ஆண்டு 1942.
சென்னை
அது ஒரு அலுவலகம்
வாரப் பத்திரிக்கை ஒன்றின் அலுவலகம்
ஒரு பக்கம் அச்சுப் பணி
ஒரு பக்கம் அச்சிடுவதற்காக எழுத்துக்களைக் கோர்க்கும்
பணி
எழுத்துக்களைக் கோர்ப்பதற்கு என்று ஒரு தனி அறை
ஒரு நீண்ட மேசைமீது, சரிவாய் சாய்ந்த நிலையில்,
புறாக் கூண்டுகளைப் போல், சின்னஞ்சிறு கூண்டுகள், வரிசை வரிசையாய்.
ஒவ்வொரு கூண்டிலும் ஈயத்தால் ஆன எழுத்துக்கள்
கொட்டிக் கிடக்கின்றன
ஒரு கூண்டில் க என்ற எழுத்துக்கள் மட்டும் கொட்டிக்
கிடக்கும். மற்றொரு கூண்டில் ச என்ற எழுத்துக்கள் மட்டும். இப்படியாக ஒவ்வொரு எழுத்திற்கும்
ஒரு கூண்டு.
அச்சுக் கோர்ப்பவருக்கு எந்த கூண்டில் எந்த எழுத்து
இருக்கிறது என்பது தெரிந்திருக்க வேண்டும்.
மாணவர்கள் தேர்வு எழுதப் பயன்படுத்துவார்களே,
மேல் புறத்தில், கிளிப் உள்ள தேர்வு அட்டை, அதுபோன்ற ஒரு அட்டையில், கையெழுத்துப் பிரதி
ஒன்று சொருகி வைக்கப் பட்டிருக்கிறது.
அம்மனிதரின் கண்கள், கையெழுத்துப் பிரதியில்
உள்ள, ஒவ்வொரு வரியின், ஒவ்வொரு வார்த்தைகளையும், வார்த்தையின் ஒவ்வொரு எழுத்துக்களையும்,
உன்னிப்பாய் கவனிக்கின்றன.
வலது கை அவரையும் அறியாமல், தன்னிச்சையாய்
இயங்கி, ஒவ்வொரு எழுத்தாய் எடுத்து, இடது கையில் உள்ள, சிறு இரும்புப் பட்டையில் வரிசையாய்
அடுக்குகிறது.
கண்களோ வெள்ளைத் தாளினைப் பார்க்க, கையோ,
கண் பார்த்த எழுத்துக்களை எல்லாம், வரிசை வரிசையாய் எடுத்துத் திறமையாய் கோர்க்கிறது.
பணி முடிந்ததும், அருகில் இருந்த ஒரு மர இருக்கையில்
அமர்கிறார்.
ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கியிருப்பதை முகம் காட்டுகிறது.
யார் யாரோ எழுதிய கதைகளை, கட்டுரைகளை, கவிதைகளை,
தினம் தினம், ஒவ்வொரு எழுத்துக்களாய், பொறுக்கி எடுத்து கோர்க்கும் அம்மனிதருக்கு ஒரு
ஆசை.
நாமும் எழுதினால் என்ன?
நீண்ட நாள் ஆசை
ஓய்வு நேரத்தில், சிறு கதை ஒன்றினையும் எழுதி
முடித்து விட்டார்.
ஆனாலும் பயம்
உள்ளுக்குள் ஒரு நடுக்கம்
காரணம், வார இதழின் ஆசிரியர், ஒரு மிகச் சிறந்த
எழுத்தாளர்.
அவரது எழுத்துக்களைப் படிக்க, தமிழகமே, வாரா
வாரம் காத்துத்தான் கிடந்தது.
அப்பேர்ப்பட்ட எழுத்தாளர்
எனவே, ஆசிரியரின் அருகில் செல்லவே தயங்கினார்.
ஆசிரியரிடம் தாம் எழுதியக் கதையினைக் காட்டியாக
வேண்டும்.
வழி என்ன? யோசித்தார்
அச்சகத்தில் போர்மேனாக வேலை பார்த்து வந்த,
தனது நண்பர் ராஜா பாதரை அணுகினார்.
கதையினைக் காட்டினார்
கதையினைப் படித்த நண்பர், அசந்து போனார்
இவ்வளவு
அற்புதமாய் கதை எழுதவும், உனக்குத் தெரியுமா?
மகிழ்ந்து போனார்.
ஏதோ
எனக்குத் தெரிந்ததை எழுதிவிட்டேன். ஆசிரியரிடம் காட்ட வேண்டும் என்று
மெல்ல இழுத்தார்.
கவலைப் படாதே, நான் காட்டுகிறேன்.
கதையினைப் பெற்றுக் கொண்டார்
நண்பரை உற்சாகப்படுத்த வேண்டும் என்பதற்காகச்,
சொல்லிவிட்டாரே தவிர, ராஜாபாதருக்கும் உள்ளுக்குள் உதறல்.
ஆசிரியர் எப்படி எடுத்துக் கொள்வாரோ?
