21 ஜூன் 2020

வலைச் சித்தருக்கு ஜெ




     நண்பர்களே, வணக்கம்.

     2011 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 23 ஆம் நாள்.

     நான் வலை உலகினுள் நுழைந்த நாள்.


     எட்டு வருடங்களும், பத்து மாதங்களும் கடந்திருக்கின்றன.

     இதுவரை 449 பதிவுகள் மட்டுமே எழுதியிருக்கிறேன்.

     தொடக்கத்தில் மாதம் ஒரு பதிவு.

     தற்பொழுது வாரம் ஒரு பதிவு.

     வலையுலக வாழ்வு மகிழ்வாகத்தான் நகர்ந்து கொண்டிருக்கிறது.

     இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா என நாட்டு எல்லைகளைக் கடந்து, உலகு முழுவதும், எண்ணற்ற சகோதர, சகோதரிகளை இந்த வலையுலகு ஒன்றாக இணைத்திருக்கிறது.

     வலையுலகின் பலமே இதுதான்.

     உலகு முழுவதும் பரவி இருக்கும், தமிழ்ச் சொந்தங்களின், உற்சாக வாழ்த்துகளும், உத்வேகமூட்டும் ஊக்குவிப்புகளும்தான், வாழ்வின் அன்றாட சோதனைகளுக்குள் மூழ்கி மூச்சுத் திணறாமலும், வேதனைகளின் மடியில் வீழ்ந்து பலியாகாமலும் என்னைக் காத்து வருகிறன.

     நினைத்தால் எனக்கே வியப்பாக இருக்கிறது.

     இந்த வலையுலகின் பயனாய், இதுவரை பத்து நூல்களை எழுதி வெளியிட்டிருக்கிறேன்.

     சில நாட்களுக்கு முன், திண்டுக்கல்லில் இருந்து, ஓர் அழைப்பு, அலைபேசி வழி அழைத்தது.

     வலைச்சித்தர் திண்டுக்கல் தனபாலன் ஐயா.

     இவரை வலைப்பூவின் நடமாடும் கலைக் களஞ்சியம் என்று கூட அழைக்கலாம்.

     அன்று முதல், இன்று வரை, வலைப்பூவில் ஏதேனும் சிக்கல் எனில், திண்டுக்கல்லாரே சரணம் என்பது வழக்கமாகிவிட்டது.

     எத்துணை முறை அழைத்தாலும், அத்துணை முறையும், கொஞ்சமும் சலிக்காமல், அன்பொழுகப் பேசும் உன்னத மனிதர்.

     அமேசானுக்கு வாருங்கள். வலைப் பூ பதிவுகளை எல்லாம், மின்னூலாக்கி. அமேசான் இணைய தளத்தில் பதிவேற்றுங்கள். ஆவணப்படுத்துங்கள் என்றார்.

     வலைச்சித்தரின் வார்த்தையை மீற முடியுமா?

     அமேசான் தளத்தில் நுழைந்து, முயன்று பார்த்தேன்.

     எளிமையாகத்தான் இருந்தது.

     இதோ, இன்று எனது நான்கு மின்னூல்கள், அமேசான் தளத்தில் இடம் பிடித்துள்ளன.

பயணங்கள்


வாழ்க்கைப் பயணத்தில், பார்த்து பரவசப்பட்ட, ஒரு சில பயணங்களின் தொகுப்பு

 வெற்றிவேல் முருகன் பேசுகிறேன்


பிறவியிலேயே ஒளியில்லாக் கண்களுடன் பிறந்தும், சோர்ந்துவிடாமல், மூலையில் முடங்கிவிடாமல், விடாது முயன்று, தன்னந்தனியே அமெரிக்கா பறந்து, வாழ்வில் வெற்றிபெற்ற மனிதரின் கதை


போர்க்கள கடிதங்கள்


பொதுப்பணித் துறையில், பொறியாளராய் தான் வகித்தப் பதவியினை துச்சமாய் எண்ணி, தூக்கி எறிந்துவிட்டு, இராணுவத்தில் தன்னை இணைத்துக் கொண்டவர்.
இரண்டு போர்க்களங்களில் பங்கு பெற்று. துப்பாக்கிக் குண்டினைப் பரிசாய் பெற்றவர்.
போர் முனையில் இருந்து, தன் குடும்பத்தினருக்கும், தனது நண்பருக்கும் இவர் எழுதிய கடிதங்கள்தான் இந்நூல்.


உறைபனி உலகில்


நாமெல்லாம் பயணங்கள் பலவற்றை மேற்கொண்டவர்கள்தான். அடுத்த ஊருக்குச் சென்றிருப்போம், அடுத்த மாநிலத்திற்குச் சென்றிருப்போம், நம்மில் சிலர் அடுத்த நாட்டிற்கும் சென்றிருப்போம்.
நாம் மேற்கொண்ட பயணங்களின் எல்லை குறுகியது. காலமும் குறுகியது
ஆனால் இவரோ, கடலிலேயே 12,000 கிமீ பயணித்து, உலகின் தென் துருவமாம் அண்டார்டிகாவில், முழுதாய் 480 நாட்களைச் செலவிட்டிருக்கிறார்.
வாருங்கள் இவரோடு சேர்ந்து நாமும் இவரது பயணத்தை, பயணித்துப் பார்ப்போம்


     எதிர்வரும் 25 மற்றும் 26 ஆம் தேதிகளில், வியாழன் மற்றும் வெள்ளிக் கிழமைகளில், நான்கு நூல்களையும், கட்டணம் ஏதுமின்றித் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

     தரவிறக்கம் செய்து படித்துப் பாருங்கள் நண்பர்களே.

     மீண்டும் ஒருமுறை சொல்லிக் கொள்கிறேன்.

     வலைச்சித்தருக்கு ஜெ.





ஒலிப்பேழை