ஒவ்வொரு எழுத்தாளனும் ஒரு சுயம்பு
மாதிரி, அவனாகவே உருவாகனும். அவனாகவே தன்னை வளர்த்துக்கனும்.
ஒருத்தன், தான் சிறந்த பாடகனாய் வரனும்ன்னு
நினைச்சா, ஒரு பாட்டு வாத்தியாரை வச்சி பாட்டு கத்துக்கலாம். சிறந்த ஓவியனாய் வர நினைச்சா,
ஆர்ட் செண்டர்க்குப் போய் பயிற்சி எடுத்துக்கலாம்.
கிரிக்கெட் விளையாட்டானாலும் சரி, வேறு எந்த
வெளையாட்டானாலும் சரி, ஒருத்தன் சிறந்த விளையாட்டு வீரனாய் வரணும்ன்னு நினைச்சா, ஒரு நல்ல கோச் இருந்தா போதும்
ஆனா, ஓர் எழுத்தாளனை யாரும் பயிற்சி கொடுத்து
உருவாக்க முடியாது.
எழுதுறது ஒரு வரம்.
அது உங்களுக்குக் கிடைச்சிருக்கு. அதை நல்ல
முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டியது உங்கள் பொறுப்பு.
எனக்குத் தெரிஞ்ச திறமையான சில எழுத்தாளர்கள்,
தங்களுக்குக் கிடைத்த எழுத்து வரத்தை சரியான முறையில் பயன்படுத்திக்காம, வீணா போயிருக்காங்க
…. காரணம் அலட்சியம், சோம்பல்.
கதை எழுதுறதுங்கிறது ஒரு வெள்ளை பேப்பரை, எழுத்துககளால்
நிரப்பற விசயம் மட்டும் கிடையாது.
ஒரு வாசகனோட மனசை நிரப்பற விசயம்.
நான் இப்போ என்ன சொல்ல வர்ரேன்னு உங்களுக்குப்
புரியுதா?
பேசியவர்,
லேசுபட்ட மனிதரல்ல.
பத்திரிக்கை உலகப் பிதாமகர்.
ஆனந்த விகடன், தினமணி கதிர், குங்குமம் முதலான
இதழ்களில் ஆசிரியராகப் பணியாற்றியவர். பின் தனது பெயரிலேயே இதழ் ஒன்றினைத் தொடங்கியவர்.
விடாக் கண்டர் என்னும் பெயரில் தொடக்கத்தில்
எழுதியவர்.
சா.விசுவநாதன்
சாவி
சாவி இதழின் நிறுவுநர்
எழுத்தாளர் சாவி
எழுத்தாளர் சாவி அவர்கள் பேசப் பேச, அவரது வார்த்தைகளில்
இருந்த உண்மைகள், இவரது உள்ளத்தை ஊடுருவி அடிவரை சென்று இடம் பிடித்துக் கொண்டன.
ஒரு எழுத்தாளர் எப்படி இருக்க வேண்டும் என்பதை,
எழுத்தாளர் சாவியைச் சந்தித்த, முதல் சந்திப்பிலேயே, தெரிந்து கொண்ட, புரிந்து கொண்ட
இந்த எழுத்தாளர் யார் தெரியுமா?
---
பெருத்த உருவத்தோடு படியேறிக்
கொண்டிருக்கும், இம் மனிதர், உலகம் சுற்றிய வாலிபர்,
இவரது வீட்டின் குறுகலான மாடிப் படிகளில் ஏறி
வந்ததில், மூச்சிறைத்தது, வியர்த்துக் கொட்டியது.
சா … ர், சார் நீங்களா? வாங்க
சார்… உள்ளே வாங்க சார்
திகைத்துத்தான் போய்விட்டார், அந்த இளம் எழுத்தாளர்.
சார், உலகம் முழுவதும் உள்ள தமிழ்
மக்களால் அறியப்பட்ட மிகப் பெரிய எழுத்தாளர் நீங்க. ஆனா வளர்ந்துக்கிட்டிருக்கிற, ஒரு
அறிமுக எழுத்தாளனைத் தேடி வந்து பேசியது எவ்வளவு பெரிய விசயம்.
அவர் வாய்விட்டுச் சிரித்தார்.
திறமையைத் தேடிப்போய் பாராட்டறதுதான் உண்மையான
படைப்பாளியின் கடமை. அந்தக் கடமையைத்தான் நான் இப்போ பண்ணிக்கிட்டிருக்கேன்.
அறிமுக எழுத்தாளரைத் தேடிப்போய்
பாராட்டிய, இப்பெரும் எழுத்தாளர் யார் தெரியுமா?
உலகைச் சுற்றி வந்தவர்
பயணக் கட்டுரைகளின் நாயகர்
இதயம்
பேசுகிறது
மணியன்
எழுத்தாளர் மணியன் பாராட்டிய,
வீடு தேடிப்போய் பாராட்டிய
எழுத்தாளர் யார் தெரியுமா?
--
கடந்த வருடம், ஒரு மதிய நேரத்தில் இந்த எழுத்தாளருக்கு,
ஒரு அழைப்பு, அலைபேசி வழி வந்தது.
ஒரு புது எண்.
எழுத்தாளரா?
ஆமாம், எழுத்தாளர்தான் பேசுகிறேன்.
