18 ஜனவரி 2024

ஓர் உளி, எழுதுகோலான கதை

 


     ஆண்டு 1945.

     கரந்தை.

     வடவாற்றங்கரையின், தென் கரைக்கு அருகில் அமைந்துள்ள, பாலோபா நந்தவனம் கோயிலுக்கு முன்புறம், ஒரு பெரும் கல்லால், ஒரு நவக்கிரக மேடை அமைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

     ஓர் இளைஞர், இடுப்பில் நான்கு முழ வேட்டி, தோளில் ஒரு துண்டு, கலைந்த தலை, வெற்றிலை போட்டுப் போட்டு கறை படிந்த பற்களுடன், பெரும் கல் ஒன்றினைக் கொத்தி சீரமைக்கும் பணியினைச் செய்து கொண்டிருக்கிறார்.

கோயிலுக்கு முன் புறம் ஒரு மண்டபம்.

     மண்டபத்தில் சில மாணவர்கள் படித்துக் கொண்டிருக்கின்றனர்.

     அமைதியான இடம்.

     அந்த இளைஞர் கல்லைக் கொத்திக் கொண்டே, அம்மாணவர்கள் பேசுவதை செவி கொடுத்துக் கேட்கிறார்.

     தேமாங்காய். கருவிளங்காய், புளிமாங்கனி என்று ஏதேதோ பேசுகிறார்கள்.

     அந்த இளைஞருக்கு ஒன்றும் புரியவில்லை.

     மாணவர்களை அணுகி விசாரிக்கிறார்.

     நாங்கள் கரந்தைத் தமிழ்ச் சங்கப் புலவர் கல்லூரியில் படிக்கிறோம். அடுத்த மாதம் தமிழ் வித்துவான் தேர்வு வர இருக்கிறது. அதற்காகப் படித்துக் கொண்டிருக்கிறோம்.

     தேர்வுக்குப் படிக்கிறீர்கள், ஆனால் காய், கனி என பழங்களைப் பற்றியே பேசிக் கொண்டிருக்கிறீர்களே.

     நாங்கள் பேசிக்கொண்டிருப்பது உண்ணும் பழங்களைப் பற்றியது அல்ல. அது யாப்பிலக்கணம்.

     இளைஞருக்குப் புரியவில்லை.

     யாப்பிலக்கணம் என்றால் என்ன?

     வெண்பா முதலிய செய்யுட்களைப் பற்றிய இலக்கணம்.

     மேலும் கேள்விகளை அடுக்குகிறார்.

     அப்பொழுதுதான் அந்த இளைஞருக்குத் தெரிகிறது, அக்கல்லூரியில் பாட்டும், செய்யுளும் படிக்க மட்டுமல்ல, எழுதவும் கற்றுக் கொடுக்கிறார்கள் என்பது புரிகிறது.

     நீண்ட நாட்களாக இளைஞரின் உள்ளத்துள் உறங்கிக் கொண்டிருந்த, கவி வேட்கை மெல்லத் தலைதூக்கிப் பார்க்கிறது.

     கல்லு கொத்தும் ஆள் நான், நான் எப்படி கவி எழுதுவது என்னும் சிந்தனை மேலெழுந்துத் தடுக்கிறது, உளியை எடுத்துத் தன்  பணியினைத் தொடருகிறார்.

     பல நாட்கள் கடந்த நிலையில், அந்த இளைஞர், வடவாற்றிற்குச் செல்லும் பாதை ஓரமாக, ஒரு குறட்டுக்கல் வேலை செய்து கொண்டிருக்கிறார்.

      இளைஞர் கல்லைக் கொத்தக் கொத்த, கற் சில்லுகள் நாலா பக்கமும் சிதறிக் கொண்டிருக்கின்றன.

     அப்பொழுது, அந்த வழியாக வந்த ஒருவர், அந்த இளைஞரைப் பார்த்து,

     ஐயா, கொஞ்சம் தங்கள் வேலையை நிறுத்துங்கள், நான் அந்தப் பக்கம் போய்விடுகிறேன் என்கிறார்.

