09 ஜூன் 2018

சித்தப்பா





நினைத்துவிட்டால் நெஞ்செழுந்தே அடித்துக் கொள்ளும்
   நீள்துயரம் முழுவதுமாய் அழுத்திக் கொல்லும்
நனைந்துவிடும் இருகண்கள் துயரம் மொய்த்து
   நட்புத்திரு வேங்கடத்தால் வேகும் நெஞ்சு
         பேராசிரியர் முனைவர் பொன்னியின் செல்வன்










ஐயாற்றுத் தமிழிசைக்கும்
     அரும்பாடு பட்டீர்
பொய்யாக வாழுகின்ற
     பூரியார்க்குள் ளேயும்
மெய்யாக வாழ்ந்திட்டீர்
     இன்றில்லை என்றாலும்
ஐயமின்றி அவனியிலே
     நிலைக்கும்நின் பேரே
                       கவிமாமணி மெய்யடியான்








கற்பூரம் தொட்டகரம்
    கனவிலும் மணப்பதென
நற்பண்பின் நல்லுறவே
     காலமெல்லாம் மணப்பாய் நீ

தெற்கில் குமரிமகள்
     செம்மொழிபோல் எம்மனத்தில்
நிற்கும் வேங்கடமே
      நினையும் மறப்போமோ
                       கவிஞர் ப.திருநாவுக்கரசு







படிப்பில் நுட்பமும் எழுத்தில் செப்பமும்
கற்றலில் ஆர்வமும் கற்பித்தலில் உயர்வும்
காலம் பாராது பேதம் பாராது
பிள்ளை போல மாணவர் தம்மைப்
பேணி நின்றவர், ஆசிரியர் எனும்
பெருமை காத்தவர், பெரும்பணி என்றாலும்
பேர் பெற்றவர், அண்ணன் உறவெனக்கு
அப்பா போலஎன் மனங்கவர்ந்த தன்மையர்
திருவேங்கடத்துப் பெருமை போல மண்ணில்
சிறந்து நின்றவர் காலமும் காலனும்
கவர்ந்து போனாலும் மனத்துள் என்றும்
மதிக்க வாழ்பவர் வணங்கி நிற்பேன்
வாழ்நாள் முழுக்க மனதில் விளக்கேற்றி
                                 வாழ்க திருவேங்கடம் அண்ணா
                                    பேராசிரியர் முனைவர் க.அன்பழகன் (ஹரணி)







அன்பு நண்பரா மறைந்தார், இல்லை
     அவருக்கு மரணமில்லை
அழிவில்லை, முடிவுமில்லை
     அவர் வளர்த்த தமிழிசைக்கும்
அவர்தம் புகழுக்கும் அழிவுமுண்டோ?
                        அரங்க.புருடோத்தமன்





     தங்களின் பேரிழப்பை, மீட்க இயலாத பெரு நட்பை, எழுத்தாக்கி ஏட்டில் இறக்கி வைத்து, கடந்தகால நினைவலைகளில் மூழ்கி, மூச்சுத் திணறியக் கவிஞர்கள் பலர்.

     கட்டுரைகள் வரைந்து, தங்களின் உள்ளக் கிடக்கையினைக் கொட்டித் தீர்த்தவர்கள் பலர்.

      எழுதாமல், உள்ளத்திலேயே உணர்வுகளுக்கு அணை கட்டி, வார்த்தைகளால் வழியவிட்டு பெருமூச்சு விட்டவர்கள் பலர்.

கவிதைகளாலும். பொழிவுகளாலும் அரங்கேறியது
நல்லாசிரியர் சி.திருவேங்கடம் அவர்களின்
முதலாமாண்டு நினைவு நாள்.


நல்லாசிரியர் சி.திருவேங்கடம்
என் சித்தப்பா.

