----- கடந்த வாரம் ------
நம் பல்கலைக் கழகம்
தமிழ் பல்கலைக் கழகம் அன்று,
தமிழ் (பேசும்)
மாவட்டங்களுக்கு உரிய பல்கலைக் கழகம் அவ்வளவுதான்
---------------------------
இந்த இரங்கத்தக்க நிலை
இன்று, அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் மட்டுமன்று, தமிழகத்தின் பல்கலைக் கழகங்கள்
அனைத்திலும், நீடிக்கின்றது.
மருத்துவம்,
பொறியியல், வேளாண்மை முதலிய அறிவியல் கலைகளைத் தமிழில் கற்பிக்க முறையான முழுமையான
முயற்சிகள் மேற்கொள்ளப் படவில்லை. பட்டப் படிப்பு அளவில் தமிழில் கற்பிக்கபபடும்
இயற்பியல், வேதியியல், விலங்கியல் முதலிய அறிவியல் பாடங்கள் கூட, பட்ட
மேற்படிப்பில், தமிழில் கற்பிக்கப் படுவதில்லை. அதனால்தான் கரந்தைத் தமிழ்ச்
சங்கமானது, தமிழ்ப் பல்கலைக் கழகம் தொடங்கப்பெற வேண்டும் என்று அரசுக்கு
வேண்டுகோள் விடுத்தும், கட்டுரைகள் மூலம் வலியுறுத்தியும் வந்தது.
கரந்தைத் தமிழ்ச்
சங்கத்தின் கனவானது, அறுபத்து மூன்று ஆண்டுகள் கடந்த பின்னர், 1981 ஆம் ஆண்டில்,
அன்றைய முதல்வர் மாண்புமிகு டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களால் நிறைவேறியது. உமாமகேசுவரனார்
கூட, தமிழ்ப் பல்கலைக் கழகத்தைத் திருச்சியில் நிறுவிட வேண்டும் என்றுதான்
தீர்மானம் இயற்றினார். ஆனால் உமாமகேசுவரனார் வாழ்ந்த தஞ்சையிலேயே, தமிழ்ப்
பல்கலைக் கழகத்தை நிறுவிய பெருமைக்கு உரியவர் எம்.ஜி.ஆர்.
பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர் அவர்களின் வள்ளல்
தன்மையினையும், பெருந்தன்மையினையும் நாடே அறியும். தமிழுக்காக ஒர் தமிழ்ப்
பல்கலைக் கழகத்தை உருவாக்கியதோடு, அப்பல்கலைக் கழகத்திற்கு இடம் ஒதுக்கிய
நிகழ்விலும், தான் வள்ளல்தான் என்பதை நிரூபித்தவர் எம்.ஜி.ஆர்.
தமிழ்ப் பல்கலைக் கழகத்தைத் தஞ்சையில் நிறுவுவது என்று முடிவு செய்த அன்றைய
தமிழக முதல்வர் மாண்புமிகு புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள், அப்பணி
தொடர்பாக தமிழறிஞர்களின் கூட்டம் ஒன்றினைக் கூட்டினார். தமிழ்ப் பல்கலைக் கழகம்
அமைப்பதற்கு எவ்வளவு இடம் தேவை? என தமிழறிஞர்களிடம் வினவினார். ஒரு தமிழறிஞர் 50
ஏக்கர் ஒதுக்கினால் நன்றாக இருக்கும் எனக் கூறினார். மற்றொருவார் தயங்கியவாறே
100 ஏக்கர் ஒதுக்கினால் மேலும் சிறப்பாக இருக்கும் என்று கூறினார். பெருவள்ளல்,
பொன்மனச் செம்மல் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் புன்னகைத்தவாறே, தமிழுக்கு
என்று ஒரு பல்கலைக் கழகத்தைத் தனியே அமைக்கவிருக்கின்றோம். இப்பல்கலைக் கழகம்
சீரும் சிறப்புமாகச் செயல்பட வேண்டும் என்பதே எனது விருப்பமாகும். எனவே இப்
பல்கலைக் கழகத்திற்கு 1000 ஏக்கர் இடத்தினை ஒதுக்குகிறேன் என்று கூறி
தமிழறிஞர்களை வியப்பில் ஆழ்த்தினார். கூறியபடியே 1000 ஏக்கர் நிலத்தினை ஒதுக்கி
தமிழ்ப் பல்கலைக் கழகத்தை நிறுவிய பெருந்தகை எம்.ஜி.ஆர்.
