மொழிகளுக்கு மூத்தவளே
முருகனுக்குப் பிடித்தவளே.
இரு விழிகளுக்குள்
வந்து
வெளிச்சம் கொடுத்தவளே.
நித்தமும் உயிர்ப்பவளே
நீரைப் போல் எளியவளே
உத்தமர் காந்தியையும்
– உனை
எழுத வைத்தவளே.
அத்தனை நாவினிலும்
ஆட்சிமொழியானவளே
– ஆயினும்
மத்திய அரசிடம் போய்
மன்றாடி நிற்பவளே.
தொன்று தொட்டு – புகழின்
உச்சி தொட்டவளே
தொலைக் காட்சி தொகுப்பாளர்களால்
காயம் பட்டவளே – இலக்கியங்கள்
அடுக்கி வைத்தாள்
இமயம் வரை இருப்பவளே.
அன்றைய இலங்கை வானொலித்
தமிழ் கேட்டு – என்
இதயத்தில்
இருப்பவளே.
காலமெலாம் நிலைத்திருக்கும்
காவியங்கள் தந்தவளே
கடவுளரின் கருவறைக்கும்
அதிரடியாய் வந்தவளே.
கவியென நெஞ்சுக்குள்
கை குழந்தையாய் கிடப்பவளே.
கணிப்பொறி இயந்திரத்துள்ளும்
கம்பீரமாய் நடப்பவளே
- தமிழே
உனக்கு என்
முதல் வணக்கம்.
நிகழ்விற்குத் தலைமையேற்று, தனியாசனத்தில், தமிழாசனத்தில்,
மயிலாசனத்தில், அமர்ந்திருந்த, இந்தக் கவிஞர், தமிழ்க் கவிஞர், தங்கக் கவிஞர், இப்படி
அன்னைத் தமிழை, அமுதத் தமிழை வணங்கி, விழாவினைத் தொடங்கினார்.
கவியரங்கம்.
கவியரங்கம் என்றால் பல கவிஞர்கள், ஆளுக்கொரு
தலைப்பில் கவி பாடுவார்கள்.
பார்த்திருப்போம்.
கேட்டிருப்போம்.
ஆனால், இக்கவியரங்கம், அப்படியல்ல.
ஐந்து படலங்களாய், அற்புதமாய் பிரிக்கப்பெற்றக்
கவியரங்கு.
ஐந்து படலங்களும், தமிழால் இணைக்கப் பெற்றக்
கவியரங்கு.
மயிலாசனத்தில் அமர்ந்திருந்த தலைமைக் கவி, தங்கக்
கவி, ஒவ்வொரு படலமாய், பாட்டிசைக்க, பக்கத்திருக்கும் கவிகள் ஐவரும், அதே பொருள் பற்றி,
கவி மழை பொழிய, அரங்கே தமிழால் நனைந்துதான் போனது.
பொருள் ஒன்று.
பார்வைகள் வேறு.
கோணங்கள் வேறு, வேறு.
வார்த்தை விளையாட்டு தொடங்கியது.
முதல் படலம், அறிமுகப் படலம்.
கவிகள் தாங்களே, தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளும் படலம்.
இரண்டாவது படலம்.
காவிய ஓவியம் தீட்டுக.
பாடு பொருள்கள் மூன்று.
அனுமன்.
சூர்ப்பனகை
இந்திரஜித்
தலைமைக் கவி முதல் ஓவியத்தைத் தீட்ட, மற்ற கவிகளும் தொடர்ந்தனர்.
அனுமன்
மூலிகை
மருத்துவத்தின்
முன்னோடி.
வழிபடும் கடவுளில்
அனுமனை நாம்
விரும்பக் காரணம்.
நாம் வணங்கும் முன்பே
நம்மை வணங்கும் கடவுள்
அனுமன் மட்டும்தான்.
காப்பியக் காட்சிகளில்
முதன்மையான மூன்று
இராமனின் வனவாசம்
சீதையின் சிறைவாசம்
அனுமனின் விசுவாசம்.
---
முகக் கவசம்
அணிந்தது போல்
அவன் முகம்.
வானரப் படையில்
அவன்
தனி ரகம்.
வில்லின் செல்வனுக்கு
வைதேகியிடம் தூது சென்ற
சொல்லின் செல்வன்.
---
நரரைக் காப்பதற்கே
வானரமாய் பிறந்தவன்.
வரையை
அதிர வைத்து
திரைக் கடலைக் கடந்தவன்.
---
சூரியப் பழம்
பறிக்கப்
பிறந்த
வீரியக் குழந்தை
அனுமன்.
---
கண்டேன் சீதையை
என்ற
முதல் ஹைக்கூ
கவிஞன்.
சீதையைக் காக்க
இராம நாமம்
என்னும்
சைரன் ஒலித்த
ஆம்புலன்ஸ்
---
கணவன் மனைவியை
சேர்த்து வைத்த
கட்டை பிரமச்சாரி அவன்.
இலங்கேசுவரனை வீழ்த்தக்
காரணமாய் இருந்த
விலங்கேசுவரன் அவன்.
மாணவப் படிமமாய்
வந்து நின்ற மாணி.
அறிவிலும் ஆற்றலிலும்
அவன் ஓர்
ஆண் கலை வாணி.
இராமன் நடத்தியப்
போருக்கும்
இராமாயணத் தேருக்கும்
அவன்தான்
அச்சாணி.
சூர்ப்பனகை
அழகு நிலையங்களின்
அவசியத்தை – அன்றே
உணர்த்தியவர்
சூர்ப்பனகை.
அவள் முன்மொழிந்த
முத்த காண்டம்
நிகழ்ந்திருந்தால்
யுத்த காண்டமே
நிகழ்ந்திருக்காது.
---
இராமன் மேல்
கொண்ட
தன் இச்சையைத் தீர்க்க
தன்னிச்சையாய்
இராவணனை
பெண்ணிச்சை
கொள்ளச் செய்த
பேய்க் காமம்
பிடித்த மகள்.
---
தவசீலன் இராமனிடம்
தாபத்தைத்
தேக்கியவள்.
சிவ பக்தன்
இராவணனை
சீதைப் பித்தன்
ஆக்கியவள்.
---
பழி தீர்க்கப்
புறப்பட்டப் பறவை
பஞ்சவடி
சேர்ந்தது
---
அரியையே மயக்குதற்கு
அரிதாரம் பூசிவந்து
சேதாரம் ஆனதொரு நகை.
அவள் சேர்த்துவிட்டாள்
அண்ணனுக்குப்
பகை.
---
வெள்ளிபோல்
ஒளிமயமானவள் சீதை.
ஞாயிறு போலத்
தூய்மையானவன் இராமன்,
வெள்ளிக்கும்
ஞாயிறுக்கும்
நடுவில்
சனி போல்
வந்தவள்
சூர்ப்பனவை.
சகுனிக்குச்
சில தாயங்கள் விழுந்தன
அதுதான்
மகாபாரதத் திருப்புமுனை.
சூர்ப்பனகைக்குச் சில
காயங்கள் விழுந்தன
அதுதான்
இராமாயணத் திருப்பு முனை.
இந்திரஜித்
மாற்றான் மனையாளின்
நாமத்தை
காமத்தால்
மந்திரம் என ஒலித்தான்
தந்தை.
தந்தை சொல்மிக்க
மந்திரமென்பதால்
வீழ்ந்தான் மகன்.
---
பித்துப் பிடித்தலைந்த
பத்து தலை இராவணனின்
ஒரு தலைக் காதலுக்காய்
செத்துத் தொலைந்தவன்
இந்திரஜித்.
---
நாகத்தின் மகளை
நற்றுணையாய் மணந்தவன்.
யாகத்தின் அழிவில்
தன் உயிரை இணைத்தவன்
---
வான் பற்றிய
இந்திர வெற்றி யாகம்.
தான் பற்றிய
நிகும்பலை யாகம்
சோகம்.
---
தசமுகன் பெற்ற
தலைமகன்.
பத்து தலை இராவணனின்
ஒருதலைக் காமத்திற்காய்
தன் தலை
இழந்தப் பெருமகன்.
---
உயிர் கொடுத்த
தந்தைக்காக
உயிர் கொடுத்தவன்.
தந்தைக்காக
இந்திரனையே கட்டியவன் – ஆனால்
இந்திரியத்தைக் கட்டாத
தந்தைக்காகத்
தன் உயிரை விட்டவன்.
அரங்கில் இருந்தோர், அகமகிழ்ந்து அமர்ந்திருக்க,
அடுத்தப் படலம் தொடங்கியது.
மூன்றாம் படலம்.
ஒற்றுமை வேற்றுமை
வரைக.
அயோத்தி – இலங்கை
இலக்குவன் – கும்பகர்ணன்
மகுடம் – பாதுகை
அரங்கு நிமிர்ந்து அமர்ந்தது.
அயோத்தி – இலங்கை
அக்கினி குண்டத்தில்
சுள்ளிகள்
வெடிக்குமிடம் அயோத்தி.
கோப அக்கினியில்
குண்டுகள்
வெடிக்குமிடம் இலங்கை.
---
இலங்கையின்
சிறப்பு
நெருப்பு.
அயோத்தியின்
செருப்பு
சிறப்பு
---
பாபரும்
துயின்ற ஊர்.
பனி விழும்
டிசம்பர் 6 ன்
குளிர்ச்சியை
அதிர்ச்சிக்குள்ளாக்கிய
தீ
அயோத்தி.
---
இரண்டுமே
பெண்ணால்
மகுடங்களை இழந்த
நகரங்கள்,
ஆள வேண்டியவனை
ஆளக்கூடாதென நினைத்ததால்
கலங்கியது அயோத்தி.
ஆளக் கூடாதவளை
ஆள நினைத்ததால்
கவிழ்ந்தது இலங்கை.
---
அயோத்தியில்
கலகம் பிறப்பிக்க
ஒரு கூனி மந்தரை.
இலங்கைக்கோ
சூர்ப்பனகை.
முன்னவள்
மாற்றுத் திறனாளி.
பின்னவள்
இராவணனையே
மாற்றியத் திறனாளி.
இலக்குவன் – கும்பகர்ணன்
இமை மூடாமல்
காத்தான் இலட்சுமனன்.
இமை மூடியும்
காத்தான்
கும்பகர்ணன்.
---
இருவரும்
அண்ணனுக்காகவே
வாழ்ந்த
உடன் பிறப்புகள்.
---
தடை
படை உடைத்து
தானே
தனிப் படையானத்
தம்பியர்
---
ஒருவன்
சின்னம்மா
அருளிய தாதி.
இன்னொருவர்
மையத்தில் ஒளிர்ந்த
சோதி
---
கும்பகர்ணன் ஒரு
தூக்க மாத்திரை.
இலக்குவன்
அண்ணனுக்குக் கிடைத்த
தலைவலி மாத்திரை.
மகுடம் – பாதுகை
மகுடம்
பாதுகை
இரண்டுமே பொருந்த
வேண்டும்
இல்லையேல் – பிறகு
வருந்த வேண்டும்.
மகுடம்
அரியணைக்காகக்
காத்திருந்தது.
பாதுகை
அரியணையிலேயே
காத்திருந்தது.
---
மகுடம்
திருமுடி தொட்டது.
பாதுகை
திருவடி தொழுதது.
திருவடி தொழுததனால்
சிம்மாசனம் பெற்றது
பாதுகை.
---
அணியாகி
அரணாகி
அரசாண்ட
முரண்கள்
---
மகுடங்களும்
செருப்புகளும் ஒன்றுதான்.
இரண்டும்
நன்றாக நடக்க வேண்டும்.
இரண்டிலும்
மேல்பகுதி
எப்போதும் மிளிர்கிறது
அடிப்பகுதி
நசுங்கித் தேய்கிறது.
---
காலில் கிடந்தே
கோட்டையைப் பிடிக்கலாம்
– என்று
அன்றே
கற்றுக் கொடுத்தது
பாதுகை.
கவிதையில் இருந்த ஒற்றுமைகளையும், கற்பனையில்
பிறந்த வேற்றுமைகளையும் கவிஞர்கள் அடுக்கிக் கொண்டே போக, கைதட்டல்களால் அரங்கம் அதிந்தது.
அடுத்தப் படலம்,
நான்காம் படலம் தொடங்கியது.
இவைகள் பேசினால்.
கம்பனை வரைந்த எழுத்தாணி.
காதலில் வளைந்த வில்.
குகன் கொணர்ந்த மீன்.
எழுத்தாணியும், வில்லும், குகன் கொணர்ந்த மீனும்,
கவிஞர்கள் உள்ளம் புகுந்து, குரல் வழி, கவி வரிகளாய் வெளிவந்தன.
கம்பனை வரைந்த எழுத்தாணி
கர்வம்
உண்டு எனக்கு
கம்பனைப் படைத்தவன்
மட்டுமல்ல – நான்
கடவுளையே
படைத்தவன்.
மண்ணை ஆள்பவன்
மன்னனாகிறான்
என்னை ஆள்பவன்
சக்கரவர்த்தியாகிறான்.
---
ஓலையும் நானும்
அமைத்தோம்
கூட்டணி – அதனால்
இராமகாதை
செல்லுமிடமெல்லாம்
பேரணி.
---
ஆறு காண்டங்களால்
கம்பன்
ஏழு கண்டங்களை வெல்வதற்கு
காரணமானவன் நான்
எழுத்தாணி.
கம்பநாடன்
உதிரம் தொட்டு
காப்பியம் வரைந்த
முள்ளா?
மனிதப் பிறவியின்
மிருக குணத்தை,
மிருகப் பிறவியின்
மனித குணத்தை
புரட்டிக் காட்டிய
மேழியா?
---
தேரெழுந்தூர்
ஏழைவீட்டில்
தனித்திருந்தேன்.
தெய்வத்தின்
கதை எழுதக் காத்திருந்தேன்.
பார் எங்கும்
புகழ் பெறவே
தவமிருந்தேன்.
காதலில் வளைந்த வில்
வில்லியோ
வில்லனோ
என்றென்ன வேண்டாம்
எனை.
அன்பு வளைந்து கொடுக்கும்.
அம்பு
நேராகச் செல்லும்.
காதல் எனில்
அம்பும்
வளைந்து கொடுக்கும்.
---
நான்
ஓர் கொலைக் கருவி.
களத்தில் வெற்றிக்கும்
கானகத்தில் உணவுக்குமாய்
கொலை புரியும்
பெரும் பாவி.
பாவங்களைத் தீர்க்க
ஒரு பரிகாரம்
தேடினேன்.
பரதனின் முன்னவன்
இராமனை நாடினேன்.
---
கன்னி
ரிஷபத்தைச்
சேர முடியாமல்
தனுசு
தடுத்துக் கொண்டிருந்தது.
உயிர்
மெய்யைச்
சேரமுடியாமல்
ஆயுதம்
நடுவே நின்றது.
அவன் நாண்
ஏற்றியதும்
இவள் நான்
இழக்கத் தொடங்கினாள்.
முதல் பார்வையிலேயே
முகூர்த்த ஒலை
எழுதியவன் இராமன்.
பார்வையினாலேயே
பரிசம் போட்டவன்
இராமன்.
---
உத்தமன்
கை பட்டதும்
உடைந்தது ஏன் தெரியுமா?
இராமன்
கால் பட்ட துகள்
கல் பட்டதும் – அகல்யா
உயிர் பெற்றதும் அறிந்தேன்.
வில்லுக்குப் பதில்
ஒரு கல்லாய்
இருந்திருக்கக் கூடாதா
என நான் முறிந்தேன்.
---
காதலுக்காய்
வளைந்ததால்
வண்ணங்களால்
இன்றும் வாழும்
வான வில்
நான்
குகன் கொணர்ந்த மீன்
உலகம்
என்னை
உணவுப் பொருளாகத்தான்
பார்க்கிறது.
குகன்
மட்டும்தான் என்னைப்
பரிசுப் பொருளாய்
பார்த்தான்.
இராமன்
நான் வறுபடாமல்
பார்த்துக் கொண்டார்.
நான்
அந்த நட்பு
அறுபடாமல்
பார்த்துக் கொண்டேன்.
கொடியிலும்
பறக்கவிட்டு
குழம்பிலும்
கொதிக்க விடும்
எங்களைக்
காப்பியத்தில்
கௌரவித்தக் கம்பனுக்கு
குளத்து மீன்களும்
மீன்களின் குளங்களும்
கடமைப் பட்டுள்ளன.
---
மச்சங்களின்
எனக்குத்தான்
அதிக மச்சம்.
ஆறாம் அவதாரத்தால்
எனக்கு மோட்சம்.
---
சுற்றம் விடுத்து
நானும் தேனும்
குகன் சென்றோம்.
நாயகனைன் கண்டு
நெகிழ்ந்து நின்றோம்
– ஆயினும்
எனக்கு ஓர் வருத்தமுண்டு.
மௌலி புனைந்த
மன்னனை அன்றி
மரவுரி தரித்த
வள்ளலாள் அவன்
திருமேனி கண்ட
நிலையினை எண்ணி
எனக்கு ஓர் வருத்தமுண்டு.
---
வெளியே
புலால் வாசம்.
உள்ளே
பூ வாசம்.
முரட்டுத்தனம்தான்
முகவாசம் – ஆனால்
முழுக்க முழுக்க
அன்பு அகவாசம்
ஆமாம்
இதுதான்
குகவாசம்
அதனால்தான்
இராமன் வைத்தான்
சகவாசம்.
---
உலகிலுள்ள
உயிர்களில்
உறங்காமல் விழித்திருக்கும்
ஓர் உயிர்
நான் என நினைத்திருந்தேன்.
இராமனுக்குச்
சேவை செய்ய
இமை மூடாமல்
இலக்குவனும் இருக்கின்றான்.
இமை மூடா
இலக்குவனை
இதயத்தால் வாழ்த்துகிறேன்.
---
குகனோடு
ஐவரான குலராமன்
விருந்துக்கு
தேனோடு துணையான
மீன் எனக்கு
இல்லை அச்சம்தான்.
நான்காம் படலம்,
அனைவர் மனதிலும் மகிழ்ச்சியைப் புகுத்த,
நிறைவுப் படலமாய்,
ஐந்தாம் படலமாய்,
கவிகள்,
கம்பனுக்கு
மடல் ஒன்று வரைந்தனர்.
தனி மனித
ஒழுக்கத்தைத்
தாங்கிப் பிடித்ததற்காகவே
உன்
தாளைப் பிடிக்கிறேன்.
---
பாருக்குத்
தமிழை பந்திவைத்து
தேன் பாகில்
பா வைத் தோய்த்தெடுத்து
யாருக்கும் திகட்டாமல்
நீ
ஊட்டினாய்.
---
அழிந்ததெல்லாம்
பெண்ணால் என்ற
இனியன் சொல் மாற்ற
இன்னொரு காதை
தருக
வருக
சொல் வேந்தே
---
கம்பா
எப்படி உன்னால் முடிந்தது?
எதற்குள்ளும் அடங்காத
எல்லையில்லா
பரம்பொருளை
சொல்லுக்குள் அடக்கும்
சூத்திரம்
---
மடல் எழுதுவதே
மறந்து போய்விட்டது.
வாரித் தந்த
கம்பனுக்கு
வாட்ஸ்அப் ஒன்று
அனுப்புகிறேன்.
முன்னூறு பெண்களை
வரன் செய்து
முன்னோர்கள் வாழ்வில்
முரண் செய்த காலத்தில்,
பிறன் மனை நோக்காமல்
இராமன் தன்னை
அரண் செய்தான்.
ஒருத்தியை மட்டுமே
பெண்டாக்கினான்
உயிர்களை நேசிப்பதையே
தொண்டாக்கினான்.
மனித வாழ்வையே
மலர் செண்டாக்கினான்.
அவனுக்காகத்தான்
கம்பன்
இந்த மானுட காவியத்தையே
உண்டாக்கினான்.
நிறைவாய்
கவியரங்கத் தலைவரும், கம்பனுக்கு ஒரு கடிதம் எழுதினார்.
உன்
அருஞ்செய்திகளை
அணு அணுவாய்
உள் வாங்கி
அப்பெருஞ் செய்திகளைப்
பேருரைகளாகத் தருவார்கள்
தமிழ்ப் பெருந்தகைகள்.
நாங்கள்
இப்போது குறுஞ் செய்திகளில்
குறுகிப் போய்விட்டோம்.
உன் காப்பிய
உழைப்பைக் கூட
ஹைக்கூ
ஆக்கிவிடுவார்களோ
என்ற ஐயம்
எனக்குண்டு.
இணையத்தில்
நீ இருப்பது மகிழ்ச்சி.
எனினும் எப்போதும
இதயத்தில் இருப்பதே
வளர்ச்சி.
எந்த முகவரிக்கு
இந்தக் கடிதத்தை வடிப்பது
என்ற கவலை
எனக்கிருந்தது.
இன்றுதான்
ஆதார் எண்ணோடு
முகவரி கிடைத்தது.
கம்பன்,
கம்பன் அடிசூடி,
கம்பன் கழக அலுவலகம்,
5, வள்ளுவர் தெரு,
காரைக் குடி
என்ற
கம்பன் முகவரி
ஆதார் எண்ணோடு
இன்றுதான் கிடைத்தது.
கம்பனில் சுழன்ற இக்கவியரங்கம் பார்த்து, காரைக்குடியே
ஆடித்தான் போனது.
காரைக்குடி கம்பன்
கழக விழா
தமிழ்ச் செம்மல்
கவிஞர் தங்கம் மூர்த்தி
அவர்கள்
தலைமையில்
கவிஞர் முனைவர் மகா
சுந்தர்
கவிஞர் ஆலங்குடி வெள்ளைச்
சாமி
கவிஞர் கவி முருக
பாரதி
கவிஞர் சுசித்ரா மாரன்
என
கவிகள் ஐவர் ஒன்று சேர்ந்து சுழற்றிய வார்த்தைகளால்,
காரைக்குடியே மயங்கித்தான் போனது.
நண்பர்களே,
புதுகை அன்பர் முனைவர் மகா.சுந்தர் அவர்கள் அனுப்பிய, இச்சுழலும் கவியரங்கக் காணொலி என்னுள்
சுற்றி, சுற்றி, சுழன்றடித்தது.
காணொலியில் மனம் கரைந்துதான் போனது.
குகன் கொணர்ந்தத் தேனாய், திகட்டாமல், தித்தித்த,
தேன்பாகுக் கவியரங்கின், ஒரு சில துளிகளை மட்டுமே, ஏட்டில் இறக்கி வைத்துள்ளேன்.
காரைக்குடியை மையமாய் வைத்துச் சுழன்ற கவியரங்கைக்
கண்டு மகிழ, கண்டு நெகிழ, இதோ, இணைப்பு.
சுழலும் கவியரங்கம் தங்களை அன்போடு அழைக்கிறது.