28 பிப்ரவரி 2016

செஞ்சோற்றுக் கடன்




பெற்ற அன்னையை அன்னாய் என்றுவாய்
பெருக அழைக்கவும் நேரமே யில்லை
உற்றார் உறவினர்க்காக உழைக்க
ஒருநாள் ஒருநொடி இருந்ததே இல்லை

கற்றவர் தமிழர் என்னுமோர் உயர்நிலை
காண வேண்டி இல்லந் துறந்து
முற்றுங் காலத்தைத் தமிழ்த் தொண்டாக்கினோன்
வாழ்க தமிழ் முனிவன் திருப்பெயர்.

     பெற்ற அன்னையை, அம்மா என மனம் மகிழ அழைத்து மகிழவும், உற்றார் உறவினர்க்காக உழைத்திட, ஒரு நாளைக் கூட ஒதுக்கிடாமல், ஒரு நாளின் ஒரு மணி நேரத்தைக் கூட ஒதுக்கிடாமல், ஒரு மணியின் ஒரு நிமிடத்தைக் கூட ஒதுக்கிடாமல், தமிழ் தமிழ் தமிழ் என நெஞ்சம் துடிக்கத் துடிக்க, அயராது பாடுபட்டிருக்கிறார் ஒரு மனிதர், ஒரு மாமனிதர் என்பதை நினைக்கும் பொழுதே நெஞ்சம் நெகிழ்கிறதல்லவா, விழிகள் வியப்பால் விரிகின்றன அல்லவா.


      இம் மாமனிதரைத் தன் கவிதை வரிகளால் போற்றிப் புகழ்ந்தவர் யார் தெரியுமா?

புரட்சிக்கவி, பாவேந்தர் பாரதிதாசன்

    புரட்சிக் கவியின் உணர்வு மிகு வரிகளால், பாசமிகு வார்த்தைகளால், நேசமிகு சொற்களால், பாராட்டப் பெற்ற இம்மாமனிதர் யார் தெரியுமா?

தமிழ் ஓர் உயர்தனிச் செம்மொழியே
என முதன் முதலாய்த் தீர்மானம் நிறைவேற்றியவர்.

தமிழுக்குத் தேவை, தனியே ஒரு தமிழ்ப் பல்கலைக் கழகம்
என முதன் முதலாய்த் தீர்மானம் நிறைவேற்றியவர்.

தமிழும் வடமொழியும் கலந்த, மணிப்பிரவாள நடை மறைந்து,
கரந்தை நடைத்
தோன்றக் காரணமாக இருந்தவர்

கட்டாய இந்தியை
வீறு கொண்டு எழுந்து, தீரமுடன் எதிர்த்து
முதல் குரல் கொடுத்தவர்.

வடமொழிக் கல்லூரியில்
தமிழுக்கும் சரியாசனம் அமைத்துக் கொடுத்தவர்.

மேலும், மேலும் இவர்தம் சாதனைகளை, அன்னைத் தமிழுக்கு அணி சேர்த்த இவர்தம் சேவைகளை கூறிக் கொண்டே போகலாம்.


இவர்தான்
செந்தமிழ்ப் புரவலர்
தமிழவேள் த.வே.உமாமகேசுவரனார்

    நான்காம் தமிழ்ச் சங்கமாம், கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின், முதற்றலைவராய் அமர்ந்து, முழுதாய் முப்பதாண்டுகள் சங்கத்தைப் போற்றிப் புரந்தவர்.

     இவர்தம் திருப்பெயர் தாங்கி நிற்கும் உமாமகேசுவர மேனிலைப் பள்ளியின் முன்னாள் மாணவன் நான்.

     நான் என்பது கூட தவறான சொல்தான்.

     நாங்கள் என்பதுதான் சரியான வார்த்தை.

    இப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் நாங்கள்.

     உமாமகேசன் காலடித் தடம் பதிந்த மண்ணில், நாள்தோறும் வாழ்வினை நகர்த்தி வருபவர்கள் நாங்கள்.

     உமாமகேசுவரனார் சுவாசித்த காற்றை, நாள்தோறும் சுவாசித்து வருபவர்கள் நாங்கள்.

