25 ஜூன் 2015

ஜோதிராவ் புலே


ஓ, இறைவனே. உன்னுடைய உண்மையான மதத்தை எங்களுக்குக் கற்றுக் கொடு. அதன்படியே வாழ, நாங்கள் தயாராக இருக்கிறோம்.

ஒருவர்தான் உயர்ந்தவர் மற்றவர்கள் ஒன்றுமில்லாதவர்கள் என்பதாக இருக்கும் மதத்தை, இந்த பூமியை விட்டே அகற்றிவிடு. அப்படியொரு மதத்தைப் பெருமையாகக் கருதும் போக்கையும் அகற்றிவிடு.


     நண்பர்களே, இன்றைய காலகட்டத்திற்குக் கூட பொருத்தமாக இருக்கும், இக்கடிதம் எழுதப்பட்ட ஆண்டு என்ன தெரியுமா? 1855. நம்ப முடியவில்லைதானே? நம்புவதற்குக் கடினமாகத்தான் இருக்கும். ஆனால் உண்மை.

     இன்றைக்கு 160 ஆண்டுகளுக்கு முன், இக்கடிதத்தை எழுதியவர் ஒரு பெண். பெயர் முக்தா பாய். மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த, தீண்டத் தகாத சமூகத்தைச் சார்ந்தவர்.

     இதுபோன்று ஒரு கடிதத்தை எழுத, அதுவும் அக்காலத்தில் எழுத, எவ்வளவு துணிச்சல் தேவை.

    இலட்சக் கணக்கான, பிற தாழ்த்தப் பட்ட, தீண்டத் தகாத வகுப்பினைச் சேர்ந்த மக்களுக்குக் கிடைக்காத, கிட்டாத அறிவும், தெளிவான பார்வையும், போராட்ட குணமும், முக்தா பாய்க்குக் கிடைக்கக் காரணம், அவர் படித்த பள்ளியும், அதனை நடத்தியவரும்தான்.


அவர்தான்
ஜோதிராவ் புலே.

     ஜோதிராவ் புலே 1827 ஆம் ஆண்டு ஏப்ரல் 11 ஆம் நாள், மகாராஷ்டிராவின், புனேயில் பிறந்தவர். இவரது தந்தை கோவிந்த ராவ்.

      கோவிந்த ராவும் அவரது சகோதரர்களும் மலர் வியாபாரம் செய்து வந்தமையால், புலே என்னும் பெயர் அவர்களோடு ஒட்டிக் கொண்டது.

     ஜோதிராவ் ஒரு வயதிலேயே தாயை இழந்தார். தொடக்கக் கல்வியை மட்டும் பயின்று, தந்தையின் கடைக்கு வேலைக்கு வந்து விட்டார். பதிமூன்று வயதிற்குள் திருமணமும் முடிந்து விட்டது.

      ஜோதிராவின் உடல் கடையில் வேலை பார்த்தாலும், உள்ளமோ கல்வியைத் தேடி பூ போல் வாடியது.

     ஜோதிராவின் கற்கும் ஆர்வத்தை உணர்ந்த, அவரது தந்தையின் நண்பர்கள் இருவர், உதவிட முன் வந்தனர்.

     ஒருவர் முஸ்லிம், மற்றொருவர் கிறித்தவர்.

     ஜோதிராவ் 1841 இல் புனேயில் உள்ள ஸ்காட்டிஸ் உயர் நிலைப் பள்ளியில் சேர்ந்தார்.

     1847 இல் புலே படிப்பை முடித்தபோது, ஒரு திடமான முடிவில் இருந்தார்.

எக்காரணம் கொண்டும் அரசு வேலைக்குச் செல்லக் கூடாது.

     சிறு வயது முதலே, மனிதர்களை மனிதர்களாக வாழ விடாத, சாதிய ஒடுக்கு முறைகளைக் கண்டும், அதனால் மனம் நொந்தும் வாழ்ந்தவர்தான் புலே.

     சமூகத்தில் ஒரு பிரிவினர் உயர் நிலையிலும், மற்ற பிரிவினர் கீழ் நிலையிலும் இருப்பதற்கான சித்தாந்த விளக்கத்தை, நியாயத்தை, சாதியம் அளிப்பதை கண் கூடாகக் கண்டார்.

