11 மே 2018

கல்வியே அழகு



குஞ்சி யழகும் கொடுந்தானைக் கோட்டழகும்
மஞ்சள் அழகும் அழகல்ல – நெஞ்சத்து
நல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையால்
கல்வி அழகே அழகு

      வாரிவிடப்பட்ட கூந்தலும், நன்கு உடுத்தப்பட்ட உடையும், ஒப்பனைக்காக முகத்தில் பூசப்பட்ட மஞ்சளும் ஒருவருக்கு உண்மையில் அழகே அல்ல.

      உள்ளத்தால் நல்லவர்களாய், நடுவு நிலை தவறாத வழியே செலுத்தும் கல்வியே ஒருவருக்கு சிறந்த அழகூட்டும் அணிகலனாகும் என்று முழங்குகிறது நாலடியார்.

      ஒப்பனை அழகே அல்ல

      கல்வியே அழகு

      கல்வியே உண்மை அழகு

      எனவே மாணவர்களே, படியுங்கள்

      படியுங்கள்

அறம்பொரு ளின்பமும் வீடும் பயக்கும்
புறங்கடை நல்லிசையும் நாட்டும் – உறுங்கவலொன்
உற்றுழியும் கைகொடுக்கும் கல்வியின் ஊங்கில்லை
சிற்றுயிர்க்(கு) உற்றதுணை

என்பார் குமரகுருபரர். கல்வியைப் போல் உற்ற துணை வேறில்லை. எத்தகைய துன்பம் வந்தாலும், அதனை எதிர்த்து நின்று வெல்வதற்குரிய ஆற்றலைக் கொடுப்பது கல்வி மட்டுமே என்கிறார்.

         எனவே மாணவர்களே, படியுங்கள்

         நன்றாகப் படியுங்கள்

தொடங்குங்கால் துன்பமாய் இன்பம் பயக்கும்
மடங்கொன்(று) அறிவகற்றும் கல்வி – நெடுங்காமம்
முற்பயக்கும் சின்னீர் இன்பத்தின் முற்றிழாய்
பிற்பயக்கும் பீழை பெரிது

       கல்வியானது கற்கத் தொடங்குகிற வேளையில் துன்பத்தை, வருத்தத்தை ஏற்படுத்தலாம். ஆனால் போகப் போக பெரு மகிழ்வினை உண்டாக்கும்.

       கல்வி மூடத்தனத்தை அழிக்கும்

       விவேகத்தை விசாலப் படுத்தும்

       எனவே மாணவர்களே, படியுங்கள்

       தேர்விற்காகப் படிக்காதீர்கள்

       மதிப்பெண்களுக்காகப் படிக்காதீர்கள்

       நூலகங்களுக்குச் செல்லுங்கள்

       நூற் கடலில் மூழ்கித் திளையுங்கள்

அறிவற்றங் காக்குங் கருவீ செறுவார்க்கும்
உள்ளழிக்க லாகா அரண்

       எதிரிகளாலும் அழிக்க முடியாத செல்வம் என்று ஒன்றிருக்குமானால், அது அறிவு ஒன்றே.

         அறிவானது நமக்கு அழிவு வராமல் காக்கும் ஆயுதம்.

          எனவே அறிவைப் பெருக்குங்கள்

          நூல்களைத் தேடித் தேடிப் படியுங்கள்

          நேரத்தைச் சரியாகப் பயன்படுத்துங்கள்

          இழந்தபின் நம்மால் மீண்டும் பெற முடியாதது நேரம் மட்டுமே.

          எனவே இளைஞர்களே, உங்களுடைய நேரத்தை கல்வியில் முழுமையாய பயன் படுத்துங்கள்.  

          கல்வி உங்களைக் காக்கும்

          மாணவர்களே, மாணவிகளே

          துணிவோடு இருங்கள்

          எத்துணை துன்பம் வந்தாலும் கலங்காதீர்கள்

          நீங்கள் கற்ற கல்வி உங்களுக்குத் துணை நிற்கும்

          உலகியல் அறிவோடு உயர் குணம் என இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே உணர்ந்த, மொழி தமிழ்.

          ஆம். உலகியல் அறிவு தேவை என்பதை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே உணர்ந்த, உணர்ந்து உரைத்த ஒரே மொழி நம் தமிழ் மொழி.

