நாங்க
என்ன பாவம் பண்ணினோம்.
யார் பண்ணின பாவமோ திருநங்கையா பிறந்துட்டோம்.
எங்களுக்கும் ஆசை இருக்குயா புருஷன், புள்ளைங்கன்னு
வாழறத்துக்கு …
முடிஞ்சா வேண்டிக்குங்க. அடுத்த பிறவியிலாவது,
உங்கள மாதிரி பொறக்கனும்னு…
நாளைக்கே உங்களுக்கு இப்படியொரு புள்ள பொறந்தா அப்ப தெரியும்யா வலியும் வருத்தமும்.
---
இதோ பாரும்மா. தெளிவா சொல்றேன் கேட்டுக்கோ.
அன்னிக்கு நீ பஸ்ல கத்தினதைக் கவனித்தேன். வேதனை
புரிந்தது.
எல்லோரும் வாழத்தான் வந்திருக்கோம். எல்லோருக்கும்
ஒரு வாழ்க்கை இருக்கு. ஆனா என் வாழ்க்கை பாதியில போயிடுச்சு.
ரெண்டு பிள்ளைகளை விட்டுட்டு, என் பொண்டாட்டி
போயிட்டா. நான் சாகற வரை அவதான் எனக்குப் பொண்டாட்டி. இன்னொரு பெண்ணை நினைக்க முடியல.
என் புள்ளங்களும் அம்மா இல்லாம தடுமாறுது. தத்தளிக்குது.
அவங்களுக்கு ஒரு அம்மா வேணும்.
அதான் உன்னைத் தேர்ந்தெடுத்தேன்.
நீ என்னோட புள்ளங்களக்கு அம்மாவா இருந்தா போதும்,
நான் உன்னை முறைப்படி தாலிகட்டி ஏத்துக்கறேன்.
நீ சம்மதிச்சா, காலம் முழுக்க உன்னை நான் காப்பாத்துவேன்,
நீ என் புள்ளங்களுக்குப் பாதுகாப்பா இருக்கனும், அவங்களோடு அம்மா இடத்துல உன்னை வைக்கப்
போறேன்.
உனக்குச் சம்மதம்னா சொல்லு.
இப்பவே தாலி கட்டிக் கூட்டிட்டுப் போறேன்.
அங்கயற்கண்ணி வாய்விட்டு அழுதாள்.
---
படிக்கப் படிக்க நமக்கும் கண்கள் கலங்கித்தான்
போகின்றன.
கதையாகவே இருப்பினும், அப்பக்கத்தை விட்டு வெளியே
வர நீண்ட நேரமானது.
---
எல்லோரும்
போய்விட்டார்கள்.
ஒரு சில உறவுகள் மட்டும் இருந்தார்கள்.
தனிமையில் நாற்காலியில் உட்கார்ந்திருந்த கணேச
மூத்தியிடம் போனான் நாகராஜன்.
நாளைக்குத்தானே சார், பால் தெளியல்?
ஆமாம் தம்பி. பத்தாம் நாள் கருமாதி வச்சுடலாம்.
நானும் வேலைக்குப் போகனும்.
என்னது வேலைக்கா? என்ன வேலை சார்?
ஆமாம்பா …
கோதையோட முடிவு தெரிஞ்ச முடிவுதான்.
இருந்தாலும், என்னோட அவ வாழ்ந்த வாழ்க்கை என்னிக்கும்
மறக்க முடியாது.
கையில உள்ள பணம் எல்லாம் போயி, கொஞ்சம் கடன்
ஆயிடுச்சு.
இது அவளுக்கான மரணக் கடன்.
அதுக்குத்தான் முன்கூட்டியே கேட்டு வச்சிருந்தேன்.
பிரைவேட் கம்பெனியில மானேஜர் வேலை.
பென்சனும் அதுவும் இருந்தா, சீக்கிரம் கடனை அடைச்சுடலாம்.
அடைச்சுட்டா வந்துடுவேன்.
பென்சன் போதும்.
அதுவரைக்கும் பொழுதும் போயிடும்.
அவளுக்காக உழைக்கறதுன்னாவே மகிழ்ச்சியாக இருக்கு
தம்பி.
அவளோட வாழற மாதிரியே இருக்கும்.
---
படிக்கும்போதே, மனம் நெகிழ்ந்து போகிறது.
கணவன் மனைவி உறவின் அர்த்தம் தெள்ளத் தெளிவாய்
புரிந்து போகிறது.
புதுமலர் அல்ல, காய்ந்த
புற்கட்டே அவள் உடம்பு.
