என் தாய், சகுந்தலா அம்மையார் மறைந்து எட்டு மாதங்கள் கடந்து விட்டன.
நான்கு மாதங்களில், முதலாமாண்டு நினைவு நாள்
வருகிறது.
அம்மா
எனும்
பெயரில் வெளியிட வேண்டும் என்ற எண்ணம் என்னுள் எழுந்தது.
என் சித்தப்பா திரு சி.திருவேங்கடனார், கடந்த 2017 ஆம் ஆண்டு மறைந்தபோது, அவரது முதலாமாண்டு நினைவு நாளில், சித்தப்பா எனும் பெயரில் நூல் ஒன்றினை வெளியிட்டேன்.
உற்றார், உறவினர்கள், நண்பர்கள், என் சித்தப்பா பற்றிய தங்களின் நினைவலைகளைக் கட்டுரையாக எழுதிக் கொடுத்தனர்.
நானும் ஒரு கட்டுரை எழுதியதோடு, என் தந்தை வழி உறவுகளை, என் தந்தையின் தாத்தாவில் தொடங்கி, என் பிள்ளைகள் வரை, ஒரு குடும்ப மரமாய் வரைந்து, அந்நூலில் இணைத்தேன்.
பூட்டன்
பாட்டன்
தந்தை
நான்
மகன்
பெயரன்
என
ஆறு தலைமுறைகளை, என் தந்தை வழி, தலைமுறைகளைத் தொகுத்து வரைபடமாய் வெளியிட்டேன்.
கடந்த 2018 ஆம் ஆண்டு என் தந்தை திரு சி.கிருட்டினமூர்தி அவர்கள், திடீரென
மறைந்தார்.
என் தந்தையின் முதலாமாண்டு நினைவு நாளில், உற்றார், உறவினர், நண்பர்களிடம் என் தந்தையைப் பற்றிய நினைவுகளை, எழுத்தாக எழுதி வாங்கி, அப்பா எனும் பெயரில் நூலாக்கி வெளியிட்டேன்.
இதேபோல், என் அம்மாவிற்கும் அம்மா எனும் பெயரில் நூல் ஒன்று வெளியிட விரும்பி,
என் எண்ணத்தை, என் வாழ்க்கை இணையர் திருமதி
பிரேமா அவர்களிடம் வெளியிட்டபோது, அவசியம் வெளியிடவேண்டும் என்று சற்றும் தயங்காது
கூறினார்.
அதற்கானப் பணியினைத் தொடங்கினேன்.
என் அம்மாவைப் பற்றி எழுதும்பொழுது, என் அம்மாவின்
பெற்றோர்களிடம் இருந்து தொடங்க வேண்டும் அல்லவா’?
அப்படித்தான் தொடங்கினேன்.
தொடங்கியபோதுதான், என் அம்மாவின் அம்மா, அதாவது என் அம்மாச்சி, திருமதி புஷ்பவள்ளி அம்மாள், என் அம்மாவின் அப்பா, அதாவது என் தாத்தா திரு வெங்கடாசலம் ஆகியோரது, பெயர்கள் மட்டும்தான் எனக்குத் தெரிந்ததே தவிர, அவர்கள் பிறந்த ஊர், அவர்களுடன் பிறந்தவர்கள், அவர்களின் தாய், தந்தையர் என எதையுமே அறியாமல் இதுநாள் வரை இருந்திருக்கிறேன் என்பது புரிந்தது.
வெட்கித் தலை குனிந்தேன்.
இவ்வளவிற்கும், என் அம்மாச்சி, நீண்ட காலம்,
எங்கள் குடும்பத்தோடுதான் வாழ்ந்தார்.
1997 ஆம் ஆண்டுதான், எங்கள் வீட்டில்தான் மறைந்தார்.
எனக்குத் திருமணமாகி, என் மகன் பிறந்த பிறகுதான்
மறைந்தார்.
இருந்தும், என் அம்மாச்சியிடம், அவர்கள் தாய்
தந்தையர், உடன் பிறப்புகள் பற்றிப் பேசாமலேயே இருந்திருக்கிறேன்.
எட்டு மாதங்களுக்கு முன் மறைந்த என் அம்மாவிடம்
கேட்டிருந்தாலும், தன் தாய் தந்தையரின் குடும்ப விவரங்களைத் தெரிவித்திருப்பார்.
