17 ஆகஸ்ட் 2022

வலவன் ஏவா வான வூர்தி

 


     ஒரு சமுதாயத்தின் பண்பாட்டையும், நாகரிகத்தையும், பொருளாதாரத்தையும், மக்களின் அறிவையும், பழக்க வழக்கங்களையும் ஏடுத்துரைப்பவையே இலக்கியங்களாகும்.

     மேல்நாட்டு அறிவியல் சிந்தனையின் பயனாய், புதுப் புது அறிவியல் கண்டுபிடிப்புகளும், புத்தம் புது அறிவியல் கோட்பாடுகளும் தோற்றம் பெறுவதற்கு, வெகு காலத்திற்கு முன்னரே, இக்கண்டுபிடிப்புகளுக்கான, கோட்பாடுகளுக்கான வித்துக்கள், நம் சங்க இலக்கியங்களில் பரவிக் கிடப்பதைக் காணலாம்.

எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு

என்றும்

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு

என்றும் விருப்பு, வெறுப்பு அற்ற அறிவியல் பார்வையை, அறிவியல் சிந்தனையை அன்றே முன் வைத்தவர்தான் திருவள்ளுவர்.

     இயற்பியலின் ஒரு பிரிவு அணுவியல்.

     அணுவைப் பிளக்க இயலாது என்பதுதான், முதலில் அறிவியலாளர்களின் கருத்தாக இருந்தது.

     பின்னர்தான், அண்மையில்தான், அணுவைப் பிளக்க இயலும் என்ற கருத்தாக்கம் பிறந்தது.

அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டிக்

குறுகத் தறித்த குறள்

குறளின் பெருமையைக் கூற வந்த நம் முன்னோர், அணுவையும் பிளக்க இயலும் என்ற உண்மையை  அன்றே முன் வைத்தனர்.

முதல்எனப் படுவது நிலம் பொழுது இரண்டின்

இயல்பென மொழி இயல்வுரைந் தோரே

என்று கூறி, முதற்பொருளை, நிலமும், காலமும் என, முன்னரே பிரித்தவர்தான் தொல்காப்பியர்.

     நீருக்கு சுருங்கம் தன்மை இல்லை என்று அறிவியலால் ஆய்ந்து கூறியவர் பாஸ்கல் ஆவார். ஆனால்,

ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல் நீர்

நாழி முகவாது

என, இக்கருத்தை அன்றே உரைத்ததோடு, ஆழத்தைப் பொருத்து அழுத்தமும் அதிகரிக்கும் எனக் கூடுதலாய் சொன்னவர்தான் ஔவையார்.

     இன்று வானூர்திகள், வானில் மிதக்கின்றன.

     ஏஊர்திகள் பூமிப் பந்தைக் கடந்தும் பயணிக்கின்றன.

வானை அளப்போம் கடல் மீனை அளப்போம்

சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்

என்று பாரதியும்,

வலவன் ஏவா வான வூர்

எய்துப என்பதஞ் செய்வினை முடித்தென

என புறநானூறு, ஓட்டுநர் இல்லாது பயணிக்கும் வான ஊர்தியையும் குறிப்பிடுவதை எண்ணினால் வியப்புதான் மிஞ்சுகிறது.

     சூரிய  ஒளியினால்தான் தாவரங்கள் ஆற்றலைப் பெறுகின்றன, தாவரங்களின் ஒளிச் சேர்க்கைக்கு உதவுவது சூரிய ஒளியே என்பதை உணர்ந்ததால்தான், அறிந்ததால்தான்,

ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்

காவிரி நாடன் திகிரிபோல் பெற்கோட்டு

மேரு வலந்திரி தலான்

என்று சிலப்பதிகாரத்தில் இளங்கோ அடிகள் பாடினார்.

     இன்ற மருத்துவ அறிவியல் உச்சத்தில் இருக்கிறது.

     இறந்தோரை உயிரிப்பிக்கும் மருத்துவம்தான், இன்னும் வரவில்லையே தவிர, மற்ற அனைத்தும் இன்று சாத்தியம்.

     ஆனால், அறுவை சிகிச்சை குறித்த செய்திகள், நம் சங்க இலக்கியத்திலேயே இருக்கத்தான் செய்கின்றன.

