10 நவம்பர் 2022

தமிழால் மருத்துவக் கல்வி

      எல்லா வளர்ந்த நாடுகளுமே, கல்வியைத் தங்களோட தாய்மொழியில்தான் கொடுக்குது.

     ஜெர்மன்ல உயர் மருத்துவப் படிப்பு வரைக்கும் ஜெர்மன் மொழியிலதான் படிக்கிறாங்க.

     ஜப்பான்ல அவங்க மொழியிலதான் எல்லா உயர் படிப்புகளும் இருக்கு.

இஸ்ரேல்ல அழிந்த மொழின்னு சொல்லப்படுற, அவங்க தாய் மொழியான ஹீப்ரூவை மீட்டெடுத்து, பி.எச்டி., வரைக்கும் படிக்கிறாங்க.

     மூத்த மொழி, செம்மொழின்னு சொல்ற தமிழ்ல மட்டும் ஏன் அது சாத்தியமாகலே.

     பின்னனியில் பெரிய அரசியல் இருக்கு.

நம் பக்கத்துல இருக்கிற ஈழத்துல 1847 இலேயே தமிழ் வழி மருத்துவக் கல்வி இருந்திருக்கு.

     அங்காதிபாதம், உடற்பாவனம், கெமிஸ்தம், வைத்திய கிரகம்னு 11 தமிழ் வழி பாட நூல்கள் அங்கே இருந்திருக்கு.

     இனப் போராட்டத்தில் எல்லாம் அழிஞ்சு போயிடுச்சு.

என தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தும் இவர், இந்நிலையினை மாற்ற செயலில் இறங்கினார்.

     தமிழ் வழி மருத்துவப் படிப்பிற்காகத் தன் வாழ்வின் 50 ஆண்டுகளை இதுவரை செலவிட்டிருக்கிறார்.

      இருபது ஆயிரத்திற்கும் மேற்பட்ட கலைச் சொற்களை வகைப் படுத்தித் தொகுத்திருக்கிறார்.


எளிய தமிழில், அனைவருக்கும் புரியும் வகையில் முப்பதுக்கும் மேற்பட்ட மருத்துவ நூல்களை எழுதியுள்ளார்.

     தமிழ் வழிக் கல்விக்கான தடைகளை, அரசியல் பின்புலத்தோடு அணுகி, அந்த பேரிலக்கை எட்டுவதற்கான வழிமுறைகளை முன்வைத்து,


தமிழ் பயிற்று மொழி கனவும் நனவும்

தமிழால் மருத்துவக் கல்வி முடியும்

என இரு நூல்களை எழுதியுள்ளார்.

இதுமட்டுமல்ல,

செரிமானப் பாதை அறுவை மருத்துவம்

பொது அறுவை மருத்துவம்

என இரு தமிழ் வழி மருத்துவ பாட நூல்களையும் எழுதியிருக்கிறார்.

தமிழ் வழி மருத்துவக் கல்விக்காகவே

வாழ்ந்துவரும் இவர்தான்,

தஞ்சாவூர்


மருத்துவர் சு.நரேந்திரன்.

கடந்த 9.11.2022 புதன் கிழமை

இம்மகத்தான மருத்துவரின்

80 ஆம் ஆண்டு பிறந்தநாள்.

தமிழ்நாட்டு அரசின் இலக்கிய மாமணி விருது பெற்ற

தமிழ்க் கடல், பெரும்புலவர் இரா.கலியபெருமாள்

திருவையாறு, அரசர் கல்லூரியின்

முன்னாள் முதல்வர்

முனைவர் சண்முக.செல்வகணபதி,

புலவர் மா.கந்தசாமி

திருவையாறு, ஔவைக் கோட்டம்

முனைவர் கலைவேந்தன்

ஆகிய நால்வரோடும் இணைந்து

மருத்துவ மாமனிதரை

அவர்தம் 80 ஆம ஆண்டு

அகவைத் திருநாளில்

வணங்கி மகிழும்

ஓர் அரிய வாய்ப்பு கிட்டியது.

வணங்கி மகிழ்ந்தேன்.



உலகியலின் அடங்கலுக்கும் துறைதோறும் நூற்கள்

     ஒருத்தர் தயை இல்லாமல் ஊரறியும் தமிழில்

சலசலென எவ்விடத்தும் பாய்ச்சிவிட வேண்டும்

என்னும் பாவேந்தரின் கவி வரிகளுக்கு உயிர் கொடுத்திட,

தன் 80 ஆம் அகவையிலும், சீரிளமையோடு பணியாற்றும்

மகத்தான மருத்துவர்

மக்கள் மருத்துவர்

மருத்துவர் சு.நரேந்திரன் அவர்கள்

இன்னும் ஒரு நூறாண்டு

வாழ வாழ்த்துவோம்