தீவிரமாய் யோசித்தவர், ஒரு வழியைக் கண்டு
பிடித்தார்
அடுத்த நாள், ஆசிரியர் இல்லாத நேரமாய்ப் பார்த்து,
அவரது அறைக்குள் நுழைந்தார்.
ஆசிரியரின் மேசையில், கதையினை வைத்துவிட்டு
வந்துவிட்டார்.
சிறிது நேரத்தில் ஆசிரியர் வந்தார்.
தனது இருக்கையில் அமர்ந்தார்.
இதென்ன?
மேசையின் மேல் இருந்த, தாட்களை எடுத்தார்.
கதையினைப் படித்தார்.
முடித்தார்
சில நிமிடங்கள், அவரால், கதையினின்று மீண்டு
வரவே முடியவில்லை.
சுண்டி இழுக்கும் எழுத்து
யார் எழுதிய கதை?
தாட்களைத் திருப்பித் திருப்பிப் பார்த்தார்
பெயரே
இல்லை
யார் வைத்திருப்பார்கள்?
ஒவ்வொருவராய் அழைத்து விசாரித்தார்
யாருக்கும் தெரியவில்லை
போர்மேன் தயங்கித் தயங்கி வந்தார்
இக்கதையினை
எழுதியது யார்? உங்களுக்காவது தெரியுமா?
ஐயா, நம் அச்சகத்தில், அச்சு எழுத்துக்களைக்
கோர்க்கிறாரே, வி.கோவிந்தன், அவர் எழுதிய கதை. நான்தான் தங்களின் மேசையின் மீது வைத்தேன்.
ஆகா, நமது கோவிந்தனா? அழைத்து வாருங்கள் அவரை.
கோவிந்தன் வெட்கப் பட்டவாரே வந்தார்.
ஆசிரியர், தன் இருக்கையில் இருந்து எழுந்து,
கோவிந்தனை, அருகே அழைத்து, அன்போடு அணைத்துக் கொண்டார்.
பிரமாதமாய் எழுதியிருக்கிறீர்கள். இந்த வாரத்திற்கான,
பாப்பா மலர் பகுதியில், உங்கள் கதையினை, நீங்களே, எழுத்துக்களைக் கோர்த்து, இணைத்துக்
கொள்ளுங்கள்.
கோவிந்தன் அடைந்த மகிழ்ச்சிக்கு
அளவே இல்லை.
எத்துனை
பெரிய எழுத்தாளர். வார இதழின் ஆசிரியர். ஒரு எளியவனான, என்னை, என் எழுத்துக்களைப் பாராட்டுகிறாரே.
எத்துனை பெரிய மனம் இவருக்கு.
நெகிழ்ந்து போனார்.
ஜி.வி
என்னும் பெயரில் சிறுகதை அச்சேறியது
தொடர்ந்து கோவிந்தன் எழுதிய பல
சிறுகதைகள், அச்சேறி தமிழகத்தை வலம் வந்தன.
ஓராண்டு கடந்த நிலையில், ஒரு நாள், ஆசிரியர்
கோவிந்தனை அழைத்தார்.
தங்கள் சிறு கதைகளில் உள்ள அழுத்தம், முதிர்ச்சி,
தங்களின் பெயரில் இல்லையே. ,ஜி.வி என்பதற்குப் பதிலாக வேறு பெயரில் எழுதலாமே?
வேறு பெயரிலா? கோவிந்தன் யோசித்தார்.
இன்றிலிருந்து
உங்கள் பெயர் கோவிந்தன் அல்ல.
விந்தன்
எப்படி இருக்கிறது என்றார்.
அன்றுதான் நம் எழுத்தாளர் விந்தன் பிறந்தார்.
புதுப் பெயர், எழுத்தில் புதுப் பொழிவு, புத்துணர்ச்சி
அதுமட்டுமல்ல, அப்பத்திரிக்கையின் உதவி ஆசிரியர்
பணியும், இவரைத் தேடி வந்தது.
நண்பர்களே, இவர்தான்
சுரண்டும் வர்க்கங்களின் மீது, தனக்கிருந்த கோபத்தை, வெறுப்பை
தன் எழுத்துக்களின் சற்றும் உணர்வு குறையாமல் இறக்கி வைத்தவர்
விந்தன்
எளிமையான நடை, ஆயினும் வலிமையான எழுத்து
விந்தன்
கண் திறக்குமா?
பாலும் பாவையும்
முல்லைக் கொடியாள்
ஒரே உரிமை
சமூக விரோதிகள்
விந்தன் கதைகள்
ஏமாந்துதான் கொடுப்பீர்களா?
இதோ மக்கள் பிரதிநிதி
ஆகிய நூல்களின் ஆசிரியர்
மக்கள் எழுத்தாளர்
விந்தன்
போட்டியும், பொறாமையும்
நயவஞ்சகமும், சுயநலனும்
பெருத்துவிட்ட இக்காலத்தில்
அச்சுக் கோர்ப்பவரைப் பாராட்டி
புதுப் பெயர் சூட்டி
உதவி ஆசிரியராய் உயர்த்தி
மகிழ்ந்தவர் யார் தெரியுமா?
கல்கி.
விந்தன் பணியாற்றிய வார இதழ்
கல்கி