     வேலையை நிறுத்திய அந்த இளைஞர், நிமிர்ந்து பார்த்து

     ஐயா, நீங்கள் யார் எனத் தெரிந்து கொள்ளலாமா?

     நான் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் புலவர் கல்லூரியில், ஆசிரியராகப் பணியாற்றுகிறேன்.

     ஆசிரியர் என்ற வார்த்தையைக் கேட்டவுடன், விரைந்து எழுந்த அந்த இளைஞர், அவரைப் பார்த்துக் கேட்கிறார்.

      ஐயா, நானும் உங்கள் கல்லூரிக்கு வந்து பாடங் கேட்க முடியுமா?

      கல்லூரியில் சேர்ந்து கொண்டால் பாடம் கேட்கலாம்.

     என்னை சேர்த்துக் கொள்வார்களா?

     இளைஞர் இதற்குமுன் படித்த விவரங்களைக் கேட்டுத் தெரிந்து கொண்ட ஆசிரியர் கூறினார்.

     ஒவ்வொரு ஆண்டும் சூலை மாதத்தில்தான் மாணவர் சேர்க்கை நடைபெறும். அப்பொழுது வாருங்கள் சேர்த்துக் கொள்வார்கள்.

     இளைஞருக்கு மகிழ்ச்சி தாளவில்லை.

     அன்றே, தந்தையிடம், தன் விருப்பத்தைக் கூறினார்.

     நீ இனிமேல் தமிழ் படித்து என்ன செய்யப் போகிறாய்?

     நீ படிக்கப் போய்விட்டால் கல்லு பட்டறையை யார் பார்த்துக் கொள்வது?

     போ,போய் வேலையைப் பார் என்கிறார்.

     விடவில்லை இளைஞர். போராடிப் போராடி அனுமதி வாங்கினார்.

     1946 ஆம் ஆண்டு சூலை மாதம் பிறந்தவுடன் கல்லூரிக்குச் சென்றார்.

     முதல்வரைப் பார்த்தார்.

     நான் உங்கள் கல்லூரியில், புதுமுக வகுப்பில் சேர்ந்து படிக்க விரும்புகிறேன்.

     முதல்வர் இளைஞரை மேலும், கீழும் பார்த்தார்.

     இடுப்பில் கசங்கிய அழுக்கேறிய நான்கு முழம் வேட்டி.

     மேல் சட்டை இல்லை.

     திறந்த மேலுடல்.

     தோளில் துண்டு.

     கறை படிந்த பற்கள்.

     கல்லூரியில் சேர்வதென்றால், மேல் சட்டை அணிந்து வரவேண்டும்.

     வெற்றிலைப் போடக் கூடாது.

     முன்பு படித்தப் பள்ளியில் மாற்றுச் சான்றிதழ் பெற்று வரவேண்டும்.

     சேர்க்கைக் கட்டணம், விடுதிக் கட்டணம் வருடத்திற்குப் பன்னிரெண்டு ரூபாய் கட்ட வேண்டும்.

     சான்றிதழோடும், பணத்தோடும் ஒரு வாரத்திற்குள் வந்து சேருங்கள்.

     இளைஞர் மலைத்துப் போனார்.

     பன்னிரெண்டு ரூபாயா?

     பணத்தைப் பற்றிப் பிறகு கவலைப் படலாம்., வடக்கு வீதியில், தான் படித்த தூய பேதுரு பள்ளிக்குச் சென்று, முதலில் மாற்றுச் சான்றிதழை வாங்குவோம் என்று எண்ணி, தூய பேதுரு பள்ளிக்குச் சென்றார்.

     தலைமையாசிரியரைப் பார்த்தார்.

     பள்ளிக் கணக்கரைப் பார்க்கச் சொன்னார்.

     பள்ளிக் கணக்கர், பதிவேடுகளைப் புரட்டிப் பார்த்துவிட்டு, ஒரு பெரும் குண்டினைத் தூக்கிப் போட்டார்.