என் அம்மாவிடமும் என் அம்மாச்சி குடும்பம் பற்றிப்
பேசாமல் இருந்திருக்கிறேன்.
வெட்கப்படுவதைத் தவிர வேறுவழியில்லை.
வேதனை வாட்டியது.
எங்கள் உறவில், வயதில் மூத்தவர்கள் இன்று யாருமில்லை.
அனைவரும் காலவோட்டத்தில் கரைந்து போய்விட்டனர்.
என் அம்மாவின் உடற்பிறப்புக்களான, இரு அக்காக்கள், ஒரு அண்ணன் மூவருமே இன்று இல்லை.
உறவினர்களிடம் விசாரித்தேன்.
யாருக்கும் தெரியவில்லை.
இறுதியாக, என் அத்தையை அலைபேசி வழி தொடர்பு கொண்டு
பேசினேன்.
தஞ்சை மாரியம்மன் கோயிலுக்கு அருகில் உள்ள, சித்தர் காடு என்னும் சிற்றூரில் சண்முகம் எனும் பெயரில் ஒரு உறவினர் இருந்ததாக
கேள்விப் பட்டுள்ளேன் என்றார்.
மனம் பரபரத்தது.
சித்தர்
காடு.
சித்தர் காட்டில் தெரிந்தவர்கள் யாராவது இருந்தால்,
விசாரிக்க உதவியாக இருக்குமே என்று எண்ணினேன்.
நண்பர் இரும்புத்தலை துரை.நடராசனார் என் மனக்கண் முன் தோன்றினார்.
உமாமகேசுவர மேனிலைப் பள்ளி உடற்கல்வி ஆசிரியர்.
இரும்புத்தலை கிராமத்தின் அத்துணை நிகழ்விகளிலும்
முன்னனியில் இருந்து செயல்படுபவர்.
இரும்புத்தலையில் மட்டுமல்ல, அதன் சுற்றுப்புற
கிராமங்களிலும், யாருக்காவது, ஏதாவது ஒன்றென்றால், காலம், நேரம் பார்க்காமல் ஓடிச்
சென்று, உடனிருந்து, தோள் கொடுத்து உதவுபவர்.
அலைபேசி வழி அழைத்தேன்.
விவரம் சொன்னேன்.
சித்தர் காடு கிராமத்தைச் சேர்ந்தவரும், தற்பொழுது,
சித்தர் காட்டைத் தொட்டுக் கொண்டு ஓடும், வெண்ணாற்றின், மறுகரையில் வசிக்கும் பெரியவர்
திரு ஜெகதீசன் என்பாரின் அலைபேசி எண்ணைக்
கொடுத்துப் பேசச் சொன்னார்.
அப்பெரியவரை அலைபேசி வழி அழைத்தேன்.
இரும்புத்தலை
நடராசனின் நண்பர் ஜெயக்குமார் பேசுகிறேன் என்றேன்.
நடராசன்
இப்பொழுதுதான் பேசினார் என்று கூறியவர்,
தற்பொழுது சித்தர் காட்டில் மூப்பனார் சமூகத்தைச் சார்ந்த பலர் வசித்து வருகிறார்கள்
என்று கூறி,
கருப்பையா
மூப்பனார்
கோவிந்தசாமி மூப்பனர்
அய்யா கண்ணு மூப்பனார்
ஆறுமுகம்
மூப்பனார்
சண்முகம் மூப்பனார்
மாரிமுத்து மூப்பனார்
என
ஒரு பெரும் பட்டியலையே,கட, கட வெனக் கூறினார்.
சண்முகம்
மூப்பனார்.
சண்முகம் என்ற பெயரைக் கேட்டவுடன் என்னுள் படபடப்பு
கூடியது.
சண்முகம்
என்றுதான் கூறினார்கள் என்றேன்.
மணி மூப்பனாரின் மகன் சண்முகம்.
வயதில் மூத்தவர்.
90 வயதிருக்கும்.
இன்றும் நலமுடன் இருக்கிறார்.
சித்தர் காட்டில் யாரைக் கேட்டாலும், கூறுவார்கள் என்றார்.
ஒவ்வொரு வீட்டிலும், ஒவ்வொரு தெருவிலும், ஒவ்வொரு
ஊரிலும் பெரியவர்கள் இருப்பதன் பயனை முழுமையாய் உணர்ந்தேன்.
பெரியவர்கள், நடமாடும் தகவல் களஞ்சியங்கள்.
