23 மார்ச் 2024

பண்பெனப்படுவது

 


தமிழ் வாழ்க வென்பதிலும் தமிழ்வா ழாது

தமிழ்ப் பெயரை வைப்பதிலும் தமிழ்வா ழாது


குமிழ் சிரிப்பைப் பெருஞ்சிரிப்பாய் அவிழ்த்துக் கொட்டுங்

கொக்கரிப்புப் பேச்சாலுந் தமிழ் வாழாதே

அமிழ் கின்ற நெஞ் செல்லாம் குருதியெல்லாம்

ஆர்த்தெழும் உள் உணர்வெல்லாம் குளிரு மாறே

இமிழ் கடல்சூழ் உலகமெல்லாம் விழாக்கொண் டாடி

ஏற்றமிகச் செய்வதிலும் தமிழ்வா ழாதே.

 

செந்தமிழ்செய் அறிஞர்களைப் புரத்தல் வேண்டும்

செப்பமொடு தூயதமிழ் வழங்கல் வேண்டும்

முந்தைவர லாறரிந்து தெளிதல் வேண்டும்

முக்கழக உண்மையினைத் தேர்தல் வேண்டும்

வந்தவர்செய் தீங்குகளால் தமிழர்க் குற்ற

வரலாற்று வீழ்ச்சிகளை எடுத்துக் கூறி

நொந்தவுளஞ் செழித்ததுபோல் புதிய வையம்

நோக்கிநடை யிடல்வேண்டும், தமிழ்தான் வாழும்.

 

தண்டமிழில் பிறமொழியைக் கலந்து பேசுந்

தரங்குறைந்த தமிழ் வழக்கை நீக்கல் வேண்டும்

தொண்டரெலாந் தெருக்களிலே கடைகள் தோறும்

தொங்கு கின்ற பலகைகளை மாற்றச் சொல்லிக்

கண்டு நிகர் தமிழ்ப் பெயர்ப்பால் புதுக்கல் வேண்டும்,

கற்கின்ற சுவடிகளில் செய்தித் தாளில்,

விண்டுரைக்கா அறிவியலில் கலையில் எல்லாம்

விதைத்திடுதல் வேண்டும் தமிழ் வாழும் அன்றே

                                                          -பாவலரேறு பெருஞ்சித்திரனார்

 

     பண்பெனப் படுவது பாடறிந்து ஒழுகுதல் எனும் கலித்தொகையின் பாடல் வரிகளில் இருந்து, பண்பாடு என்ற தூய தமிழ்ச் சொல்லை, நமக்காக உருவாக்கிக் கொடுத்தவர் ரசிகமணி டி.கே.சி., ஆவார்.

     பண்பாடு.

     பண்பாடு என்பது நம் அக வளர்ச்சி.

     ஒழுக்கம்.

     பழக்க வழக்கம் இவையெலாம் பண்பாட்டில் அடங்கும்.

     ஒரு நிலத்தை உழுது சீர் செய்து, விவசாயத்திற்கு ஏற்ற நிலமாக மாற்றிய பிறகு, அந்நிலத்தைப் பண்பட்ட நிலம் என்பர்.

     அதேபோலத்தான் மனிதரிலும்.

     பண்பட்ட மனிதர்.

     ஒரு நிலத்தின் பண்பாட்டுச் சின்னமாய் விளங்குவதில், முதன்மையில் இருப்பது நூலகம் ஆகும்.

     ஓர் இனத்தை அழிக்க வேண்டுமென்றால், அவ்வினத்து மனிதர்களை அழிக்க வேண்டிய அவசியம் இல்லை.

     அவ்வினத்திற்குரிய நூலகத்தை அழித்தாலே போதும்.

     ஒரு சமூகத்தின் பெருமை அதன் கலாசாரம்.

     கலாசாரத்தை அழித்தால், அச்சமூகம் அழியும்.

     இன்று நம் கலாசாரம் மாறிவிட்டது.

     நுகர்வு கலாசாரமாக மாறிவிட்டது.

     உண்பது முதல் உடுத்துவது வரை, எதை உண்ண வேண்டும், எதை உடுத்த வேண்டும் என, நம் வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும், பெரும் பெரும் நிறுவனங்கள் முடிவு செய்கின்றன.

     நாமும் தொலைக் காட்சிப் பெட்டிகளில் ஓயாது வழியும், கவர்ச்சி மிகு விளம்பரங்களை நம்பி, அவர்கள் காட்டும் திசையில் பயணிக்கத் தொடங்கி விட்டோம்.

