சேயோன்.
யார் சேயோன்?
முருகனா?
சிவனா?
சேயோன் மேய மைவரை உலகமும்
என்கிறார் தொல்காப்பியர்.
மை என்பது மேகத்தைக் குறிக்கும்.
மேகம் என்கிறார்.
மலை என்று கூறவில்லை.
மலையில் இருப்பது யார்?
முருகனுக்கு முன் சிவன் இருந்திருக்கிறார்.
புறத்தார்க்குச் சேயோன்தன் பூங்கழல்கள்
வெல்க
என்று மாணிக்கவாசகரின் திருவாசகம் கூறுகிறது.
இவரும் சிவபெருமானைத்தான் சேயோன் என்கிறார்.
சேயோன்
குன்றகத் திருப்பெறு கூடல்
கொடுஞ்சுடர் கிளைத்த நெடுஞ்சடைப் புயங்கண்
என்று உரைக்கிறது கல்லாடம்.
நிலைமை இப்படி இருக்க, சேயோன் என்றால் முருகன்தான்
என்று பொருள் கொள்ளும் நிலை எப்படி வந்தது.
இதற்கான விடையை கச்சியப்ப சிவாச்சாரியார் கூறுகிறார்.
அருவமும் உருவமும் ஆகி அநாதியாய்ப்
பலவாய் ஒன்றாய்ப்
பிரமமாய் நின்ற சோதிப் பிழம்பதோர் மேனியாகக்
கருணைகூர் முகங்கள் ஆறும் கரங்கள் பன்னிரண்டும்
கொண்டே
ஒருதிரு முருகன் வந்து ஆங்கு உதித்தனன் உலகம்
உய்ய.
உலகம் உய்யப் பிறந்தவன் முருகன் என்கிறார்.
ஆண் மகன் என்றால் முருகன் ஒருவன்தான்.
மற்றவர்கள் எல்லாம் பெண் மகன்கள்தான்.
பெண்ணில் இருந்து பிறந்தவர்கள்.
முருகன் மட்டும்தான் ஆண் மகன்.
ஆணில் இருந்து தோன்றியவன்.
சிவபெருமானிடம் இருந்து நேரடியாய் தோன்றியவன்.
ஈசனே அவன் ஆடலால் மதலை ஆயினன் காண்
ஆதலின் நமது சக்தி ஆறுமுகன் ஆவனும்
யாமும் பேதகம் அன்றால்.
நான்தான் முருகனாக அவதரித்திருக்கிறேன்.
நான் வேறு, முருகன் வேறு அல்ல என, சிவபெருமான்
கூறியதாக உரைக்கிறது கந்த புராணம்.
இருப்பினும், பிற்காலத்தில் சேயோன் என்றாலே முருகன்தான்
எனும் நிலை உருவாயிற்று.
முருகன்.
முருகன் என்றால் அழகு, இனிமை என்றுதான் நாம்
அறிவோம்.
ஆனால், முருகன் எனில்,
அழிப்பவன்,
சிதைப்பவன்,
சீற்றமுடையவன்
வலிமையுடையவன் என்று சங்க நூல்கள் கூறுகின்றன,
முருகன் சீற்றத்து உரு கெழு குரிசில்
என்கிறது புறநானூறு.
புலிக்கணத்து அன்ன நாய்த்தொடர் விட்டு
முருகன் அன்ன சீற்றத்துக் கடுந்திறல்
எந்தையும் இல்லன் ஆக
என்கிறது அகநானூறு.
முருகு உறழ் முன்பொடு கடுஞ்சினஞ் செருக்கிப்
பொருத யானை வெண்கோடு கடுப்ப
என்கிறது நற்றினை.
இதுமட்டுமல்ல, முருகன் போரில் வல்லவன் என்பதையும்
சங்கப் பாடல்கள் எடுத்துரைக்கின்றன.
உருவக் குதிரை மழவர் ஓட்டிய
முருகன் நற்போர் நெடுவேள் ஆவி
அறுகோட்டு யானைப் பொதினி ஆங்கன்
என்று அகநானூறும்,
செருமிடு சோய், நிற் பாடுநர் கையே
எனப்
புறநானூறும் பாடுகிறது.
சங்கப் பாடல்கள் சிலவற்றில் முருகு என்ற சொல்,
நறுமணத்தைக் குறிப்பதாக ஒலிக்கிறது.
முருகுமுரண் கொள்ளும் தேம்பாய் கண்ணிய
என்கிறது அகம்.
உருளிணர்க் கடம்பி ணெடுவேட் கெடுத்த
முருக கமழ்புகை நுழைந்த வணியும்
என்கிறது பரிபாடல்.
இதுமட்டுமல்ல, முருகனுடைய வாகனமாக, தமிழ் நூல்களில்
குறிப்பிடப் படுவது எது தெரியுமா?
மயில் அல்ல.
யானை.