இதுபோன்ற மூத்தவர்களைத் தொலைத்துவிட்டுத்தான்,
புறக்கணித்து விட்டுத்தான், இன்று அல்லாடிக் கொண்டிருக்கிறோம்.
பெரியவர் திரு ஜெகதீசன் ஐயா அவர்களுக்கு நன்றி
கூறினேன்.
அன்று மாலையே, இருசக்கர வாகனத்தில், மாரியம்மன்
கோயில் சென்றேன்.
மாரியம்மன் கோயிலைக் கடந்து, கடகடப்பை எனும்
சிற்றூரின் வழி செல்லும் பொழுது, என் அருகில் இரு சக்கர வாகனத்தில் வந்தவரிடம், சித்தர்
காட்டிற்குச் செல்லும் வழியைக் கேட்டேன்.
சித்தர்
காட்டில் யாரைப் பார்க்க வேண்டும்? என்று கேட்டார்.
சண்முகம்
மூப்பனார் என்றேன்.
என்
பின்னே வாருங்கள் எனக்கூறி அழைத்துச் சென்று, இதுதான் அவர் வீடு எனக் காட்டிச் சென்றார்.
அவருக்கு நன்றி கூறி, அவ்வீட்டின் முன் என் இரு
சக்கர வாகனத்தை நிறுத்தி இறங்கினேன்.
சிறு வீடு.
வீட்டின் திண்ணையில் ஒரு பெரியவர் படுத்திருந்தார்.
நான் அவர் வீட்டின் முன் வண்டியை நிறுத்தியதைக்
கண்டவுடன், எழுந்து வந்தார்.
ஐயா,
சண்முகம் மூப்பனார் என்றேன்.
நான்தான் என்றார்.
ஐயா, நான் கரந்தையில் இருந்து வருகிறேன் என்றேன்.
என்னை நோக்கி அடியெடுத்து வந்தவர், கரந்தை என்றப்
பெயரைக் கேட்டவுடன், திடுக்கிட்டு நின்றார்.
கரந்தை
புஷ்பவள்ளி அம்மாளின் பெயரன் நான் என்றேன்.
அவ்வளவுதான்.
அடுத்தநொடி, ஓடி வந்து, என்னை அணைத்துக் கொண்டார்.
திக்குமுக்காடிப் போனேன்.
வாயில் இருந்து வார்த்தைகள் வர மறுத்தன.
அழைத்துச் சென்று திண்ணையில் அமர வைத்தார்.
சிறுது தண்ணீரை வாங்கிக் குடித்துவிட்டு, மெல்ல
வந்த செய்தியைக் கூறினேன்.
புஷ்பவள்ளி
அம்மாள் என் அத்தை.
புஷ்பவள்ளி அம்மாளின் அண்ணன் சுப்பிரமணியின்
மகன் நான் என்றார்.
என் அம்மாச்சியின் தாய் தந்தையர் பெயர், அவர்கள்
வசித்த இடம், உடன் பிறந்தோர் எனக் கூறிக் கொண்டே போனார்.
வியந்துபோய் கேட்டுக் கொண்டே இருந்தேன்.
மனதில் ஒரு மகிழ்ச்சி.
ஓர் உறவைக் கண்டுபிடித்த மகிழ்ச்சி.
1950 ஆம் ஆண்டு வாக்கில், ஏதோ ஒரு காரணத்தினால்,
உறவு விட்டுப் போயிருக்கிறது.
74 ஆண்டுகள் கடந்த நிலையில், உறவைக் கண்டு பிடித்திருக்கிறேன்.
சண்முகம் மூப்பனார்.
அகவை 90 ஐ நெருங்கிக் கொண்டிருக்கிறார்.
90 வயதுக்காரர் என்று கணிக்க முடியாத உடல் வாகு.
ஆரோக்கியமாக இருக்கிறார்.
பழைய நினைவுகளை பத்திரமாய் பாதுகாத்து வைத்திருக்கிறார்.
என் தாயின் நினைவு நாளில், அம்மா புத்தக வெளியீட்டிற்கு, அவசியம், என் வீட்டிற்குத் தாங்கள் வரவேண்டும் என்றேன்.
மகிழ்வோடு
வருவேன் என்றார்.
உறவை மட்டுமல்ல, குடும்ப வரலாற்றையும் மீட்ட
உணர்வு எனக்கு.