கரிவலம் வந்த நல்லூர்.
பால் வண்ண நாதர் ஆலயம்.
ஒரு பெரியவர், கோயில் அலுவலகத்துள் நுழைந்து,
அங்கு பணியில் இருந்த பணியாளரிடம், சில தகவல்களைக் கேட்கிறார்.
பெரியவர்:
வரகுண பாண்டியர் வைத்திருந்த, ஏட்டுச் சுவடிகள் எல்லாம், ஆலயத்தில் இருக்கின்றனவாமே?
பணியாளர்: அதெல்லாம் எனக்குத் தெரியாது. என்னவோ
வைக்கோற் கூளம் மாதிரி, கணக்குச் சுருணையோடு, எவ்வளவோ பழைய ஏடுகள் இருந்தன.
பெரியவர்: அப்படியா, அவை எங்கே இருக்கின்றன? தயை
செய்து அந்த இடத்திறகு அழைத்துப் போவீர்களா?
பணியாளர்:
அதற்குள் அவசரப்படுகிறீர்களே? வரகுண பாண்டியர் இறந்தபிறகு, அவர் சொத்தெல்லாம்,
கோயிலைச் சேர்ந்துவிட்டதாம். அவர் வைத்திருந்த ஏட்டுச் சுவடிகள் எல்லாம், அப்போதுதான்
கோயிலுக்கு வந்ததாம்.
பெரியவர் :
அது தெரியும். இப்போது அவை எங்கே இருக்கின்றன?
பணியாளர்: குப்பை கூளமாக கிடந்த சுவடிகளை நான்
பார்த்திருக்கிறேன். எந்த காலத்துக் கணக்குச் சுருணைகளோ.
பெரியவர் : வேறே ஏடுகள் இல்லையா?
பணியாளர் : எல்லாம் கலந்துதான் கிடந்தன.
பணியாளர் பேசப் பேச, பெரியவருக்கு மெல்ல மெல்லக்
கோபம் ஏறுகிறது.
பெரியவர் : வாருங்கள் போகலாம்.
பணியாளர் :
ஏன் கூப்பிடுகிறீர்கள்? அந்தக் கூளங்களை எல்லாம், என்ன செய்வது என்று யோசித்தார்கள்.
ஆகம சாஸ்திரத்தில் சொல்லியிருக்கிறபடி செய்துவிட்டார்கள்.
பெரியவரிடத்தில் பதட்டம் கூடுகிறது.
பெரியவர் :
என்ன செய்து விட்டார்கள்.
பணியாளர்:
பழைய ஏடுகளை, கண்ட கண்ட இடங்களிலே போடக்கூடாதாம், அவற்றை நெய்யில் தோய்த்து,
ஹோமம் செய்துவிட வேண்டுமாம். இங்கே அப்படித்தான் செய்தார்கள்.
ஹா
தன்னையும் மறந்து அலறினார் பெரியவர்.
பெரியவர்: இப்படி எங்காவது ஆகமம் சொல்லுமா? அப்படிச்
சொல்லியிருந்தால், அந்த ஆகமத்தையல்லவா, முதலில் ஆகுதி செய்ய வேண்டும்.
---
அவர் ஒரு கல்லூரிப் பேராசிரியர்.
அவர் கையில் எப்பொழுதும் ஒரு கையெழுத்துப் பிரதியும்,
குறிப்புப் புத்தகமும் இருக்கும்.
ஒரு நாள், ஒரு மணிக்கு மேல், மதிய உணவு இடைவேளையில்,
ஆசிரியர்கள் ஓய்வறையில் அமர்ந்து, அந்தப் பிரதியை வழக்கம் போல் புரட்டிக் கொண்டிருந்தார்.
அருகில் அமர்ந்திருந்த ஸ்ரீ சக்கர்வர்த்தி ஐயங்கார் என்னும் கணிதப் பேராசிரியர் என்ன? அறுபது நாழிகையும், இந்த புத்தகத்தையே வைத்துக்
கொண்டு கஷ்டப்படுகிறீர்களே என்றார்.
என்ன செய்வது? விசயம் விளங்கவில்லை. நிதானமாகப் பார்க்கிறேன். ஒன்றும் புரியவில்லை.
புரியாதபடி ஒரு புத்தகம் இருக்குமோ?
