17 மார்ச் 2026

ஓர் எலிய விஷயம்

 


     கீழவாசல் மார்க்கெட் அருகில், தேங்காய்க் கடை இருப்பதைப் பார்த்துவிட்டு அவரிடம், முற்றல் இல்லாத நல்ல தேங்காயா ரெண்டு குடுங்க. எனக்குத் தேங்காய் வாங்கத் தெரியாது ஆத்தா என்றேன்.

     அந்தப் பெண்மணி இரண்டு காய்களை எடுத்துக் கொடுத்தார்.

     எவ்வளவு ஆத்தா காசு கொடுக்கனும்?

     ரெண்டு காய்க்கும் நாற்பது ரூபா கொடுப்பா.

     நாற்பது போதுமா ஆத்தா? காய் கொஞ்சம் பெரிசா இருக்கே.

     அவர் கண்கள் கலங்கின.

     குரல் தடுமாறியது.

     இன்னொரு சிறிய காயையும் எடுத்துக் கொடுத்தார்.

     எதுக்கு ஆத்தா இது? இதுக்கு எவ்ளோ தரணும்?

     காசு கம்மியா இருக்கே, கூட தரணுமான்னு இதுவரை யாருமே கேட்டதில்லை. நீ கேட்ட பாரு, ஒனக்கு ஒன்று சும்மாதான் தாரேன். ஒன்னும் சொல்லாம எடுத்துக்கோ.

---

     பெரிய பெரிய வணிக வளாகங்களுக்குச் சென்று, பொருட்களின் விலையைக் கூடப் பார்ப்பாமல், தள்ளு வண்டியில் அள்ளிப் போட்டுக் கொண்டு சென்று, பில் போடச் செய்து, பணத்தைக் கொடுத்து, மீதிப் பணம் சரியாக இருக்கிறதா என்பதைக் கூட எண்ணிப் பார்க்காமல், பைக்குள் வைத்துச் செல்லும் நபர்கள் பலரைப் பார்த்திருக்கிறேன்.

     மீதிப் பணத்தை பலர் முன்னிலையில், எண்ணிப் பார்ப்பதையே தங்களுக்கு இழுக்காக நினைக்கும் இவர்கள், தெருவோர வியாபாரிகளிடம், ஐந்துக்கும் பத்துக்கும் பேரம் பேசுவதையும் பார்த்திருக்கிறேன்.

     என்ன மனிதர்கள் இவர்கள் என்று வியப்பேன்.

     ஆனால் இவரோ, ஒரு  எளிய வியாபாரியின் மனதைக் காட்சிப் படுத்தி நம்மை நெகிழ வைக்கிறார்.

---

     எனக்கு உயிர் போய் வருவதுபோல் இருதயத் துடிப்பு குறையாமல் இருந்தது. இறந்து போன அப்பா, அப்பாயி, அம்மாவைப் பெற்ற தாத்தா ஞாபகங்கள் மனதில் கிழர்ந்தெழுந்து பயமுறுத்தின.

     உட்கார முடியவில்லை.

     படுக்கவும் முடியவில்லை.

     எனது பய அளவு வான் அளவு உயர்ந்தது.

     மனைவி வெந்நீர் கொண்டு வந்து கொடுத்தார்.

     ஒவ்வொரு வாயாக, சிறிது சிறிதாக அருந்தினேன்.

     ஒரு டம்ளர் முழுவதும் குடிக்க ஐந்து நிமிடங்கள் ஆனது.

     சிறிது நேரத்தில் இரண்டு முறை பெரிதாக ஏப்பம் வந்தது.

     அடுத்த ஐந்து நிமிடங்களில் இருதயத் துடிப்பு குறைந்து இயல்பானது.

     படபடப்பும் நின்றது.

     இலேசாக தூக்கம் வருவது போல் இருந்தது.

     உங்களுக்கு ஒன்னும் ஆவாதுங்க. வாயுக் கோளாறுதான்., சரியாயிடும் என மனைவி சொல்லிக் கொண்டிருக்கும்போரே தூங்கிவிட்டேன்.

---

     படிக்கும்போதே நமக்கும், படபடப்பு வந்து தொற்றிக் கொள்கிறது.