மேலும் தமிழுக்கு என்று தனியே ஓர் பல்கலைக்
கழகம் தேவை என்று முதன் முதலில் குரல் எழுப்பிய, கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின்
முயற்சிகளைப் பாராட்டும் வகையில், தமிழ்ப் பல்கலைக் கழக சட்டப் பிரிவு 18(a) வகுப்பு II (6) ன் படி, தமிழ்ப் பல்கலைக் கழகப்
பேரவையில், கரந்தைத் தமிழ்ச் சங்கத்திற்கு என்று நிரந்தரமாக, ஓர் இடத்தினையும்
வழங்கிய வள்ளல் எம்.ஜி.ஆர் அவர்களாவார்.
பெத்தாச்சி புகழ் நிலையம்
கரந்தைத் தமிழ்ச் சங்கக் கலா நிலையம் என்னும் பெயரில்,
உமாமகேசுவரனார் தொடங்கிய நூலகம் தொடர்பான நிகழ்வுகளை முன்னரே கண்டோம். இந்த சங்க
நூல் நிலையத்தின் பயனை இனிதுணர்ந்த, சென்னை அரசாங்க மேல் சபை உறுப்பினரும், சங்க
ஆதரிப்பாளருமான, காநாடு காத்தான் பெருந்திருவர் தமிழ் வள்ளல் திவான் பகதூர்,
மு.சித.பெத்தாச்சி செட்டியார் அவர்கள், 1922 ஆம் ஆண்டு நடைபெற்ற, கரந்தைத்
தமிழ்ச் சங்கத்தின் பதினோராவது ஆண்டு விழாவில் உரையாற்றிய போது, தம்பால் உள்ள
நூல்கள் முழுவதையும், சங்க நூல் நிலையத்துடன் சேர்த்துவிட விரும்புவதாக
குறிப்பிட்டார். ஆண்டுவிழாவின் போது குறிப்பிட்ட வண்ணம், சில மாதங்கள் கடந்த
நிலையில், சங்க உறுப்பினர் சிலரைத் தமது இல்லத்திற்கு வரவழைத்து, தனது நூல்கள்
முழுவதையும், தாமே தனது திருக்கரங்களால் எடுத்து வழங்கினார்.
பெத்தாச்சி
செட்டியார் அவர்களால் வழங்கப் பட்ட நூல்களின்
தொகை எண்ணிறந்தவையாகும். எட்டு மர பீரோக்களையும், அதிலிருந்த நூல்கள்
முழுவதையும் சங்கத்திற்கு வழங்கியருளினார்.
கரந்தைத் தமிழ்ச்
சங்கக் கலா நிலையத்தில், பெத்தாச்சி செட்டியார் வழங்கிய நூல்களைத் தனிப் பகுதியாக
வைத்து, அப்பகுதிக்கு பெத்தாச்சி புகழ் நிலையம் என்று பெயரிட்ட
உமாமகேசுவரனார் அவர்கள், 22.9.1923 ஆம் ஆண்டு நடைபெற்ற, சங்கத்தின் பன்னிரண்டாம்
ஆண்டு விழாவிற்கு, தமிழ் வள்ளல் மு.சித.பெத்தாச்சி செட்டியார் அவர்களைத்
தலைமையேற்கச் செய்து,
இம்மையு மறுமையும்
ஈறி லின்பமும்
செம்மையி னளிக்கும்
சிவன்சே வடியிணை
என்றும் மறவா
நன்றறி யுளத்தினை
கருவூ ரானிலை
யரனார் திருவிழாச்
செப்புதற் கரிய
சிறப்புட னிகழ்த்தி
இயலிசைப் புலவர்
எண்ணிலார் மகிழப்
புயலெனப் பொன்மழை
பொழியுங் கோமான்
மதுரைத் தமிழவை
மாட்சியிற் புரப்போய்
கரந்தையெம் சங்கம்
காதலித் தளிப்போய்
இன்னபல் சீரும்
எண்ணி ஆங்கில
மன்னவர் சூட்டு
திவான்பக தூரினை
ஆண்டிப் பட்டிநா
டாளுங் காவல
வருக பெத்தாச்சி
மாண் பெயரோய் நலம்
பெருக எம்சங்கத் திருவிழாப்
பீடுற
வருக தலைமையின்
வாழியர் வருகவே
என்று வாழ்த்தி மகிழ்ந்ததோடு மட்டுமன்றி,
அவ்விழாவின் போதே, தமிழ் வள்ளல் பெத்தாச்சி செட்டியார் அவர்களின் சகோதரரும்,
சென்னை அரசாங்க சட்டமன்ற உறுப்பினருமாகிய, சர் மு.சித.முத்தையாச் செட்டியார்
அவர்களை அழைத்து,
சென்னைமா நகரின்
சிறப்பினன் என்னும்
பன்னருஞ் சீரொடு
பகர் சர்ப் பட்டமும்
பெற்றொளிர் பெருமைய,
பிறங்கும் இந்திய
அரசியல் உறுப்பினன் ஆயஎம்
அண்ணால்
இந்திய நாட்டுட
னேனையாங் கிலமா
நாடும்நின் சீரினை
நன்கறிந் திடுமெனின்
முன்னுநின் சீர்கள்
முழுதுரைப் பனவோ
ஆயமாப் புகழினை
மேவியச் சங்கத்
தெளிமை எண்ணா
தெம்பியின் நல்லருள்
வாய்ந்தொளிர் சங்கம்
மன்னுநம் அருளையும்
எய்வதற் குரித்தென
எண்ணிவந் தருளினை
பெத்தாச்சி வள்ளல்
பெரும்புகழ் நிலையம்
திறந்தருள் செய்க
செம்மாஅல் நீணிலத்
தெத்திசை யும்புகழ்
முத்தையப் புரவல
மாநில நிதிபதி
மான
ஊழி ஊழி
வாழி வாழியரே
என வாழ்த்தி வரவேற்று, அவர்தம்
திருக்கரங்களாலேயே, பெத்தாச்சி புகழ் நிலையத்தினைத் திறந்திடச் செய்தார்.
