ஆண்டு
1974.
சூலை மாதம்.19 ஆம் நாள்.
பென்டோன்வில்லி
சிறைச்சாலை, இலண்டன்.
சூரியன் உதித்த நொடியில் இருந்தே, சிறைச்சாலையில்
பரபரப்பு.
24 வருடங்களுக்கு முந்தையப் பதிவேடுகள், அலசி
ஆராயப் பட்டன.
பதிவேடுகளின் அடிப்படையில் இடம் உறுதி செய்யப்
பட்டது.
இடமா, என்ன இடம்?
புதைக்கப் பட்ட இடம்?
தூக்கிலிடப் பட்டவர் புதைக்கப் பட்ட இடம்.
1940 ஆம் ஆண்டு சூலைத் திங்கள் 31 ஆம் நாள், தூக்குமேடையேறி,
ஆங்கில மண்ணில், புதையுண்டுபோன, அம்மனிதர், மீண்டும் தோண்டி எடுக்கப் பட்டார்.
24 ஆண்டுகளில் கொஞ்சம் கொஞ்சமாய், மண்ணால் அரிக்கப்பட்டு,
உணவாய் உட்கொள்ளப்பட்டது போக, மீதமிருந்த, அம்மனிதரின் எலும்புத் துண்டுகள், ஏழு கலயங்களில்
சேமிக்கப் பட்டன.
ஏழு கலயங்களும், அன்றே விமானம் ஏறிப் பறந்தன.
இந்தியாவில் இறங்கின.
----
மார்ச் 13
காக்ஸ்டன்
விழா அரங்கு. இலண்டன்.
இலண்டனின்
உயர் மட்ட அதிகாரிகள் பலரும் பங்குபெறும் கூட்டம்.
கூட்டம் தொடங்குவதற்கு முன்னரே, அரங்கு நிரம்பி விட்டது.
இருப்பினும், பார்வையாளர்கள் வந்த வண்ணம் இருந்தனர்.
நாற்பது வயது மதிக்கத் தக்க ஒரு இந்தியர், மெல்ல
உள்ளே நுழைந்தார்.
கோட், சூட் அணிந்து, நெஞ்சம் நிமிர்த்தி, நேர்
கொண்ட பார்வையோடு, உதட்டில் புன்னகையோடு அரங்கினுள் காலடி எடுத்து வைத்தார்.
உட்கார இடமில்லை
ஓரமாய் ஒதுங்கி நின்றார்
கூட்டம் தொடங்கியது
இந்தியரின் செவிகளில் மேடைப் பேச்சு எதுவும்
நுழையவே இல்லை.
கண்கள் மேடையில் அமர்ந்திருக்கும், ஆங்கிலேயர்
ஒருவரையே உற்று நோக்குகின்றன.
இந்த நாளுக்காகத்தானே, இந்த நிமிடத்திற்காகத்தானே,
இத்தனை வருடங்கள் காத்திருந்தேன்.
ஒன்றா, இரண்டா, முழுதாய் இருபத்தோரு வருடங்கள்,
இந்த நாளுக்காகத்தானே காத்திருந்தேன்.
இருபத்தியோரு வருடக் காத்திருப்பு, திட்டமிடல்
இன்று முடிவுக்கு வரப்போகிறது.
இந்தியரின் கைகள், அவரையும் அறியாமல், உடையினுள்
கைவிட்டுத் தடவிப் பார்க்கின்றன.
துப்பாக்கி.
பத்திரமாய் இருக்கிறது.
குண்டுகள் நிரப்பப் பட்டு, வெடித்துக் கிளம்பத்
தயாராய் காத்திருக்கிறது.
---
சுடுங்கள்
ஆங்கிலேய அதிகாரியின் ஆணவமிக்கக் குரல், இருபதாண்டுகளைக்
கடந்தும், இன்றும் செவிகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.
இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் ஒன்றாய்
கூடியிருக்கிறார்கள்.
