06 டிசம்பர் 2023

பையுள் சிறுமை

 


     நோய் என்பது உடலைப் பற்றியது அல்ல. மனம் சார்ந்தது என்பார் தொல்காப்பியர். எனவேதான்,

பையுள் சிறுமையும் நோயின் பொருள்

என்பார். உடலுக்கும், உள்ளத்திற்கும் துன்பம் தரும் நிகழ்வே நோய் என்பார்.

     உளவியல் சார்ந்த நோயினால், உடலியல் சார்ந்த நோய் ஏற்படுகிறது.

     எதனால் நோய் வருகிறது?

எதனால் நோயின் தாக்கம் வீரியமாக இருக்கிறது? என்பதைத் தெரிந்து கொண்டால் மட்டுமே, நூறு சதவிகிதம் அந்த நோயில் இருந்து விடுபட முடியும்.

     மனம் சார்ந்த நோய்.

     மனம் சார்ந்த நோயின் தொடக்கம் எதுவென்றால், யோசித்தல்.

     யோசித்தல்.

     யோசித்தல் என்றால் தொடர்ந்து யோசித்துக் கொண்டே இருத்தல்.

     ஒரே விசயத்தை, ஒரு முறை அல்ல, இருமுறை அல்ல, ஓராயிரம் முறை, பத்தாயிரம் முறை, ஒரு இலட்சம் முறை என யோசித்தல், யோசித்தல், யோசித்துக் கொண்டே இருத்தல்.

     இப்படி சிந்தனை நீண்டு கொண்டே போகப் போக, பாதிக்கப்படுவது என்னவோ, நம் உடலின் மண்ணீரல்தான்.

     மண்ணீரல் பாதிப்பால், இரத்த அணுக்களின் உற்பத்தி குறையும்.

     உடலில் வியாதி என்றால் மருந்து கொடுக்கலாம்.

     உள்ளத்திற்கு?

     நோயாளியோடு, பேசிப் பேசித்தான் கண்டுபிடிக்க வேண்டும்.

     பின்னர், சரி செய்ய வேண்டும்.

      எல்லோருக்கும் வரக்கூடிய பிரச்சனை ஒன்றுண்டு.

     பயம்.

     நின்றால் பயம்.

     நடந்தால் பயம்.

     பயம்.

     பயம்.

     இந்த அச்ச உணர்வு, சிறுநீரகத்தின் செயல் திறனை பாதிக்கும், குறைக்கும்.

     சிறுநீரகத்தின் செயல்திறன் குறைந்தால், உடலின் ஒட்டுமொத்த இயக்கங்களும் குறையும்.

     இதுபோலத்தான் கோபம்.

     கோபம்.

      எதற்கெடுத்தாலும் கோபம்.

     கோபம்.

     கோபம், நம் கல்லீரரைப் பாதிக்கும்.

     மண்ணீரலும், கல்லீரலும் தன் பணியினைக் குறைக்கும் பொழுது, மஞ்சள் காமாலை மெல்ல வெளியே வரும்.

      மஞ்சள்காமாலை வந்துவிட்டதே என யோசித்தால், உடலியல் ஹார்மோன்களின் செயல்திறன் மங்கும்.

     இதனால் சாப்பாடு செரிமானம் ஆகாது.

     உணவின் சத்து உறியப்பட மாட்டாது.

     உறியப்பட்டாலும, செல்களுக்குப் போய் சேராது.

 

     பயம்.

     கோபம்.

      முற்றிலுமாகத் தவிர்க்கப்பட வேண்டும்.

     கோபப்படுவதற்கு முன், கோபத்திற்கானக் காரணத்தைக் கண்டுபிடிக்க வேண்டும்.

     பின் அதிலிருந்து விடுபட வேண்டும்.

     தட்பவெட்ப நிலை மாறும் பொழுது, உடலில் ஏற்படக் கூடிய மாற்றங்களாலும் பிரச்சனைகள் தோன்றும்.

     மழை மற்றும் குளிர் காலங்களில், நாம் அருந்தும் தண்ணீரின் அளவு குறைகிறது.

     அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டி இருப்பதால், தண்ணீரைக் குறைப்போம்.

     ரொம்ப குளிருகிறதே என, அறையின் சன்னல்களை மூடிவிட்டு, போர்வைக்குள் முடங்குவோம்.