     சிறு வயதில், என் விரல் பற்றி அழைத்துச் சென்று, இவ்வுலகை எனக்கு அறிமுகப்படுத்திய, என் அன்புச் சித்தப்பா, சுடுந் தணலில் கலந்து, காற்றில் கரைந்து, ஓராண்டு நிறைவடைந்து விட்டது.

      இந்த நல்லவரை நினைக்க,

      நினைத்து, நினைத்து நினைவலைகளில் மிதக்க, ஒரு நிகழ்வு.

      நண்பர்களும், உறவினங்களும் ஒருங்கே கூடினர்

      என் சித்தப்பா, பிறந்து, தவழ்ந்து., வாழ்வில் உயர்ந்த திருவையாற்றில் விழா.


திருவையாறு, திருமஞ்சன வீதி
பாபு திருமண மண்டபத்தில் விழா

திருவுருவப் படத்திறப்பு
நினைவு மலர் வெளியீடு



சங்க இலக்கியங்களில்  கரை கண்ட,
செந்தமிழ்ப் பெருங்கடல்
முனைவர் இரா.கலியபெருமாள் அவர்கள்
சித்தப்பாவின் திருவுருவப் படத்தினைத் திறந்து வைத்து,
சித்தப்பா
என்னும் நூலினை வெளியிட்டார்.





பணி ஓய்விற்குப் பிறகு,
தன் வாழ்வின் கடைசி நாள், கடைசி மணித்துளி வரை
நிர்வாக அலுவலராக
என் சித்தப்பா பணியாற்றிய
ஸ்டார்  லயன் கல்வியியல் கல்லூரியின்
அறங்காவலர்
திருமிகு எஸ்.கலியமூர்த்தி அவர்கள்
நூலின் முதற்படியினைப் பெற்றுக் கொண்டார்.


இந்நிகழ்விற்குத் தலைமையேற்றவர், என் தந்தை.
திரு சி.கிருட்டிணமூர்த்தி
புள்ளியியல் துறையில், மண்டலத் துணை இயக்குநராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

தம்பிக்கு அண்ணன் தலைமையில் விழா


கும்பகோணம், ஜோதிமலைத் திருக்கூட்ட நிறுவனர்,
தவத்திரு திருவடிக்குடிள் அடிகளார் அவர்கள்
சிறப்புரையாற்றினார்.


நண்பரும், கரந்தைத் தமிழ்ச் சங்கத் துணைத் தலைவருமான
திரு இரா.சுந்தர வதனம் அவர்கள்
முன்னிலை வகித்தார்.









திருவையாறு, சட்டமன்ற உறுப்பினர்
திருமிகு துரை.சந்திரசேகரன் அவர்கள்,
இவ்விழாவின் நினைவாக,
சாதனையாளர்கள் ஆறுபேருக்கு விருதுகளை வழங்கிச் சிறப்பித்தார்.


முன்னதாக, விழாவிற்கு வந்திருந்தோரை,
இளங்கோ கம்பன் கழகச் செயலாளர்,
திரு இராம.செல்வராசு அவர்கள்
வரவேற்றார்.


எனது சித்தப்பாவின் ஆருயிர் தோழர்
இளங்கோ கம்பன் இலக்கியக் கழக நிறுவனர்
புலவர் தங்க.கலியமூர்த்தி அவர்கள்
விழா நிகழ்வுகளைத் தொகுத்து வழங்கினார்.

     சித்தப்பாவின் நண்பர்கள், ஒவ்வொருவராய் மேடையேறி, கடந்த கால நினைவலைகளை எடுத்துக்கூறி, அரங்கினையே நெகிழ வைத்தனர்.

     ஓரிருவர் வார்த்தைகளைத் தொடர இயலாமல், கண்ணீர் மழ்க, தழுதழுக்க, அரங்கே நிசப்தமாகிப் போனது.




    





கடந்த ஆண்டு மறைந்த ஒரு மனிதருக்காக, ஓராண்டு கடந்த பிறகும், இருநூறுபேர் கூடுகிறார்கள் என்றால், அம்மனிதரின் வாழ்வு பயனுள்ள வாழ்வுதானே.

