினார். தன் வாழ்வில், தான் சந்தித்த மருத்துவ அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டு, பலவாறு ஆறுதல் கூறினார்.

     மகிழ்ச்சி நிரம்பிய சந்திப்பாக இச்சந்திப்பு அமைந்தது. எண்ணிப் பார்த்தால் வியப்பாக இருக்கின்றது, தமிழுக்கும் எழுத்திற்கும்தான் எத்தனை சக்தி.

யாதும் ஊரே யாவரும் கேளிர்

என்பார் கனியன் பூங்குன்றனார். இன்று இவ்வரிகள் உண்மையாகி விட்டதே. பேரூந்தில் ஏறாமல், தொடர் வண்டியில் பயணிக்காமல், விமானத்தில் பறக்காமல், வலைப் பூவின் வழியாக, ஒரு நொடியில், உலகம் முழுதும் சுற்ற முடிகிறதே. உறவுகளை அறிய முடிகிறதே. நட்புகளைப் பெருக்கிக் கொள்ள முடிகிறதே.

வலைப் பூவிற்குத் தான் நன்றி சொல்ல வேண்டும்.