கடந்த இரண்டு
வருடங்களாக, நான் வலைப் பூவில் தொடர்ந்து எழுதி வருவதைத் தாங்கள் நன்கறிவீர்கள்.
என் கரங்களைப் பற்றி இழுத்துச் சென்று, என்
வாழ்வின் பாதையை மாற்றியது வலைப் பூ. வலைப் பூவில் தயங்கித் தயங்கிக் காலடி
எடுத்து வைத்துத் தவழத் தொடங்கிய என்னைக் கைக் கொடுத்துத் தூக்கி, நடை பயில வைத்த
பெருமை, வலைப் பூ நண்பர்களாகிய தங்களையேச் சேரும்.
வலைப் பூ நண்பர்கள் அனைவருக்கும் என்
நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவிப்பதில பெரிதும் மகிழ்கின்றேன்,
நேருக்கு நேர் சந்திக்க இயலாவிடினும்,
நண்பர்கள் ஒவ்வொருவரையும் எழுத்தின் வழி சந்திப்பதில் ஏற்படுகின்ற ஆனந்தமே அலாதி.
முகநக
நட்பது நட்பன்று – நெஞ்சத்து
அகநக
நட்பதே நட்பு
என்ற குறளின் வரிகளைப் பார்க்கும் பொழுதெல்லாம்,
நினைக்கும் பொழுதெல்லாம், வலைப் பூ வாசகர்களுக்காகவே வள்ளுவர் இக்குறளினை
எழுதியிருப்பாரோ என்று தோன்றுகிறது.
கடல் பல கடந்து உலகின் எம் மூலையில
இருந்தாலும், இராமன் கண்ட சேது பாலம் போல், வலைப் பூ தந்த எழுத்துப் பாலத்தின் வழி
இணைந்தவர்கள் அல்லவா நாம். முகமறியாத நெஞ்சத்து அகநக நட்பினர் நாம், என்பதில்
பெருமை கொள்ளுவோம்.
எழுத்துக்களின் வழி நட்பு பாராட்டி,
மகிழ்ந்த ஒருவரை, எதிர்பாராமல் நேரில் சந்திக்க நேர்ந்தால், ஏற்படும் மகிழ்விற்கு
எல்லைதான் ஏது.
அப்படி ஒரு வாய்ப்பு, ஒரு மகிழ்ச்சி எனக்குக்
கிட்டியது. அதனைத் தங்களுடன் பரிந்து கொள்வதில், முரசம் கொட்டி முழங்குவதில்
பெருமையடைகின்றேன்.
கடந்த 27.6.13 அன்று திரு ஹரணி அவர்களின்
நத்தையோட்டுத் தண்ணீரில் மூழ்கி முத்தெடுத்த எனது அனுபவத்தினை பகிர்ந்திருந்தேன்.
மறு நாள் 28.6.13 மாலை, பள்ளியில் இருந்து வீடு திரும்பியதும், வழக்கம் போல் வலைப்
பூவில் நுழைந்தேன்.
திரு. ஹரணி பற்றிய பல செய்திகள் புதிது.
இன்னுமா அவர் தினமும் அண்ணாமலைப் பல் கலை கழகத்துக்கு தினமும் பயணிக்கிறார்.? அவரது மின் அஞ்சல் மற்றும் தொலை பேசி எண்
எதிர்பாராமல் கிடைத்தது. உங்களுடைய தொலை பேசி எண் தெரியவில்லையே. வருகிற வாரம்
திருச்சி , வைத்தீஸ்வரன்
கோயில், சிதம்பரம்
என்று பயணிக்கத் திட்டம். என் தொலைபேசி எண். 080-28394331 லாண்ட் லைன் எண். .
GMB
அவர்களின் பின்னூட்டத்தைப் பார்த்தவுடன், மனம்
மகிழ்ச்சிக் கடலில் மிதக்க, கைகளோ அணிச்சையாய் அலைபேசியை எடுத்து, எண்களைத் தட்டின.