     இந்நிலையினை எப்படி மாற்றுவது என்று சிந்தித்தார். செழிப்பான, பண பலம் மிக்க, படைபலம் மிக்க, உயர் சாதியினருடன், ஒன்றுமற்ற, நிராதரவான, தாழ்த்தப் பட்ட மக்களால் எப்படி போரிட முடியும். போரிடுவது என்றால், எந்த ஆயுதத்தைப் பயன் படுத்தி போரிடுவது என ஆழ்ந்து ஆராய்ந்தார்.

     முடிவில் ஜோதிராவ் புலே, ஓர் வலிமைமிகு பேராயுதத்தைக் கண்டு பிடித்தார்.
கல்வி.

     கல்வி இல்லை என்றால் அறிவு இல்லை. அறிவு இல்லை என்றால் ஒழுக்கம் இல்லை. ஒழுக்கம் இல்லை என்றால் ஊக்கம் இல்லை. ஊக்கம் இல்லை என்றால் ஆக்கம் இல்லை. எனவே கல்வி இன்மையே, இந்த சீர்கேட்டிற்குக் காரணம் என உணர்ந்தார்.


தான் செய்ய நினைத்ததை முதலில் தன் வீட்டில் இருந்தே தொடங்கினார். தன் மனைவி சாவித்திரி பாய்க்கு, தானே ஆசிரியராய் இருந்து கல்வி கற்பித்தார்.

    

1851 இல் பெண்களுக்கான ஒரு பள்ளியைத் தோற்றுவித்தார். கணவன், மனைவி இருவருமே பள்ளியை நடத்தினர். மேலும் இரு பள்ளிகளைத் தொடங்கினார்.

     பள்ளிகள் பலவற்றைத் தொடர்ந்து தொடங்கிய போதிலும், புலேயின் மனம் அமைதியின்றித் தவித்துக் கொண்டே இருந்தது.

    பெருமளவிலான பெண்கள் கல்வி அறிவு அற்றவர்களாக இருக்கும் பொழுது, ஒரு சில பள்ளிகளால், எந்தவொரு பெரிய மாற்றத்தினையும் கொண்டு வர இயலாது என்பதை உணர்ந்திருந்தார்.

     படிப்பறிவற்றவர்கள் பெருகியிருப்பதற்கு யார் காரணம்? பள்ளிகளை அதிகரிப்பது எப்படி? எப்படி அப்பள்ளிகளில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இடம் அளிப்பது? கேள்விகள் தொடர்ந்து எழுந்த போதிலும், விடைகளையும் கண்டு பிடித்தார். அரசாங்கத்தின் முன் வேண்டுகோளாய் வைத்தார்.

     குறைந்தது 12 வயது வரையிலாவது, ஆரம்பக் கல்வி கட்டாயமாக்கப் பட வேண்டும்.

     தனியார் கல்வித் திட்டத்தை கடுமையாக எதிர்த்த புலே, நீண்ட காலத்திற்கு கல்வி அமைப்பு முழுவதும் அரசாங்கத்தின் வசமே இருக்க வேண்டும் என்றார்.

     மக்கள் மொழியில் அவர்களுக்குப் பயன்படும் வகையில் பாடத் திட்டங்கள் இருக்க வேண்டும்.

     எண், எழுத்து இரண்டையும் எழுத, படிக்க பழக்க வேண்டும். கணக்கு, பொது வரலாறு, பொது புவியியல், இலக்கணம் ஆகியவற்றில் தொடக்க நிலை அறிவினை அனைவரும் பெற்றாக வேண்டும்.

     மதத்தின் பெயரால், சாதியின் பெயரால், ஒரு பிரிவினரை ஒடுக்கும் வழக்கம் இன்றும் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது. தீண்டாமை இன்னும் ஒழிந்தபாடில்லை.

     கல்வி அறிவு அனைவருக்கும் கிடைத்து விடவில்லை. பெண்கள் இன்னும் சமத்துவத்தை எட்டிப் பிடிக்க வில்லை.

     புலே இன்றும் தேவைப்படுகிறார்.

     தாழ்த்தப் பட்டவர்கள் மட்டுமல்ல, ஒடுக்கப் பட்டோரின் விடுதலையை, இலட்சியமாகக் கொண்ட ஒவ்வொருவரும், ஏந்த வேண்டிய ஆயுதங்கள் என மூன்றினை, புலே குறிப்பிடுகிறார்.

அதிகாரம், கல்வி, அறிவியல்

     நண்பர்களே, மூன்று ஆயுதங்களையும் ஏந்திப் போராடுவதே, ஜோதிராவ் புலே அவர்களுக்குச் செலுத்தப்படும் உண்மை அஞ்சலியாகும்.