26 அக்டோபர் 2018

வெற்றிலை



      பூதம்

     அது ஒரு பூதம்

     அகத்தி, செம்பை, முருங்கை மரங்கள் நிறைந்த நிலத்தினுள் புகுந்து மெல்ல நடக்கிறது.

     பூதம் தன்னை நெருங்குவதை அறியாத விவசாயி ஒருவர், கண்ணும் கருத்துமாய் நீர் இறைத்துக் கொண்டிருக்கிறார்.

     பூதம் விவசாயியின் தோளைத் தொட்டது.


     யாரோ தன்னைத் தொடுவதை உணர்ந்து, நிமிர்ந்த விவசாயி, பூதம் நிற்பதைப் பார்த்து திடுக்கிடுகிறார்.

     பெரும் பூதம்.

     பேச்சிழந்து பூதத்தையே நோக்குகிறார் விவசாயி.

     பூதம் பேசியது.

     எனக்கு ஒரு வேலை கொடு

     எந்த வேலை கொடுத்தாலும் ஒழுங்காய், முழுதாய் செய்வேன்.

     விவசாயியின் பயம், வியப்பாய் மாறுகிறது.

     ஒரு நிமிடம் யோசித்தார் விவசாயி.

      நான் தண்ணீர் இறைத்துக் கொண்டே செல்கிறேன், என் பின்னாலேயே, கீழே விழுந்து கிடக்கும், அகத்திப் பழுப்பையை ஒன்று விடாமல் பொறுக்கிக் கொண்டே வா.    

     சரி என்று தலையாட்டிய பூதம், வேலை கிடைத்துவிட்ட மகிழ்ச்சியில், தன் பெரு உடலை மடக்கிக், குனிந்து, அகத்திப் பழுப்புகளைப் பொறுக்கத் தொடங்கியது.

     பொறுக்கியது, பொறுக்கியது

     பொறுக்கிக் கொண்டே இருந்தது

     பூதம் பொறுக்கப் பொறுக்க, அகத்திப் பழுப்பை மரங்களில் இருந்து விழுந்து கொண்டே இருந்தது.

     பொறுக்கி மாளவில்லை

     அசந்துபோன பூதம், கையெடுத்துக் கும்பிட்டது.

     ஆளை விடு

      இனி இந்தப் பக்கமே வரமாட்டேன் என்று ஓடியது.

      இக்கதை, நிச்சயமாகக் கற்பனைக் கதைதான்.

      ஆனாலும், வெகுகாலமாய் வலம் வந்து கொண்டே இருக்கும் கதை.

      வெற்றிலை.

      கிராமப்புற மக்கள்,  ஆண்கள், பெண்கள் என்ற பாகுபாடின்றி, விரும்பிப் பின்பற்றும் பழக்கம் ஒன்று இருக்கிறதென்றால், அது வெற்றிலை போடுவதாகத்தான் இருக்கும்.

     திருமண விழாக்களிலும், ஏன் துக்க நிகழ்வுகளிலும் கூட, நம்மை முன் வந்து வரவேற்பது வெற்றிலைதான்.

      இந்தச் சுவையான வெற்றிலைக்குப் பின் ஒளிந்திருக்கும், கடினமான உழைப்பை வெளிப்படுத்துவதற்காகத் தோன்றிய கதையே, இந்த பூதம் கதை.

கங்கை நதிப்புறத்துக் கோதுமைப் பண்டம்
காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்ளுவோம்
என்று பாரதி பெருமை பொங்கப் பாடுவார் அல்லவா, அந்த வெற்றிலை வேளாண்மை என்பது வாழை, வெற்றிலை, வாழை, வெற்றிலை என சுழற்றி முறையில் நடைபெறும் வேளாண்மை ஆகும்.

     ஒரு நிலத்தில் இரண்டு அல்லது மூன்று முறை தொடர்ந்து வாழைச் சாகுபடி செய்யும் பொழுது, அந்த நிலம் தன் வளத்தை, வாழையை வளர்விக்கும் தகுதியை இழந்து விடுகிறது.

     நான்காவது முறையாகவும் வாழையைச் சாகுபடி செய்ய, எவ்வளவுதான் உரமிட்டாலும், வாழை வளரவே வளராது.

     எனவே நிலத்தின் வளமையை, செழுமையை மீட்டெடுப்பதற்கான ஒரே வழி வெற்றிலை சாகுபடி மட்டும்தான்.

     வெற்றிலைக் கொடியானது, மற்ற செடிகளைப் போல், தானே நிலத்தில் இருந்து நிமிர்ந்து நிற்கும் ஆற்றல் இல்லாதது.

      வெற்றிலைக் கொடியானது படர் தாவரமாகும்.

     வெற்றிலைக் கொடி படர்வதற்கு, மற்ற மரங்களின் உதவி தேவை.

     எனவே வெற்றிலைப் பயிரிடுவோர், வெற்றிலைக் கொடி படர்வதற்காக, முதலில், அகத்தி, செம்பை, முருங்கை போன்ற மரங்களை, வரிசை வரிசையாக வளர்ப்பார்கள்.