சதிராடும் நடையாள்
அல்லள்
தள்ளாடி விழும் மூதாட்டி.
மதியல்ல முகம் அவட்கு
வறள் நிலம், குழிகள் கண்கள்.
எது எனக்கின்பம் நல்கும்?
இருக்கிறாள் என்ப தொன்றே
எனம்
பாவேந்தரின் பாடல் வரிகள் நினைவிற்கு வருகின்றன.
---
ஒரே
ஒரு குட்டி ஆடு மட்டும் போகத் தெரியாமல், ரயில் போகும் தடத்திலேயே ஓடியது.
ரயில் டிரைவர் தொடர்ந்து ஹார்னை அமுக்கிக் கொண்டே
இருந்தார்.
ம்மா என்று கத்தி, மறுபடியும் ஓட ஆரம்பித்தது,
அந்த டிராக்கிலேயே.
வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தவர்களில் சிலர்,
அவ்வளவுதான்.
அந்தக் குட்டியோட கதை முடிஞ்சது.
அதுக்கு அல்ப ஆயுசுதான் என்றனர்.
சிலர் அதைப் பார்த்துவிட்டு, பிஞ்சாட்டுக் கறி,
நல்லாயிருக்கும் என்றார்கள்.
அப்பொழுதுதான் அது நடந்தது.
அந்த டிராக்கிலேயே, அந்த மனநிலை சரியில்லாத இளைஞன்,
ஆட்டுக் குட்டியை நோக்கி, சூ, சூ என்று விரட்டியபடியே வந்தான்.
எல்லோரும் அதிர்ந்து போனார்கள்.
ரயிலின் ஹார்ன் சத்தம் வேகமாய் ஒலித்தது.
சட்டென்று ஆட்டுக் குட்டியை நெருங்கி, அதனைத்
தூக்கி, டிராக்குக்கு வெளியே எறியவும், அவனை
ரயில் தொடவும் சரியாக இருந்தது.
நான்கைந்து துண்டுகளாகிப் போனான் அந்த இளைஞன்.
---
இந்தக் கதைக்கு ஆசிரியர் கொடுத்திருக்கும் தலைப்பு,
மனிதனாக வாழ்ந்திடல் வேண்டும்.
யார் மனிதன்?
வேடிக்கைப் பார்த்தவர்களா?
துண்டாகிப் போன அந்த இளைஞனா?
---
இருங்க சங்கரன் புலம்பாதிங்க.
கொஞ்சம் பதட்டப்படாம யோசிப்போம்.
யார் கிட்ட வாங்கினீங்க?
எங்க வச்சு வாங்கினீங்க?
நம்ப காவேரி சூப்பர் மார்க்கெட் கிட்ட வச்சுதான்
வாங்கினேன். உள்ளே போய் ஐங்கரன்ல டீ சாப்பிட்டோம். அப்பல்லாம் அவர்தான் டீக்கு காசு
கொடுத்தாரு.
நான் தொட்டுப் பார்த்தேன், புடைப்பாக இருந்தது.
அந்த குடிகாரனுக்குப் பணம் கொடுத்தப்பதான் வெளியே
வந்து விழுந்திருக்கனும்.
எனக்கு சத்தம் கேட்கல.
அவன் வாங்கிட்டு, நன்றியெல்லாம் சொல்லிட்டுப்
போனான்.
சரி சங்கரன், பதட்டப்படாம இருங்க… நாம அவனைக்
கண்டு பிடிக்கனும்… அவன் ஆள் எப்படி இருப்பான்?
ஆளு நார்மல் உயரம்தான், ஆனா, வளைஞ்ச காலு.
தாங்கித் தாங்கித்தான் நடப்பான்.
---
அன்று வியாழக்கிழமை.
வாங்க பெரிய கோயில் போயிட்டு வரலாம்.
எதுக்கு?
எதுக்கா?
கோயிலுக்கு எதுக்குப் போவாங்க? சாமி கும்பிடத்தான். கருவூரார் சன்னதியில் வேண்டிக்கிட்டு
வருவோம். அவரு பாத்துக்குவாரு.
கிளம்பிப் போனான், அரை மனதாய்.
சாமி கும்பிட்டுவிட்டு, புல் வெளியில் உட்கார்ந்திருந்தார்கள்.
ஏங்க அந்த நினைப்புலேர்ந்து வெளியே வாங்க.
ஏதோ பெரிய ஆபத்து நமக்கு வராமத்தான் இந்தப் பணம்
தொலைஞ்சு போயிருக்கு.
இருட்டிவிட்டது.
எழுந்தார்கள்.
