நினைவாற்றல் என்பது அனைவரிடமும் இருக்கக் கூடிய
ஒன்றுதான்.
ஆனால்
நினைவடுக்குகளில் எவ்வளவு செய்திகளை சேமித்து வைத்திருக்கிறோம் என்பதில்தான்
விசயமே இருக்கிறது.
ஒரு மனித மூளையில், ஒரு பெரிய நூலகத்தில் இருக்கும் நூல்களின் அளவிற்கு, படித்தவற்றை, பார்த்தவற்றை சேமித்து வைக்க முடியும் என்கிறார்கள் அறிவியலாளர்கள்.
ஒன்று, பத்து, நூறு என்று எண்ணுகிறோம் அல்லவா,
அந்த வரிசையில், ஒன்று என்ற எண்ணிற்குப் பிறகு, பதினெட்டு பூஜ்ஜியங்களைப் போட்டு எண்ணிப்
பாருங்கள்.
முடியவில்லைதானே.
அந்த எண்ணிற்கு குயிண்டிலியம் என்று பெயர்.
ஒவ்வொருவரின் மனித மூளையிலும், ஒன்றல்ல, இரண்டு
குயிண்டிலியம் அளவிற்கானச் செய்திகளை சேமித்து வைக்க முடியுமாம்.
வியப்பாக இருக்கிறது அல்லவா.
பொதுவாக நமது மூளை, எதையுமே மறப்பதில்லை.
மூளையில்
இருப்பதை நினைவிற்குக் கொண்டுவருவதில்தான் பிரச்சினை வருகிறது.
இதற்குத்தான் நினைவாற்றல் தொடர்பான பயிற்சி தேவைப்படுகிறது.
நிவைற்றலை இரு வகையாகப் பிரிக்கலாம்.
குறுகிய கால நினைவாற்றல்.
நீண்ட கால நினைவாற்றல்.
சில தகவல்கள் தேவையான காலத்திற்கு மட்டுமே மூளையில்
சேமித்து வைக்கப்படுகின்றன.
தேவை முடிந்ததும், அந்தத் தகவல்கள் மறக்கப்பட்டு
விடுகின்றன.
இதுவே குறுகிய கால நினைவாற்றல்.
நம்முடைய மனதை மிகவும் கவர்ந்தவை அல்லது மனதை
பாதித்தவை, மீண்டும் மீண்டும் சொல்லிப் பார்த்தவை, நம்முடைய மூளையில் நீண்ட கால நினைவுகளாகத்
தங்கி விடுகின்றன.
மூளையானது பல செய்திகளை, ஒன்றுடன் ஒன்று தொடர்பு
படுத்தி, ஏற்கனவே பாதுகாக்கப்பட்டத் தகவல்களுடன், புதிய தகவல்களையும் சேர்த்துப் பார்க்கிறது.
நம் மூளையில் பதிந்து கிடக்கும் செய்திகளை, எளிதில்
நினைவிற்குக் கொண்டு வர, குறிப்பிட்ட செய்திகளை, குறிப்பிட்ட நேரத்தில் அல்லது நினைத்த
நேரத்தில் வெளியே கொண்டு வர, கொண்டு வந்து அருவியாய் கொட்ட, நன்கு பயிற்சி செய்தாக
வேண்டும்.
அந்தப் பயிற்சியை முழுமையாய் செய்தவர், செய்து
வருபவர் இவர்.
இவர் கரந்தைத்
தமிழ்ச் சங்கத்தின், கரந்தைப் புலவர் கல்லூரியின் மேனாள் மாணவர்.
அதுவும் இன்று நேற்றல்ல, 1958 ஆம் ஆண்டில் படித்தவர்.
அப்பொழுது, கரந்தைப் புலவர் கல்லூரியில், இவருக்கு
ஆசிரியராய் அமைந்தவர், பேராசிரியர் ந.இராமநாதன்.
இவர் வகுப்பறைக்குள் நுழைந்ததும், புத்தகத்தைத்
திறந்து, அன்று நடத்த வேண்டிய பாடலின் முதல் அடியைப் பார்ப்பார்.
அவ்வளவுதான், புத்தகத்தை மூடி வைத்துவிடுவார்.
வகுப்பு முடியும்வரை, புத்தகத்தைத் திறக்கவே மாட்டார்.
