04 நவம்பர் 2017

நல் உள்ளம்




     வயது அதிகமாகிவிட்டது.

     முதுமை உடலின் உள் புகுந்து அடைக்கலமாகிவிட்டது.

     உடல் தளர்ந்துவிட்டது

     கைகளில் லேசான நடுக்கம், உடன் பிறப்பாய் ஓடி வந்து ஒட்டிக் கொண்டது.


     ஆனாலும் எழுதுவதை நிறுத்தினார் இல்லை.

     இவர் தமிழுக்குப் பல திறனாய்வு நூல்களையும், மொழி பெயர்ப்புகளையும் வழங்கியவர்.

      வயதானபோதும், நடுக்கம் வந்தபோதும், தனக்கு வரும் புத்தகங்களையும், பத்திரிக்கைகளையும், கடிதங்களையும் ஒன்று விடாமல் படித்து விடுவார்.

     பாராட்டுக்களை, விமர்சனங்களை ஒரு அஞ்சல் அட்டையில் எழுதி அனுப்புவார்.

     இவரது அஞ்சல் அட்டையினை, விருதினும் மேலாய் பாதுகாத்து வருபவர்கள், ஏராளம்..

     இது மட்டுமல்ல, இவரது வாழ்த்தினைப் பெற்றதாலேயே, மிகத் தீவிரமாய் எழுதத் தொடங்கிய இளம் எழுத்தாளர்கள் ஏராளம், ஏராளம்.

     முதிர்ச்சி தேடி வந்தபோதும், கடிதங்கள் எழுதுவதை இவர் நிறுத்தவே இல்லை.

      நண்பர்கள் உரிமையோடு கண்டித்தனர்.

      அரை மணி நேரம் எழுதுவேன், பிறகு அரை மணி நேரம் ஓய்வு எடுத்துக்குவேன். அப்படியே, கொஞ்சம் கொஞ்சமா எழுதிடுவேன்.

       நண்பர்கள் விடவில்லை.

       கடிதங்களுக்குப் பதில் எழுத, ஏன் இவ்வளவு சிரமப்படுகிறீர்கள்.

       நண்பர்கள் தொடர்ந்து வற்புறுத்தினர்.

       ரோட்டுல நடந்து போறோம். எதிர்த்தாப்ல ஒருத்தர் வர்றார். நம்மளப் பார்த்து வணக்கம் சொல்றார். ஒரு மரியாதைக்குத் திருப்பி நாமளும் வணக்கம் சொல்லனுமா? வேண்டாமா?

       கடிதங்களும் அப்படித்தானே.

நண்பர்களே, இவர்தான்,


சாகித்திய அகாதெமி விருதுபெற்ற எழுத்தாளர்

தொ.மு.சி.ரகுநாதன்.