வாழ்ந்தால், சித்தப்பா போல் வாழ வேண்டும்,
சித்தப்பா போல்,
நண்பர்களை நேசிக்க வேண்டும், உறவுகளைப் போற்ற வேண்டும்
என்னும் அற்புதப் பாடத்தினை என்னுள் விதைத்திருக்கிறது இவ்விழா.

சித்தப்பா
நல்லாசிரியர் சி.திருவேங்கடனார்
என்றென்றும் தங்களின் நினைவலைகள்
எங்கள் உள்ளத்தில் நிலைத்திருக்கும்.

நண்பர் திருவேங்கடத்திற்காக ஒரு நினைவு விழாவினை நடத்தவேண்டும், நினைவு மலர் ஒன்றினை வெளியிட வேண்டும் என்ற எண்ணத்தை முதன் முதலாக, முன்வைத்து, அதற்காக, தன் உடல் நிலையினையும் பொருட்படுத்தாது, சிறு பிள்ளைபோல், அயராது பாடுபட்ட,
என் சித்தப்பாவின் ஆருயிர் நண்பர்
புலவர் தங்க.கலியமூர்த்தி அவர்களுக்கு
என் மனமார்ந்த நன்றியினைத் தெரிவிப்பதில் பெரிதும் மகிழ்கின்றேன்.

சித்தப்பாவிற்கு விழா என்றவுடன், அகம் மகிழ்ந்து, பாராட்டியதோடு,
நூல் அச்சாக்கம், விழா முன்னேற்பாடுகள் என
ஒவ்வொரு நிலையிலும் தகுந்த வழிகாட்டுதலை வழங்கி உதவிய,
என் அத்தான்
மேனாள் தமிழ் விரிவுரையாளர், சிங்கப்பூர்
கவிஞர் ப.திருநாவுக்கரசு அவர்களுக்கும்,

 இவ்விழாவிற்கான, ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்கியபின்,
கடந்த ஐந்து மாத காலமாக,
என் முயற்சிகளுக்குச் சிறிதும் தடைசொல்லாமல்,
உடனிருந்து உழைத்து,
இவ்விழாவிற்கானச் செலவினங்களை
முழுமனதோடு செய்திட்ட
என் மனைவி
திருமதி பிரேமா ஜெயக்குமார் அவர்களுக்கும்,

எனது தந்தைக்கும், தாய்க்கும்

விழா நாளன்று,
அரங்கில் முழுமையாக உழைத்த
என் மகன்
கே.ஜே.பிரேம் குமார் அவர்களுக்கும்,
என் மகள்
ஜெ.சுவாதி அவர்களுக்கும்,

நண்பர் திரு கே.பால்ராஜ் அவர்களுக்கும்

உறவினரும், நண்பருமான திரு மு.பத்மநாபன் அவர்களுக்கும்,

நண்பர் திரு ஆர்.லெனின் அவர்களுக்கும்

உறவினர் திரு தி.ரமேஷ் அவர்களுக்கும்


விழாவிற்கு வருகை தந்து  நெகிழ்ந்த
நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும்
என்
நன்றி, நன்றி நன்றி

-----



நாம் வாழும் வரை நம்மை யாரும் வெறுக்கக் கூடாது
வாழ்ந்து முடித்தபின்னர் நம்மை யாரும மறக்கக் கூடாது
என்கிற வாங்கியங்களுக்கு வரையறை வகுத்த திருவேங்கடா,
உன்னை எப்படி மறப்பது என்பதை நீ எங்கட்குக் கற்றுத் தரவில்லையே.

மறைந்து விட்டாயா, இல்லை, இல்லை.
எங்களது இதய நாளத்திலே
இன்றும் நீ வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றாய்.
                                                கே.எஸ்.கணேஷ்.