வீட்டின் முன்
வெறுமை.
வீதி மூளியாகிவிட்டது.
என் தந்தையும்
மறந்து போயிருப்பார்
என் தாத்தாவின் முகத்தை.
மறவாதிருந்த – அந்த
வேப்பமரம்
வெட்டப்பட்டு விட்டது.
அதன் சடலத்தைப்
பார்க்கக் கூடக்
கொடுத்து வைக்கவில்லை நான்.
யாரேனும்
கோடரிக்குக் குறுக்கே போய்
ஒருமுறை தடுத்திருந்தால்கூட
அதன் ஆன்மா ஆறுதல் கண்டிருக்கும்.
படிக்கப் படிக்க மனதில் எதோ ஒரு குற்ற உணர்வு,
மேலெழுந்து நம்மை உலுக்குகிறது. நாமும் நம் வீட்டில் வளர்த்த, அதுவாய் வளர்ந்த எத்தனை
மரங்களை வெட்டியிருப்போம் என்பதை நினைக்கும் பொழுது, குற்ற உணர்வு தலை நீட்டி, நம்மை
உற்றுப் பார்ப்பதைப் புறந்தள்ள முடியவில்லை.
அம்மாவிடம் இருந்த பொருள்கள்
அளவில் அதிகம் இல்லை.
அவள் வாழ்நாள்கள் போல
அவையும் கொஞ்சமானவை.
அம்மா,
அவ்வப்போது பண்டிகை திருவிழா என்றால்
திருமணம் திரட்டி என்றால் கட்டிக் கொள்ளும்
கனமான பட்டுச்சேலை ஒன்று மட்டும்
அவருடைய
பழந்தகரப் பெட்டியில் இருந்தது
பதிவு செய்யப்படாத ஆவணம் போல்.
தடவியபோது என் கைகளில் தட்டுப்பட்டது
சுருக்குப் பை.
அம்மா வாசம் அதில் சேமிப்பாகக் கிடைக்கும்
என்று அவசரமாய் சுருப்க்குப் பையை அவிழ்த்தேன்
அதில் இருந்தது – அம்மா மிச்சம் வைத்திருந்த
மருந்து மாத்திரைகள் வாசம்
மரணம் உகுத்த கண்ணீர் வாசம்.
நாம் அனைவருக்குமே தாய்ப்பாசம் உண்டு. தாயை இழந்த
நம்மில் பலரும், தனிமையில் வேதனையில் சொற்களின்றி சுருண்டு கிடந்திருப்போம். ஆனால்
இவரோ, சோகத்தைக்கூட, சொற்களுக்குள் அடைக்கும் வித்தையைக் கற்றிருக்கிறார். நமக்கும்
சேர்த்தே எழுதியிருக்கிறார்.
இவர் பிறந்த, தவழ்ந்த, வளர்ந்த வீடு ஒன்றும்
அரண்மனை அல்ல.
பல்வேறு தழும்புகளைத் தன் உடல் முழுவதும் சுமந்திருக்கும்
ஓட்டு வீடு.
துபாய்க்குக்
கூலி வேலையாளாகப் போன
அப்பா
எப்போது திரும்புவார் என்பது தெரியாத
நாள் காட்டி
கீறல் விழுந்த சுவரில் …
கட்டட வேலைக்கு அதிகாலையில் போன
அம்மா
எப்போது வருவாள் என்பதைக்
காட்ட முடியாத பழைய கடிகாரம்
உடைந்த மேசை மேலே …
வறுமையே வாழ்வாகிப் போன போதும், தளர்ந்து விடாமல்,
முடங்கிவிடாமல், உழைத்து, ஓயாது உழைத்துத் தன்னைக் காத்து வளர்த்தப் பெற்றோரைத் தெய்வமாய்
போற்றியவர் இவர்.
பெற்றோரைப் போற்ற, நமக்கும் அறிவுறுத்துகிறார்,
வழிகாட்டுகிறார்.
உனக்காக நாளெல்லாம்
ஓய்வின்றி
நடந்த கால்கள் கட்டில்களில்.
அம்மா, அப்பா
கலங்கிய கண்களுக்குள்
ஒரே ஒரு முறை
நடந்து பார்,
அவர் கால்கள் வலிக்காமல் மெல்லத் தடவி
விடு.
அருகமர்ந்து
அவர்களுக்கு ஊட்டி விடு
நீ.
மனிதனாய், மகனாய்
தந்தையாய், மணவாளனாய்
உருகிப் பெருக
ஒரு வாய்ப்பு.
தன் எழுத்தாலும, சொல்லாலும், செயலாலும், தாய்
தந்தையரைப் போற்றும் இவர், இயற்கையைச் சுரண்டி வாழும், இழிகுணத்தோரை தோலுரித்துக் காட்டவும்,
கடுமையாய்ச் சாடவும் தயங்குவதேயில்லை.
மணலைத் திருடு
அலையைத் திருடு
நதியைத் திருடு
சட்டம் காட்டினால்
அலைகளில் தள்ளி
தலைகளை மூடு.
வண்டியைத் தடுத்தால்
நிறுத்திப் பேசு
பேச்சு மீறினால்
ஏற்றிப் பேசு.
கடைசியில்
நாடு என்ன
வெறும் ஓடு.
வந்த விலைக்குத்
தூக்கிப் போடு.