     நமது அறியாமையால், ஒரு சிறு உடலியற் செயல்பாடுகளைக்கூட, நாம் எப்படி பெரிதுபடுத்தி பதட்டப்படுகிறோம் என்பதை கண்முன் கொண்டுவந்து காட்டிவிட்டார் ஆசிரியர்.

---

     ஹலோ, சொல்லு, ஏன்டி லூசா நீ? இப்படி டார்ச்சர் பண்ற. வேணான்னா விட்டுடு. என்னால முடியலடி. எத பேசுனாலும் குத்தம் கண்டுபிடிச்சு அதயே சொல்றது. மூணு மாசம் முன்னாடி, கம்பெனி ஹெச்.ஆர்., பரிட்சை முடிஞ்சி, பதினேழு நாள் லீவுல, வீட்டுக்கே போகாமல், ஒங்கூடதானடி இருந்தேன். அப்ப ஒன்னும் சொல்லல. இப்ப இவ்ளோ சொல்ற. என்ன விடு. நிம்மதியா போயிடும்.

போய்டுவியாடா நீ. போய்தான் பாறேன். எனக்கு வேற ஆளு கெடைக்காம போவாது, ஒனக்கு என்ன விட்டா யாரும் கெடக்க மாட்டா பாத்துக்க.

---

     கடந்த மாதம் சென்னை சென்றிருந்தபோது, ஒரு வாடகை மகிழ்வுந்தில், நானும் என் மனைவியும் பயணித்தபோது, அந்த மகிழ்வுந்தின் ஓட்டுநர், ஒரு இளைஞர் 25 வயதுதான் இருக்கும், அந்த ஓட்டுநர் அலைபேசியில் பேசிய அதே பேச்சு, இந்த நூலில்.

     மகிழ்வுந்தில் கணவனும் மனைவியுமாய் இருவர் பயணிக்கிறார்களே என்று கூட பார்க்காமல், அந்த ஓட்டுநர் பேசிய பேச்சுக்கள், எங்களை வெட்கித் தலைகுனிய வைத்தன.

     இக்கால இளைஞர்கள், சிலரின் ஒழுக்கமற்ற பேச்சுகள், நடத்தைகள் வேதனையைத்தான் வாரி வாரி வழங்குகின்றன.

     அதனையே ஆசிரியரும் தன் நூலில் காட்சிப்படுத்தி இருக்கிறார்.

---

      நான் ஒருவன் மட்டும் அங்கே தங்கியதால், எவ்வித வில்லங்கமும், உயிரபாயமும் இன்றி வாழ்ந்து வந்தேன்.

     துணையாக வருவதாகச் சொன்ன நண்பிகளையும், நண்பர்களையும் வரவேண்டம் எனக் கட்டாயமாகச் சொல்லி வைத்திருந்த்தோடு, அதைக் கடுமையாக்க் கடைபிடித்தேன்.

     முடிந்த அளவு, ஒவ்வொரு தடவையும் பாதையை மாற்றி மாற்றி, ஒரே பாதையில் வீட்டுக்கு வருவதில்லை.

     மரக்கடைக்கு அருகில் இருக்கும், டீ கடையுடன் கூடிய உணவகத்தில், இரவு மிஞ்சிப் போனதையும், விற்காத கெட்டுப்போன வடைகளையும், குப்பையில் போடுவதையும், பல வீடுகளில் கிடைக்கும் எனக்கான உணவுகளையும் சாப்பிட்டு, குறைந்த பட்ச எல்லைக்குள்ளாக, எனது நடவடிக்கைகளைச் சுருக்கி காலத்தை ஓட்டி வந்தேன்.  

---

     ஒரு சிறுகதையின், ஒரு பாதியை ஒரு எலியின் பார்வையிலும், மறு பாதியை அவ்வீட்டில் வசிக்கும் மனிதர்கள் பார்வையிலுமாய் சுவைபட நகர்த்திச் செல்கிறார்.

     இச்சிறுகதையின் பெயரே, இந்நூலின் தலைப்பாகவும் உயர்ந்து நிற்கிறது.

ஓர் எலிய விஷயம்

---

     இஸ்மாயில் என்ற இஸ்லாமியர் எனது குருநாதராகப் பரிச்சயமானதே வித்தியாசமான முறையில் ரீவைண்டிங் செய்து கொண்டிருந்தபோதுதான்.