     அகத்தி, செம்பை, முருங்கை மரங்களின் பழுப்புகள், அதாவது முற்றிப் பழுத்த இலைகள், ஆண்டு முழுவதும் நிலத்தில் உதிர்வதால், நிலத்தில் விழுந்து மக்கி, மண்ணோடு மண்ணாய்க் கலப்பதால், மண் மீண்டும் தனது வளத்தைப் பெறுகிறது.

     மேலும் வெற்றிலை வேளாண்மையில் இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்துவார்கள்.

     எனவே, மூன்று அல்லது மூன்றரை ஆண்டுகள் தொடர்ந்து வெற்றிலை வேளாண்மை செய்யப்படும் நிலம், மீண்டும் வாழையை வளர்ப்பதற்குத் தன்னை தயார் செய்து கொள்கிறது.

     வாழைச் சாகுபடி செய்வதும், வெற்றிலை வேளாண்மைச் செய்வதும், முற்றிலுமாய், முழுவதுமாய், வேறுபட்ட திறமையை, அனுபவத்தை, மேற்பார்வையை உள்ளடக்கியப் பணியாகும்.

     எனவே வாழைச் சாகுபடி செய்பவர், வெற்றிலை வேளாண்மைச் செய்ய மாட்டார்.

      மூன்றாண்டுகள் வாழைச் சாகுபடி செய்தவர், அடுத்த மூன்று அல்லது மூன்றரை ஆண்டுகளுக்கு, வெற்றிலை வேளாண்மை செய்வதற்காக, வெற்றிலை வேளாண்மையில் திறன் பெற்றவருக்கு, தன் நிலத்தை குத்தகைக்கு விடுவார்.   

     நிலத்தை முழுவதுமாய் குத்தகைக்குப் பெற்றவர், அந்நிலைத்தைப் பல பாகங்களாகப் பிரித்து, பலருக்கும் உள் குத்தகைக்கு விடுவார்.

     ஏனென்றால், பெரும் பரப்பளவிலான நிலம் முழுவதிலும், ஒருவரே, வெற்றிலை வேளாண்மைச் செய்வது என்பது இயலாத காரியமாகும்.

     வெற்றிலை வேளாண்மைப் பணி அத்துணை கடினமானதாகும்.

    









பட்டம் வெட்டுதல், அகத்தி, செம்பை, முருங்கை, கல்யாண முருங்கை, ஆமணக்கு, சவுண்டி போன்றவற்றின் விதைகளை ஊன்றி, முதலில் வளர்க்க வேண்டும். 

     பின் இத்தாவரங்களைப் பற்றிக் கொண்டு வளரும் வகையில், வெற்றிலைக் கருணைகளை நடவேண்டும்.

     அதன் பின்னும், சுருக்குக் கட்டுதல், பட்டை கொண்டு தண்ணீர் இறைத்தல், சுருக்கிக் கட்டுதல், கங்கு வைத்தல், குண்டு வைத்தல், கீழ் விட்டம், மேல் விட்டம் கட்டுதல் எனத் தொடர்பணிகளை, தொடர்ந்து தொய்வின்றிச் செய்தாக வேண்டும்.

     ஓய்வு, ஒழிச்சலின்றிப் பகல் முழுதும், ஆண்டு முழுவதும் உழைத்தாக வேண்டும்.

     எனவேதான், வெற்றிலை வேளாண்மைச் செய்ய, பூதம் கூட பயந்து ஓடுமாம்.

     ஆனாலும், தஞ்சையின் காவிரிக் கரையை ஒட்டிய நடுக்காவேரி, மேலத் திருப்பந்துருத்தி, கீழத் திருப்பந்துருத்தி, அந்தளி, குழிமாத்தூர், மைக்கேல்பட்டி, கண்டியூர் பகுதிகளில் வெற்றிலை வேளாண்மை நடந்து கொண்டேதான் இருக்கிறது.

     இதனால் வாழையும் விளைந்து கொண்டே இருக்கிறது.

     வெற்றிலையை வளர்ப்பதற்கு மட்டுமல்ல, வெற்றிலையை வாயில் போட்டு, மெல்லுவதற்குக் கூட ஒரு திறன் வேண்டும், ஒரு புரிதல் வேண்டும்.


அடைக்காய் திண்பதில்ஊறு.
முதல் நீர் நஞ்சாம்
அதிபித்தம் இரண்டாவ தூறுநீரே
கடையமிர்த மூன்றாவ தூறுநீர்தான்
கனமதுர நான்காவ தூறும்நீர்
மடையேனவே ஐந்தாறிற் சுரந்துள் ஊறி
வருநீர்களைச் சுகித்து மனங்கொண்டுண்டால்
தடையுறாப் பித்தமொடு மந்த நோயும்
தளரு பாண்டு நோயும் உணடாந்தரஞ் சொன்னோமே

என்று உரைக்கின்றது ஒரு வைத்திய நூல். அதாவது, வெற்றிலைச் சுருளை வாயில் இட்டு மென்றவுடன், முதலில் சுரக்கும் உமிழ் நீர் நஞ்சாகும். எனவே இதை விழுங்காது துப்பிவிட வேண்டும்.