பெங்களூரில் தொலை பேசி ஒலிக்கும் ஒலி
கேட்கிறது. GMB அய்யா அவர்களின் காந்தக் குரலை, நேசக் குரலை முதன் முறையாக்க்
கேட்டேன்.
4.7.13 வியாழக் கிழமை காலை 7.15 மணி.
கரந்தைத் தமிழ்ச் சங்க வாயிலில், உமாமகேசுவரனாரின் திரு உருவின் காலடியில்
காத்திருந்தேன். சிறித நேரத்தில் காரொன்று வந்து நிற்க, மலர்ந்த முகத்துடன்
சிரித்தவாறு GMB அய்யா.
அய்யா, அம்மா மற்றும் அவர்களின் திருமகனார்.
வணக்கம் கூறி வரவேற்றேன்.
அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் நால்வரும்,
திரு ஹரணியின் இல்லத்தில் இருந்தோம். ஹரணி அவர்கள்
வீட்டின் மாடியில் இருந்த தனது அறைக்கு எங்களை அழைத்துச் சென்றார்.
புனிதமுற்று மக்கள்புது வாழ்வு வேண்டில்
புத்தகசா லைவேண்டும் நாட்டில் யாண்டும்
என்பார்
பாரதிதாசன்.
பாரதிதாசன் கூறும் புத்தக்க் சாலைக்குள்,
புத்தகச் சோலைக்குள், நுழைந்ததைப் போல் ஓர் உணர்வு. அறையெங்கும் புத்தகங்கள்,
புத்தகங்கள், புத்தகங்கள் மட்டுமே.
கையளவு
கற்க ஆசை, கடுகளவிலேய உழன்று கொண்டிருக்கிறேன்
என்பார் ஹரணி.
இதுவே கடுகளவென்றால், எனது அறையினை நினைத்துப் பார்த்தேன். மௌனமாய் அமர்ந்தேன்.
உணவருந்த ஹரணி அவர்கள் அழைத்த போது, அய்யா
சிரித்துக் கொண்டே மறுத்தார். உணவு வேண்டாம். காபி மட்டும் போதும். உங்களை
காணவும், கண்டு பேசி மகிழ்ந்திடவுமே வந்தேன். உணவு உண்ண அமருவோமேயானால், நாம் பேசும்
நேரம் குறைந்து விடுமல்லவா? ஒரு நொடியினைக் கூட வீணடிக்காமல் உரையாடி மகிழ விரும்புகின்றேன்.
பெங்களூரில் இருந்து திருச்சிக்கு,
தொடர் வண்டியில் வந்து, பின்னர் திருச்சியிலிருந்து வைத்தீசுவரன் கோயிலுக்குப்
பேருந்தில் செல்வது என்று முடிவு செய்திருந்தோம்.
ஆனால் பேருந்தில் வந்தால் உங்களைச் சந்திக்க
இயலாமல் போய் விடுமே என்றுதான், பெங்களூரில் இருந்து காரிலேயே வந்து விட்டோம் என்றார்.
நெகிழ்ந்து போனோம்.
நேற்று திருச்சியில் திரு வை.கோபால
கிருஷ்னன் அவர்களையும், திரு தி. தமிழ் இளங்கோ அவர்களையும்
சந்தித்தேன். திரு ரிஷிபன் அவர்களும், திரு ராமமூர்த்தி அவர்களும்
அலைபேசியில் பேசினார்கள் என மகிழ்ந்து கூறினார்.
பொறியாளராகப் பணியாற்றி, ஓய்வு பெற்று
ஆண்டுகள் 16 கடந்த போதிலும், 16 வயது இளைஞராகவே GMB அய்யா அவர்கள் காட்சியளித்தார். ஆம் அவரின்
அனுபவத்தின் வயது 74, உள்ளத்தின் வயதோ என்றும் 16தான்.
