27 அக்டோபர் 2014

மதுரையில் மகிழ்ச்சி வெள்ளம்


மதுரை மன்னர் திருமலை நாயக்கர் அவர்களின் விருப்பப்படி, திருமலை நாயக்கர் மகாலைக் கட்டிட, மண் வளம் வாய்ந்த ஓர் இடத்தினைத் தேர்வு செய்து, அங்கு, 305 மீட்டர் நீளமாகவும், 290 மீட்டர் அகலமாகவும் தோண்டித் தோண்டி மண் எடுத்துச் சுட்டு, செங்கல் கற்களை உருவாக்கினர்.

      நாயக்கர் மகாலும் அழகுற கம்பீரமாய் உருவானது. மண் தோண்டி எடுத்த இடத்தில், பாங்குற ஒரு குளமும் உருவானது. இக்குளம்தான், வண்டியூர் மாரியம்மன் தெப்பக் குளம்


       இத்தெப்பக் குளத்தின் நடுவே ஓர் மைய மண்டபம். மண்டபத்தில் விநாயகர். மண்டபத்தைச் சுற்றிலும் அழகிய தோட்டம். தெப்பக் குளத்தின் தோற்றமே, காண்பவர் கண்களைக் கொள்ளை கொள்ளும்.

      மாரியம்மன் தெப்பக் குளத்தின் கரையில், அழகுற காட்சியளிக்கிறது,
கீதா நடன கோபால நாயகி மந்திர்.


நாள் 26.10.2014 ஞாயிற்றுக் கிழமை. காலை 9.00 மணி. சோழ நாட்டில் பௌத்தம், முனைவர் பா.ஜம்புலிங்கம் அவர்கள், நான், எனது மனைவி, மகள் நால்வரும் அரங்கினுள் நுழைகிறோம்.

    அரங்கமே பரபரப்பில் மூழ்கி இருந்தது. மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்தது. தமிழ் நாடு முழுமையும் இருந்தும், கடல் கடந்தும் பதிவர்கள் வந்த வண்ணம் இருந்தனர்.

     ஒருவரை ஒருவர் அடையாளம் கண்டு கொண்டு, கரம் பற்றி, எழுப்பிய உற்சாகக் குரல் ஒலி, அரங்கம் எங்கும் எதிரொலித்துக் கொண்டிருந்தது.

     முகம் நோக்காது இதுநாள் வரை பழகிய உறவுகள், முகங் கண்டு, அகம் மகிழ, சிரித்து மகிழும், இக்காட்சியைக் காண, கொடுத்துதான் வைத்திருக்க வேண்டும்.

     அக்கொடுப்பினை, இவ்வாண்டு எனக்குக் கிடைத்தது.


மதுரை, தீதும் நன்றும் பிறர் தர வாரா, ரமணி ஐயாவை சந்திக்க வேண்டும் என்பது எனது நெடு நாள் கனவு. இதோ முதலாவது ஆளாக நிற்கிறார். கரம் பற்றி நலம் விசாரித்தேன்.


     தேவ கோட்டையில் பிறந்து, அபுதாபியில் பணியாற்றும், பன் மொழி வித்தகர் கில்லர்கி, முகத்தினையே மறைக்கும் மீசையுடன், முகமெல்லாம் மகிழ்ச்சி பொங்க, இரு கரம் நீட்டி, இழுத்து அணைக்கிறார். வாருங்கள் நண்பரே, வாருங்கள் நண்பரே என மனம் மகிழ அழைக்கிறார்.

     இதோ மின்னல் வரிகள் பால கணேஷ். தமிழ் மணத்தில், முதலிடத்தை, நிலையாய் பிடித்து வைத்துப் பாதுகாக்கும், ஜோக்காளி பகவான்ஜி.

     வலைப் பூவில் நான், கணித மேதை சீனிவாச இராமானுஜன் தொடரினை எழுதிய போது, அன்போடு அழைத்துப் பேசிப், பாராட்டி, தமிழ் மணம் வாக்குப் பட்டையினை, வலையில் இணைத்துக் கொடுத்த, மூங்கில் காற்று திரு டி.என்.முரளிதரன்.

     தனது வயதையும் பொருட்படுத்தாது, சிறு குழந்தைபோல், திரு ஜி.எம். பாலசுப்பிரமணியன் ஐயா அவர்கள்.

     வங்கிப் பணியாற்றி ஓய்வு பெற்ற பிறகும், தேனீ போல் சுறு சுறுப்பாய், சுழன்று, சுழன்று படமெடுத்து, பதிவில் பாங்குற இணைக்கும், திருச்சியின் மூத்த பதிவர், எனது எண்ணங்கள் திரு தி. தமிழ் இளங்கோ அவர்கள்.
  