     இரண்டாவது சுரக்கும் நீரில் பித்தம் இருக்கும். எனவே இதனையும் துப்பிவிட வேண்டும்.

     மூன்றாவது சுரக்கும் நீர் அமிர்தமாகும். நான்காவது சுரக்கும் உமிழ் நீர் அதிக இனிப்பாக இருககும். இவற்றை விழுங்குதல் வேண்டும்.

     ஐந்தாவது, ஆறாவதாக சுரக்கும் உமிழ் நீர் அக்கினி, மாந்தம், பித்தம். பாண்டு, ரோகம் உண்டாக்கும். எனவே இவற்றையும் உமிழ்ந்துவிட வேண்டும்,

     வெற்றிலை மெல்லும் முறையையும், வெற்றிலையின் குணங்களையும் நம் தமிழர்கள், எவ்வாறு ஆராய்ந்து, அறிந்து  வைத்திருக்கிறார்கள் பார்த்தீர்களா

     வியப்பாக இருக்கிறதல்லவா.

      இதனை அறிந்து, உணர்ந்து வெற்றிலையைப் பயன்படுத்துவேமேயானால், கிடைக்கும் பயன்கள், பலன்கள் என்ன என்ன தெரியுமா?

கபத்தைப் போக்கும்
சீதத்தை அகற்றும்
காமம் பெருக்கும்
அழுகல் அகற்றும்
பால் பெருக்கும்
பசியைத் தூண்டிவிடும்
உமிழ்நீர் பெருக்கும்
வாய்ப்புண் அகற்றும்
நெஞ்சுலரல் நீங்கும்
குரற்கம்மல் நீங்கும்
மாந்தம் போக்கும்
வயிற்று உப்பிசம் நீங்கும்
வயிற்று வலி போகும்
நீரேற்றம் போகும்
தலைபாரம் தீரும்
மலக்கிருமி ஒழியும்
உடலழகு கொடுக்கும்
தாகம் தணியும்
சுக்கில விருத்தியாகும்
இவ்வளவுதானா?
வாதத்தைப் போக்கும்
நீர்கோவையைக் கெடுக்கும்
இரத்தவோட்டத்தை துரிதப்படுத்தும்
மந்தத்தைத் தடுக்கும்
பல்லுறுதி கொடுக்கும்
சீரணசக்தி கொடுக்கும்
வாய்நாற்றம் போகும்
ஈறுகள் பலம் பெருகும்
நுண்ணறிவு வளரும்

     வெற்றிலை மெல்லுவதன் பயனை, போசன குருகுலம் என்னும் நூல் அடுக்கிக் கொண்டே போவதைப் பார்த்தால், நாமும் இன்று முதல் வெற்றிலை மெல்லத் தொடங்கவேண்டும் என்று தோன்றுகிறதல்லவா.

     வெற்றிலை நம் நண்பன்.
---

     நண்பர்களே, தங்களின் உள்ளத்தில் ஓடும் எண்ணம் எனக்குப் புரிகிறது.

      கணித ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தவன், திடீரென்று வெற்றிலை வேளாண்மையில் இறங்கிவிட்டானோ, என நீங்கள் வியப்பது தெரிகிறது.


வெற்றிலை வேளாண்
கலைச்சொல் அகராதி
என்னும் நூலினைப் படித்தேன். படித்த செய்திகளுள் ஒன்றிரண்டினைத்தான் தங்களுடன் பகிர்ந்து கொண்டேன்.

     ஆங்கிலம் – தமிழ் அகராதியைப் பார்த்திருப்போம்

     பயன்படுத்தி இருப்போம்

     வெற்றிலை வேளாண்மைச் சார்ந்து, பயன்படுத்தப்படும் அனைத்துத் தொழிற் சார்ந்தச் சொற்களையும் தொகுத்து, தனியே ஒரு அகராதியைத் தயாரித்திருக்கிரார் எனது நண்பர்.



முனைவர் சோ.கண்ணதாசன்,
உதவிப் பேராசிரியர், தமிழ்த் துறை,
மன்னர் சரபோசி அரசு கல்லூரி (தன்னாட்சி)
தஞ்சாவூர்

     சிறுநூல்தான் எனினும், வெற்றிலை வேளாண்மை தொடர்பான அனைத்துத் தகவல்களும், இந்நூலில் கொட்டிக் கிடக்கிறது.

     விவசாயம் நலிந்து வரும், இக்கால கட்டத்தில், விளைநிலங்கள் எல்லாம், கான்கிரிட் காடுகளாக வளர்ந்துவரும் இக்காலத்தில்,
வெற்றிலை வேளாண்
கலைச்சொல் அகராதி
அதி முக்கிய ஆவணம் என்னும் பெருமையைப் பெறுகிறது.

வாழ்த்துகள் நண்பரே
---

வெற்றிலை வேளாள் கலைச்சொல் அகராதி,
செல்ல தங்கம் பதிப்பகம்,
நாட்டார் தெரு,
நடுக்காவேரி, தஞ்சாவூர்.

நூலாசிரியரின் அலைபேசி எண்  
9442890293