காளையார் கோயில்.
காளையார் கோயிலுக்கு மிகப் பெரியத் தேர் ஒன்றினைச்
செய்ய விரும்பினார்கள் மருது சகோதரர்கள்.
திறமை மிகுந்த தச்சர்களை வரவழைத்தனர்.
தேர் செய்வதற்குத் தேவையான மரங்கள் மற்றும் பிற
பொருள்களை எல்லாம் சேகரித்து முடித்தனர்.
ஆயினும் ஒரு பொருள் மட்டும் கிடைக்கவில்லை.
தேருக்கு அச்சு செய்வதற்கு உரிய, வலிமை வாய்ந்த பெரிய மரம் கிடைக்கவில்லை.
நாற்புறமும் ஆள் அனுப்பித் தேடினர்.
திருப்பூவனத்தில், வையை ஆற்றின் தென் கரையில்
மிகப் பழமையான, மிகப் பெரிய மரம் ஒன்று, வளர்ந்து, உயர்ந்து வானளாவ நிற்பதைக் கண்டனர்.
மருது சகோதரர்களிடம் தெரிவித்தனர்.
வெட்டி
வாருங்கள் என்றார்.
வெட்டச் சென்ற பொழுது, புஷ்பவனக் குருக்கள் தடுத்தார்.
வெட்டக்
கூடாது என்றார்.
அரசர்
ஆணை என்றனர்.
நானும் அரசர் ஆணையாகச் சொல்கிறேன் வெட்டவே கூடாது என்று, குருக்களும் அரசர் பெயரைச்
சொல்லித் தடுத்தார்.
என்ன செய்வது என்று தெரியவில்லை.
குருக்களை அழைத்துச் சென்று, மருது சகோதரர்கள்
முன்னிலையில் நிறுத்தினர்.
மரத்தை
வெட்டக் கூடாது என்றீர்களா?
ஆமாம்.
ஏன் தடுத்தீர்கள்?
குருக்கள் சொன்ன காரணம் கேட்டு மருது சகோதரர்கள்
அதிர்ந்து போயினர்.
தங்களின் பெயர் தாங்கி, ஓங்கி உயர்ந்து நிற்கும்
மரத்தை வெட்டலாமா?
மரம் பிழைத்தது.
அந்த மரம்.
மருத மரம்.
---
கல்லாரே ஆயினும் கற்றாரைச் சேர்ந்து
ஒழுகின்
நல்லறிவு நாளும் தலைப்படுவர் – தொல்சிறப்பின்
ஒள்நிறப் பாதிரிப்பூச்
சேர்தலால் புத்தோடு
தண்ணீர்க்குத் தாய் பயந்தாங்கு.
பழமையானச் சிறப்பையும், பளிச்சிடும் நிறத்தையும்
உடைய பாதிரிப் பூவை இடுவதால், புதிய மண் பாண்டமும், அதில் உள்ள தண்ணீரும், அப்பூவின்
மணத்தைப் பெறுவது போல, கல்லாதவர்கள், கற்றவர்களோடு பழகினார், நாள்தோறும் நல்லறிவு பெறுவார்கள்
என்கிறது நாலடியார்.
பாதிரி.
பாதிரி மரம்.
ஒரு காலத்தில், பாதிரி மரங்கள் நிறைந்திருந்ததால்,
அம்மரத்தின் பெயரினைப் பெற்ற ஒரு ஊரும் உண்டு.
பாதிரிப் புலியூர்.
திருப்பாதிரிப்புலியூர்.
கடலூரில் இருக்கிறது இவ்வூர்.
இப்பாதிரி மரம் ஒன்று தஞ்சையில், அவனித நல்கூலூர்
என்று இன்று அழைக்கப்படும், அவன் இவள் நல்லூர்
கோயிலில் இன்றும் தலை நிமிர்ந்து நிற்கிறது.
---
அவரோ வாரார், தான் வந்தன்றே
திணி நிலைக் கோங்கம்
பயந்த
அணிமிகு கொழு முகை உடையும் பொழுதே.
தலைவன் வரவில்லை, ஆனால் இளவேனில் வந்துவிட்டது.
திண்மையான கோங்கு மரத்தின் மிகவும் அழகான பெருத்த அரும்புகள் மலரத் தொடங்கிவிட்டன என்றுரைக்கிறது
ஐங்குறுநூறு.
கோங்கு மரத்தின் பெயரால் கோங்கு வனம் என்ற ஓர் ஊர் இருந்துள்ளது.
இன்றோ இந்த ஊர் கச்சனம் ஆகிவிட்டது.
திருமங்கலக்குடி கோயிலில் ஒரே ஒரு கோங்கு இன்றும்
உயர்ந்து நிற்கிறது.