கையில் நீண்ட புகைப் பட கருவியுடன், திரையுலக ஒளிப்பதிவாளர் பாலுமகேந்திரா போல், தருமி அவர்கள்.
    

கவிதைகளால் மனங்களைக் கொள்ளையடிக்கும், சிவகுமாரன் கவிதைகள் திரு சிவ குமார் அவர்கள்.



உலகம் சுற்றும் வாலிபன்
கடற் பயணங்கள் சுரேஷ் அவர்கள்
    



அநீதி கண்ட இடத்து வெகுண்டு எழும், வேல் வெற்றியின் திரு அ. வேல் முருகன் அவர்கள்.

      தனது தனித்துவமான நடையால், மனதைக் கவர்ந்திழுத்துச் சொக்க வைக்கும், சிட்டுக் குருவி திரு விமலன் அவர்கள்.


முக நூலில் உலகையே கலக்கும்,
ஸ்ரீவில்லிப் புத்தூர்
திரு இரத்தினவேல் நடராஜன் அவர்கள்

அரங்கத்து வாசலில் ஒரு வேன் வந்து நிற்க, ஒட்டு மொத்த, புதுக் கோட்டைப் பதிவர் உலகமும், முழுதாய் வந்து இறங்கியது.

       வளரும் கவிதை திரு கவிஞர் முத்து நிலவன் அவர்கள் தலைமையில், மலர்தரு கஸ்தூரி ரங்கன், மகிழ்நிறை சகோதரி மைதிலி கஸ்தூரி ரங்கன், வேலுநாச்சியார் சகோதரி மு. கீதா, நண்பர் மகா சங்கர், சகோதரி கல்வியாளர் ஜெய லட்சுமி, சகோதரி மாலதி என புதுக் கோட்டைப் பதிவர்களின் பட்டியல் நீண்டு கொண்டே சென்றது.

     நண்பர்களே, சொன்னால் நம்ப மாட்டீர்கள், அனைவரையும் காண, அனைவருடனும் பேச, இரு கண்களும், ஒரே ஒரு வாயும் போதவே இல்லை. அவற்றைக் கடன் வாங்கவும் வழியேயில்லை. தவித்தே போய்விட்டேன்.

     ஒவ்வொரு பதிவராய் மேடையேறி அறிமுகம் செய்து முடிக்கவே, அரை நாள் கடந்து விட்டது., இடையில் நாவினிக்க, உடல் குளிர ஓர் ஜிகர்தண்டா.

     பிற்பகல் நிகழ்ச்சியாக, குடந்தையூர் சரவணன் அவர்களின் இயக்கத்தில் தயரான, ஓர் குறும் படம்.
சில நொடி சிநேகம்

     இக்குறும் படம் ஓடியதென்னவோ, ஏழே ஏழு நிமிடங்கள்தான். ஆனால் அதன் தாக்கம் விலகத்தான் நீண்ட நேரம் பிடித்தது.

குடந்தையூர் சரவணன் அவர்கள்,
எதிர்காலத்தில், திரையுலகில்
ஓர் நிரந்தர இடத்தினை
எட்டிப் பிடிப்பார் என்பது உறுதி.

வாழ்த்துக்கள் நண்பரே.

     நண்பர் தில்லையகத்து துளசிதரன், கோவை ஆவி, கரை சேரா அலை அரசன் மூவரும், ஏதோ நீண்ட கால அனுபவமிக்க நடிகர்கள் போல், இயல்பான நடிப்பால் உள்ளம் கவர்ந்தனர்.

வாழ்த்துக்கள் நண்ப, நடிகர்களே.

அடுத்த நிகழ்வாக, நூல்கள் வெளியீட்டு விழா.

கரந்தை மாமனிதர்கள்

    தமிழ் வலைப் பதிவர்களின் திருவிழா, மதுரையில் நடைபெற விருக்கின்றது, என்ற செய்தியினை அறிந்த மறு நிமிடமே, வலைச் சித்தர் திண்டுக்கல் தனபாலன் அவர்களைத் தொடர்பு கொண்டேன். எனது நூல் ஒன்றினை வெளியிட விரும்புகிறேன் என்றேன். மகிழ்ச்சி, மகிழ்ச்சி வெளியிடுங்கள் என்றார்.

    அதன் பின்னரே, என்ன வெளியிடலாம் என்று யோசித்தேன். வலைப் பதிவுத் திருவிழாவிற்கென்றே உருவான நூல்தான கரந்தை மாமனிதர்கள்.
     