தமிழில் அப்படித்தான் பெரும்பாலும் இருக்கின்றன. புரியும்படி பண்ணலாம். அதற்குக்
காலம் வர வேண்டும்.
இதில் என்ன புரியவில்லை?
எவ்வளவோ
வார்த்தைகள், இதில் தெரியாதவையாக இருக்கின்றன.
அவை மற்ற புத்தகங்களிலே காணப்படவில்லை. ஜைனம், சைவம், வைஷ்ணவம் ஆகிய மத நூல்களிலும்
இருப்பதாகத் தெரியவில்லை. பாருங்கள், அரூபப்
பிடமராம், உரூபப் பிடமராம். இவையெல்லாம் புதிய பாஷை மாதிரி இருக்கின்றன. பிடமரென்ற
வார்த்தையை இதுவரையில் நான் கேட்டதில்லை.
இப்படி
இவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போதே, புதிதாய் ஒரு குரல் உள்ளே நுழைந்தது.
அதைப்
பிரமரென்று சொல்லலாமோ?
இருவரும் திரும்பிப் பார்க்கிறார்கள்.
கல்லூரியில் பேராசிரியராய் பணியாற்றும், ராவ்பகதூர் மளூர் ரங்காச்சாரியார் அவர்களைப்
பார்த்தனர்.
எனக்கு
ஒன்றும் புரியவில்லை. அது பிடமரோ, பிரமரோ தெரியாது.
எங்கே அந்தப் பகுதியை படித்துக் காட்டுங்கள்.
நால்வகை மரபினரூபப் பிடமரும்
நானால் வகையினுரூபப் பிடமரும்
இருவகைச் சுடரு மிருமூ வகையிற்
பெருவனப் பெய்திய தெய்வத கணங்களும்.
ரங்காச்சாரியார் முகத்தில் ஒரு ஒளி உண்டாயிற்று.
இந்த
புத்தகம் பௌத்த மத சம்பந்தம் உள்ளதாகத் தோன்றுகிறது.
கல்லூரிப் பேராசிரியருக்கோ, அமுதத்தைக் குடித்த
ஓர் உணர்வு.
எப்படி?
அதுவா?
அவர்கள்தான் இந்த பிரம்மாக்களில் இத்தனை வகை என்று சொல்லுவார்கள். பிடமரென்பதற்குக்
பிரமரென்றுதான் அர்த்தம் கொள்ள வேண்டும். அவர்கள் லோகக் கணக்கு, அது சம்பந்தமான ஏற்பாடுகள்
எல்லாம் தனி என்றார்.
இன்னும்
இப்படி இருப்பவைகளயும் படித்துக் காட்டினால், எனக்குத் தெரிந்ததைச் சொல்லுகிறேன். வெள்ளைக்காரர்கள்
நிறைய புத்தகம் எழுதியிருக்கிறார்கள். படித்துப் பார்த்துச் சொல்கிறேன்.
அவ்வளவுதான், அவரை இறுகப் பற்றிக் கொண்டார்.
அன்று
முதல் காலையும், மாலையும் ரங்காச்சாரியாரின் வீட்டிற்குச் செல்லத் தொடங்கினார்.
ஒரு நாள் அல்ல, இருநாள் அல்ல.
ஒரு மாதம், இரு மாதம் அல்ல.
முழுதாய் ஒன்றரை வருடம், நாள் தவறாமல் ரங்காச்சாரியார்
இல்லம் சென்றார்.
ஒன்றரை வருடம் கடந்த நிலையில், ரங்காச்சாரியார்
சென்னைக்கு மாற்றலாகிச் சென்றபிறகும், வார விடுமுறை நாட்களில் சென்னைக்கே சென்று, ஐங்களைத் தீர்த்துக் கொண்டார்.
அயரா உழைப்பு.
இத்தகு உழைப்பால், ஓலைச் சுவடியில் உறங்கிக்
கொண்டிருந்த மணிமேகலை நூல் வடிவம் பெற்றது.
---
இவர்
சூரியமூலை
என்னும் சிற்றூரில்
தமிழைச்
சூரியனாய்
ஒளிவிக்கத்
தோன்றியவர்.
டாக்டர் உ.வே.சாமிநாத
ஐயர்.
ஓலைச் சுவடிகளின் ஆயுள் குறைவு என்பதால், அவ்வப்போது,
ஓலைச் சுவடிகளைப் படியெடுப்பார்கள்.