மீன்தேர் சொட்டின் பனிக்கயம் மூழ்கிச்

சிலர் பெயர்த்தன்ன நெடுவள் ஊசி

நெடுவசி பரந்த வடுவாழ் மார்பின்

நீண்ட ஊசி புண்ணில் நுழைந்து வெளியே போல, நீரில் உள்ள மீன்களைக் கொத்திப் பிடித்து, நீரைவிட்டு மேலே பறந்து செல்கிறது பறவை என உரத்து முழங்குகிறது பதிற்றுப்பத்துப் பாடல்.

     அக்காலத்திலேயே. ஊசியைக் கொண்டு தைக்கும் முறையினைத் தமிழர்கள் அறிந்திருந்தார்கள் என்பதை இப்பாடல் உணர்த்துகிறது.

நெய்தலும் குவளையும் ஆம்பலும் சங்கமும்

மைஇல் கமலமும் வெள்ளமும் நுதலிய

என்று உரைக்கிறது பரிபாடல்.

     இதில் ஆம்பல் என்பது ஆயிரம் கோடி.

     வெள்ளம் என்பது கோடி கோடி.

     கமலம் என்பது நூறு ஆயிரம் கோடி.

     பத்மம் என்பது பத்து நூறாயிரம் கோடி.

     நெய்தல் அல்லது குவளை என்பது நூறு கோடி

     பாழ் என்பது பூஜ்ஜியம்.

     பாழ் என்னும் பூஜ்ஜியம் முதல், பல் அடுக்கு ஆம்பலான ஆயிரம் கோடி வரையிலும், அதற்கு மேலும், தனித் தமிழ்ப் பெயர்களைக் கையாண்டு நடைமுறையில் பயன்படுத்தியவர்கள்தான் நம் முன்னோர்.

     இவ்வாறாக, பண்டைத் தமிழ் இலக்கியங்களில் எண்ணற்ற அறிவியல் கோட்பாடுகள் நிரப்பி வழிகின்றன.

      இன்றைய அறிவியல் சிந்தனையின் வித்து, பலநூறு ஆண்டுகளுக்கும் முன் தோன்றிய, தமிழ் இலக்கியங்களில் பரவிக் கிடப்பதை அறியும் பொழுது, வியப்பும், நாம் தமிழர், நாம் தமிழர் என்ற பெருமிதமும், நம் உள்ளத்தில் பெரு ஊற்றாய் பொங்கித்தான் வழிகிறது.

---

கடந்த 14.8.2022

ஞாயிற்றுக் கிழமை மாலை

ஏடகம்

ஞாயிறு முற்றத்தில்,

தஞ்சாவூர், பூண்டி புட்பம் கல்லூரி

தமிழ்த் துறை, உதவிப் பேராசிரியர்


முனைவர் ப.பாலமுருகன் அவர்கள்

தலைமையில்,

தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக் கழகப்

பதிவாளர்,

பேராசிரியர்

அறிவியல் தமிழ் மற்றும் தமிழ் வளர்ச்சித் துறைத் தலைவர்

முனைவர் சி.தியாகராசன் அவர்கள்


தமிழில் அறிவியல் கோட்பாடுகள்

என்னும் தலைப்பில்

பழந்தமிழரின் அறிவியல் சிந்தனைகளை, கோட்பாடுகளை ஒவ்வொன்றாய் எடுத்துரைத்தபோது, அரங்கமே மகிழ்ந்துதான் போனது.

முன்னதாக,

கும்பகோணம், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக

மேனாள் கண்காணிப்பாளர்


திரு ஜெ.எம்.ஆனந்த் அவர்கள்

பொழிவு கேட்க வந்திருந்தோரை

வரவேற்றார்.

ஏடகம் அமைப்பின்

புரவலர் மற்றும் பொறுப்பாளர்


திரு உ.செந்தில்குமார் அவர்கள்

நன்றி கூற விழா இனிது நிறைவுற்றது.

தஞ்சாவூர், பான்செக்கர்ஸ் மகளிர் கல்லூரி

தமிழ்த் துறை, உதவிப் பேராசிரியர்


முனைவர் க.முத்தழகி அவர்கள்

விழா நிகழ்வுகளைத் திறம்படத் தொகுத்து வழங்கினார்.

ஏடக அன்பர்களுக்கு

திங்கள் தோறும்

திகட்டத் திகட்ட

நற் பொழிவுகளை

வாரி வழங்கிப்

பெரு விருந்து படைக்கும்

ஏடக நிறுவுநர், தலைவர்


முனைவர் மணி.மாறன் அவர்களைப்

போற்றுவோம், வாழ்த்துவோம்.