     இவ்விரண்டும்தான் நோய்க்கான முதல் காரணங்களாகும்.

     தண்ணீர் குறைவதால், உடல் வெப்பநிலை அதிகரிக்கும்.

     மூடிய சன்னல்கள், போர்வை, நம் உடலுக்குத் தேவையான பிராண வாயுவைக் குறைக்கும்.

     எனவே தண்ணீரைக் குறைக்கக் கூடாது.

     காற்றோட்டமுள்ள இடத்தில்தான் உறங்க வேண்டும்.

     காய்ச்சல் வந்தால், பட்டினியும் ஒரு மருந்தாகும்.

     மனதை சமப்படுத்தி, சிந்தனையை முறைப்படுத்தினாலே போதும், ஆரோக்கியமான வாழ்வு வாழலாம்.

     எஸ்கிமோக்கள்.

     ஜப்பானின் ஹைல்ஸ் எனும் பழங்குடி மக்கள்.

     எஸோ பழங்குடி மக்கள்.

     இம்மூன்று சமூகத்தினரின் வாழ்க்கை முறைதான், உலகத்திலேயே மிகவும் வலிமையானது, மிகவும் ஆரோக்கியமானது என்று கண்டறிந்து உள்ளார்கள்.

     பொங்கல், கூழ், பழங்கஞ்சிச் சோறு, அடை இவைதான் நம் பழந்தமிழர் உணவாக இருந்தது.

     இதனால் வயிற்றுப் பகுதி செல்களின் செயல்திறன் பன்மடங்கு அதிகரித்தது.

     நோயில்லா வாழ்வு வாழ்ந்தார்கள்.

     ஆனால் இன்று, இட்லி, தோசை, பூரி, சப்பாத்தி, துரித உணவுகள் என உணவு வகைகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்வதால், குடல் சார்ந்த நோய்களும் பல்கிப் பெருகிக்கொண்டே செல்கின்றன.

     ஆரோக்கியமான உணவு.

     மனதை ஒருமுகப் படுத்துதல்.

     வாழ்வை மகிழ்வாக, நிறைவாக அமைத்துக் கொள்ளுதல்.

     மனம், உடல் ஒருங்கிணைந்த் தனி மனித ஒழுக்கம் முதலானவற்றைப் பேணுதல்.

     நோயற்ற வாழ்விற்கு வழிவகுக்கும்.

---

ஏடகம்

ஞாயிறு முற்றம்

26.11.2023 ஞாயிற்றுக் கிழமை மாலை

பணிநிறைவு பெற்றத் தலைமையாசிரியர்


திரு சா.இளஞ்செழியன் அவர்கள்

தலைமையில்,

நடைபெற்ற ஏடகப் பொழிவில்

தஞ்சாவூர், இயற்கை மற்றும் யோகா மருத்துவர்


மருத்துவர் சி.செ.அரவிந்தர் அவர்கள்

தமிழர் கண்ட நோயும் தீர்வும்

எனும் தலைப்பில்

இரத்தினச் சுருக்கமாய் உரையாற்றினார்.

சித்த மருத்துவர் மற்றும் சுவடியியல் மாணவர்


திரு சி.சசிவேல் அவர்கள்

நன்றி கூற பொழிவு இனிது நிறைவுற்றது.

முன்னதாக, விழாவிற்கு வந்திருந்தோரை,

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில்

பணியாற்றி ஓய்வு பெற்ற


திரு கோவி.சண்முகம் அவர்கள்

வரவேற்றார்.

தஞ்சாவூர், பான்செக்கர்ஸ் மகளிர் கல்லூரி

முதுகலைத் தமிழ் இரண்டாம் ஆண்டு மாணவி


திருமதி ச.தமிழரசி அவர்கள்

நிகழ்வுகளைத் தொகுத்து வழங்கினார்.

சுவடி வகுப்புகளாலும்

தொடர்ப் பொழிவுகளாலும்

அயரா தமிழ்ப் பணியாற்றி

ஏடகத்தை

ஏழாம் ஆண்டிற்கு

அழைத்துச்

சென்றிருக்கும்

ஏடக நிறுவுநர், தலைவர்


முனைவர் மணி.மாறன் அவர்களைப்

பாராட்டுவோம், வாழ்த்துவோம்.