அவரது நினைவகத்தில் இருந்து, பாடல்கள் வற்றாப்
பெருமழையாய் ஆர்ப்பரித்துக் கொட்டும்.
அற்புத நினைவாற்றல்.
தன் ஆசிரியரின் நினைவாற்றலைக் காணக் காண இவருக்கும்
ஒரு உள்ளக் கிளர்ச்சி.
வயது முதிர்ந்த பேராசிரியரே, பாடல்களை நினைவில்
நிறுத்தி அருவியாய் கொட்டுகிறாரே, நமக்கோ சிறு வயது, நாமும் இவரைப் போல் பாடல்களை மனதில்
நிறுத்திப் பொழிய வேண்டும் என்னும் கட்டுக்கடங்கா ஆர்வம், இவர் உள்ளத்தில் ஏற்பட்டது.
அன்றே பயிற்சியைத் தொடங்கினார்.
இவரது ஊர் ராவுசாப்பட்டி.
தஞ்சாவூர், புதுக்கோட்டை நெடுஞ்சாலையில், சற்றே
உட்புறமாக அமைந்திருக்கும் சிற்றூர்.
இவர் அங்கிருக்கும் தன் வீட்டில் இருந்து புறப்பட்டு,
தினமும் காலையில் 12 கி.மீ தொலைவு, மிதிவண்டியை மிதித்துக் கொண்டே கல்லூரிக்கு வருவார்.
மாலையில், தன் இல்லம் திரும்ப மீண்டும் 12 கி.மீ.,
மிதி வண்டிப் பயணம்.
இவர் தன் மிதிவண்டிப் பயணத்தையே, தன் பயிற்சிப்
பட்டறையாய் மாற்றினார்.
கால்கள் மிதிவண்டியை மிதிக்க மிதிக்க, மனமோ வகுப்பிலும்,
வீட்டிலும் படித்த பாடல்களை, தனக்குள்ளேயே மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டே வரும்.
ஏதேனும் ஒரு வரி மறந்துவிட்டது என்றால், உடனே
மிதி வண்டியை நிறுத்தி, பையினுள் இருக்கும் புத்தகத்தைப் பிரித்துப் பார்ப்பார்.
பின் பயணம் தொடரும்.
ஒவ்வொரு நாளும் 24 கி.மீ., பயணம் செல்லச் செல்ல,
இவரது நினைவடுக்குகளில் ஒன்று, பத்து, நூறு, ஆயிரம், பத்தாயிரம், இலட்சம் எனப் பாடல்கள்
கூடிக் கொண்டே சென்றன.
இன்று இவரது வயது 86.
அன்று படித்த தொல்காப்பியம் தொடங்கி, சங்க இலக்கியங்கள்
வரை அனைத்துப் பாடல்களும், அப்பாடல்களுக்கானப் பதவுரைகளும், தெளிவுரைகளும், இன்றும்,
இவரது நினைவு அடுக்குகளில் ஆழத்தான் பதிந்து கிடக்கின்றன.
ஒன்றல்ல, இரண்டல்ல, முழுதாய் ஒரு இலட்சத்திற்கும்
மேற்பட்டப் பாடல்கள், இவர் வாய் திறந்தால் போதும், அருவியாய் கொட்டும்.
இவர்தான்
பெரும்புலவர்
தமிழ்க் கிழவர்
தமிழ் மறவர்
தமிழ்க் கடல்
தமிழ்க் கடலை, தமிழ்நாட்டு அரசு இப்பொழுதுதான்,
தன் கடைக் கண் திறந்து பார்த்திருக்கிறது.
---
கரந்தைப் புலவர் கல்லூரியின் மேனாள் முதல்வர்
தேவநேயப் பாவாணர் விருது
அறிவிக்கப்பெற்ற பொழுது,
கண்டு மகிழ்வார் இல்லாக் கலைப் படைப்பைப் போலவே இருந்து கொண்டிருந்தீர்கள்.
ஒரு பரிசு, எப்படியோ திடுக்கிட்டு விழித்து, உங்களை கட்டி அணைத்திருக்கிறது.
ஓர் ஆறுதல், அவ்வளவே.
பட்டத்து யானைக்கு, ஒரு பொட்டலம், கடலை கிடைத்திருக்கிறது.
