சொற்களை அழைத்து
மொழி
சொல்லி வைத்தது,
மனிதர்களிடம் கவனமாக
இருங்கள்.
சொற்களும் கவனமாகத்தான் இருந்தன. ஆனால்,
நூறு நூறு
பூக்களைத் திறந்த
சூரியன்,
ஒரு குழந்தை
கண்களைத் திறந்ததும்
சொக்கிப் போனான்.
சூரியனைப் போலவே, இவரது கவிதையில் தவழ்ந்த சொற்களைக்
கண்டு மொழி மயங்கிப் போனது.
அகராதிக்குள்
சொற்கள் பேசிக்கொண்டன.
நாம்
இங்கேயே இருப்பதில்
என்ன அர்த்தம்?
பேசிப் பேசி ஒரு முடிவிற்கு வந்த சொற்கள், அகராதியை
விட்டு வெளியே வந்தன. இவரது கவிதைகளில் கலந்தன.
வள்ளுவர் எழுத்தாணி
கிடைக்குமா எனக்கு?
காலக் குளத்துக்குள்
கண்மூடி குதித்துப் பார்த்தால்
கையில் அகப்படுமா?
அலைகளில் எல்லாம்
குறள் மணக்க,
அது, தமிழ் அடையாளமாய்
இனிக்க,
குளத்தின் கரையோரம்
வள்ளுவர் எழுத்தாணிக்காக நான் …
வள்ளுவரின் எழுத்தாணிக்காகக் காத்திருந்த இவருக்கு,
எழுத்தாணி மட்டுமல்ல, இவர் இழந்த தாயும் மீண்டும் கிடைத்தார், கரந்தையில்.
ஏழு வயதில் நான்
இழந்த தாயைப்
பதினெட்டு வயதில்
கரந்தையில் பெற்றேன்.
கரந்தை மண்
கந்தக மண்
தமிழுணர்வு வெப்பமாகத்
தகிக்கின்ற மண்.
தமிழவேள் உமாமகேசுவரனார்
தமிழ் வேள்வி நடத்திய பூமி அது.
தமிழ் வேள்வியில் இரண்டறக் கலந்தார். பாவேந்தரை முதன் முதலாய் சந்தித்தார்.
ஒரு குவளைத் தண்ணீரைப் போலவும், ஒரு குவளைத்
தேநீரைப் போலவும் அவர் அருகிலேயே இருந்தார். ஒன்றல்ல இரண்டல்ல, முழுதாய் பத்து ஆண்டுகள்,
அவர் பிடிக்கும் சுருட்டின் புகையாய் வெளியே வந்திருக்கிறார்.
தமிழின் குருதியிலிருந்து
பிறந்தவன் நான்.
என்னைப் பிழிந்தால் தமிழாய் வழிவேன்.
தமிழாய் வழிந்து, தமிழுக்காகவே வாழ்ந்துவரும்
இவர், தமிழுக்கு, தமிழனுக்கு ஓர் இழுக்கு என்றால், எரிமலையாய் குமுறுவார். இவரது சொற்கள்
பெருநெருப்பாய் வெடித்துச் சிதறும்.
உலகனாய் இருக்கும் நான்
நிச்சயமாய் இந்தியன் …
அதைவிடச்
சத்தியமாய்
தமிழன்.
தமிழனாக இருப்பதற்குத்
தடை போட்டால்,
இந்தியனாகத்
தொடர்வது பற்றிச்
சிந்திக்க வேண்டுவரும்.
என
உரத்து முழங்குபவர். எழுதுகோல் இவரது கை விரல்களின் நீட்சியாகவே வளர்ந்து, எழுதிக்
கொண்டே இருக்கின்றன.
கவிதைகள் மலை மலையாய் குவிந்து, வளர்ந்து, உயர்ந்து
கொண்டே இருக்கின்றன.
1968
இல் கொடி காத்த குமரனில் தொடங்கி, களமாடிய
தோள்களும் கனவாகா முத்தங்களும் வரை 82
கவிதை நூல்கள், பாப்லோ நெருதா, ஜப்பானிய
ஹைக்கூ, இறக்குமதி என மூன்று மொழிபெயர்ப்பு நூல்கள் தமிழில் இறக்குமதியாகி இருக்கின்றன.