      நாங்கள் என்றால் நான், நண்பர் திரு வெ.சரவணன், கேப்டன் ராஜன் மற்றும் ருத்ரன் பா.ராஜராஜன்.

     நண்பர் திரு வெ.சரவணன் அவர்களுக்கும் எனக்கும், ஓர் அற்புத வாய்ப்புக் கிடைத்தது. கல்வி பயின்ற பள்ளியிலேயே ஆசிரியர் ஆனோம். நண்பர் திரு வெ.சரவணன் அவர்களோ, ஆசிரியர் ஆகி, தலைமையாசிரியராகவும் உயர்ந்து விட்டார்.

     கேப்டன் ராஜன் அவர்களோ நிலத்தில் ஆறுமாதம், நீரில் ஆறு மாதம் என மிதப்பவர். உண்மைதான் நண்பர்களே, சிறு வயது முதலே, கப்பல், கப்பல், கப்பல் என கப்பலே கனவாய், இலட்சியமாய் எண்ணி எண்ணி, முயன்று முயன்று, இன்று கப்பலில்  கேப்டனாகப் பணிபுரிந்து வருபவர்.

     ருத்ரன் பா.ராஜராஜன் அவர்களோ, தன் மூச்சும், பேச்சும், சொல்லும் செயலும் ஆன்மீகம், ஆன்மீகம், ஆன்மீகமே என வாழ்ந்து வருபவர். ருத்ரன் கணிப்பொறி நிறுவனம் என்னும் பெயரில் கணிப்பொறி நிறுவனம் ஒன்றினைத் தன் சகோதரருடன் இணைந்து சிறப்புடன் நடத்தி வருபவர்.

     கேப்டன் ராஜனும், ருத்ரன் ராஜராஜனும், உமாமகேசுவர மேனிலைப் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் மட்டுமல்ல, திரு வெ.சரவணன் அவர்களின் முன்னாள் மாணவர்களும் ஆவார்கள்.

     சென்ற ஆண்டுவரை கேப்டன் ராஜனை நான் அறியேன்.

    எனது வலைப் பூவில், கரந்தைத் தமிழ்ச் சங்கம் பற்றியத் தொடரினைப் படித்து, என்னுடன் தொடர்பு கொண்டவர்.

சார், நானும் கரந்தைதான். நானும் உமாமகேசுவர மேனிலைப் பள்ளியின் முன்னாள் மாணவன்தான்.

    அன்று தொடங்கிய நட்பு.

    முதல் சந்திப்பிலேயே, ஒரு வேண்டுகோளினையும் முன் வைத்தார்.

உமாமகேசுவரனார் பற்றிய புத்தகம் ஒன்றினை வெளியிட வேண்டும். வலைப் பூவில் நீங்கள் எழுதிவரும் செய்திகளைத் தொகுத்துத் தாருங்கள். முழுச் செலவும் என்னுடையது, என்னுடையது மட்டுமே.

     மெய்சிலிர்த்துப் போய்விட்டேன் நண்பர்களே, மெய் சிலிர்த்துப் போய்விட்டேன். இப்படியும் ஒரு மாணவரா? நம்பத்தான் இயலவில்லை.

    கப்பலில் மிதந்தோமா, காசு சேர்த்தோமா, வீடு கட்டினோமா, கார் வாங்கினோமா, நகைகளை ,பணத்தினை கட்டுக் கட்டாய் வங்கியில், வங்கியின் பாதுகாப்புப் பெட்டகத்தில் வைத்துப் பூட்டினோமா என்று இல்லாமல், தான் பயின்ற பள்ளியின் மேல் காதல் கொண்டு, தமிழவேள் உமாமகேசன் மேல் தீராப் பாசம் கொண்டு, புத்தகம் வெளியிட வேண்டும் என்று அழைத்தவரைக் கண்டு வியந்துதான் போனேன்.

