22 ஜூன் 2022

வானம் விழுங்கிய வானவில்

 



வெறும் பைகள்

கணத்த இதயம்

முதுமை.

•••

வீதியில் அலைக்கழியும்

முதுமை

வீட்டோடு தங்கிவிட்ட வறுமை.

•••


மேய்ந்து முடித்த ஆடுகளோடு

வீட்டுக்குத் திரும்புகிறது

மேய்ப்பனின் பசி.

•••

வளைந்து நெளிந்த

சாலைகைளில்

வளையாத நம்பிக்கையோடு முதுமை.

•••


தாத்தாவின் தோள் துண்டு

தாங்கிய சுவர்

முத்தமிட அமர்கிறது தட்டான் பூச்சி,

•••

வாழ்ந்த வீடு

வெளியேற மறுக்கிறது

வசித்த மனம்.

•••


கொரோனா காலம்

தனித்திருக்கிறது

பனைமரம்.

•••

மேகத்தை தலையில் சுமக்கும்

ஒற்றைப் பனை

என்ன வேண்டுதலோ?

•••


அட

தண்ணீரின் கையில்

ஆரத்தித் தட்டு.

•••

அணைக் கட்டில்

ஓர்

பிணைக் கைதி

 

     படம் ஒன்று பார்வைகள் வேறு வேறு.

     படிக்கப் படிக்க மனது, அட, இப்படியும் ஒரு பார்வை இருக்கிறதா? என வியக்கிறது அல்லவா?

     படங்களை எடுத்தவர் ஒரே ஒருவர்.

     ஆனால், ஒவ்வொரு கவிதைக்கும், ஒவ்வொரு சொந்தக்காரர்.

     புரியவில்லையா?

     இவர், முகநூலில் ஒரு படத்தைப் பதிவிட்டு, இப்படத்திற்கு ஒரு ஹைக்கூ எழுதுங்களேன் பார்க்கலாம், என புதுமுகக் கவிஞர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

     அடுத்தநொடி, கவிதைகள் பெருமழையாய்ப் பெருகி, இவரது மின்னஞ்சலில் ததும்பத் தொடங்கின.

     ஒவ்வொரு படத்திற்கும் ஐந்து கவிதைகள்.

     இவர் தேர்ந்தெடுக்கவில்லை.

     முகம் தேவையில்லை, படைப்பு போதும் என்று எண்ணிய இவர், முகங்களையும், பெயர்களையும், மறைத்து, கவிதைகளை மட்டும், தன் உடன் பிறவா சகோதரர், தமிழ்ப் பல்கலைக் கழக, அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித் துறையின் மேனாள் தலைவர், பேராசிரியர் முனைவர் சா.உதயசூரியன் அவர்களுக்கு அனுப்பி வைத்தார்.

     அவரும், மூன்றடிகளில் விதவிதமாய் வாழ்வியல் யதார்த்தங்களைச் சுமந்து வந்த கவிதைகளை அலசி ஆராய்ந்து, ஒவ்வொரு படத்திற்கும் ஐந்து, ஐந்து கவிதைகளைத் தேர்ந்தெடுத்துக் கொடுத்தார்.

      தொடர்ந்து படங்களும், கவிதைகளும் இவரது முகநூலில் முகம் காட்டின.

     ஆயிரக் கணக்கானோரின் பாராட்டுதல்களைப் பெற்றன.

     புதுக் கவிஞர்களுக்கு ஓர் உடனடி அறிமுகம், ஓர் உடனடிப் பாராட்டு.

     வேறென்ன வேண்டும்.

     இவர் எதற்காக இதனைச் செய்ய வேண்டும்?

     காரணம், இவர் படைப்பாளியாக இயங்கத் தொடங்கிய காலகட்டத்தில், இவரை உற்சாகப்படுத்துவாரும் இல்லை, ஊக்குவிப்பாரும் இல்லை.

     இவர் யாரையெல்லாம், பெரிய ஆளுமை என மனதுள் எண்ணி வியந்து வந்தாரோ, அவர்களை அணுகியபோது, பெரும்பாலும் இவருக்குப் பரிசாய் கிடைத்தது என்னவோ அலட்சியமும், கிண்டலும், கேலியும்தான்.

     வல்லிக் கண்ணன் போன்ற அரிய, ஒரு சில ஆளுமைகள் மட்டுமே, முகம் பார்க்காமல், எழுத்தை மட்டும் பார்த்து, ரசித்துப் பாராட்டி இருக்கிறார்கள்.

     இன்று இவர் எழுதத் தொடங்கி நாற்பது வருடங்கள் கடந்து விட்டன.

     தொடக்க காலத்தில் தான் சந்தித்த இன்னல்களை, இக்காலத்து புத்தம் புது  கவிஞர்கள் சந்திக்கக் கூடாது என்ற எண்ணம் இவருக்கு.

     புது எழுத்தாளர்களை, புது கவிஞர்களை கரம் கொடுத்து மேலே தூக்கிவிட வேண்டும் என்ற தணியாத தாகம் இவருக்கு.

     எனவே, தன் முகநூலில், புதுக் கவிஞர்களுக்கு இடம் கொடுத்து ஏற்றி விட்டார்.

     முகநூலில் இடம் கொடுத்ததோடு, இவர் மனம் நிறைவு பெறவில்லை.

     தன் சொந்தக் காசைச் செலவிட்டு, அச்சு நூலாகவும் வெளிக் கொணர்ந்து விட்டார்.


வானம் விழுங்கும் வானவில்

இந்நூலை இவர் யாருக்குப் படைத்திருக்கிறார் தெரியுமா?

தேனுக்குள்

ஒளிந்திருக்கும்

சுவைபோல

கவித் திறனைத்

தனக்குள் வைத்துக்

காத்திருக்கும்

இளங்கவிகளுக்கு.

     தாய்மை உள்ளத்தோடு, சகோதரப் பாசத்தோடு, புதியவர்களை உச்சாணிக் கொம்பில் ஏற்றி மகிழ்ந்திருக்கும் இவர் யார் தெரியுமா?

      கவிதை, சிறுகதை, கட்டுரை, நாடகம், குறுநாவல், நாவல், சிறுவர் இலக்கியம், தமிழாய்வு, மொழியியல், உளவியல், அகராதியியல், மொழிபெயர்ப்பு, சைவசித்தாந்தம் எனப் பலப்பல தளங்களில் தொடர்ந்து இயங்கி வருபவர்.

     விருதுகள் பல பெற்றவர்.

     இவரது பல நூல்கள், இன்றுவரை கல்லூரி, பல்கலைக் கழகங்களில் பாடத்திட்டத்தில் இருந்து வருகின்றன.

     இவரது படைப்புகளை ஆய்ந்து, பலர், ஆய்வியல் நிறைஞர் பட்டமும், முனைவர் பட்டமும் பெற்றுள்ளனர்.

இவர்தான்,

அண்ணாமலைப் பல்கலைக் கழக

தொலைதூரக் கல்வி இயக்கக

தமிழ்ப் பிரிவின்

மேனாள் தலைவர்,

பேராசிரியர் க.அன்பழகன்.

ஆம் இவர்தான்


ஹரணி.

 

இளையோரின் படைப்பாக்கத் திறனை

வெளிக் கொணர்ந்து

கவிஞர்களை

வெளி உலகிற்கு அடையாளப்படுத்த

அறிமுகம் செய்துவைக்க

பெருமுயற்சி மேற்கொண்டு வரும்

ஹரணி அவர்களை

பாராட்டுவோம், வாழ்த்துவோம்.