ஓலையை ஒருவர் வாசிப்பார்.
வருமானத்தின் பொருட்டு, அவரோடு இணைந்து அமர்ந்து,
அவர் சொல்வதை, பலர் படியெடுப்பார்கள்.
ஓலையைப் பார்த்து வாசிப்பதை, சரியாக காது கொடுத்துக்
கேட்க வேண்டும்.
அப்படி இல்லாது போனால், எழுதுபவரின் அறியாமையினாலோ
அல்லது சோர்வினாலோ பிழைகள் தோன்றுவதற்கு வாய்ப்புகள் அதிகம்.
பல்வேறு சுவடிகளை ஒப்பிட்டுப் பார்த்தால்தான்,
பிழை இல்லாப் பதிப்பாக வெளியிட இயலும்.
எனவே உ.வே.சா., எந்த நூலைப் பதிப்பிக்க முயன்றாலும்,
அந்நூல் இருக்கும் பல ஓலைச் சுவடிகளை அலைந்து திரிந்து சேகரிப்பார்.
பல பிரதிகள் வைத்திருந்தாலும், பிழைகள் குறைந்த
ஒரு பிரதியை, ஆதாரப் பிரதியாக வைத்துக் கொண்டுப் பணியினைத் தொடங்குவார்.
அந்நூலை முழுமையாகப் புரிந்து கொண்ட பிறகுதான்
பதிப்புப் பணியினையே தொடங்குவார்.
ஓலையில் உள்ள ஒரே ஒரு செய்தி புரியவில்லை என்றாலும்,
அதனைப் புரிந்து கொண்ட பிறகுதான் பதிப்பிப்பார்.
புரியாத செய்திகளை யார் விளக்குவார்? என்பதை
அறிந்து, அவர் எந்த ஊரில் இருந்தாலும், அவ்வூருக்குச் சென்று, அவரைப் பார்த்து, தன்
ஐயங்களைக் கூறி விளக்கம் பெற்று தெளிந்த பிறகுதான் பதிப்பிப்பார்.
ஓலைச் சுவடிகளில் உள்ள செய்திகளை புத்தக வடிவில்
கொண்டு வருவது என்பது அவ்வளவு எளிதான செயல் அல்ல.
ஓலைகளிலே இது கொம்பு, இது சுழி என்று தெரியாது.
மெய்யெழுத்துக்களுக்குப் புள்ளி இருக்காது.
ஒரு சொற்றொடர் எங்கே தொடங்குகிறது? எங்கே முடிகிறது?
என்பதை அறிய முடியாது.
ஒரு சொல்லுக்கும், அடுத்த சொல்லுக்கும் இடைய
இடைவெளி இருக்காது.
உகார, ஊகார நெடில்களுக்கு தனிக் குறியீடு, பல
இடங்களில் இருக்கவே இருக்காது.
ரகரத்திற்கும் துணைக் காலுக்கும் வேறுபாடு தெரியவே
தெரியாது.
சாபமா, சர்பமா என்பது புரியாது.
இவைபோதாதென்று ஓலைச் சுவடி ஒடிந்தும் கிழிந்தும்
இருக்கும்.
ஓலைச் சுவடிகளில் இல்லாத செய்திகளை, விடுபட்டுப்
போனச் செய்திகளை, ஓலைச் சுவடி செல்லரித்ததாலோ, சிதைந்து கிழிந்ததாலோ மறைந்து போன் சொற்களை,
ஊகித்து நிரப்பும் பழக்கம் இவரிடம் கிடையவே கிடையாது.
தேடுவார்.
தேடுவார். அப்பகுதி கிடைக்கும் வரைத் தேடுவார்.
கிடைத்தபின், இந்தப் பகுதி, இந்த ஊரில் கிடைத்த
சுவடியில் இருந்தது எனக் குறிப்பிட்டுப் பதிப்பிப்பார்.
ஒரே நூலை பலமுறைப் பதிப்பித்திருக்கிறார்.
முதல்
பதிப்பில், பிழை இருப்பதை அறிந்தால், அடுத்தடுத்த பதிப்புகளில், திருத்தம் செய்து வெளியிடுவார்.