---
பொன்காண் கட்டளை கடுப்ப கண் பின்
புன்காய்ச் சுண்ணம் புடைத்த மார்பின்
சண்பு, கண்பு என்றழைக்கப்படும் சம்புவின் காயாகிய
கதிரை முறித்து, அக்காயில் தோன்றிய தாதை மார்பில் அடித்துக் கொண்டு விளையாடுவர் என்கிறது
பெரும்பாணாற்றுப்படை.
---
கார் அணி கூந்தல், கயற் கண், கவிர்
இதழ்
வார் அணி கொம்மை, வகை அமை மேகலை
பெண்களின் இதழைப போன்றது கவிர் மரத்தின் இலைகள் என்கிறது பரிபாடல்.
---
வேம்பும்
ஆரும் போந்தையும் மூன்றும்
மலைந்த சென்னியர், அணிந்த வில்லர்
கொற்ற வேந்தர்
வேம்பும், ஆத்தியும், போந்தையும் சூடியவர்கள்
மூவேந்தர்கள் என வேம்பு, அத்தி, போந்தை பற்றிக் கூறுகிறது புறநானூறு.
---
……………………………………………………… வள் இதழ்
ஒண் செங்காந்தள், ஆம்பல், அனிச்சம்
தண் கயக் குவளை, குறிஞ்சி, வெட்சி
செங்கொடு வேரி, தேமா, மணிச்சிகை
உரிது நாறு அவிழ் தொத்து, உந்தூழ் கூவிளம்
பெரிய இதழுடைய ஒளியுடைய செங்காந்தள், ஆம்பல், அனிச்சம், குளிர்ந்த குளத்தின் குவளை, குறிஞ்சி,
வெட்சி, செங்கொடுவேரி, தேமா, மணிச்சிகை, தனக்கு உரித்தாக நாறும் விரிந்த கொத்துக்களை
உடைய உந்தூழ், கூவிளம் முதலான மலர்களைப் பறித்து, மழை பெய்து கழுவிய அகன்ற பாறையில்
குவித்தோம் என பலப்பல பூக்களைப் பற்றிப் பேசுகிறது குறிஞ்சிப்பாட்டு.
---
வெட்சி
நிரை கவர்தல், மீட்டல் கரந்தையாம்,
கரந்தை.
சங்க இலக்கியங்களில் கூறப்படும் கரந்தை மலரினை
அடையாளம் காணுவதில், அறிஞர்கள் மாறுபடுகின்றனர்.
அவர்கள்,
திருநீற்றுப் பச்சை என்னும் கரந்தை
விஷ்ணு கரந்தை
மூலிகைக் கரந்தை
கொட்டைக் கரந்தை
கொண்டைக் கரந்தை என்கின்றனர்.
தொல்காப்பியம் கரந்தையைத் துறை என்கிறது.
வெட்சி சூடி ஆனிரைக் கவர்வதும், கரந்தை சூடி
ஆனிரை மீட்பதும் பண்டைத் தமிழரின் போர்முறை என்கிறது புறப்பொருள் வெண்பா மாலை.
பால் கரக்கும் பசுவின் முலைபோல் கரந்தை பூக்கும்
என்கிறார் ஆவூர் மூலங்கிழார்.
---
-----------------------------------------------
கானவன்
நெடுவரை ஆசினிப் பணவை ஏறி
கடுவிசைக் கவணையில் கல் கை விடுதலின்
இறுவரை வேங்கை ஒளி வீசிதறி
ஆசினி மென்பழம் அளித்தவை உதிரா
தேன் செய்இறா அல் துளைபடப் போகி
நறுவடி மாவின் பைந்துணர் உழக்கி
குலையுடை வாழைக் கொழுமடல் கிழியா
பலவின் பழத்துள் தங்கும்.
இரவில் யானையின் காலடி ஓசையைக் கேட்ட தினைப்புனக்
கானவன், யானையின் ஓசை வந்த திசையை நோக்கி, கவண் கல்லை வீசினான். அக்கல் வேங்கைப் பூக்களைச்
சிதறச் செய்து, கனிந்த ஆசினிப் பலாப் பழங்களை உதிர்த்து, தேன் ஆடையைத் துளைத்து, மாங்
கொத்துக்களை உழுக்கி, வாழை மடலைக் கிழித்து, இறுதியாய் பலாப் பழத்துள் புகுந்த அங்கேயே
தங்கிவிட்டது என்கிறது கலித்தொகை.
மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்
காடும் உடையது அரண்
பெரிய நீர்க் கடலும், பரந்த வெற்று நிலமும்,
ஓங்கிய மலைகளும், அடர்ந்த காடும் இயற்கையாகவே அமைந்த அரண்களாகும் என்கிறார் திருவள்ளுவர்.
சங்க இலக்கியங்கள் பூக்களைப் பற்றி, செடி, கொடிகளைப்
பற்றி, தாவரங்களைப் பற்றிப் பெரிதும் பேசுகின்றன.