சார், நான் டெப்டி போலிஸ் கமிஷனர் பேசுகிறேன்.
ஒரு சில விநாடிகள், ஆடித்தான்
போய்விட்டார் இந்த எழுத்தாளர். மறுமுனையில் டெப்டி போலிஸ் கமிஷனர். ஏதாவது பிரச்சினையோ
என யோசித்தபடியே, சொல்லுங்கள் சார், என்றார்.
நானும்
என்னோட அண்ணனும், ஸ்கூல் ஃபைனல் படிச்சிக்கிட்டிருக்கும்போதே, உங்க நாவல்களைப் படிக்க
ஆரம்பிச்சுட்டோம்.
உங்களோட ஒவ்வொரு கதையும், படிக்க த்ரில்லிங்கா
இருக்கும். அதுமட்டுமல்லாமல், போலிஸ் துறை சம்பந்தப்பட்ட விவரங்கள், ஒரு கொலையாளியைக்
கண்டுபிடிக்க போலிஸார் எடுத்துக் கொள்கிற முயற்சிகள், ஃபாரன்ஸிக் துறை சம்பந்தப்பட்ட
வியப்பான உண்மைகள், இதெல்லாம் எங்க ரெண்டு பேருக்கும் பிரமிப்பாய் இருக்கும்.
உங்க நாவல்களில் வர்ற க்ரைம் பிராஞ்ச் போலிஸ்
ஆபிஸர் விவேக் சாதுர்யமாய் துப்பறிந்து, கொலையாளியைக்
கண்டுபிடிக்கும் பாணி என்னுள் ஒரு ஆர்வத்தை வளர்த்ததால், நான் காவல் துறையில் பணியாற்ற
விரும்பி, அதற்கான முயற்சிகளை எடுத்துக் கொண்டேன்.
அதன் காரணமாகத்தான், நான் இன்று, டெப்டி கமிஷனர்
என்ற டெஸிக்னேஷனில், ஒரு அதிகாரியாக பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.
என்னுடைய அண்ணன் இப்போது ஒரு பிரபல வழக்கறிஞராக
இருக்கிறார்.
இதற்கெல்லாம் காரணம், நாங்கள் படித்த உங்கள்
நாவல்களின் பாதிப்புதான்.
--
படிக்கப் படிக்க வியப்பாக இருக்கிறதல்லவாஈ?
உண்மை
எழுத்தின் வலிமை என்பது இதுதானே.
நண்பர்களே, இவரது கதைகளால் உந்தப்பட்டு, காவல்
துறைக்குள் நுழைந்த, இந்த காவல் துறை துணைக் கண்காணிப்பாளர், மேலும் உயர்ந்து, இன்று
காவல் துறை கண்காணிப்பாளராய் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.
எங்கு தெரியுமா?
தஞ்சையில்.
நான் இருக்கும் தஞ்சையில்.
ஆம். இவர்தான்
தஞ்சாவூர்
மாவட்ட காவல் துறைக் கண்காணிப்பாளர்
தமிழ்த்திரு தி.செந்தில் குமார்.
---
பத்திரிக்கை உலகப் பிதாமகரும்
உலகம் சுற்றிய நாயகர்
இதயம் பேசுகிறது மணியனும்
காவல் துறைக் கண்காணிப்பாளர்
தமிழ்த்திரு தி.செந்தில் குமார் அவர்களும்
பாராட்டிய, போற்றிய
எழுத்தாளர் யார் தெரியுமா?
இவர் கடந்த 41 ஆண்டுகளாக
எழுதிக் கொண்டே இருக்கிறார்.
இடைவெளி சிறிதும் இன்றி எழுதிக் கொண்டே இருக்கிறார்.
2015 ஆம் ஆண்டு கணக்கின்படி, 1500 நாவல்கள், 2000 சிறுகதைகள்
என்று
கனவில் கூட கற்பனை செய்து பார்க்க முடியாது வேகத்தில்
எழுதிக் கொண்டே இருப்பவர் இவர்.
என்னை நான் சந்தித்தேன்
எழுத்துலகில் தனக்கு நேர்ந்த அவமானங்களையும்,
கிடைத்த வெகுமானங்களையும்
தனக்கே உரித்த
விறுவிறுப்பான, பரபரப்பான நடையில்
500க்கும் அதிகமான பக்கங்களில்
இந்த புத்தகத்தில் இறக்கி வைத்துள்ளார்.
இந்த நூலினைப் பற்றி
காவல் துறைக் கண்காணிப்பாளர் அவர்களின்
முகநூல் பதிவு வழியாகத்தான் அறிந்தேன்.
எந்தத்
துறையில் யார் பணி புரிந்தாலும் சரி, வாழ்க்கையில் வெற்றி பெற விரும்புபவர்கள் அவசியம்
படிக்க வேண்டிய புத்தகம்
என்று இந்த
காவல்
துறைக் கண்காணிப்பாளர்
கூறியதை,
தன் எழுத்துக்குக்
கிடைத்த விருதாக நினைத்து பெருமிதம் அடைகிறேன் என இந்த மாபெரும் எழுத்தாளர் மகிழ்ந்த செய்தியையும், முக நூலில் கண்டு நெகிழ்ந்தேன்.
என்னை நான் சந்தித்தேன்
இவர்தான்
க்ரைம்
நாவல் மன்னர்
ராஜேஷ் குமார்.