         நீங்களெல்லாம் தமிழராய் பிறந்ததற்காகப் பெருமைப் பட்டுக் கொள்ள வேண்டும்.

        படியுங்கள்

        படியுங்கள்

        தளராது படியுங்கள்.

        படித்துப் படித்து, உங்களை நீங்களே உயர்த்திக் கொள்ளுங்கள்.

எத்தொழிலைச் செய்தாலும் ஏது அவத்தைப் பட்டாலும்
முத்தர் மனம் இருக்கும் மோனத்தே வித்தகமாய்க்
காதி விளையாடிஇரு கைவீசி வந்தாலும்
தாதி மனம் நீர்க் குடத்தே தான்

      ஒரு பெண், தண்ணீர் குடத்தைத் தலையில் வைத்துக் கொண்டு வரும் பொழுது, வியக்கத் தக்க வகையில், குடத்தில் இருந்து கைகளை நீக்கி, பலவிதமாக விளையாடி, இரு கைகளையும் வீசிக் கொண்டு நடந்து வரினும், அவளது உள் மனம், தன் தலையில் உள்ள குடத்தின் மீதே இருக்கும் என்பது விவேகசிந்தாமணி வாக்கு.

        இதைப் போலவே, நீங்கள் படித்துப் பணியாற்றுகின்ற வாய்ப்பு பெற்று, வேலைக்குச் சென்றதும், எத்தொழிலாக இருந்தாலும்,  முழுக் கவனத்துடன் செயலாற்றுங்கள்.

        பணியாற்றுகின்ற இடத்தில், நாம், யாராலும், தவிர்க்க இயலாத மனிதராக இருக்க வேண்டும்.

         அந்த அளவிற்கு எடுத்துக் கொண்ட பணியினைச் சிறப்பான நிறைவேற்றுங்கள்.

         நீங்கள் பிறந்த குலம், குடும்பம், முக்கியமல்ல.

          தாய் தந்தையர் படித்தவரா, படிக்காதவரா என்பது முக்கியமல்ல.

          வசதியுள்ள குடும்பமா, வசதியற்ற குடும்பமா என்பது முக்கியமல்ல.

          படியுங்கள்

          உழையுங்கள்

          உயர்வு உங்களை நாடி வரும்

     இளங்கலை, முதுகலை, ஆய்வியல் நிறைஞர் மற்றும் முனைவர் பட்டமளிப்பு விழா அரங்கில், இம் மனிதர் பேசப் பேச, அரங்கே வாய்  பிளந்து வியந்துதான் போனது.

        நாலடியார், விவேகசிந்தாமணி, நீதி நூல், திருக்குறள் என ஒவ்வொன்றில் இருந்தும், தகுந்த பாடல்களை, இவர் உரத்து முழங்க, முழங்க அரங்கே ஆரப்பரித்துத்தான் போனது.

        தமிழறிஞராய், தேர்ந்த பேச்சாளராய், சிம்மக் குரலில், ஆயினும் கனிந்த வார்த்தைகளால், மாணவ மாணவியரின் உள்ளத்திலும், நாடி நரம்புகளிலும், புது நம்பிக்கையையும், புதிய உத்வேகத்தையும் ஊடுருவச் செய்த, இம் மனிதர் காக்கிச் சட்டைக்குச் சொந்தக்காரர், என்பதால் அரங்கே இன்ப அதிர்ச்சியில் உறைந்துதான் போனது.

        இவர் கருப்பு உடையில் இருந்து காக்கிக்கு மாறியவர்.

        ஆம் இவர் சென்னை உயர் நீதிமன்றத்தின், மேனாள் வழக்கறிஞர்.

        உடலில் காக்கியையும், உள்ளத்திலும், உதிரத்திலும் செந்தமிழையும் சுமந்து வாழ்பவர்.

காலந்தோறும் கருப்பர் நகரம்

சென்னை, மதராசப் பட்டினமாக மாறிய வரலாற்றை
அயராது ஆய்வு செய்து
டாக்டர் பட்டமும் பெற்றவர்,





இவர்தான்
தமிழ்திரு முனைவர் த.செந்தில் குமார்
காவல்துறை கண்காணிப்பாளர், தஞ்சாவூர்