13 அக்டோபர் 2017

விபுலாநந்த அடிகளார் ஆவணப் படம்




     யாழ்

     தமிழிசையின் அடையாளம்.

     நமது தேசிய இசைச் சின்னம்

     நான்கு நிலத்திற்கும் கருப்பொருள் கூறிய தொல்காப்பியர், நிலத்திற்கு ஒரு பண்ணிசைக் கருவியாக யாழையேக் குறிப்பிடுகிறார்.


     தொல்காப்பியத்திலும், பாட்டிலும், தொகையிலும், காப்பியங்களிலும், பன்னார் தேவாரங்களிலும், ஆழ்வார்கள் அருளியவையிலும் பெரிதும் போற்றப்பட்ட யாழ், என்னவாயிற்று?

      அதற்கு விடைகளைத் தேடி,. பன்னெடுங்காலம் தான் கற்ற தமிழ், வடமொழி, ஆங்கிலம், கணிதம், இயற்பியல் துணை கொண்டு, பல காலம் ஆய்ந்து, கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் அமர்ந்து, யாழ் நூல் என்னும் பெரு நூல் ஒன்றை வெளிக் கொணந்தார், ஒரு முதுபெரும் தமிழறிஞர், இசையறிஞர்

சுவாமி விபுலாநந்தர்

இத்தகு பெருமைவாய்ந்த சுவாமி விபுலாநந்தரை
ஆவணப் படமாக்கி,
உலகு முழுதும் உலாவ விட்டிருக்கிறார்,
ஒரு இளம் தமிழறிஞர்

      இடைக்கட்டு என்னும் சிற்றூரில் பிறந்து, புதுச்சேரியில் புகுந்து, உலகெங்கும் பறந்து, நாம் மறந்து போனத் தமிழறிஞர்களை, கால ஓட்டத்தில் கரைந்து போன, ஆவணங்களை, எல்லாம் மீண்டும் எழுந்து உலகை வலம் வரச் செய்யும் ஆற்றலாளர்.

      தன் குடும்பம் மறந்து, சுற்றம் துறந்து, ஈட்டிய செல்வம் இழந்து, ஆவணப் படம் எடுத்து, பழந்தமிழர் இசையினை, இசை விற்பன்னர்களை, உலகு முழுவதும் உலாவ விடும் வித்தகர்




முனைவர் மு,இளங்கோவன் அவர்களின்
தளரா முயற்சியால், அண்மையில்
சுவாமி விபுலாநந்தரின் ஆவணப் படம்
புதுகையில் வெளியிடப் பெற்றதை, தமிழ் கூறும் நல்லுலகம் நன்கறியும்.

       சுவாமி விபுலாநந்த அடிகளாரின் ஆவணப் பட வெளியீட்டு விழா நிகழ்வுகள், நாளை (14.10.2017) சனிக் கிழமை காலை 8.30 மணிமுதல் 9.00 மணிவரை,


மக்கள் தொலைக்காட்சியில்
ஒளிபரப்பாக இருக்கிறது
என்னும் இனிமைமிகு நற்செய்தியினைத்
தங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமிதம் அடைகின்றேன்.

      14.10.2017 சனிக்கிழமை காலை 8.30 மணிக்கு முன்னர், இப்பதிவினைப் பார்க்கும் நண்பர்களை, மக்கள் தொலைக் காட்சியில், விபுலாநந்தர் ஆவணப்படத்தின் வெளியீட்டு விழா நிகழ்வுகளை கண்டு மகிழுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

என்றென்றும் பேரன்புடன்,
கரந்தைஜெயக்குமார்