15 ஆகஸ்ட் 2020

இரண்டு நான்கானது


 நாளும் உடற்பயிற்சி நன்று, தமிழ்மொழியில்

நாலும் இரண்டும் நனிநன்று, நம்மதுரை

பொற்றா மரைக்குளம் நன்று, பொறுப்புடன்

நற்றமிழ் கற்றிடல் நன்று

     இவர் தனது கவிநூலை இப்படித்தான் தொடங்குகிறார். ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி என்பார்கள்.

     இவரோ, இரண்டை, நான்காக்கி ஒரு நூல் ஆக்கியிருக்கிறார்.

    

புரியவில்லையா?

     திருக்குறளின் கருத்துக்களோடு, நிகழ்காலச் சிந்தனைகளையும் சேர்த்து, நான்கு நான்கு வரிகளில், அமுது படைத்திருக்கிறார்.

     சுருங்கச் சொல்வதானால், திருக்குறளை, நாலடியாராய் மாற்றியிருக்கிறார்.

     இனியவை நாற்பது, இன்னா நாற்பது, கார் நாற்பது, களவழி நாற்பது வரிசையில், நல்லவை நாற்பதைப் படைத்திருக்கிறார்.

சொல்லிலே சோர்வுகள் சூழாமை நன்று

நெல்லிலே களைகளும் நில்லாமை நன்று

ஏட்டில் எழுதுங்கால் எங்கனும் பேசுங்கால்

கூட்டும் பிழைநீக்கல் நன்று.

     நாம் ஒரு சொல்லைச் சொல்லும் பொழுது, அச்சொல்லை வெல்லக் கூடிய வேறொரு சொல் இல்லாத வகையில், சொல்ல வேண்டும் என்பார் வள்ளுவர்.

     நமது சொல், கேட்பவருக்கு மகிழ்ச்சியைத் தரவேண்டும், ஊக்கத்தைத் தர வேண்டும்.

     எழுதும் போதும், பேசும் போதும் பிழை தவிர்த்துப் பேசுவதும், பிழை தவிர்த்து எழுதுதலும், நமக்கும் நன்று, நம் மொழிக்கும் நன்று என்பதை  வலியுறுத்துகிறார்.

கற்றலும் கற்றபடி நிற்றலும் நன்று, மொழிப்

பற்றினைக் காட்டல் மிகமிக நன்று, நல்

நட்பினைப் பேணுதல் நன்று, நலமிலா

உட்பகை நீக்குதல் நன்று.

     இவரது பாடல்களின் ஒவ்வொரு சொல்லும், எளிமை, இனிமை.

     பொருள் புரிய, அகராதியை நாடிச் செல்ல வேண்டியதும் இல்லை, கோணாரைத் தேடி ஓட வேண்டியதும் இல்லை.

     படித்தாலே போதும், காட்சிகள் கண் முன்னே ஓடும்.

தமிழர் மனையில் தமிழ்பேசல் நன்று

தமிழர் மரபின் தரம்காத்தல் நன்றே

அமிழ்து தமிழே அறிந்திடல் நன்று

நமரதை உன்னுதல் நன்று.

     கல் தோன்றி மண் தோன்றா காலத்தே, வாளொடு முன்தோன்றிய மூத்த குடியில் பிறந்துவிட்டு, பிறந்ததை மறந்துவிட்டு, வீட்டில் கூட, வேற்று மொழியில் பேசுவது அழகா? நம் குலப் பெருமையைக் காத்தல் நம் கடமையல்லவா?

     எனவே, தமிழில் பேச, தமிழர் மரபின் தரம் காக்க அழைக்கிறார்.

பாசமிகு நண்பரைப் பார்க்கும் பொழுதிலே

பாசமுடன் கைகூப்பிப் பாங்காய் வரவேற்போம்

பாரில் கொரோனா பரவாதிருகக நாம்

யாரிடத்தும் கைகூப்பல் நன்று.

     தமிழின் தொன்மையில் தொடங்கியவர், நிகழ்காலத் தொற்று நோயை, தொற்றா நோயாக்க, கை கூப்புவோம், கை கூப்பலே நன்று என்று நிறைவு செய்கிறார்.

