நண்பர்களே, வணக்கம்.
நான் ஒரு ஆசிரியர் என்பது தங்களுக்குத் தெரியும்.
கோடை காலம் என்றாலே, மாணவர்களுக்குக் கொண்டாட்டம்.
ஆனால் ஆசிரியர்களுக்கோ, திண்டாட்டம்.
ஆசிரியர்கள் கொடுத்து வைத்தவர்கள், சம்பளத்துடன்
கூடிய அதிக விடுமுறை நாட்களை அனுபவிப்பவர்கள் என்று, பொது வெளியில் ஒரு கருத்து நிலவுகிறது.
ஆனால் உண்மை, வேறுமாதிரியாகத்தான் இருக்கிறது
சனிக்கிழமைகளில் சிறப்புப் பயிற்சி வகுப்புகள்
காலாண்டு, அரையாண்டு விடுமுறை நாட்களில் பயிற்சி
வகுப்புகள்
முழு ஆண்டு விடுமுறையில், தேர்வுத்தாள் திருத்தும்
பணி, தேர்தல் பணி, பத்து, பதினொன்று மற்றம் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்
சான்றிதழ் வழங்கல், மாற்றுச் சான்றிதழ் வழங்கல், வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு
செய்தல், மாணவர் சேர்க்கை, மாணவர் சேர்க்கைக்கானக் களப்பணி என விடுமுறையெல்லாம் வியர்வையில்
நனைந்தே கரைகிறது.
மாணவர் சேர்க்கைக்காக, ஒவ்வொரு கிராமம், கிராமமாகப்
படையெடுத்துக் கொண்டிருக்கிறோம்.
கடந்த 24.4.2019 புதன் கிழமையன்று காலையிலேயே,
பள்ளித் தலைமையாசிரியரும், நண்பருமான திரு வெ.சரவணன் அவர்கள் தலைமையில், ஒரு குழுவாய்
புறப்பட்டோம்.
பள்ளியக்கிரகாரத்தின் வெண்ணாற்றங்கரையை ஒட்டி
அமைந்துள்ளச் சிற்றூர்களை நோக்கிப் பயணித்தோம்.
ஒரு சிறு கிராமம்.
ஊரின் முகப்பிலேயே சிறு கடை.
திண்பண்டங்கள் கிடைக்கும்
மளிகைப் பொருட்கள் கிடைக்கும்
தேநீரும் கிடைக்கும்
கடை உரிமையாளரின், இரு மகள்களும், எங்கள் பள்ளியில்
படித்தவர்கள்.
எனவே நல்ல வரவேற்பு
தெருத் தெருவாய், வீடு வீடாய், பள்ளிப் பருவ
மாணவர்களைச் சந்தித்தோம்.
அந்த கிராமத்தின் அத்துணை வீடுகளையும் பார்த்துவிட்டு,
இரு சக்கர வாகனங்களை எடுக்க வந்தபொழுது, எங்களுக்காகத் தேநீர் காத்திருந்தது.
கடையின் உரிமையாளர், எங்கள் அனைவருக்கும் தேநீர்
கொடுத்துவிட்டு, காசு வாங்க முடியவே முடியாது என மறுத்துவிட்டார்.
தேநீர் குடித்தபடியே பேசிக்கொண்டிருந்தோம்
கடையை ஒட்டி ஒரு கிணறு
விறகுகளாலும், குப்பை மூட்டைகளாலும் மூடப்பட்டக்
கிணறு
கிணற்றை மூடிவிட்டார்களே என்னும் வருத்தம் உள்ளத்தில்
குடியேறியது
கிராமப்புறங்களிலேயே கிணற்றை மூடுகிறீர்களே?
தண்ணீர் இல்லையா? என்றோம்.
இக்கேள்விக்குத் திரும்பி வந்த பதிலைக் கேட்டு,
அனைவருமே அதிர்ந்துதான் போனோம்.
கிணற்றில்
நீர் இருந்தது.
எங்கள் ஊரில், பிள்ளைகளால் புறக்கணிக்கப்பெற்ற
மிகவும் வயதானப் பெற்றோர்கள் பலர், குச்சு ஊன்றி நடந்து வந்து, குச்சியை கிணற்றின்
சுவற்றில் வைத்துவிட்டு, கிணற்றுக்கள் விழுந்து தற்கொலை செய்து கொள்கின்றனர்.
தொடர்ந்து, பலர் இதுபோல், தற்கொலை செய்து கொள்ளவே,
கிணற்றையை மூடிவிட்டேன் என்றார்.
எங்களுக்குப் பேச்சே வரவில்லை
என்ன கொடுமை இது?
நகர்புறங்களில், மெத்தப் படித்தவர்கள், மலைமலையாய்ச்
சம்பாதிக்கும் பலருக்குத்தான், பெற்றோரைக் கவனிக்க நேரமில்லாமல், முதியோர் இல்லங்களில்
தள்ளிவிடுகிறார்கள் என்றால், கிராமப் புறங்களில், கிணற்றுக்குள் பாய்கிறார்களே
தாயிற் சிறந்த கோவிலும் இல்லை
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை
ஆயிரம் உறவில் பெருமைகள் இல்லை
அன்னை தந்தையே அன்பின் எல்லை
என்னும்
நம் முன்னோர் உரைத்த வரிகள், வலுவிலந்து, பொருளிழந்து விட்டனவே.
இவர்களெல்லாம் என்ன பிள்ளைகள்
வயிற்றிற்குக் கஞ்சி
மனதிற்கு இதமாய் சில வார்த்தைகள்
இவற்றைக்கூடத் தர இயலா பிள்ளைகள் என்ன பிள்ளைகள்.
கால் வயிற்றிற்றுக் கஞ்சி கொடுக்க மறுக்கின்ற
மனம் என்ன மனம்.
பெற்றெடுத்து, வளர்த்து, ஆளாக்கிவிட்ட, கைதூக்கி
விட்ட தந்தையிடம், அன்பாய் நாலு வார்த்தை பேச மறுக்கின்ற மனம் கொடூரம் அல்லவா?
இவர்கள் மனிதர்களே அல்ல
வேதனையோடு வீடு திரும்பினோம்.