23 நவம்பர் 2014

விருது

     

நண்பர்களே, வணக்கம். நலம்தானே. வலைப் பூ என்னும் எழுத்து உலகில், மகிழ்ச்சி உலகில் காலடி எடுத்து வைத்து, மூன்றாண்டுகள் ஆகப் போகின்றன.

     மூன்று ஆண்டுகளுக்குள் எத்தனை, எத்தனை புதுப் புது உறவுகளைச் சம்பாதித்திருக்கிறேன் என்பதை எண்ணும்போது, மனம் மகிழ்ச்சியில் ஆனந்தக் கூத்தாடுகிறது.


     என் நினைவுகளை சற்றே, பின்னோக்கிச் செலுத்திப் பார்க்கிறேன். முதன் முதலாய், வலைப் பூவில், என் முதல் பதிவினை பகிர்ந்த பொழுது, ஒரு மாதத்திற்கும் மேலாக, இவ்வுலகின் பெரிய ரகசியமாகவே அது தொடர்ந்தது. நான் மட்டுமே தினம் தினம், அப்பதிவினைப் படித்து வந்தேன்,

     பிறகு மெல்ல, மெல்ல நண்பர்கள் ஓரிருவர், என் வலையின் பக்கம் எட்டிப் பார்க்கத் தொடங்கினார்கள். மனதில் உற்சாகம் பிறந்த்து. நம்மைப் படிக்க ஓரிருவராவது வருகிறார்களே, அவர்களுக்காகவாவது எழுதுவோம் என்ற எண்ணம் தோன்றியது. எழுதத் தொடங்கினேன்.

       துவக்கத்தில் மாதம் ஒரு பதிவுதான் எழுதினேன். தற்சமயம் வாரத்திற்கு ஒரு பதிவு.

எழுதுங்கள் என, என்னை வலைக்குள் இழுத்தவர்
முனைவர் பா.ஜம்புலிங்கம் அவர்கள்

     பார்த்ததை எல்லாம் எழுதுங்கள், படித்ததை எல்லாம் எழுதுங்கள், கேட்டதை எல்லாம் எழுதுங்கள், கேள்விப்பட்டதை எல்லாம் எழுதுங்கள் என எழுத்துலகிற்கு வழி காட்டியவர்

திரு ஹரணி அவர்கள்,

     கணித மேதை சீனிவாச இராமானுஜன் தொடர், எனக்கு எண்ணற்ற புதிய உறவுகளை ஏற்படுத்தித் தந்தது.

சகோதரி திருமதி உஷா அன்பரசு அவர்கள்,
முதன் முதலாக என்னை வலைச் சரத்தில் அறிமுகப் படுத்தினார்

தனது பல்வேறு கல்வியியல் பணிகளுக்கு இடையிலும்,
நேரம் ஒதுக்கி, என் வலைப் பூவை,
கல்வியாளர் திரு டி.என்.முரளிதரன் அவர்கள்
தமிழ் மணத்தில் இணைத்துக் கொடுத்தார்.

தமிழ் மணத்தில் இணைத்துக் கொடுத்த காரணத்தால்,
மரபின் மைந்தன் முத்தையா அவர்களின்
பார்வைக்கும் சென்ற,
கணிதமேதை சீனிவாச இராமானுஜன் தொடர்
நமது நம்பிக்கையில்
இருபது வாரங்கள் தொடராகவும் வெளி வந்தது.


     நண்பர்களே, எனக்குக் கணினியில் தட்டச்சு செய்ய மட்டுமே தெரியும். அதனைத் தாண்டி கணினியின் செயல்பாடுகள் எதனையும் நான் அறியேன்.  

இணையத்தில் பிரச்சினைகள் தலைதூக்கிய போதெல்லாம்,
தனது தொழில் நுட்பத் திறமையினால், திண்டுக்கல்லில் இருந்தவாரே,
வலைச் சித்தர் திண்டுக்கல் தனபாலன் அவர்கள்.
சரி செய்து கொடுத்தார்.

இவ்வாறு நண்பர்களின், சகோதரிகளின் உதவியால், ஊக்குவிப்பால், தொடர் வருகையால்தான்
என் வலைப் பூ
இன்றும் தொடர்ந்து சுவாசித்துக் கொண்டிருக்கிறது.

     தங்களின் நல்லாதரவினால் மட்டுமே, எழுதிக் கொண்டிருக்கும் எனக்கு, ஒரு விருது வழங்கப் பெற்றுள்ளது என்பதை மன மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.

ரோட்டரி கிளப் ஆஃப் தஞ்சாவூர் கிங்ஸ்
சார்பில், தஞ்சையில்
6 ஆம் ஆண்டு
ரோட்டரி புத்தகத் திருவிழா
கடந்த 14.11.14 முதல் 23.11.14வரை
சிறப்புடன் நடைபெற்றதைத் தாங்கள் அறிவீர்கள்.

தொடக்கத் திருவிழா
ரசனை விழா
படைப்பாளிகளுக்குப் பாராட்டு விழா
இலக்கியத் திருவிழா
கலைத் திருவிழா
கவிதைத் திருவிழா
ஆவணப் படத் திருவிழா
பாராட்டுத் திருவிழா
வாசகர் திருவிழா
நிறைவு விழா
என ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு விழாவாக, புத்தகத் திருவிழா களை கட்டியது.

கடந்த 16.11.2014 ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற
படைப்பாளிகளுக்குப் பாராட்டு விழா
எனும் விழாவில், விழாக் குழுவினர்,
வலைப் பூவில் வலம் வருகின்றமைக்காக,
எனக்கும் ஒரு விருது வழங்கி மகிழ்ந்தனர்.

மேளாள் அமைச்சர், முத்தமிழ் மன்றத் தலைவர்
திருமிகு சி.நா.மீ.உபயதுல்லா அவர்களின்
தலைமையில் நடைபெற்ற விழாவில்,



மத்திய நிதித் துறை, மேனாள் இணை அமைச்சர்
திருமிகு எஸ்.எஸ்.பழனிமாணிக்ம் அவர்கள்,
மண்ணின் சிறந்த படைப்பாளி விருதினை
எனக்கு வழங்கினார்.

   





  எனது தமிழாசிரியர் புலவர்  கோ.பாண்டுரங்கன் அவர்களும், எனது நண்பரும், பள்ளித் தலைமையாசிரியருமான திரு வெ.சரவணன் அவர்களும், நண்பரும் பள்ளி உதவித் தலைமையாசிரியருமான திரு அ.சதாசிவம் அவர்களும், நண்பர்கள் திரு பி.சேகர், திரு க.பால்ராஜ் மும்பை சரவணன் அவர்களும் விழாவிற்கு வருகை தந்து சிறப்பித்தனர்.

     நண்பர்களே, தங்களால், தங்களின் அளப்பறிய அன்பினால், தங்களின் உற்சாகப் படுத்தும் பண்பார்ந்த செயலால், எனக்கு ஓர் விருது கிடைத்திருக்கின்றது.

நன்றி நண்பர்களே