     இவர் ஓர் ஆசிரியர்.

     எழுத்தாளர்.

     கவிஞர்.

     இயற்கை ஆர்வலர்.

     மன நல ஆலோசகர்.

     கல்லூரியில் இளங்கலையில் இயற்பியலில் தொடங்கி, முதுகலையில் தமிழுக்குத் தாவியர்.

     முதுகலையில் தமிழைப் படித்தபின், மீண்டும் முதுகலைக்கே திரும்பி, உளவியலை, உள்ளவியலாக்கியவர்.

     தீபம் நா.பார்த்தசாரதியின் நாவல்களில், குடும்பச் சிக்கல்களை ஆய்ந்து முனைவர் பட்டமும் பெற்றவர்.

     ஆசிரியர், பள்ளித் தலைமையாசிரியர், முதல்வர் எனத் தொடர் பணியாற்றி, ஓய்விற்குப் பிறகும், ஓய்வில்லாமல், மனநல ஆலோசகராகப் பணியேற்று, மாணவர்தம் மன அழுத்தத்தைக் குறைத்து வருபவர்.

மேனாள் குடியரசுத் தலைவர்

டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் அவர்களின்

திருக்கரங்களால்,

நல்லாசிரியர்

விருதும் பெற்றவர் 

தமிழ்ப் பூ

இவரது வலைப் பூ.

கவிஞர் இனியன்

என்னும்

புனைப் பெயர் கொண்ட இனியவர்.


முனைவர் அ.கோவிந்தராஜு அவர்கள்.

இவரது நூல்

நல்லவை நாற்பது.

உருவத்தில் சிறிது எனினும்,

உட்பொருளால் மலையினும் பெரிது.

நல்லவை நாற்பதை நாடிப் படித்திடின்

அல்லவை தேயும் அறங்கள் செழிக்கும்

இந்தஓர் நூல்போன்று நூறுநூல் ஆக்கிட

முந்தினேன் வாழ்த்த மகிழ்ந்து

எனமுந்திக்கொண்டு வாழ்த்திய, 

புலவர் கருவூர்க் குறளகனார் அவர்களின், 

கவி வரிகளுள் நுழைந்து, நாமும் வாழ்த்துவோம்.

வாழ்த்துகள் ஐயா.



 

 குரல் வழிப் பதிவு - கேட்டுத்தான் பாருங்களேன்

44 கருத்துகள்:

  1. ஐயா அவர்களின் புனைப்பெயர் இன்றே அறிந்தேன். புதுக்கோட்டை ஜெ.ஜெ.கல்லூரியில் சந்தித்து பேசினேன்.

    நூல் வாங்குவேன் நண்பரே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மகளிடம் அடிக்கடி இரண்டு விசயங்களை நினைவு படுத்திக் கொண்டேயிருப்பேன். வாழ்ந்து முடிப்பதற்குள் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரைக்கும் முடிந்தவரை சுற்றிப் பார்த்து விடு. தமிழ் இலக்கிய நூல்களை முடிந்த அளவு படித்து விடு. இவர் எழுதியதைப் பார்த்த போது அப்படித்தான் தோன்றுகின்றது. அருமை.

      நீக்கு
  2. //தமிழின் தொன்மையில் தொடங்கியவர், நிகழ்காலத் தொற்று நோயை, தொற்றா நோயாக்க, கை கூப்புவோம், கை கூப்பலே நன்று என்று நிறைவு செய்கிறார்.//

    அருமை.

    முனைவர் அ.கோவிந்தராஜு அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  3. பழகுவதில் இனியவர்... வள்ளுவன் கலைக் கல்லூரியில் வலைப்பூ உருவாக்க நிகழ்வை நடந்த, எனக்கு ஒரு வாய்ப்பும் தந்தார்... குறளிலும் அபார ஞானம் கொண்டவர்...

    பதிலளிநீக்கு
  4. அறிமுகம் அருமை. வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  5. அருமையான அறிமுகம்..ஆழமான கருத்தை எளிமையாகச் சொல்லிப்போகும் பாங்கு மனம் கவர்ந்தது..வாழ்த்துகளுடன்..