இதுமட்டுமல்ல, பிறர் மீதான அன்பு, பொதுநலம்,
பிறர் துயர், துக்கம், பசி, பிணி, வலி, வாதை, பிறரது இயலாமை, என இவற்றின் மீதான அன்பைச்
செலுத்துவது, வழிகாட்டுவது, அரவணைப்பதுதான் உண்மையான ஆன்மிகம் எனும் கொள்கை உடையவர்.
இவர் காட்டும் ஆன்மிகம் மதம் கடந்தது, சமயம்
கடந்தது.
ஆன்மிகம் என்பது
ஆலய வாசலில்
அள்ளிக் கொள்ளக்
கொட்டிக் கிடப்பதல்ல.
ஆன்மிகம் என்பது
பசித்திருக்கும்
பக்கத்து வீட்டுக்காரரின்
பாத்திரத்தில்
சோறாக ஒருவன் மாறுவது.
அவன்
தாகத்திற்குத் தானே
தண்ணீராவது.
நோவுக்குத் தானே மருந்தாவது.
வழி மறித்தவனுக்குத் தானே
வழியாகும்
பரிணாமம் அடைவது.
தன் கவி வரிகளால், இவர் தொடாத துறையே இல்லை,
பாராட்டுவார், போற்றுவார், தன் மொழிக்கும், நாட்டிற்கும் கேடு எனில் சற்றும் தயங்காது,
இவரது எழுத்துகள் எரிமலையாய் குமுறி வெடிக்கும்.
படித்துக் கொண்டிருக்கும் பொழுதே, யார் இந்தக்
கவி? எனும் கேள்வி உள்ளத்துள் எழுகிறதல்லவா?
வீறு கொண்டு எழும் மனவெழுச்சியைச் சித்தரிப்பதிலும்,
சரியான சொற்களைப் புகுத்துவதில் ஆவேசம் காட்டுவதிலும், வாழ்வியல் தத்துவங்களை யதார்த்த
நடையில், கவிதையின் பாடு பொருளாக்குவதிலும் வல்லவர்.
82 கவிதை நூல்களின்ஆசிரியர்.
3 மொழியாக்க நூல்களின் மொழிபெயர்ப்பாளர்.
இவை எல்லாவற்றிற்கும் மேலாக இளைஞர்.
90 வயது இளைஞர்.
மகாகவி.
நம் கால மகாகவி.
மகாகவி ஈரோடு தமிழன்பன்.
---
நம் கால மகாகவி ஈரோடு தமிழனபன் அவர்களைத் தனது,
தந்தையாகவேப் போற்றி, வார்த்தைக்கு வார்த்தை அப்பா, அப்பா என அன்பொழுக அழைக்கும் இவர்,
மகாகவி ஈரோடு தமிழன்பன் அவர்களுக்காகவே, தன் வாழ்வின் ஒவ்வொரு நாளையும், நாளின் ஒவ்வொரு
நிமிடத்தையும், நிமிடத்தின் ஒவ்வொரு நொடியையும் செலவிட்டு வருபவர்.
இவர்
புதுச்சோரி
இலக்கிய ஆளுமைகளுள் ஒருவர்.
உலகளாவிய
தமிழ் இலக்கியத்தின் உள்ளூர் பதிப்பு இவர்.
கனடாவில்
பன்னாட்டு இலக்கியத் திருவிழா நடத்தியவர்.
சிக்காகோ,
வடகரோலினா, தாலாஸ், அட்லாண்டா,
நியூஜெர்சி,
நியூயார்க் நகரங்களுக்குச் சென்றுத்
தமிழ்ப்
பணியாற்றி வருபவர்.
அமெரிக்காவின்
தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்காக
கொஞ்சம் கதை, கொஞ்சம் இலக்கணம்
எனும்
பெயரில் நூல்களை உருவாக்கி வருபவர்.
எனும்
பெயரில்
மகாகவி
ஈரோடு தமிழன்பனின்
மொத்த
நூல் தொகுப்பையும்
ஒரே
நூலாக்கி வெற்றி கண்ட பெரும் பதிப்பாசிரியர்.
எனும்
பெயரில்,
27
ஆய்வுத் தலைப்புகளின் கீழ்
மகாகவி
ஈரோடு தமிழன்பனின்
வாழ்வினையும்,
எழுத்தினையும்
ஆய்ந்து,
ஆய்ந்து
ஒரு
பெரும் நூல் ஒன்றினை வெளியிட்டு மகிழ்ந்திருக்கிறார்.
இந்த
ஒரு ஆய்வு நூலுக்காகவே
இவருக்கு
ஒரு முனைவர் பட்டம் கொடுக்கலாம்.
இதில் வியப்பு என்ன தெரியுமா?
இவர் ஓர் அறிவியல் பட்டதாரி. பெரும்பாலும், ஆங்கில
வழியிலேயே கல்வி பயின்றவர். இலக்கண இலக்கியங்களை முறையாகக் கற்காதவர்.
இருப்பினும், வாசகனாக, மகாகவி ஈரோடு தமிழன்பன்
அவர்களை வாசித்து, வாசித்து, உள்வாங்கி, உணர்ந்து, இன்புற்று, வியந்து, பல சமயங்களில்
விம்மி அழுது, பித்தன் ஆட்டம் ஆடி… அவர் கவிதைகளிலேய வாழ்ந்து வருபவர்.