தண்ணீர் குடமொன்றைக் கையில் ஏந்தி, கூடியிருந்தோரின்
தாகம் தணிக்க, தண்ணீர் கொடுத்துக் கொண்டிருந்த, அந்த 20 வயது இளைஞன், ஏதோ சத்தம் கேட்டு,
அம்மைதானத்தின், ஒரே நுழைவு வாயிலை நோக்குகிறான்.
வரிசையாய் காவலர்கள், கரங்களில் துப்பாக்கிகளை
ஏந்தியபடி உள்ளே வருகிறார்கள்.
இவர்கள் ஏன் வருகிறார்கள் ?
ஐம்பது காவலர்கள்
ஆணவத்துடன் கடைசியாய் நுழைந்த ஆங்கிலேய அதிகாரி,
கூச்சலிட்டான்.
சுடுங்கள்
ஐம்பது துப்பாக்கிகள், ஒரே நேரத்தில்,
குண்டு மழை பொழியத் தொடங்கின.
ஓடுவதற்கோ, ஒளிவதற்கோ இடமில்லை.
துப்பாக்கிகளின் முழக்கம் ஓய்ந்தபோது, இரத்த
ஆறு ஓடிக் கொண்டிருந்தது.
பெரியவர்கள், சிறியவர்கள், பெண்கள், குழந்தைகள்
என ஆயிரக் கணக்கில், உயிரற்ற உடல்கள் சிதறிக் கிடந்தன.
தண்ணீர் கொடுத்துக் கொண்டிருந்த, அந்த இளைஞன்,
வெகு நேரம் கடந்த பின், மெல்ல மயக்கம் தெளிந்து, கண் விழித்தான்.
நான் சாகவில்லை
உயிரோடு இருக்கிறேன்
உண்மையில் உயிரோடுதான் இருக்கிறேன்
நம்பத்தான் முடியவில்லை
நான்கு திசைகளையும் பார்த்தான்
ஒரே இரத்த வாடை
மெல்ல எழுந்தான்
தட்டுத் தடுமாறி நடந்தான்
அன்று முதல் அவன் தூக்கம் தொலைந்து போனது
விட
மாட்டேன்
பாவிகளே, உங்களைக் கொல்லாமல் விட மாட்டேன்
ஒவ்வொரு நாளும், உள்ளத்தில் இவ்வெண்ணம் வலுப்பட்டுக்
கொண்டே இருந்தது.
விட மாட்டேன்
உள்ளத்தில் உறுதியெடுத்துக் கொண்டு, இந்தியாவை
விட்டு அகன்றான்.
மீண்டும்
வருவேன்
தேவையான பயிற்சியோடும், ஆயுதத்தோடும் வருவேன்
விட மாட்டேன்.
ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஜெர்மனி என பல்வேறு
நாடுகளில், பல்லாண்டுகள் கடந்தன.
இடையில் ஐந்தாண்டுகள் ஓய்வு.
இந்தியாவில்
அதுவும் சிறையில்.
ஆம் இந்தியச் சிறையில் ஐந்தாண்டுகள்
எதற்குத் தெரியுமா?
பகத் சிங்கின் அழைப்பை ஏற்று, துப்பாக்கிகளோடும்,
வெடி மருந்துகளோடும், 25 வீரர்களோடும், இந்தியாவிற்கு வந்தபோது, எதிர்பாரா விதமாய்
பிடிபட்டதால், ஐந்தாண்டுகள் சிறையில் நகர்ந்தன.
இந்த ஐந்தாண்டுகளில், பொது மக்களைச் சுட உத்தரவிட்ட,
அந்த அதிகாரி, ஆங்கிலேய அதிகாரி இறந்தே போனார்.
ஆனாலும், சுடச் சொல்லி, இந்த அதிகாரிக்கு,
உத்தரவிட்ட, அந்த வெள்ளைக்கார ஆளுநர் உயிரோடுதான் இருந்தார்.
விட
மாட்டேன்.
ஐந்தாண்டு சிறைத் தண்டனை முடிந்து, விடுதலையானவுடன்,
ஜெர்மனிக்குப் பறந்தார்.
அங்கிருந்து இலண்டனுக்கு.