அடிக்குறிப்பு, மேற்கோள் விளக்கம் எனத் தெளிவாய்,
விரிவாய் பதிப்பிப்பார்.
இவரது பதிப்புப் பணியினை நான்காகப் பிரிக்கலாம்.
1.
சங்க இலக்கியப் பதிப்புகள்
2.
காப்பியப் பதிப்புகள்
3.
இலக்கண நூல் பதிப்புகள்
4.
இடைக்கால, பிற்கால நூல் பதிப்புகள்
இவர்
இம்மண்ணில், தமிழ் மண்ணில் வாழ்ந்தது 87 ஆண்டுகள்.
இவர் பதிப்பித்த இலக்கியங்கள் – 70
இவர் பதிப்பித்த இலக்கண நூல்கள் – 4
எழுதி வெளியிட்ட உரைநடை நூல்கள் – 18
இவரால் எழுதப்பெற்று,
அவருடைய காலத்திற்குப் பிறகு வெளி வந்தவை –
3
87 ஆண்டுகளில் 95 நூல்கள்.
இக்காலத்தில் இவர் இயற்றிய செய்யுள்கள் 934.
தன் வாழ்வையே தமிழுக்காகச் செலவிட்டவர்.
தமிழை மீட்டெடுத்து வழங்கியவர்.
இவரது 72 வது வயது வரை, இவரது இல்லத்தில், மின் வசதியே கிடையாது.
இரவு முழுவதும் மண்ணென்ணெய் விளக்கு வெளிச்சத்தில்
அமர்ந்துதான், ஓலையில் மறைந்திருந்தத் தமிழை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தார்.
அல்லுபகல் நினைவெல்லாம் அதுவே யாக
அலைந் தலைந்து ஊரூராய்த் திரிந்து நாடி
செல்லரித்த ஏடுகளைத் தேடித் தேடி
சேகரித்துச் செருகலின்றி செப்பம் செய்து
சொல்லரிய துன்பங்கள் பலவும் தாங்கி
சோர்வறியா துழைத்த ஒருசாமி நாதன்
இல்லையெனில் அவன் பதித்த தமிழ் நூலெல்லாம்
இருந்தஇடம் இந்நேரம் தெரிந்திடாதே.
நாமக்கல் கவிஞர்
---
கடந்த
13.2.2022 ஞாயிறன்று மாலை
ஏடகம்
ஞாயிறு முற்றப் பொழிவு
இணைய
வானில் எழுந்து, இல்லம் தேடி வந்தது.
திருச்சி,
ஆர்.எஸ்.கே.மேனிலைப் பள்ளித்
தமிழாசிரியர்
உ.வே.சாமிநாதையரின்
எழுத்தும் பதிப்பும்
என்னும்
தலைப்பிலான அற்புதப் பொழிவு,
தமிழைக்
காக்க, ஓலைச் சுவடிகளில் இருந்த தமிழை மீட்டெடுக்க.
தமிழ்
தாத்தா பட்ட துயரங்களைக்
கண்முன்னே
கொண்டுவந்து, மனதை நெகிழ்வித்தது.
இனி
இப்படி ஒருவர் தோன்றமாட்டாரா?
என
ஏங்க வைத்தது.
ஓலையில் ஒளிந்திருந்த தமிழை
அச்சு வாகனம் ஏற்றி ஒளிர வைக்க
நடையாய் நடந்து
அலையாய் அலைந்து
அல்லலுற்ற
தமிழ்த் தாத்தாவை
கண்முன்னே கொண்டு வந்து காட்ட,
பெருமுயற்சி மேற்கொண்ட
ஏடக நிறுவுநர், தலைவர்
போற்றுவோம், வாழ்த்துவோம்.
---
நண்பர்களே, வணக்கம்,
நலம்தானே.
கடந்த இருபது நாள்களாக, வீட்டிலேயே தனிமையில்
முடங்கிக் கிடக்க வேண்டிய நிலை.
எனவே வலைப் பக்கம் திரும்ப இயலா சூழல்.
தற்பொழுது உடல் நிலை சீராகி உள்ளது.
எதிர்வரும் திங்கட்கிழமை முதல் (28.2.2022) பள்ளிக்குச்
செல்ல இருக்கிறேன்.
இனி வலையில் சந்திப்போம்.
என்றென்றும் பேரன்புடன்,
கரந்தை ஜெயக்குமார்