இவை மட்டுமா, 1965 இல், நெஞ்சின் நிழலில் தொடங்கி, பாரதியும் பாரதிதாசனும் வரை 28
உரைநடை நூல்கள் என எழுதி எழுதிக் குவித்திருக்கிறார்.
இன்றும் எழுதிக் கொண்டே இருக்கிறார்.
நாளையும் எழுதுவார்.
ஏனெனில் எழுத்தோடுதான் எப்போதும் இவர் சகவாசம்.
எழுத்தே இவர் சுவாசம்.
பாரதி
விருது, பாரதிதாசன் விருது, பெரியார் விருது, கலைஞர் விருது, கவிக்கோ விருது தொடங்கி,
மகாகவி விருது வரை 37 விருதுகள் இதுநாள்
வரை இவரை நாடி வந்து, பெருமையடைந்திருக்கின்றன.
தமிழில் அதிக அளவில் கவிதைத் தொகுதிகளை வெளியிட்ட
முதல் கவிஞர் இவர்தான்.
மகாகவி
பாரதிக்குப் பிறகு தமிழ்க் கவிதை அவ்வளவாக வளர்ந்து விடவில்லை என்றுதான், நான் கருதிக்
கொண்டிருந்தேன், இவரைப் பார்த்த பிறகு, என் கருத்தை மாற்றிக் கொண்டேன் என வியந்து
எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களால் போற்றப்
பெற்றவர் இவர்.
முப்பாட்டும் சுவைப் பாட்டே வாழ்க தோழர்
முன்தோன்றும் காலமிவர் காலமாகும்
என கவியரசு
கண்ணதாசன் அவர்களால் பாராட்டப் பெற்றவர் இவர். இவற்றிற்கெல்லாம் முத்தாய்ப்பாக,
நாட்டின் நிலைகாட்டி
நல்லத் தமிழ் திறன்காட்டி
நீட்டோலை வாசிக்கும்
நீடுபுகழ் இளங்கவிஞர்
நல்லிளைஞர் உற்சாக
மிகுதியுடன் இன்று கவிஎழுதி
இணையின்றிப் பாடுகிறார்.
மன்றில் மக்களெல்லாம்
சுவைத்து மகிழ்கின்றனர்.
என்றன் இளவல்
ஈரோடு தமிழன்பன்
நன்று வாழியவே நாட்டில்
என
முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களால்
வாழ்த்தறப் பெற்றவர்.
ஈரோடு தமிழன்பன்
உலகமே
இவரது கவி ஆற்றலைக் கண்டு மயங்கி,
இவர்
சாதாரணக் கவிஞரல்ல,
மகாகவி, மகாகவி
என
முழங்கியபோது
அவர்கள் வரிசையில்
ஓரிடம் கிடைக்குமெனில்
எனக்கென்ன பெருமை?
எனை வளர்த்த
மூத்த கவிஞர்களான என்
முன்னோடிகளுக்கும்,
முத்தமிழுக்கும் மட்டும்
பெருமை.
அவன் எழுத்துக்கும்
அதைப் படிப்பவர்க்கும்
அது பிறந்த
அன்னைத் தமிழுக்கும் பெருமை
என
தன்னடக்கத்தோடு, அதனையும் ஒரு கவிதையாய் வடித்தார்.
மரபு, புதுக் கவிதை, படிமம், குறியீடு, அழகியல்,
சொல்லாக்க நுணுக்க உத்திகள், பல்வகைப்பாடு பொருள்கள் மீதான படைப்பாளுமை, ஜென் தத்துவம்,
சித்தர் சித்தாந்தம் நிரம்பிய படைப்புகளோடு பயணிக்கும்
மகாகவி ஈரோடு தமிழன்பன்
அவர்கள்
28.9.2023 வியாழனன்று
அகவை
90 ஐ நிறைவு செய்கிறார்.
இன்னுமொரு நூறாண்டு வாழவும்,
மேலும் ஓராயிரம் கவி நூல்களைப்
படைக்கவும்
வாழ்த்துவோம், வணங்குவோம்.