     வைறும் கையினாலும், கால் கட்டை விரலைக் கொண்டும் சுற்றி., எவ்வளவு பெரிய மோட்டார் என்றாலும் காயிலைச் சுற்றியதைப் பார்த்தவுடன், அவரிடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தேன்.

---

     வாடிக்கையாளர்களில் பலதரப்பட்ட மனிதர்கள் வருவார்கள். நாம் எவரையும் முன்முடிவுகள் செய்யக்கூடாது என்பது என் அனுபவம்.

     மனம் கேட்குமா? பேசும்போதே எடை போடத் துவங்கிவிடும். கூலி சரியாகத் தருவாரா? கேள்விகள் நிறையக் கேட்பாரா?

---

     இந்நூலில் இடம்பெற்றுள்ள பல கதைகளில் வலம் வரும் மனிதர்கள், உடல் உழைப்புத் தொழிலாளர்கள்.

     மோட்டார் ரீவைண்டிங் செய்பவர், குழாய் பகுதி நீக்குபவர், மின் சாதனப் பணியாளர் என மெக்கானிக் வகை கதைகளாகவே இருக்கின்றன.

     காரணம், இந்நூலின் ஆசிரியரே, ஒரு மோட்டார் ரீவைண்டின் கடை வைத்துத் தொழில் செய்து வருபவர்தான்.

     தன் அனுபவங்களை எல்லாம், எழுத்தாக்கி, எண்ணெய் போட்டுக் கழுவி, காயில் சுற்றி ரீவைண்டிங் செய்த இயந்திரங்களைப்போல, தங்கு தடையின்றி ஓடவிட்டிருக்கிறார்.

     ஆனாலும், ஒருசில கதைகளின் போக்கையும், முடிவினையும் ஜீரணிக்கத்தான் முடியவில்லை.

     கதையாக இருந்தாலும், இப்படியெல்லாம் நடக்குமா? என்ற கேள்வி உள்ளத்தில் எழுந்போதே, நடந்து கொண்டுதானே இருக்கிறது என்ற பதிலையும், நம் உள்ளமே நமக்குச் சொல்லத்தான் செய்கிறது.

     இருப்பினும், இருப்பினும், இன்றைய உலகை எண்ணி மனதுள் ஒரு வேதனை வந்து அமர்வதைத் தடுக்கமுடியவில்லை.

     சிறுவயதில் காமிக்ஸ் கதைகளில் தொடங்கிய இவரது வாசிப்பு, சுஜாதா, சாண்டில்யன், எஸ்.ராமகிருஷ்ணன் என விரிந்து, டால்ஸ்டாய், தஸ்தயெவ்ஸ்கி, ஆன்டன் செகாய் என வளர்ந்திருக்கிறது.

     ஒவ்வொரு நாளும் ஓயாமல், இயந்திரங்களுடன் இயந்திரத்தனமான ஒரு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பவர், புத்தகங்களைப் படிக்கிறார், மனிதர்களையும் படிக்கிறார் என்பதே வியப்பிற்கு உரியதாகும்.

     படிப்பதையும் தாண்டி, இன்னும் ஒரு படி மேலே சென்று, எழுதுகிறார் என்றால், அவரைப் பாராட்டியே ஆக வேண்டும்.

     இவரை ஓவியமாய் வரைய வேண்டும் என்றால், எளிமையாகக் காட்சிப்படுத்தலாம்.

     ஒரு கையில் ஸ்பேனர், மறுகையில் எழுதுகோலும் புத்தகமும்.

இவர்தான்,

மக்கள் சிந்தனைப் பேரவையின்,

தஞ்சாவூர் நகர வாசகர் வட்டப் பொறுப்பாளர்


கலித்தேவன்

கலித்தேவன் வீ.கலியபெருமாள்

இவரது சிறுகதைத் தொகுப்பு


ஓர் எலிய விஷயம்

வாழ்த்துகள் நண்பரே.

 

ஓர் எலிய விஷயம்.

வாசகசாலை பதிப்பகம்,

99 42 63 38 33, 97 90 44 39 79

விலை ரூ.220