கரந்தைத் தமிழ்ச் சங்கப் பெத்தாச்சி புகழ் நிலையம்
தஞ்சாவூர், சரசுவதி மகால் நூலகம்
சென்னை, அரசு ஆவணக் காப்பகம்
சென்னை, கன்னிமாரா நூல் நிலையம்
சென்னை, மறைமலை அடிகள் நூலகம்
சென்னை, சைவ சித்தாந்த நூற் பதிப்புக் கழகம்
சென்னை, ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூல் நிலையம்
என நானும், நண்பர் திரு வெ.சரவணன் அவர்களும், அலையாய் அலைந்து திரட்டிய தகவல்களையும், கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் தமிழ்ப் பொழில் இதழ்கள், ஆண்டு அறிக்கைகள், கரந்தைத் தமிழ்ச் சங்க வெளியீடுகள் என, ஒவ்வொறு நூலின் ஒவ்வொரு பக்கத்தின் உள்ளும் புகுந்து திரட்டியச் செய்திகள் என அனைத்தையும் தொகுத்து, எங்களது நான்காண்டு கால உழைப்பை, ஒரு சிறு குறுந்தகடாய் வழங்கினோம்.

       கேப்டன் ராஜன் பணத்தினை அள்ளி வழங்க, ருத்ரன் ராஜராஜனோ, கணினியில் நூல் வடிவமைப்பு, அச்சாக்கம் எனத் தன் உழைப்பினை வாரி வழங்க, அழகுத் தோற்றத்துடன், உரு பெற்றிருக்கிறது, உமாமகேசன் புகழ்பாடும், ஓர் புத்தம் புது நூல்.


உமாமகேசுவரம்

புண்ணிய நெடுவரைப் போகிற நெடுங்கழைக்
கண்ணிடை யொருசாண் வளர்ந்தது கொண்டு
நூனெறி மரபின் அரங்கம் அளக்கும்
கோலன விருபத்து நாள்விரலா
எழுகோலகலத் தெண்கோல் நீளத்து
ஒரு கோல் உயரத்து உறுப்பினதாகி
உத்தரப் பலகையோடு அரங்கின் பலகை
வைத்த இடைநிலம் நாற்கோலாக
ஏற்ற வாயிலிரண்டுடன் பொலியத்
தோன்றிய அரங்கு
என சிலப்பதிகாரத்தில் இளங்கோ அடிகள் பாடுவார் அல்லவா, மாதவி நடனமாடிய அரங்கை, அதன் அளவுகளுடன் விவரிப்பார் அல்லவா, அதே அளவுகளுடன், கரந்தையம்பதியில், கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில், உமாமகேசுவரனார் அவர்களால் எழுப்பப் பெற்ற அரங்குதான் தமிழ்ப் பெருமன்றம்.

சங்கத் தமிழ்ப்பெரு மன்றம்

      உலகெங்கும் வாழ்ந்த தமிழ்ப் பெரியார்கள்தம் பாதம் பட்ட இடம், இந்தத் தமிழ்ப் பெருமன்றம். தமிழையே சுவாசமாய் சுவாசித்த, நேசித்த மாமனிதர்களின் குரல் ஓங்கி ஒலித்த இடம், இந்தத் தமிழ்ப் பெருமன்றம்.

     சுருங்கச் சொல்ல வேண்டும் எனில், தமிழ்த் தலமாம், இக்கரந்தையின், கருவறையே, இந்தத் தமிழ்ப் பெருமன்றம்தான்.

     இத்தகு பெருமை வாய்ந்த தமிழ்ப் பெருமன்ற மேடையில்,

உமாமகேசுவரம்
நூலின் வெளியீட்டு விழா.

கரந்தைத் தமிழ்ச் சங்க்ததின், கரந்தைப் புலவர் கல்லூரியின் பயின்று,
1954 ஆம் ஆண்டில்,
சென்னைப் பல்கலைக் கழகத்தின்,
தங்கப் பதக்கத்தினை வென்ற,
நடமாடும் தமிழ்க் களஞ்சியம், பேச்சும் மூச்சும் சங்கத் தமிழே
என வாழ்ந்து வரும், 80 வயது நிரம்பிய,
உலகப் பெருந் தமிழர்,
முனைவர் இரா.கலியபெருமாள் அவர்கள்,
நூலினை வெளியிட,



எனது நண்பரும், எனது பள்ளிப் பருவத் தோழரும்,
கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின்
துணைத் தலைவருமான
திரு இரா.சுந்தரவதனம் அவர்கள்
நூலின், முதற் படியினைப் பெற்றுச் சிறப்பித்தார்.
 