எனினும் இது உங்களோடு உள்ளவர்களுக்கு உவப்பைக் கொடுத்து, உங்களை உணர சிறு வாய்ப்பு.
ஆயினும் பெரு மகிழ்ச்சி.
என்று
போற்றியவர், வாழ்த்தியவர்
கரந்தைப் புலவர் கல்லூரியின்
மேனாள் மாணவர்
---
இன்று மேலும் ஒரு விருது
கரந்தைப் புலவர் கல்லூரியின்
முன்னாள் மாணவருக்குக்
கிடைத்திருக்கிறது.
மகாகவி ஈரோடு தமிழன்பனின்
வாழ்த்து
இவருக்கும்
முற்றாய், முழுதாய் பொருந்தும்.
மேலும், மேலும்
பல உயரிய விருதுகள்
இவரை வந்தடைய வாழ்த்துவோம்.
---
கடந்த 18.7.2022 அன்று
சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெற்ற
தமிழ்நாடு நாள் விழாவில்,
தமிழ் நாட்டு அரசானது
இலக்கிய மாமணி
என்னும் உயரிய விருதினை
தமிழ்க்கடல்
வழங்கிச் சிறப்பித்தது.
தமிழக முதல்வர்
உடல் நலம் தேறி,
மருத்துவமனையில் இருந்து,
இல்லம் திரும்பிய நிலையிலும்
காணொலி காட்சி மூலம் அரங்கிற்கு வந்து
சொற்பெருக்காற்றி
விருதாளர்களை
வாழ்த்தியபோது
கரவொலியால்
அரங்கமே அதிர்ந்துதான் போனது.
---
இப்பெருமைமிகு நிகழ்வில் கலந்து கொள்வதற்கான
ஓர் வாய்ப்பு எனக்குக் கிட்டியது.
விருது பெறுவதற்காகச் சென்னை செல்கிறேன், நீங்களும்
வாருங்கள் என தமிழ்க் கடல் அழைத்தபோது மகிழ்ந்துபோனேன்.
தமிழ்க்கடல் முனைவர் இரா.கலியபெருமாள், புலவர் மா.கந்தசாமி, கலை பண்பாட்டுத் துறை
மேனாள் உதவி இயக்குநர் முனைவர் இரா.குணசேகரன்,
சிங்கப்பூர் மேனாள் விரிவுரையாளர் கவிஞர் ப.திருநாவுக்கரசு,
தமிழ்க் கடலின் மைத்துனர் திரு இளங்கோவன்,
தமிழ்க் கடலின் உறவினர் திரு பிரபு ஆகியோரோடு
இணைந்து நானும் சென்னை சென்றேன்.
தமிழ்நாடு நாள் விழா
இலக்கிய மாமணி விருது
வழங்கு விழா
தமிழ்க் கடல்
தமிழ் மறவர்,
தமிழ்க் கிழவர்
கம்ப மாமணி
இலக்கிய மாமணி
முனைவர் இரா.கலியபெருமாள் ஐயா அவர்கள்
மேலும் பல
மேன்மைமிகு விருதுகளைப் பெறவும்
பல்லாண்டு, பல்லாண்டு
தமிழோடு
தமிழாகவே வாழ்ந்து
அருந்தமிழைப் போற்றவும்
வளர்க்கவும்
வாழ்த்துவோம், வணங்குவோம்.
-----
விருது பெற்ற
தமிழ்க் கடல் முனைவர் இரா.கலியபெருமாள்
ஐயா அவர்களை,
கரந்தைத் தமிழ்ச் சங்கச் செயலாளர்
தலைமையில்,
கரந்தைத் தமிழ்ச் சங்கத் துணைத் தலைவர்
நிறைவேற்றுக் கழக உறுப்பினர்கள்
மற்றும்
ஆசிரிய ஆசிரியைகள்
தமிழவேள் உமாமகேசுவரனார் கரந்தைக் கலைக் கல்லூரிப்
பேராசிரியப் பெருமக்கள்
இராவுசாப்பட்டி சென்று,
அவர்தம் இல்லத்தில்
சந்தித்து
பொன்னாடை அணிவித்து
மகிழ்வினைத் தெரிவித்து மகிழ்ந்தனர்.