     நீ இங்கு படித்தபோது, கட்ட வேண்டிய பணம் பதினைந்து ரூபாய் பாக்கி இருக்கிறது. அதனைக் கட்டிவிட்டு, மாற்றுச் சான்றிதழைப் பெற்றுக் கொள்ளலாம்.

     பதினைந்து ரூபாயா?

     இளைஞருக்கு மயக்கமே வந்துவிட்டது.

     கல்லூரியில் சேர்ந்து படிக்க, பன்னிரெண்டு ரூபாய்க்கே வழியில்லை, ஆனால் சான்றிதழுக்கே பதினைந்து ரூபாய் கட்ட வேண்டுமா?

     என்ன செய்வது என்று புரியவில்லை.

     பள்ளியில் தனக்குப் பாடம் நடத்திய ஆசிரியர், புலவர் கோதண்டபாணிப் பிள்ளையைப் போய் பார்த்தார்.

     பணமெல்லாம் கட்ட வேண்டாம்.

     பள்ளிச் சான்றிதழும் தேவையில்லை.

     நானே சான்றிதழ் எழுதி, என் கையொப்பமிட்டுத தருகிறேன். அதுவே போதுமானது.

     அதைக் கொண்டுபோய் கொடு, கல்லூரியில் சேர்த்துக் கொள்வார்கள்.

     சான்றிதழ் எழுதி, கையெழுத்திட்டுக் கொடுத்தார்.

    

புலவர் கோதண்டபாணி அவர்கள் எழுதிக் கொடுத்த சான்றிதழ்
 (பாவலரின் திருமகனார் முனைவர் பா.மதிவாணன் அவர்களக்கு நன்றி)

  சான்றிதழைப் பெற்ற அடுத்த நொடி, இளைஞரின் மனம் மகிழ்ச்சியில் சிறகடித்துப் பறந்தது.

     மகிழ்ச்சி சில நொடிகளில் மறைந்தது.

     கல்லூரியில் சேர, பன்னிரெண்டு ரூபாய் கட்ட வேண்டுமே? என்ன செய்வது.

     கவலையோடு நடந்தார்.

     செல்லும் வழியில் நண்பன் நடராசனைச் சந்தித்தார்.

     என்ன ஏதோ பெரும் கவலை முகத்தில் தெரிகிறதே என்றார் நடராசன்.

     தன் நிலைமையைச் சொன்னார்.

     நண்பனை தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றார் நடராசன்.

     இருடா போகலாம் என்று கூறி வீட்டிற்குள் சென்றவர், உடன் திரும்பி வந்தார்.

     இந்தா பன்னிரெண்டு ரூபா.

     போய் கல்லூரியில் சேர்.

     மேலும் ஏதாவது தேவைப் பட்டால் கேள்.

     இளைஞருக்குக் கண்ணீரே வந்துவிட்டது.

     கல்லூரியில் சேர்ந்தார்.

     பகலில் படிப்பு.

     மாலை மற்றும் விடுமுறை நாட்களில் கல்லுப் பட்டறையில் வேலை.

     கல்லும் கொத்தினார், பாடமும் படித்தார்.

     வித்துவான் ஆனார்.

     படித்தக் கல்லூரியிலேயே ஆசிரியராய் பணியில் சேர்ந்தார்.

     துணை முதல்வராய் உயர்ந்தார்.

இவர்

நாடக மொழி

யாழ் மொழி

தொல்காப்பிய ஆராய்ச்சிக் காண்டிகை உரை ( 5 தொகுதிகள்)

செய்யுள் இலக்கணம்

மொழியாக்க நெறி மரபிலக்கணம்

தமிழ் இலக்கண நூல்களும் பாட வேறுபாடுகளும்

தமிழிலக்கண நுண்மைகள்

வளர் தமிழ் இலக்கணம்

தென்னூல்

நன்னூல் திறனாய்வுரை

முதலான 40 நூல்களின் ஆசிரியர்.

தஞ்சை சரசுவதி மகால் நூலகத்திற்காக ஐந்து நூல்களைப் பதிப்பித்தவர்.