அய்யா அவர்களின் மகன் கூறினார். அப்பாவிற்கு
எழுதும் பழக்கம் உண்டு. நிறைய எழுதுவார். வாழ்வியல் அனுபவத்தை, கேட்டதை, பார்த்ததை,
ரசித்ததை, படித்ததை என நிறைய எழுதுவார். நான்தான் ஐந்து வருடங்களுக்கு முன்னர்,
ஒரு மடி கணினியை கொடுத்து, இதில் எழுதிப் பாருங்களேன் என்றேன். அன்று தொடங்கியவர்
என்றார்.
அம்மா அவர்கள் கூறினார், காலையில் எழுந்த்தும்
இவர் காபி குடிக்கிறாரோ இல்லையோ? நேராக கணினிக்குச சென்று விடுவார்.
தமிழ்
தட்டச்சு தெரியுமா? என்று கேட்டோம். அய்யா கூறிய பதில் எங்களை வியப்பின
விளிம்பிற்கே கொண்டு சென்றது.
தெரியாது.
அடுத்த கேள்வியைக் கேட்க, எங்களுக்கு
வார்த்தையே வரவில்லை. அவர் முகத்தையே பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
எனக்குத் தமிழ் தட்டச்சுத் தெரியாது.
கணினியின் விசைப் பலகையில் இருக்கும், ஒவ்வொரு ஆங்கில எழுத்துக்கும் உரிய, தமிழ்
எழுத்தை பலவாறு முயன்று, மனதில் ஒரு பதிவாக பதிய வைத்துக் கொண்டேன். வலது கையின்
ஆள் காட்டி விரல் ஒன்றினை மட்டுமே பயன்படுத்தி, ஒவ்வொரு எழுத்தாக தட்டச்சு
செய்வேன் என சிரித்துக் கொண்டே கூறினார்.
வலைப் பூவில் ஒவ்வொரு பதிவையும்,
நான்கு அல்லது ஐந்து பக்கங்களுக்குக் குறையாமல்
எழுதுகிறீர்களே, ஒரு பதிவை முழுமையாய் தட்டச்சு செய்து முடிக்க, எவ்வளவு நேரமாகும்
என்றோம்.
ஒரு பதிவை தட்டச்சு செய்ய எனக்கு ஒரு
நாளாகும். காலை முதல் மாலை வரை, ஒவ்வொரு எழுத்தாக தட்டச்சு செய்வேன்.
பிரமித்துப் போய்விட்டோம். அய்யா அவர்களின்
ஆர்வத்திற்கும், மனம் தளரா, விடா முயற்சிக்கும், நாமெல்லாம் தலை வணங்கியே ஆக
வேண்டும்.
அப்பொழுதுதான் ஒரு உண்மை பளிச்சென்று
விளங்கியது. ஊன்று கோலை நாட வேண்டிய வயதில், கம்பீர நடைபோடும் காரணம் புரிந்தது.
இவரது கரமும் மனமும், எழுது கோலை அல்லவா இறுகப் பற்றியிருக்கிறது.
தூயஉள்ளம் அன்புள்ளம்
பெரிய உள்ளம்
தொல்லுலக மக்களெலாம் ஒன்றே என்னும்
தாயுள்ளம்
தனிலன்றோ இன்பம் ஆஙகே
சண்டையில்லா தன்னலந்தான்
தீர்ந்த தாலே
என்று
முழங்குவார் பாரதிதாசன். அய்யா அவர்களின் வலைப் பூவில் நுழைந்து, அவர் பற்றிய
தன்னிலை விளக்கத்தைப் பார்ப்போமானால், மனதினை மகிழச் செய்யும் வாசகம் ஒன்றினைக்
காணலாம்
When
are we going to feel all are equal and love all?
ஆம் உண்மைதான். தொல்லுலக மக்களெலாம் ஒன்றே என்று
கூறும் பாரதிதாசனின், பாடல் வரிகளுக்கு உரு கொடுத்த தாயுள்ளத்திற்குச் சொந்தக்காரர்தான்
GMB அய்யா அவர்கள்.
வாழ்வின்
மறக்க இயலா சந்திப்பு, இச்சந்திப்பு.