முனைவர்
கு.சீனிவாசன் என்பார், சங்க இலக்கியப் பாடல்களில் குறிப்பிடப்படும் 150 தாவரங்களை வகைப்படுத்தி இருக்கிறார்.
தமிழர் பண்பாடு என்பதே தாவரங்களைச் சார்ந்துதான்
இருந்திருக்கிறது.
எந்நில மருங்கின் பூவும் புள்ளும்
அந்நிலம் பொழுதொடு வாரா வாயினும்
வந்த நிலத்தின் பயத்த வாகும்.
நில எல்லைகளைக் கடந்து இயங்கும் பறவை இனம் போலவே,
பூக்களும் தத்தம் நில எல்லை கடந்து, நானில மக்களின் பயன்பாட்டில் இரண்டறக் கலந்து விட்டதை
தெளிவாய் உணர்த்துகிறது தொல்காப்பியம்.
தமிழர்கள் இயற்கையோடு இயைந்து வாழ்ந்தவர்கள்.
இயற்கைப் பொருட்களைத் தங்கள் வாழ்வின் அங்கமாய்க்
கருதி, தங்களின் அன்றாட வாழ்விற்கும், எதிர்காலப் பாதுகாப்பிற்கும், இயற்கையை நம்பி
இருந்தனர்.
மக்களோடு மக்களாக வாழ்ந்த, பழங்காலத் தமிழ்ப்
புலவர்கள், தாவரங்களையும், தாவரங்களின் தோற்றத்தையும், அவற்றின் பயனையும், தங்கள் படைப்புகளில்
குறிப்பிட்டுச் சென்றுள்ளனர்.
---
ஐம்பதிலும் ஆசை வரும் என்று ஒரு பாடல் உண்டு.
இவருக்கு 58 வயதின் நிறைவில் அந்த ஆசை, அந்தக்
காதல் வந்திருக்கிறது.
வேளாண் உதவி இயக்குநராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற
பிறகு, இவருக்குத் தாவரங்கள் மீது, தணியாதக் காதல் பிறந்திருக்கிறது.
ஓய்வு பெற்ற பின், தாவரக் காதலியைத் தேடி, ஓயாமல்
ஓடிக் கொண்டே இருக்கிறார், தேடிக் கொண்டே இருக்கிறார்.
தாவரங்களைக் கண்டு பிடிக்க, கண்டு பிடிக்க, மனதில்
ஒரு எல்லையில்லா மகிழ்ச்சி பொங்க, முன்னிலும் வேகமாய் ஒடிக் கொண்டே இருக்கிறார்.
---
ஞாயிறு முற்றம்
கடந்த
9.4.2023 ஞாயிறு மாலை
நடைபெற்றப்
பொழிவில்
தமிழும் தாவரமும்
எனும்
தலைப்பில்
பணி
நிறைவுபெற்ற வேளாண் உதவி இயக்குநர்
ஒளிப்
படக் காட்சியுடன்,
தாவரங்களுடனானத்
தன் காதலைப் பகிர்ந்து கொண்டார்.
இவர் ஒரு தேர்ந்த பேச்சாளர் அல்ல.
இருப்பினும் இவரது தேடலும், இருபத்து ஐந்திற்கும்
மேற்பட்டத், தாவரங்கள் பற்றியத் தகவல்களை, இவர் தங்கு தடையின்றி அடுக்கிக் கொண்டே சென்ற
விதமும், இவரதுப் பொழிவிற்கு, ஒரு புதுப் பொலிவினைக் கொடுத்தது.
ஏடக
நிறுவுநர், தலைவர்
தலைமையில்
நடைபெற்ற,
இப்பொழிவிற்கு வந்திருந்தோருக்கு
ஏடகம்,
சுவடியியல் மாணவி
நன்றி
கூற
பொழிவு
இனிது நிறைவுற்றது.
முன்னதாக,
நிகழ்விற்கு வந்திருந்தோரை,
ஏடகப்
பொருளாளர்
வரவேற்றார்.
தஞ்சை
மனவளக் கலை மன்ற ஆசிரியர்
விழா
நிகழ்வுகளைத் திறம்படத் தொகுத்து வழங்கினார்.
கடந்த நிலையில்
முதன் முறையாக
ஏடக அரங்கில்
செடிகளும், கொடிகளும்
தாவரங்களும்
மெல்ல எழுந்து- தங்கள் கரங்களால்
ஏடக அன்பர்களை
ஆரத் தழுவின.
அரங்கம் மகிழ்ந்தது, நெகிழ்ந்தது.
ஏடக நிறுவுநர், தலைவர்
முனைவர் மணி.மாறன் அவர்களுக்கு
நன்றி, நன்றி