பாவலரேறு

கவிஞர் கோ

தொல்காப்பியச் சுடர்

தொல்காப்பியப் பேரொளி

தொல்காப்பியப் பேரறிஞர்

தொல்காப்பியச் செம்மல்

இலக்கணப் பேரொளி

முதலான 15 விருதுகளுக்குச் சொந்தக்காரர்.

இவை எல்லாவற்றிற்கும் மேலாக,

யாவையும் பாடிக் கோவையும் பாடுக

என்னும் தொல்மொழிக்கு இணங்க

தான் படித்த, தான் பணியாற்றிய

கரந்தைத் தமிழ்ச் சங்கத்திற்கு

நன்றி தெரிவிக்கும் வகையில்

கரந்தையை இடமாகவும், தமிழ் தெய்வத்தைப்

பாட்டுடைத் தலைவியாகவும் வைத்து,

கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் தொண்டினையும்

தமிழ் வளர்ச்சிப் பணிகளையும்

தன்னலம் கருதாது தமிழ்ப் பணியாற்றிய

தமிழவேள் உமாமகேசுவரனார்

இராதாகிருட்டினன்

ஐ.குமாரசாமி

நாவலர் வேங்கடசாமி நாட்டார்

கரந்தைக் கவியரசு

முதலிய தமிழ் அன்னையுன் தவப் புதல்வர்களைப்

பாராட்டியும் போற்றியும்

ஒரு கோவையை இயற்றினார்.

கரந்தைக் கோவை

மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களுக்குப் பிறகு, கோவை பாடிய ஒரே பாவலர் பெருமகனார் இவர்தான்.

இதுமட்டுமல்ல,

தாயாத் தமிழ்சுரக்குஞ் சங்கத் தமிழ்தூட்டிச்

சேயாய் புரந்தறிவுச் சீரளித்த – தூயபுகழ்

பூக்கும் கரந்தைப்  புலவோர் தமக்குரிமை

ஆக்குதுமிந் நூலை அமர்ந்து

என சற்றும் தயங்காது பாடி, கரந்தைக் கோவையை, கரந்தைப் புலவர்களுக்கு உரிமையாக்கி மகிழ்ந்தார்.

இவர்தான்


பாவலரேறு ச.பாலசுந்தரனார்

18.1.2024

பாவலர் பிறந்த நன்னாள்.

பாவலரின் நூற்றாண்டு நாள்.

     பாவலர் அவர்களை நினைக்கும் பொழுதெல்லாம், 2007 ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் முதலாம் நாள், பாவலர் அவர்கள், இவ்வுலக வாழ்வு துறந்தபோது, பாவலரின் மாணவர்

மகாகவி ஈரோடு தமிழன்பன் அவர்கள்

மீளாத் துயரோடு பாடிய கவி வரிகள்தான் என் நினைவிற்கு வருகின்றன.

தமிழ் கேட்ட ஐயங்களுக்கெல்லாம்

விடைகள் அவர்

தாம்பூலப் பெட்டிக்குள் இருந்தன.

 

ஒட்டுமொத்தப் புலமை

அவரை குத்தகை எடுத்திருந்தது.

 

ஒளி –

ஒரு நூற்பா எழுதினால் அதில்

பாலசுந்தர விளக்கம் உண்மையாய்

இருக்கும்.

உண்மை.

 

ஒரு சொல்லைத்

தமிழில் உச்சரித்தால்

அதன் மைய மண்டபத்தில்

பாலசுந்தர ஆய்வு விருத்திகள்

விதைக்கும்.

 

வாழ்விலும்

இல்லை ஆடம்பரம்.

சாவிலும் இல்லை ஆடம்பரம்.

ஆம், அதுதான் பாலசுந்தரம்.

 

பாவலரேறு உதடுகளை முத்தமிட்ட

மரணம்

இப்போது காலை முதல் மாலை வரை

அவரிடம்

தொல்காப்பியப்

பாடம் கேட்டுக் கொண்டிருக்கிறது.

 


பாவலரேறு ச.பாலசுந்தரனார்

நினைவினைப்போற்றுவோம்.