கேப்டன் ராஜன்
ருத்ரன் ராஜராஜன்


கரந்தைப் புலவர் கல்லூரியின் முன்னாள் மாணவர்,
ஓய்வு பெற்றத் தமிழாசிரியர்
புலவர் ம.கந்தசாமி அவர்களும்,


கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் புகழினை,
கடல் கடந்து, அமெரிக்க நாடு முழுவதும் பரப்பி வரும்,
சங்க அன்பர்,
கரந்தை எஸ்.பாலசுப்பிரமணியன் அவர்களும்,

முனைவர் கோ.சண்முகம் கேப்டன் ராஜன்அவர்களைச் சிறப்பிக்கிறார்
தமிழவேள் உமாமகேசுவரனார் கரந்தைக் கலைக் கல்லூரியின்
ஒருங்கிணைப்பாளர்
முனைவர் கோ.சண்முகம் அவர்களும்,


வலையுலகில் எதை எழுதுவது, எப்படி எழுதுவது
என எனக்கு வழிகாட்டிய, என்னை நெறிப் படுத்திய,
எனது வலையுலக குருநாதர்,
அண்ணாமலைப் பல்கலைக் கழகப் பேராசிரியர்
கவிஞர், சிறுகதை எழுத்தாளர், நாவலாசிரியர்
முனைவர் ஹரணி அவர்களும்,


கரந்தைத் தமிழ்ச் சங்க நிறைவேற்றுக் கழக உறுப்பினர்
திரு ஆ.சோ.தியாகராசன் அவர்களும்,


கரந்தைத் தமிழ்ச் சங்க நிறைவேற்றுக் கழக உறுப்பினர்
திரு ஆ.பக்கிரிசாமி அவர்களும்

சிறப்பு விருந்தினர்களாய் கலந்து கொண்டு, விழாவினைச் சிறப்பித்தார்கள்.


வலையுலக ஆன்மீகச் செம்மல்,
கும்பகோணத்து மகாமகப் பெரு நிகழ்வில் பங்கு பெற வேண்டும்,
பங்கு பெற்றே ஆக வேண்டும் என்பதற்காகவே,
குவைத்தில் இருந்து பறந்து வந்த
தஞ்சையம்பதி
திரு செல்வராசு அவர்கள்
நூல் வெளியீட்டு விழாவிற்கு முதல் நாளே,
பள்ளிக்கு வந்து வாழ்த்தி மகிழ்ந்தார்.

     உமாமகேசுவர மேனிலைப் பள்ளியின் இலக்கிய மன்ற ஆண்டு விழாவோடு, உமாமகேசுவரம் நூலின் வெளியீட்டு விழாவினையும் நடத்திட, மனம் மகிழ்ந்து, அகம் குளிர்ந்து, அனுமதி வழங்கிய
சங்கச் செயலாளர்
செம்மொழி வேளிர்
திரு ச.இராமநாதன் அவர்களையும்,
சங்கத் துணைத் தலைவர்
திரு இரா.சுந்தரவதனம் அவர்களையும்
எங்கள் உள்ளம், எந்நாளும் போற்றி மகிழும்.

உமாமகேசுவரம்
தமிழ்ப் பெருமன்ற மேடையேறிய
இப் பொன்னாள்,
உமாமகேசுவர மேனிலைப் பள்ளியின்
முன்னாள் மாணவர்களாகிய
எங்கள் நால்வராலும்
சுவாசமென்று ஒன்று இருக்கும் வரை
மறக்க இயலா திருநாள்.

    உமாமகேசன் பாதம் பதிந்த, கரந்தை மண்ணில் தவழ்ந்து, நடந்து, உமாமகேசன் சுவாசித்தக் காற்றையே சுவாசித்து, உயிர் வளர்த்து, நல் வாழ்வு வாழ்ந்து வரும் எங்களின், மனங்களில் மகிழ்வும், நெகிழ்வும், நிறைவும் பொங்கி வழிகின்றன.

இப்புவியில்,
இக் கரந்தை மண்ணில்,
சிற்றுயிராய் தோன்றியதன்,
நோக்கத்தை
நிறைவேற்றிய நிம்மதி
எங்கள் நால்வரின் மனங்களிலும்.

உமாமகேசுவரம்
எங்களின்

செஞ்சோற்றுக் கடன்.