பி.எஸ்.என்.எல். தொழிற் சங்க, மதுரை மாவட்டச் செயலாளர், மனித நேயப் பண்பாளர் திரு எஸ். சூரியன் அவர்கள், தனது பல்வேறு அலுவலகப் பணிகளுக்கு இடையிலும், பல்வேறு தொழிற் சங்க அலுவல்களுக்கு இடையிலும், அரை நாள் நேரம் ஒதுக்கி, மன மகிழ்ந்து, அரங்கிற்கு வருகை தந்து, நூலினை வெளியிட்டு, வாழ்த்தி மகிழ்ந்தார்.

     வலைப் பூ உலகிற்கு, என்னைக் கரம்  பிடித்து இழுத்து வந்து, வழி காட்டிய, நெறி படுத்திய, சோழ நாட்டில் பௌத்தம் முனைவர் பா.ஜம்புலிங்கம் அவர்கள், முதற் படியினைப் பெற்றுச் சிறப்பித்தார்.

      இந்த எளியேனின் மீது, அளவு கடந்த அன்பு வைத்துள்ள, கவிஞர் முத்து நிலவன் ஐயா அவர்கள், கரந்தை மாமனிதர்களின் முகப்பு அட்டையினை, மின்னஞ்சல் வழி பெற்று, மேடையில் வெளியிடுவதற்கான, புத்தக மாதிரியினை, பெரிய அளவில், தயாரிக்கச் செய்து வழங்கி மகிழ்ந்தார்.

மதுரை எஸ்.சூரியன் அவர்களுக்கும்,
முனைவர் பா.ஜம்புலிங்கம் அவர்களுக்கும்
கவிஞர் நா.முத்து நிலவன் அவர்களுக்கும்
இருகரம் கூப்பி,
என் நெஞ்சார்ந்த
நன்றியினைத்
தெரிவிப்பதில் பெருமிதம் அடைகின்றேன்.


தேன் மதுரத் தமிழ்
சகோதரி கிரேஸ் பிரதீபா அவர்களின்,
துளிர் விடும் விதைகள்

வேலுநாச்சியார்
சகோதரி மு.கீதா அவர்களின்
ஒரு கோப்பை மனிதம்

சட்டப் பார்வை
திரு பி.ஆர்.ஜெயராமன் அவர்களின்
நல்ல எழுதுங்க... நல்லதையே எழுதுங்க

என புத்தம் புது நூல்கள், அடுத்தடுத்து வெளியிடப் பெற்றன.

    வலைச் சித்தர் திண்டுக்கல் தனபாலன் அவர்கள், நன்றி கூற வலைப் பதிவர் விழா சிறப்புடன் நிறைவுற்றது.

     என்ன, விழா அதற்குள் நிறைவு பெற்று விட்டதா? மணி ஐந்தாகி விட்டதா? அனைவருமே, நம்பாமல், தங்கள் கை கடிகாரத்தினை மீண்டும், மீண்டும் பார்த்து வியப்படைந்தனர்.

     காலை முதல் மாலை வரை, ஒரு பதிவர் கூட அரங்கை விட்டு வெளியே செல்லாமல், விழாவில் மனமகிழ்வோடு கலந்து கொண்டதே,
இவ்வாண்டின் பதிவர் திருவிழா
வெற்றி    வெற்றி    வெற்றி
என்பதை பறைசாற்றியது.

     ஒரு நாள் பதிவர் திரு விழா சிறப்புடன் அரங்கேற, பல மாதங்கள் அயராது பாடுபட்ட, தங்களின் சொந்தப் பணிகளை எல்லாம் புறந்தள்ளி விட்டு,
முழு மூச்சாய் களமிறங்கிச்
செயலாற்றி
சாதித்துக் காட்டிய
தமிழ்வாசி பிரகாஷ்
வலைச் சித்தர் திண்டுக்கல் தனபாலன்
பகவான் ஜி
தமிழன் கோவிந்தராஜ்
மதுரை சரணவன்

நிகழ்ச்சியினைத் தொய்வின்றித் தொகுத்து வழங்கிய
மகேந்திரன் பன்னீர்செல்வம்
தீபா நாகராணி
மற்றும்
இவர்களை,
தங்களது நல் அனுபவத்தால், நல் வழி காட்டி இயங்கிய
அன்பின் சீனா
தீதும் நன்றும் பிறர் தர வாரா ரமணி
அவர்களுக்கும்,
மனமார்ந்த நன்றியினை
வலைப் பூ நண்பர்கள் அனைவரின் சார்பிலும் தெரிவித்து மகிழ்கின்றேன்.

இவ்விழா வெற்றி பெற, பால மாதங்கள்
அலைந்து, அலைந்து
சிறித இளைத்தே போய்விட்ட
தமிழ் வாசி பிரகாஷ் அவர்களுக்கு
மீண்டும் ஒரு முறை நன்றியினை காணிக்கையாக்குகிறேன்.

சாதித்துவிட்டீர்கள் நண்பர்களே.