23 ஆகஸ்ட் 2024

ஆங்கிலத்தில் ஓர் அற்புத நூல்

  


     சிந்தனை.

     ஒரே சிந்தனை.

     சற்றேரக்குறைய முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே சிந்தனை.

இந்த சிந்தனையை மையப்படுத்தியத் தேடல்.

     தேடல் என்றால் சாதாரணத் தேடல் அல்ல.

     பேருந்து.

     மிதி வண்டி.

     இரண்டும் இல்லையேல் நடை.

     தன் குடும்பத்திற்காகத் தேடவில்லை.

     தான் சார்ந்த சமூகத்திற்காகத் தேடவில்லை.

     தான் சார்ந்த இனத்திற்காகத் தேடவில்லை.

     சுத்தமான, சுயநலமற்றத் தேடல்.

     துளியும் தன்னலமற்றத் தேடல்.

     புத்தரைத் தேடுகிறார்.

     புத்தர் சிலைகளைத் தேடுகிறார்.

     நேற்று தேடினார்.

     இன்று தேடுகிறார்.

     நாளையும் தேடுவார்.

     தனது ஆய்வியல் நிறைஞர் ஆய்விற்காகத் தேடினார்.

     அடுத்து, தனது முனைவர் பட்ட ஆய்விற்காகத் தேடினார்.

     ஆய்வியல் நிறைஞர் பட்டம் பெற்றுவிட்டார்.

     முனைவர் பட்டமும் பெற்றுவிட்டார்.

     வயது முதிர்வால், பணியில் இருந்து ஓய்வும் பெற்றுவிட்டார்.

     இருப்பினும் ஓயாமல் தேடிக்கொண்டே இருக்கிறார்.

     19 புத்தர் சிலைகளைக் கண்டுபிடித்திருக்கிறார்.

     புத்தரைத் தேடிப்போய் 13 சமண தீர்த்தங்கரர் சிலைகளையும் கண்டு பிடித்திருக்கிறார்.

     அய்யம்பேட்டையில், ஒரு நாகை புத்தர் செப்புத் திருமேனினையும் கண்டுபிடித்திருக்கிறார்.

     தனதுதேடல்களையும், தேடலின் பயனாய் கண்டுபிடித்த சிலைகளையும், நாளிதழ்கள் வழியும், வலைப் பூ வழியாகவும் ஆவணப் படுத்தி வந்தவர், தனது வாழ்நாள் உழைப்பை, அச்சிட்ட தாள்களில் எழுத்தாக்கி, ஒவ்வொரு பக்கத்திலும், புத்தர் படங்களை நம் கண்களுக்கு விருந்தாக்கி, ஒரு நூலாக்கி மகிழ்ந்திருக்கிறார்.


சோழ நாட்டில் பௌத்தம்

     படிமம், புது எழுத்து வெளியீடாக வெளிவந்து, தமிழ்கூறு நல்லுலகைத் திரும்பிப் பார்க்க வைத்த நூலை, தனது அயராத உழைப்பால், ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து



BUDDHISM IN CHOLA NADU

எனும் பெயரில் வெளியிட்டு சாதனை படைத்திருக்கிறார்.

அயல்நாட்டுத் தரத்தில், ஒரு தமிழ்நாட்டு நூல்

      வலது பக்கம் படம், இடது பக்கம் படம் பற்றியச் செய்திகள்.

      வலது பக்கத்தில் விரல்களால் தடவினால், புத்தத் திருமேனியைத் தொடுவது போன்ற ஓர் உணர்வு.

     அவ்வளவு துல்லியமானப் படம்.

     தரமான தாள்.

    நேர்த்தியான அச்சு.


முனைவர் பா.ஜம்புலிங்கனாரின்

உழைப்பை, தேடலை

உலகிற்கு உணர்த்த

இந்த ஒரு நூல் போதும்.

தமிழ்கூறு நல்லுலகையும் தாண்டி, தமிழறியா நாடுகளிலும், இனி

முனைவர் பா.ஜம்புலிங்கனாரின்

உழைப்பும், பெயரும்

பேசப்படும் என்பது உறுதி.

வாழ்த்துகள் ஐயா.

 

BUDDHISM IN CHOLA NADU,

Padimam,

An Imprint of Pudhu Ezuthu,

2/203, Anna Nagar,

Kaveripattinam – 635 112/

Krishnagiri District/

98426 47101

63742 30985

ரூ.1500