சூருடை முழுமுதல் தடிந்த பேரிசைக்
கடுஞ்சின விறல்வேள் களிறுஊர்ந் தாங்கு
என்கிறது பதிற்றுப்பத்து.
ஓடாப் பூட்கை பிணிமுகம் வாழ்த்தி
என முருகன் பவனி வந்த யானையை பிணிமுகம் என்கிறது
திருமுருகாற்றுப்படை.
ததும்பு சீர் இன்இயங் கறங்கக், கைதொழுது
உருகெழு சிறப்பின் முருகு மனைத் தரீஇ
கடம்பும் களிறும் பாடி, நுடங்குபு
என்னும்
அகநாநூற்றுப் பாடலும் முருகன் ஏறுவதற்குரிய வாகனம் என்று யானையைத்தான் குறிப்பிடுகிறது.
ஆனால், வடநாட்டில், கி.பி.நான்காம் நூற்றாண்டில்
தோன்றிய ஸ்கந்தனது உருவத்தில்தான் முதன்முதலாக, மயில் வாகனமாகக் காட்டுப்பட்டுள்ளது.
கோழியோங்கிய வென்றடு விறற்கொடி
என்றும்
வாரணக் கொடியோடு வயிற்பட நிறீஇ
என முருகனுக்கு உரிய கொடி, கோழி கொடி, என்று
கூறுகிறது திருமுருகாற்றுப்படை.
ஆனால் கோழிக்கொடி பிற நூல்களில் குறிப்பிடப்படவில்லை.
பரிபாடலும் கூறவில்லை.
அணங்குடை முருகன் கோட்டத்துக்
கலம்தொடா மகளிரின் இகந்து நின் றவ்வே
என்னும் புறநானூற்றுப் பாடலில் இருந்து, சங்க
காலத்திலேயே, முருகனுக்குக் கோயில் இருந்ததை அறிய முடிகிறது.
சங்க காலத்திலேயே, திருச்செந்தூரிலும், திருப்பரங்குன்றத்திலும்
முருகனுக்கு கோயில்கள் இருந்திருக்க வேண்டும்.
திருச்செந்தூரை செந்தில் என்றும், அலைவாய் என்றும்
என்றும் பாடல்கள் அழைக்கின்றன.
இருப்பினும், தமிழகக் கோயில்களில் எத்தகைய உருவத்தில்
முருகனை வழிபட்டார்கள் என்பதற்குச் சான்றுகள் இல்லை.
முருகனது சின்னமான வேல் வழிபாட்டில் இருந்திருக்கலாம்.
உருவம் வணங்கப்பட்டதா என்பது ஆய்விற்கு உரியதாகும்.
ஆனால், இக்காலத்திற்கும் சற்று முன்னர், வடநாட்டில்
கந்தனைப் பற்றிய சான்றுகள் கிடைக்கின்றன.
வடஇந்தியாவில், யௌதேயர்களுடைய கி.பி.இரண்டாம்
நூற்றாண்டு நாணயங்களில், ஆறு தலை உடைய கார்த்திகேயன் உருவம் உள்ளது.
குஷானர்களுடைய, கி.பி.இரண்டாம் நூற்றாண்டிற்கு
முற்பட்ட நாணயங்களில்,
ஸ்கந்தன்
குமரன்
மகாசேனன்
விசாகன் என்ற பெயர்கள் காணப்படுகின்றன.
---
ஏடகம்
ஞாயிறு முற்றம்.
கடந்த
12.2.2023 ஞாயிற்றுக் கிழமை மாலை
நடைபெற்ற
ஏடகப் பொழிவில்
இலக்கியத்தில் சேயோன்
எனும்
தலைப்பிலான
இலக்கியப்
பொழிவை, ஆன்மிகப் பொழிவாகவே
வழங்கி
மகிழ்ந்தார்
மதுரை,
மஞ்சம்பட்டி, அரசு உயர்நிலைப் பள்ளி,
பட்டதாரி
கணித ஆசிரியரும்,
சுவடியியல்
மாணவருமான
தஞ்சாவூர்,
வங்கி ஊழியர் சங்கத் தலைவர்
தலைமையில்
நடைபெற்ற,
இப்பொழிவிற்கு வந்திருந்தோரை.
ஏடகம்,
சுவடியியல் மாணவர்
வரவேற்றார்.
ஏடகம்,
சுவடியியல் மாணவி
நன்றி
கூற விழா இனிது நிறைவுற்றது.
ஏடகம்,
சுவடியியல் மாணவி
விழா
நிகழ்வுகளை சுவைபடத் தொகுத்து வழங்கினார்.
ஏடக அரங்கிற்கு
சேயோன் முருகனை
களிற்றிலும், மயிலிலும்
வேலோடும், சேவற்கொடியோடும்
அழைத்து வந்து
அழகு பார்த்த
ஏடக நிறுவுநர், தலைவர்
போற்றுவோம், வாழ்த்துவோம்.