யாரோ பின்னால் இருந்து முதுகைத் தொடுவது போல்
உணர்ந்து திரும்பினான்.
அந்தப் பிச்சைக்காரன்.
அதிர்ந்து போனான்.
இவன்தான் … இவன்தான் …
பேச முடியாமல் தொண்டை அடைத்தது.
ஏஞ்சாமி,… உன்ன எங்க எல்லாம் தேடுறது. நானே, நாளைக்கு
ஒரு இடம் பிச்சை எடுக்கிறவன். அன்னைக்கு டீ குடிக்க காசு குடுத்தியே … நீ போனப்புறம்தான்
பார்த்தேன் .. பொட்டலத்தை.
உன்ன கூப்பிட்டேன் … நீ போயிட்ட
திருட்டுப் பணத்த அட காக்கிறது மாதிரி இதப் பாதுகாக்குறதுக்குள்ள,
எனக்கு உசிரு போயி உசிரு வந்துச்சி.
ஒழுங்கா பிச்சைகூட எடுக்க முடியல.
யாராச்சும் பிடிச்சுட்டா என் நிலமை.
நல்ல வேளை, பரமேசுவரன் உன்ன காட்டிக் கொடுத்திட்டான்
.. இந்த சாமி என்றபடி அவன் கையில் அந்த பணப் பொட்டலத்தைத் தந்தான்.
இருவருக்கும் என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
அழுதார்கள்.
எதுவுமே பேசவில்லை.
இவர்கள் அழுவதை அவன் மலங்க மலங்கப் பார்த்தான்.
உனக்கு என்ன வேணும் என்றாள் சங்கரனின் மனைவி.
டீ குடிக்க காசு கொடு தாயி … பசிக்குது.
---
படிக்கும்போதே மனம் கசிந்து போகிறது. கண்கள்
கலங்கிப் போகின்றன.
எல்லோரும் பார்ப்பதற்கு மனிதர்கள் போலவே இருக்கிறோம்.
ஆனால் உண்மை மனிதர்களும் ஆங்காங்கே இருக்கிறார்கள்.
எத்துணை துயர் வந்தாலும், எத்துணை வறுமைகள் வந்தாலும்,
மனதராகவே வாழும் மனிதர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
மொத்தம் 23 கதைகள்.
அனைத்திலும் ததும்பி வழிகிறது மனிதம்.
இவர் 40 ஆண்டுகளாக எழுதிக் கொண்டிருக்கிறார்.
எதற்காக எழுதுகிறார் தெரியுமா?
அவரே சொல்கிறார் கேளுங்கள்.
மனிதர்கள்
தோற்றத்தில் உலவிக் கொண்டிருப்பவர்களிடைய மனிதர்களைத் தேடுவது, கண்டடைவது என்பது, புனைகதையில்
மட்டுமே மாற்றங்களையும், உணர்வுகளையும் விளைவிக்கவும், உருவாக்கிக் காணவும் முடிகிறது.
இது ஒரு குற்றவுணர்ச்சியாகவே, படைப்பாளனாக அறியப்பட்டிருக்கிற
எனக்குள் இருக்கிறது.
முடிந்தவரை எது இயலுமோ, அந்த நிலையில் செய்தாலும்,
ஒரு குறையுள்ள பணியாகவே உறுத்துகிறது.
உறுத்தலும், குற்றவுணர்ச்சியும் எழுத்திலாவது
தணியட்டும் என்கிற ஒரு நியாயத்தை எனக்கு நானே கூறிக் கொள்கிற சூழலே தொடர்ந்து எழுத
வைக்கிறது.
ஆகவே, எழுதுகிறேன்.
இவர்.
என்னை
எழுதத் தூண்டியவர்.
பார்த்ததை,
படித்ததை, அறிந்ததை எழுது என
என்
எழுத்திற்கு
நல்
வழிகாட்டியவர்.
இவரது
நூல்,
மனிதர்கள் நடைபாதையில்
இருக்கிறார்கள்.
எங்கோ இருந்து தவிக்கும்
எழுத்தாற்றல் மிக்க
– இன்னும்
வெளிச்சம் படாத
எழுத்துக் கங்குகளுக்கு
தன்
நூலைப் படைத்திருக்கும்
இவர்தான்
உணர்வுகளின்
குவியல் இந்நூல்.
வாசித்துப்
பாருங்கள், கரைந்து போவீர்கள்.
கே.ஜி.பப்ளிகேஷன்ஸ்,
31,
பூக்குளம் புது நகர்,
கரந்தை,
தஞ்சாவூர் – 613 002
மின்னஞ்சல்
அலைபேசி
94423 98953
விலை
ரூ.200