வருடங்கள் எத்தனை ஆனால் என்ன?
விட
மாட்டேன்.
இதோ வருகிறேன்.
----
கை தட்டல் ஒலி அரங்கு முழுவதும்
எதிரொலிக்க, சுய நினைவிற்கு வந்தவராய் தயாராகிறார்.
கூட்டம் முடிந்து விட்டது
அரங்கினுள் அமர்ந்திருந்த பார்வையாளர்கள் மெல்ல
எழுந்து, வாயிலை நோக்கி நகர, இந்த இந்தியர் மட்டும், மெல்ல மெல்ல, மேடையை நோக்கி நகரத்
தொடங்கினார்.
அந்த ஆங்கிலேய அதிகாரி மேடையில் இருந்து இறங்கிய
போது, சரியாய், அவர் எதிரில் இந்தியர்.
உதடுகள் புன்னகைக்க, துப்பாக்கியை வெளியில்
எடுத்து, நேருக்கு நேராய், இரு முறை சுட்டார்.
இருபத்தோரு ஆண்டுகால கோபம், கொந்தளிப்பு, இரண்டே
வினாடிகளில், குண்டுகளாய் வெளியேறி, ஆங்கிலேயரின் மார்பைத் துளைத்து, உயிரைக் குடித்தது.
இரத்த வெள்ளத்தில், அவ்விடத்திலேயே, ஆங்கிலேயர்
மாண்டு போனார்.
இந்தியரோ தப்புவதற்குக் கூட முயலவில்லை.
இருபத்தோடு ஆண்டுகளாய் நெஞ்சில் குடியேறியிருந்த,
இலட்சியம் நிறைவேறிய நிம்மதியுடன், சிரித்த முகத்துடன், அங்கேயே நின்றார்.
கைதானார்.
என்னைத்
தூக்கிலிட்ட பின்னர், என் உடலை இந்தியாவிற்கு அனுப்புங்கள். என் தாய் மண்ணில், என்
உடல் என்றென்றும் நிம்மதியாய் உறங்கட்டும்.
ஆங்கிலேய அரசோ, சிறையிலேயே புதைத்தது.
---
ஆண்டுகள் பல கடந்தபின், பஞ்சாப் மாநில, சுல்தான்பூர் சட்ட மன்றத் தொகுதி உறுப்பினர், திரு எஸ்.சாதுசிங் அவர்கள்தான்
முதன் முதலில் குரல் எழுப்பினார்.
மீதமிருக்கும் எலும்புகளையாவது,
இந்தியாவிற்கு எடுத்துவர வேண்டும்
1974, ஜுலை 31, சரியாக 34 ஆண்டுகளுக்குப் முன்,
தூக்கிலிடப் பட்ட அதே மாதத்தில், மிகச் சரியாக அதே நாளில், ஜுலை 31 இல், பஞ்சாப் மாநிலத்தில்,
இம்மாவீரரின் சொந்த ஊரான சுனம் நகரில், இம்மாவீரரின் எலும்புகள் எரியூட்டப் பட்டன.
சாம்பல் கங்கையில் கலந்தது.
நண்பர்களே, இம்மனிதர்
இம் மானிதர்
இம் மாவீரர்
யார் தெரியுமா?
ஜாலியன் வாலா பாக்
படுகொலையினை
நேரில் கண்ட இளைஞர்.
சரமாரியாய் சீறி வந்த
துப்பாக்கிக் குண்டுகளுக்குப்
பலியாகாமல்,
தப்பிப் பிழைத்த
இளைஞர்
ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு உத்தரவிட்ட,
அன்றைய
பஞ்பாப் மாநில ஆளுநர்
மைக்கேல் ஓட்வியரை
ஆங்கில மண்ணிலேயே
நேருக்கு நேராய் சந்தித்து
சுட்டு விழ்த்திய வீரர்
உத்தம்
சிங்.
இன்று ஜுலை 31
மாவீரன்
உத்தம் சிங்
தூக்குக் கயிற்றை முத்தமிட்ட நாள்,
மாவீரனின்
நினைவினைப் போற்றுவோம்.