யாரேனும் ஒருவர்
விட்டுக் கொடுத்துப் போயிருக்கலாம்.
அப்பாவுடன் கூடப்பிறந்தவர்கள்
அப்பாவைப் போலில்லை …
அப்பாவிடம் அவர்கள் உதவிபெற்று
உயிர்வாழ்ந்த தருணங்களை ஒருபோதும்
அப்பா அனுபவித்ததேயில்லை ….
தன்னிழல்கூட அறியாமல்தான் அப்பா
உறவுகளை நேசித்து வாழ்ந்து போனவர்.
உயிரற்றுப்போன அப்பாவின் முன்னால்
அத்தனை பேரும் விட்டுக்கொடுக்க முடியாதவர்களாக
இயங்கிக் கொண்டிருந்தார்கள் ….
முக்கியமான முடிவெடுக்கும் நிலைப்பாடுகளில்
அழக்கூடாதென அப்பா கூறியதை அம்மா
என்றைக்கு மனதிலேந்திக் கொண்டாளோ அதையே
அன்றைக்கும் எந்திக்கொண்டு வெளியே வந்தாள்
அம்மாவை அப்படியானதொரு அமைதியான
சொற்களில் கண்டதில்லை …
எல்லோரும் நிறுத்திக்கொள்ளுங்கள் இத்துடன்
ஒற்றையடிதான் சொன்னாள் …
புயல் ஓய்ந்த பெருங்கடல்போல அத்தனைபேரும்
அமைதியானார்கள்.
அவர்களிடம் பேசிய கண்களால் என்னைப்
பார்த்தாள்.
நான் அப்பாவைப் பார்த்தேன் – அவர் கண்மூடி
ஆமோதிப்பதை போல மார்பின்மேல் விழுந்த
மாலை அசைந்தது.
மாலையை சரிசெய்தேன்.
அப்பா புறப்பட்டுவிட்டார்
அம்மா விட்டுக் கொடுத்துவிட்டாள்
நான் கொள்ளியை எடுத்துக் கொண்டேன்
மூங்கிலின் வழியாக வெப்பமேறிக் கையைத்
தொட்டது …
படிக்கப் படிக்க, கவிஞரின் கையைத் தொட்ட வெப்பம்,
உள்ளத்துள் நுழைந்து, உடலெங்கும் பரவுவது போன்ற ஓர் உணர்ச்சி. கண்கள் கலங்குகின்றன.
மனதை ஏதோ ஒரு பாரம் அழுத்துகிறது.
கண்கொத்திப் பாம்பாய்
கண்கள் அசைக்காது
கண்காணிப்பார் …
படிக்கட்டுகளில்
மேலேற்றுகையில்
இறுக்கிய கைகளை
விடுவிக்கமாட்டார் …
கொஞ்சம் தடுமாறினாலும்
கால்களில் குதிரைகட்டி
ஓடிவருவார்.
எப்போதும் சிரித்த முகம்
அன்பு வழியும் பேச்சு…
வளர்த்து முடித்த அப்பா
இப்போது …
வரிசைதான் ‘
என்கிறார்கள்
பதறிக்கிடக்கிறது.
கிடைக்கும்
சாம்பல்
அப்பாவுடையதுதானா?
படிக்கும்போதே நமது உள்ளமும் பதறித்தான் போகிறது.
பெற்று, வளர்த்து, ஆளாக்கிவிட்ட அப்பா, சாம்லாய்.
பொடிப் பழக்கந்தான்
அப்பாவின் மரணத்திற்கு
முந்தையதான முரணை
உருவாக்கியது…
அப்பாவைச் சுமந்த
ஊர்வலத்தில் உதிர்ந்த
ஏராளமான பூக்களின்
வாசங்களையும் கடந்து
மூக்கிலேறி உலுக்குகிறது
பொடிவாசம்.
அப்பா விட்டு ஆண்டுகளாகி
இறந்த இப்போதும் …
இவரது
அப்பா, பல வருடங்களுக்கு முன்னரே பொடிபோடும் பழக்கத்தை விட்டுவிட்ட போதிலும், தந்தையின்
மறைவின்போது இவரை உலுக்கிய அந்தப் பொடி வாசத்தை, எழுத்துக்களாய் கோர்த்து வார்த்தைகளாய்,
கவிதையாய் இவர் காட்சிப் படுத்தும் விதத்தைப் பார்க்கும்பொழுது, நமது மூக்கிலும் நெடி
ஏறுவதைப் போன்ற ஓர் உணர்வு.
அப்பாவின் இறப்பிற்குப்
பின் பத்திரப்படுத்திய
ஒவ்வொன்றும்
தொலைந்து கொண்டே
இருக்கின்றன.
முதலில் கண்ணாடி
அப்புறம் பொடி டப்பா
இப்போது பேணா.
மிச்சமிருப்பவை சைக்கிள்
சாவியும் சில குறிப்பேடுகளும்.
பொருள்கள் தொலைந்தால் என்ன? அப்பாவின் நினைவுகள்
பத்திரமாய், பாதுகாப்பாய் இருக்கிறதல்லவா?
நாம் வாழும் வரை சுகமான சுமைகளாய் சுமக்க வேண்டியது
நினைவுகளைத்தானே?