ஆண்டுதோறும்
வளர்ச்சியடைந்த இந்நூலகத்தில், 1926 ஆம் ஆண்டில், 2120 தமிழ் நூல்களும், 1286 ஆங்கில
நூல்களும், 144 வட மொழி நூல்களும் இருந்தன. சங்க அன்பர்கள் வ.தங்கவேல் பிள்ளை
அவர்களும், சி.வேதாசலம் அவர்களும், நூலக மேற்பார்வையாளருடன் இணைந்து, பல நாட்கள்
அரும்பாடு பட்டு, நூல் நிலையத்தில் உள்ள நூல்களை வரையறை செய்து, நூல் நிலைய
சுவடிகளின் பெயர் பட்டியலை அச்சாக்கம் செய்து வெளியிட்டனர்.
இடம் வாங்குதல்
அமிழ்தினும் இனிய
தமிழ் அன்னைக்கு, வடவேங்கடம் முதல் தென்குமரி இடைப்பட்ட இடங்கள் யாவும், உரியனவாக இருந்தும்,
கரந்தையம் பதியில் தமிழன்னைக்கு இல்லம் எடுக்க, ஓர் அடி நிலம் கூட சொந்தமாய்
இல்லையே என்று எண்ணிய உமாமகேசுவரனார் பெருங் கவலை அடைந்தார்.
சங்கமானது தோன்றிய நாளில் இருந்து, கந்தப்ப செட்டியார் சத்திரத்திலேயே செயல்பட
வேண்டிய நிலையே நீடித்தது.
விழாக்
காலங்களிலும், திருமண நாட்களிலும், கந்தப்ப செட்டியார் சத்திரம், வாடகைக்கு விடப்படும். அத்தகைய நாட்களில்,
சங்கப் பணிகளை அச்சத்திரத்தில் செய்வது இயலாத காரியம். எனவே சங்கத்திற்கென்று சொந்தமாய
ஓர் இடத்தினை வாங்கியே தீருவது என்று எண்ணி முயற்சியில் இறங்கினார்.
உமாமகேசுவரனாரின்
மனக் குறையினைப் போக்க எண்ணிய, வள்ளல் பெத்தாச்சி செட்டியார் அவர்கள்,
சங்கத்திற்கு இடம் வாங்குவதற்காக ஒரு பெருந் தொகையினை அன்பளிப்பாக வழங்க
முன்வந்தார்.
சங்கத்திற்கு இடம்
வாங்கும் பொருட்டு, வள்ளல் பெத்தாச்சி செட்டியார் அவர்கள், 1923 ஆம் ஆண்டின்
மத்தியில், உமாமகேசுவரனாரை அழைத்துக் கொண்டு, தஞ்சையில் பல இடங்களையும் சுற்றிப்
பார்த்தார்.
இறுதியில் கரந்தை வடவாற்றின் வடகரையில் அமைந்திருந்த, ஒரு பெரும் இடத்தினை
வாங்குவதென்று முடிவு செய்தனர். அவ்விடம் கரந்தை பாவா மடத்திற்குச் சொந்தமானதாகும்.
பாவா மடத்தினரிடமிருந்து, இவ்விடத்தினை நேரடியாக வாங்குவதற்கு உரிய பொருளில்லாத
காரணத்தாலும், மேலும் மடத்திற்குச் சொந்தமான இடத்தினை விலைக்கு வாங்குவதால்,
எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய சட்டச் சிக்கல்கலையும் மனதில் நிறுத்தி ஆராய்ந்தார்
உமாமகேசுவரனார்.
……..
வருகைக்கு நன்றி நண்பர்களே, மீண்டும் சந்திப்போமா