    பதிலளிநீக்கு
  6. முனைவர் & கவிஞர் இனியவனுக்கு வாழ்த்துக்கள். அழகாக அறிமுகம் செய்த உங்களுக்கும் நன்றிகள் சகோ.

    பதிலளிநீக்கு
  7. அருமை. எளிய சொற்கள். ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  8. எளிமை அருமை இனிமை.மகிழ்ச்சி

    பதிலளிநீக்கு
  9. எளிமை அருமை இனிமை.மகிழ்ச்சி

    பதிலளிநீக்கு
  10. அறிமுகம் அருமை .முனைவர் அ.கோவிந்தராஜு அவர்களுக்கு வாழ்த்துக்கள். மேலும் எழுதிப் புகழ் சேர்க்க வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  11. நல்ல அறிமுகம். முனைவர் அவர்களுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  12. விளக்குமாற்றுக்குப் பட்டுக் குஞ்சமா? வியந்து நிற்கிறேன். கரந்தையாரின் பாராட்டுக்கு நான் மேலும் தகுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றே நினைக்கிறேன். அவருக்கு என் நெஞ்சார்ந்த நன்றி. கருத்துரைத்த வலைப்பூ நண்பர்களுக்கும் நன்றி. agrphd52@gmail.com என்னும் மின்னஞ்சலில் தொடர்பு கொண்டால் நூலின் pdf படியை அனுப்பி வைப்பேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வார்த்தைகள், தங்களை மேலும் உயர்த்துகின்றன ஐயா.
      நன்றி
      என்றும் வேண்டும் இந்த அன்பு

      நீக்கு
  13. அறிமுகம் அருமை , கவிஞர் இனியவன் படைப்பு சிறப்பு.

    பதிலளிநீக்கு
  14. நல்லதொரு அறிமுகம் கரந்தையாரே. உங்கள் பாணியில் அறிமுகம். நூலை படிக்கத் தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
  15. ஐயாவின் எழுத்தினை அறிவேன். அருமையான நூலினை அறிமுகப்படுத்தியுள்ளீர்கள். அவசியம் வாசிப்பேன். அவருக்கு வாழ்த்துகள். பகிர்ந்த உங்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  16. மீண்டும் முதுகலைக்கே திரும்பி, உளவியலை, உள்ளவியலாக்கியவர்.

    தீபம் நா.பார்த்தசாரதியின் நாவல்களில், குடும்பச் சிக்கல்களை ஆய்ந்து முனைவர் பட்டமும் பெற்றவர்.//

    ஆமாம் முனைவர் ஐயாவைப் பற்றி அவரது வலைப்பூவைத் தொடர்வதால் அறிந்திருக்கிறேன். அவரது புனைப்பெயரும் அறிவேன்.//

    ஐயாவின் படைப்புகள் மிக அருமையான படைப்புகள். அவரது இனிய தமிழ் நடையையும் ரசிப்பதுண்டு.

    ஐயாவிற்கு வாழ்த்துகள். அறிமுகத்திற்கு மிக்க நன்றி.

    கீதா

    பதிலளிநீக்கு
  17. முனைவர் ஐயாவின் தளத்தினை தொடர்ந்து வாசித்து வருகிறோம்.

    அவரது நூல் அறிமுகம் சிறப்பு. நன்றி.

    முனைவர் ஐயாவுக்கும் உங்களுக்கும் வாழ்த்துகள்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  18. முனைவர் இனியவனுக்கும் அவர் நூலை சிறப்பாக வெளிக்காட்டிய உங்களுக்கும் வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  19. எளிய தமிழில் இனிய வரிகள் ...மிக அருமை ஐயா ..

    நல்ல நூலை அறிமுகம் செய்தமைக்கு நன்றிகள் பல..

    பதிலளிநீக்கு
  20. அருமையான தமிழ்! இனிய தமிழ் நூலை அறிமுகம் செய்தமைக்கு அன்பு நன்றி!

    பதிலளிநீக்கு
  21. திருமதி நாராயினி அவர்களின் மாணவன் நான்

    பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு