23 ஜூன் 2021

திசைக் கூடல்

 



     ஆண்டு 1928.

     திருச்சி.

     உடன் பிறப்புகள் மூவர்.

     மூவரில் இளையவர் காலமானார்.

     வழக்கறிஞராய் பணியாற்றி, பெரும் சொத்து சேர்த்தவர்.

     மனைவி இல்லை.

     பிள்ளைகள் இல்லை.

     உயிலும் இல்லை.

    

     எனவே, இவரது அண்ணன்கள் இருவரும், இவரது சொத்துக்களுக்கு வாரிசுதாரர்கள் ஆனார்கள்.

     இவர்கள் விரும்பியிருந்தால், சொத்துக்களை, இருவரும் பங்கிட்டுக் கொண்டிருக்கலாம்.

     ஆனால், இவர்கள் அவ்வாறு செய்யவில்லை.

     தங்களது தம்பியின் சொத்துக்களை மூலதனமாக வைத்து, தங்கள் தம்பியின் பெயரிலேயே, ஒரு அறக்கட்டளையினை நிறுவினார்கள்.

     ஈசுவரம் கிருபையால், எங்களுக்கு வேண்டிய சொத்துக்கள் இருப்பதாலும், எங்கள் பிள்ளைகளும் சம்பாதிக்கத் தக்கவர்களாய் இருப்பதாலும், எங்களுக்கு, எங்கள் தம்பியின் சொத்துக்கள் தேவையில்லை.

     யாருக்கு, இம்மனம் வரும்?

     தரும வாசக சாலையும், தருமப் பள்ளிக் கூடமும், அதாவது, பள்ளிக் கூடம் விட்டுப் போகும் பொழுதே, நான்கு அணாவாவது சம்பாதிக்கும்படியான, கைத் தொழிலையும் கற்றுச் செல்ல வேண்டும் என்பதே, எங்கள் தம்பியின் விருப்பமாக இருந்தது.

     தம்பியின் விருப்பத்தை நிறைவேற்றவே, இவ்வறக்கட்டளை.

     இதுமட்டுமல்ல,

     தங்களுக்குப் பின், இவ்வறக்கட்டளையினை பராமரிக்கத் தகுந்தவர் யார் என்பதையும், இவ்வறக்கட்டளையிலேயே தெள்ளத் தெளிவாய் குறிப்பிட்டார்கள்.

     நம்முடைய குடும்பத்தில் தரும சிந்தனையும், யோக்கியதையும் உள்ளவரையே நியமிக்க வேண்டும்.

     வியப்பாக இருக்கிறதல்லவா?

     உண்மை.

     ஆனாலும், இவர்களால், தங்கள் தம்பி விரும்பியதைச் செய்ய இயலவில்லை.

     காரணம், சொத்துக்கள் இருந்தனவே தவிர, இச் சொத்துக்கள் மூலம் கிடைக்கும் வருவாய் குறைவானதாகவே இருந்தது.

     ஆனாலும் மனம் தளரவில்லை.

     தங்களின் தம்பியின் விருப்பத்தை நிறைவேற்ற வழி தேடினார்கள்.

     வழியினையும் கண்டுபிடித்தார்கள்.

     அவர்கள் கண்ட வழி, அவர்களைக் கரந்தைக்கு அழைத்து வந்தது.

     கரந்தைத் தமிழ்ச் சங்கம்.

     1916 ஆம் ஆண்டு தொடங்கப் பெற்று, பெயரும் புகழும் பெற்று இயங்கி வந்த, கரந்தைத் தமிழ்ச் சங்கக் கைத்தொழில் கல்லூரியில், கல்வியோடு, கைத் தொழிலும் பயிற்றுவிக்கப் பெற்று வந்த காலம் அது.

     மேலும், கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின், வெள்ளி விழாவின்போது, தொடங்கப் பெற்ற, கரந்தைப் புலவர் கல்லூரிக்கு, சென்னைப் பல்கலைக் கழகம், இசைவு தர மறுத்த, இக்கட்டான காலகட்டம் அது.

     காரணம், ரூ.50,000 ஐ இணைப்புக் கட்டணமாகச் செலுத்த வேண்டும் அல்லது, இந்தத் தொகைக்குச் சமமான, சொத்துக்களின் பத்திரத்தினைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

     இரண்டிற்குமே வழி இல்லாத நிலை.

     இதனை அறிந்த அறக்கட்டளையினர், தங்கள் அறக்கட்டளையில் மாற்றம் செய்து, அறக்கட்டளையின் பயனாளியாய், கரந்தைத் தமிழ்ச் சங்கத்தை  அறிவித்தனர்.

     ஏழை மாணவர்களுக்குத் தொழிலும், கல்வியும் அளித்து, அவர்களை முன்னுக்குக் கொண்டுவர வேண்டும் என்பதே எங்கள் தம்பியின் எண்ணமாகும்.

     ஆனால், இவ்வறக்கட்டளையின் சொத்துக்களைக் கொண்டு, இதனைச் செய்து முடிப்பது, முடியாத கருமமாயிருப்பதாலும்,

     இதே கருத்துக்களை நிறைவேற்றும் எண்ணத்துடன், கரந்தைத் தமிழ்ச் சங்கமானது, மாணவர்களுக்கு இல்லங்கள் அமைத்து, உண்டி, உறையுள் முதலியன கொடுத்து, தொடக்கக் கல்வியும், தமிழ்ப் புலவர் கல்லூரியும் ஏற்படுத்தி, மாணவர்கள் தொழில் கல்வியும் பெற வசதிகள் செய்து நடத்தி வருகின்றமையால்,

     அதன் வாயிலாகவே, எங்கள் எண்ணங்களை நிறைவேற்றிக் கொள்ளுதலே, சாலச்சிறந்தது எனக் கருதுகிறோம்.

     மாற்றம் செய்யப்பெற்ற, அறக்கட்டளையின் பத்திரப் பதிவு நகலினை ஏற்றுக் கொண்ட, சென்னைப் பல்கலைக் கழகம், கரந்தைப் புலவர் கல்லூரிக்கு இசைவு அளித்தது.

கல்லூரி புத்துயிர் பெற்றது.

கரந்தைப் புலவர் கல்லூரிக்கு

மறு வாழ்வு அளித்த அறக்கட்டளை


தி.ச.பழனிச்சாமி பிள்ளை அறக்கட்டளையாகும்

இதன் நிறுவுநர்கள்

தி.ச.முத்துசாமி பிள்ளை

தி.ச.பொன்னுசாமி பிள்ளை

---

கடந்த 20.6.2021 ஞாயிற்றுக் கிழமை மாலை

தமிழ் மரபு அறக்கட்டளை

பன்னாட்டு அமைப்பு

நடத்திய

திசைக் கூடல்

நிகழ்வில்


கரந்தைப் புலவர் கல்லூரியின் தோற்றமும் வளர்ச்சியும்

என்னும் தலைப்பில்

உரையாற்றுவதற்கான பொன்னான வாய்ப்பு கிட்டியது.

இவ்வாய்ப்பினை வழங்கிய

தமிழ் மரபு அறக்கட்டளையின்

தலைவர்

அன்புச் சகோதரி முனைவர் க.சுபாஷினி அவர்களுக்கும்,

(ஜெர்மனி)

செயலாளர்

அன்புச் சகோதரி முனைவர் எஸ்.தேமொழி அவர்களுக்கும்

(அமெரிக்கா)

இந்நிகழ்வின் தொழில் நுட்ப ஒருங்கிணைப்பாளர்

அன்புச் சகோதரர் திரு மு.விவேக் அவர்களுக்கும்

(விருதுநகர்)

என் நன்றியினை உரித்தாக்கி மகிழ்கின்றேன்.

 

மேலும்


கரந்தைப் புலவர் கல்லூரியின் தோற்றமும், வளர்ச்சியும்

என்னும் தலைப்பிலான உரையின்

முழுமையான எழுத்து வடிவம்

மின்னூலாக

அமேசான் தளத்தில் இணைந்துள்ளது என்பதனையும்

மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

கடந்த ஆண்டு ஜுன் மாதத்தில் ஓர் நாள்

அலைபேசி வழி அழைத்த

நம்

வலைச் சித்தர் திண்டுக்கல் தனபாலன் ஐயா அவர்கள்

அமேசான் தளத்தில் என் பதிவுகளை மின்னூலாக வெளியிட அறிவுறுத்தி, வழியினையும் காட்டினார்.

 

     அதுநாள் வரை, அமேசான் தளத்தில்  மின்னூல் என்பதை எட்டாக் கனியாகவே எண்ணி, ஏக்கப் பார்வைதான் பார்த்து வந்தேன்.

     வலைச் சித்தர் காட்டிய வழியில், அமேசான் தளத்தில் நுழைந்து, என் பதிவுகளைத் தொகுத்து, மின்னூல்களாய் மாற்றி வெளியிடத் தொடங்கினேன்.


அமேசான் தளத்தில்

எனது

50 ஆவது மின்னூலாய்

பதிவேற்றம் பெற்றிருக்கிறது.

வழி காட்டிய

வலைச் சித்தருக்கு

நன்றி, நன்றி, நன்றி.

---

 

நண்பர்களே, வணக்கம்.

24.6.2021 வியாழக் கிழமை பிற்பகல் முதல் 26.6.2021 சனிக் கிழமை பிற்பகல் வரை.

கரந்தைப் புலவர் கல்லூரி

மின்னூலினை

அமேசான் தளத்தில்

கட்டணம் ஏதுமின்றி, தரவிறக்கம் செய்து வாசித்து மகிழலாம்.

வாசித்துத்தான் பாருங்களேன்.

என்றென்றும் பேரன்புடன்,

கரந்தை ஜெயக்குமார்.