மதுரை.
பதினேழாம் நூற்றாண்டு.
தமிழ்ப் பேரரசர்களான சோழர்களும், பாண்டியர்களும்
மறைந்துவிட்ட காலம்.
மாலிக்காபூர் படை எடுப்பிற்குப் பின் சின்னா
பின்னமான மதுரையில், விஜய நகரப் பேரரசின் தெலுங்கு வழி வந்த நாயக்கர் ஆட்சி தொடங்குகிறது.
கி.பி 1623 முதல் கி.பி.1659 வரையிலான முப்பத்தாறு
ஆண்டுகள், மதுரையில் மன்னராய் இருந்தவர் திருமலை
நாயக்கர்.
தமிழின்பால் தீராக் காதல் உடையவர்.
ஒரு நாள் மதுரைக்கு அருகில் உள்ள, திருப்பரங்குன்றத்திற்கு,
ஒரு மாபெரும் புலவர் வந்திருக்கிறார் என்னும் செய்தியினை அறிகிறார்.
நாயக்கருக்குப் புலவரைக் காணும் ஆவல் எழுகிறது.
தகுந்த மரியாதையுடன் புலவரை அவைக்கு அழைத்து
வரச் செய்கிறார்.
இருவரும் சந்தித்தனர்.
அளவாவி மகிழ்ந்தனர்.
ஒன்றாக உணவு உண்டு, தமிழ் இலக்கியக் கடலில் நீந்தித்
திளைத்தனர்.
பல நாள் பழக்கத்தில், புலவர், அரசரின் செயல்பாடுகளை
முற்றாய் அறிகிறார்.
மன்னரின் இரு செயல்கள், புலவரை பெரும் வருத்தத்தில்
ஆழ்த்தின.
ஒன்று, உரிய நேரத்தில் உணவு உண்ணாமல் நேரம் கடந்து
உண்பது.
இரண்டு, வயிறு போதும், போதும் என்று உரைத்த பிறகும்,
உணவின் சுவையில் மயங்கி, அளவிற்கு அதிகமாய் உண்பது.
இப்பழக்கத்தைத் திருத்த விரும்பிய புலவர், ஒரு
நாள் மன்னரிடம், ஒரு பாடலைக் கூறினார்.
வகுத்தான் வகுத்த
வகையல்லால் கோடி
தொகுத்தார்க்குத்
துய்த்தல் அரிது.
வாழ்
நாள் முழுக்க அனுபவிப்பதற்கு உரிய அனைத்து செல்வங்களையும் கோடிக் கணக்கில் பெற்றிருந்தாலும்,
இயற்கை வகுத்துள்ள அளவை மீறி அனுபவிக்கவும் கூடாது, உண்ணவும் கூடாது.
பாடலைக் கேட்ட திருமலை நாயக்கர் வியந்து போனார்.
அற்புதமாக
இருக்கிறதே, இந்தப் பாடல் எந்த நூலில் உள்ளது. இதை இயற்றியவர் யார்? எனக் கேட்டார்.
இப்பாடல்
திருக்குறள் என்னும் அரிய தமிழ் இலக்கிய நீதி
நூலில் உள்ளது. இதனை இயற்றியவர் திருவள்ளுவர் என்றார்.
இந்த
நூலை நான் பார்த்தாக வேண்டும் என்றார்.
அடுத்தநாளே, திருக்குறள் ஓலைச் சுவடிகளைக் கொண்டு
வந்து காட்டுகிறார்.
திருக்குறளானது
1330 பாடல்களை உடையது.
அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என்னும்
முப்பெரும் பிரிவுகளை உடையது என்கிறார்.
1330 குறள்களா?
1330 குறள்களையும் எப்படிப் படிப்பது?
சிந்தனையில் ஆழ்ந்தார்.
ஓர் எண்ணம் உதித்தது.
புலவரே
திருக்குறளைச் சாறு பிழிந்துக் கொடுக்க முடியுமா? என்றார்.
முடியும், சாறு பிழிந்து கொடுக்க முடியும்.
நானே சாறு பிழிந்துக் கொடுக்கிறேன் என்றார்.
மதுரையிலேயே அமர்ந்து சாறு பிழிந்தார்.
1330 குறள்களின் கருத்துக்களையும் 101 பாடல்களில்,
சாறாய், தேனாய் இறக்கி வைத்தார்.
திருமலை நாயக்கருக்கு மகிழ்ச்சி தாளவில்லை.
புதிதாய் பிறந்துள்ளப் புது நூலின் அரங்கேற்றத்தை,
மதுரையே வியக்கும் வகையில் நடத்தினார்.
பெரும் புலவரை அலங்கரிக்கப் பட்ட யானைமேல் ஏற்றி,
நகரையே வலம் வரச் செய்தார்.
இருபது ஆயிரம் பொற்காசுகளை காணிக்கையாய் வழங்கினார்.
இருப்பினும் மன்னர் மனம் திருப்தி அடையவில்லை.
அரியநாயகிபுரம் என்னும் ஊரையும் தானமாய் எழுதிக்
கொடுத்தார்.
வியப்பாக இருக்கிறதல்லவா.
திருக்குறளைச் சாறு பிழிந்து எழுதப்பட்ட இந்த
நூல் எது தெரியுமா?
நீதி நெறி விளக்கம்
இதனை எழுதியப் பெரும் புலவர் யார் தெரியுமா?
தமிழை அருந்தமிழ், தீந்தமிழ், முத்தமிழ், தெறிக்கும்
தமிழ், தெள்ளித் தெளிக்கும் தமிழ், கொழுத்தத் தமிழ், சங்கத் தமிழ், செழுந்தமிழ்த் தெள்ளமுது,
மதுரம் ஓழுகும் தேன்தமிழ், பசுந்தமிழ், தலைச் சங்கம் பொங்கும் பன்முகத்தமிழ், சொற்சுவை
பழுத்த தொகைத்தமிழ், தெறி தமிழ், தென்னந்தமிழ், பைந்தமிழ், மும்மைத் தமிழ், முதுசொல்
புலவர் தெளித்த தமிழ், புத்தமுதம் வழிந்து ஒழுகும் தீந்தமிழ், வண்டமிழ், வண்டமிழ்க்
கடல், பண்ணுலாம் தேன்தமிழ், வடிதமிழ், தேத்தமிழ், தேறு தமிழ், தெய்வத் தமிழ், முது
தமிழ், நறை பழுத்த துறைத் தமிழ் என நாற்பதுக்கும் மேற்பட்ட வார்த்தைகளால் தமிழைக் கொண்டாடியவர்.
இவர்தான்,
குமர குருபரர்.
நண்பர்களே, குமரகுருபரர் பற்றிய எண்ணற்ற அரிய செய்திகளை
ஒரு கட்டுரையில் கண்டெடுத்தேன்.
குமருகுருபரர் எனும்
ஞானத் தமிழ்மகன்
திருச்சி, ரயில்வே காவல் கண்காணிப்பாளர்
முனைவர் த.செந்தில்குமார்
அவர்கள்
எழுதிய அற்புத நூல்
பெரிதினும் பெரிது
கேள்.
ஒலிப் பதிவு