08 ஆகஸ்ட் 2016

வெற்றிவேல் முருகன் பேசுகிறேன் 4


ஃபோர்டு நிறுவனத்தின் கல்வி உதவித் தொகையினைப் பெறத், தாங்கள் தகுதி படைத்தவராகத் தேர்வு செய்யப் பெற்றுள்ளீர்கள் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம். முனைவர் படிப்பிற்கான அனைத்துவித செலவினங்களையும்  ஃபோர்டு நிறுவனம் ஏற்றுக் கொள்கிறது.

      பிறந்த நாள் முதல், ஊன்று கோலின் உதவியுடன் நடந்த நான், முதன் முறையாய் வின்னில் பறப்பது போல் உணர்ந்தேன்.


     நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

     விழிகளில் ஆனந்தக் கண்ணீர் எட்டிப் பார்க்க, அருகில் இருந்த என் தந்தையை கட்டிப் பிடித்துக் கொண்டேன்.

    ஃபோர்டு நிறுவனத்தின் உதவியுடன், மூன்று அமெரிக்கப் பல்கலைக் கழகங்களுக்கும், ஒரு ஆஸ்திரேலியப் பல்கலைக் கழகத்திற்கும் விண்ணப்பித்தேன்.

     2003, ஏப்ரல் 30.

    

அமேரிக்காவின், நியூயார்க் நகரில் உள்ள புதிய இயக்ககப் பல்கலைக் கழகம் (New School University) என்னை முனைவர் பட்ட ஆய்வு மாணவராக ஏற்றுக் கொண்டது.

     உடனே அமேரிக்கா செல்வதற்கான ஏற்பாடுகளைத் துவக்கினேன்.

      அமெரிக்கா செல்வதானால் விசா வேண்டுமல்லவா? அந்த விசாவிற்கு விண்ணப்பிக்கும்போது, புதிதாய் ஓர் பிரச்சினை, முற்றிலும் எதிர்பாராத ஓர் பிரச்சினை.

    நண்பர்களே, பொதுவாக நாம் நமது பெயரை எப்படி எழுதுவோம், உதாரணத்திற்கு, உங்களின் தந்தையின் பெயர் சீனிவாசன் என்றும், தங்களின் பெயர் இராமானுஜன் என்றும் இருக்குமானால், உங்களது பெயரை எப்படி எழுதுவீர்கள், எஸ்.இராமானுஜன் என்றுதானே எழுதுவீர்கள். பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும்போது,
சீனிவாசன் இராமானுஜன்
என்றுதானே எழுதுவீர்கள்.

   நானும் அப்படித்தான் எழுதினேன்.

   எனது தந்தையின் பெயர் ஆதிமூலம். எனது பெயர் வெற்றிவேல் முருகன். எனவே ஆதிமூலம் வெற்றிவேல் முருகன் என்று எழுதி பாஸ்ப்போர்ட் பெற்றேன்.

ஆதிமூலம் வெற்றிவேல் முருகன்

     பாஸ்போர்ட் இருக்கிறது. விசா பெற்றாக வேண்டும். விசா பெறுவதற்குரிய ஆவணங்கள், அமெரிக்காவில் இருந்து வந்தன. இதில்தான் சிக்கல்.

    எனது பெயரும், எனது தந்தையின் பெயரும் இடம் மாறி இருந்தது.

    வெற்றிவேல் முருகன் ஆதிமூலம்

    பாஸ்போர்ட்டில் ஒரு பெயர்.

    விசா ஆவணங்களில், வேறு வடிவில் என் பெயர்.

     மெல்ல மெல்ல என் மனதை குழப்பமும், பயமும் கவ்வத் தொடங்கியது.

     தயங்கித் தயங்கி, சென்னையில் உள்ள அமெரிக்கத் தூதரகத்திற்குச் சென்றேன். ஆனாலும் தெளிவாக நிலைமையினை விளக்கினேன்.

     அமெரிக்கத் தூதரக அதிகாரி சிரித்தார்.

      கவலை வேண்டாம். கலாச்சார வேறுபாடுகளைக் கருத்தில் கொண்டு, உங்களுக்கு விசா வழங்கப் படுகிறது.

      அப்பாடா, ஒரு நிம்மதிப் பெருமூச்சு விட்டேன்.

      இனி, பயண ஏற்பாடுகளைச் செய்தாக வேண்டும்.

       ஒரு பயண வழிகாட்டி நிறுவனத்தை அணுகினேன். 2003, ஆகஸ்ட் 22 ஆம் தேதி, அதிகாலை 2.00 மணிக்கு லுப்தான்ஸா விமானத்தில் இருக்கை முன் பதிவு செய்யப் பட்டது.

    பயண நாளும் வந்தது.

    நான் எனது தந்தையுடன், முதல் நாளே சென்னைக்கு வந்து விடுவதெனவும், எனது தாயும் மற்ற உறவினர்களும், அடுத்த நாள் அமெரிக்காவிற்கு எடுத்துச் செல்ல வேண்டிய எனது உடமைகளோடு, நேரடியாக விமான நிலையத்திற்கே வருவதாகவும் ஏற்பாடு.

     எனது தந்தையும் நானும் முதல் நாளே சென்னைக்கு வந்து விட்டோம். பயண வழிகாட்டியைச் சந்தித்து, பயணச் சீட்டு மற்றும் வழிச் செலவிற்காக அமெரிக்க டாலர்களையும் பெற்றுக் கொண்டேன்.

       இன்னும் சில மணி நேரங்களில், விமானத்தில் ஏறியாக வேண்டும். மனம் முழுவதும் மகிழ்ச்சியில் திளைக்க, சிறிது ஓய்வெடுக்க விடுதி அறைக்குத் திரும்பினோம்.

     விடுதியில் எங்களுக்காக, அந்த தொலைபேசிச் செய்தி காத்திருந்தது.

     எனது தாயும், சில உறவினர்களும் வந்த வாடகை மகிழ்வுந்து, திருப்பத்தூர் அருகே, பழுதடைந்து விட்டதாகவும், எனவே குறிப்பிட்ட நேரத்தில், சென்னைக்கு வருவது சந்தேகம்தான் என்னும் தொலைபேசிச் செய்தி எங்களுக்காகக் காத்திருந்த்து.

     நான் சென்னையில், எனது உடைகள், உடமைகள் திருப்பத்தூர் வீதியில்.
                                          
                                                                                                                             தொடர்ந்து பேசுவேன்