எதையும் மிகையாகப்
பேசியதில்லை ஒருபோதும் …
எதற்கும் மிகையாக
வியப்பு காட்டியதில்லை…
அப்படியா
ரொம்ப சந்தோஷம்
என்பார்
கூடவே ஒரு சேமித்த
புன்னகையுடன் …
இதைக் கற்றுக்கொள்ள
முடியாத வாழ்வில்தான்
நிரந்தரமாக அப்பா
வாழ்கிறார்.
இந்நூலின் ஆசிரியர் கூட, எப்போதும் எதையும் மிகையாய்
பேசி நான் பார்த்ததில்லை. தேவைக்கு அதிகமாய் வியப்பு காட்டியும் நான் பார்த்ததில்லை.
புன்னகையோடு பாராட்டுவார், உற்சாகப்படுத்துவார்.
இவரது இந்நூலைப் படிக்கும் பொழுதுதான் தெரிகிறது,
இவரது அப்பா இவருள் இருக்கிறார், வாழ்கிறார் என்பது புரிகிறது.
என் தாத்தா என்
அப்பாவின் அப்பா …
என் மகனின் தாத்தா
என் அப்பா …
என் பேரனின் அப்பா
என் மகன் …
ஒருபோதும் அப்பாக்கள்
சாவதில்லை.
எளிமையான வரிகள், ஆனாலும் வலிமையான அர்த்தங்கள்.
அப்பாவிற்கு ஒருபோதும் மறைவு என்பதில்லை, என்றென்றும் வாழ்ந்து கொண்டேதான் இருக்கிறார்.
வீசியெறியப்பட்ட சுள்ளிகளில்
கூடுகளாய் …
ஒரு
கவிதை நூல்.
166
பக்க கவிதை நூல்.
ஒவ்வொரு கவிதையுமே படிப்போரின் உள்ளத்துள் நுழைந்து
தங்கும்.
இந்நூலினைப் படிக்கப் படிக்க, ஆங்காங்கே விரவிக்
கிடந்த, அப்பா கவிதைகளை ஒன்றிணைத்தால் என்ன என்று தோன்றியது.
அப்பாவைப்
பற்றி இன்னும் எழுதியிருக்கிறார்.
நான் அவற்றுள் சிலவற்றை மட்டுமே தங்களோடு பகிர்ந்து
கொண்டுள்ளேன்.
குடும்பம், பிள்ளைகள், உறவுகள், எதிர்காலம் என
எல்லாவற்றையும், இந்நூலில் இறக்கி வைத்திருக்கிறார்.
அப்பாவை மட்டும் சற்று கூடுதலாய்.
கவிதை நான் எழுதுகிறேனா அல்லது கவிதை என்னை எழுதுகிறதா
என்றால், கவிதைதான் என்னை எழுதுகிறது, எழுப்புகிறது, உறங்கவிடாமல் எழுத வைக்கிறது.
எழுத்து எழுத்தாக எழுத வைக்காமல், சொல் சொல்லாக பயில வைக்கிறது என்கிறார் இவர்.
இவரை எழுதவைத்தக் கவிதைகள் என்னைத் தூங்கவிடாமல்
செய்கிறன.
அப்பாவைப் பற்றியப் பல கவிதைகளை இந்நூலில் விதைத்திருந்தாலும்,
எழுதவும், படிக்கவும் தெரியாத, தன் தாய்க்குத்தான், இவர் தன் கவிதை நூலைப் படைத்திருக்கிறார்.
அம்மா
எதுவும் படிக்கவில்லை.
எல்லாம்
சொல்லிக் கொடுத்தாள்.
ஒரு வாழைக்காயில்
குடும்பம் நடத்தியவள்.
நாங்கள்
ஒரு சிம்னி விளக்கில்
படித்தோம்.
இயற்கையாலும், கால முதிர்வாலும் இறைந்து கிடக்கின்ற
சுள்ளிகளைத் தன் அலகில் பற்றிப் பறந்து கூடமைக்கும் சிறு பறவைபோல, இவரும் தன் மன வெளியில்,
சிதறிக் கிடந்த சொற்களால் ஒரு கூடமைத்திருக்கிறார்.
வீசியெறியப்பட்ட சுள்ளிகளில்
கூடுகளாய் …
சிறுகதைகள், நாவல்கள், கவிதைகள் என எழுபது நூல்களின்
ஆசிரியர்.
மேனிலைப் பள்ளி, கல்லூரி, பல்கலைக் கழகம் என
அனைத்திலும் இவரது எழுத்துக்கள் பாடங்களாய் பயிற்றுவிக்கப் படுகின்றன.
வாழ்வென்பதே வாசிப்பதற்கும், எழுதுவதற்கும்தான்
என்னும் உன்னதக் குறிக்கோளுடன் வாழ்ந்து வருபவர்.
எழுத்தாளர்
கவிஞர்
மனிதநேயர்
அவர்களின்
படித்துப்
பாருங்கள்.
மெய்மறந்து
போவீர்கள்.
வீசியெறியப்பட்ட சுள்ளிகளில் கூடுகளாய்
…
ஹரணி.
கே.ஜி.பப்ளிகேஷன்ஸ்,
31, பூக்குளம் புது நகர்.
கரந்தை, தஞ்சாவூர்-2
விலை ரூ.200
அலைபேசி 94423 98953 (ஹரணி)