     இந்நிலை மாறவேண்டும் என்றால், நம் சமூகம் அறிவார்ந்த சமூகமாக உயர வேண்டும், வளர வேண்டும்.

     அறிவு.

     அறிவு வளர, புத்தக வாசிப்பை மேற்கொள்ள வேண்டும்.


தினம்

ஒருவரிதான் படிக்க முடியும்

என்றால்

ஆத்திச்சூடி படி.

 

தினம்

இருவரிகள்தான் படிக்க முடியும்

என்றால்

திருக்குறள் படி.

 

தினம்

மூவரிகள்தான் படிக்க முடியும்

என்றால்

ஹைக்கூ படி.

 

தினம்

நாலு வரிகள்தான் படிக்க முடியும்

என்றால்

நாலடியார் படி.

 

படிக்கவே முடியாது என்றால்

எப்படி?

என்பார் மகாகவி ஈரோடு தமிழன்பன் அவர்கள். இவரே மேலும் கூறுவார்.

பறவைகளோடு பழகி

நீங்கள்

ஒரு பறவையாக முடியாது.

நதிகளோடு பழகி

நீங்கள்

ஒரு நதியாக முடியாது.

பத்துப்

புத்தகங்களோடு பழகிப் பாருங்கள்,

நீங்கள்

பதினோராவது புத்தகமாகப்

படிக்கப் படுவீர்கள்.

இதுமட்டுமல்ல, இன்றும் ஒருபடி,மேலே சென்று சொல்லுவார்.

புத்தகம் படித்தவர்கள்

எல்லாம் அறிவாளிகள் இல்லை.

ஆனால்

அறிவாளிகள் எல்லாம்

புத்தகம் படித்தவர்கள்.

     படிப்பு ஒன்று மட்டும்தான், நம் எண்ணங்களை மேம்படுத்தும், நம் மனதைப் பண்படுத்தும்.

     ஒரு நூல் பல வாசகர்களை உருவாக்கும்.

     பல வாசகர்கள், ஒரு நூலகத்தை உருவாக்குவார்கள்.

     ஒரு நூலகம், பல கற்றறிந்த மனிதர்களை உருவாக்கும்.

     பல கற்றறிந்த மனிதர்கள் சிறந்த சமுதாயத்தை உருவாக்குவார்கள்.

     புத்தக வாசிப்பு மனிதனைச் செம்மைப் படுத்தும்.

     புத்தக வாசிப்பை, நம் தினசரி செயற்பாடுகளுள் ஒன்றாக்கிக் கொள்ள வேண்டும்.

     இன்று வளர்ந்த நாடுகள் அனைத்தும், தாளில் அச்சிட்ட நூல்களைத்தான், தன் நாட்டு மக்களுக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றன.

     ஆனால், நம்மைப் போன்ற வளர்ந்து வருகின்ற நாடுகளோ, எழுத்தை இணையத்தில் காட்டுகின்றன.

     இன்று அலைபேசி நம் இளைஞர்களின் கைகளையும், உள்ளங்களையும் இறுகப் பற்றி இருக்கிறது.

     இளைஞர்களை, அலைபேசியின் பிடியில் இருந்து விடுவித்தாக வேண்டும்.

     இளைஞர்களை விடுவிக்க, நம்மிடம் இருக்கும் ஒரே ஆயுதம் புத்தகம்.

     ஜப்பானில், ஒரு தொடர் வண்டியில், ஒரு தாயும், அத்தாயின் சிறு மகளும் பயணித்துக் கொண்டிருக்கின்றனர்.

     தாய் ஒரு நூலினைப் படித்துக் கொண்டிருக்கிறார்.

     தாயின் மடியில் அமர்ந்திருந்த, அந்தச் சிறுமியின் கைகளிலும் ஒரு நூல்.

     தன்னை மறந்து படித்துக் கொண்டிருக்கிறார்.

     உடன் பயணித்தோர், இக்காட்சியைக் கண்டு வியந்தனர்.

     எப்படி இது சாத்தியமாயிற்று? எனப் புரியாமல் தவித்தனர்.

     இறுதியாய், அந்தத் தாயை அணுகிக் கேட்டனர்.

     தாய் பதில் உரைத்தார்.

     நான் படிப்பதால், என் மகளும் படிக்கிறார்.

     எவ்வளவு எளிய பதில், ஆனாலும் வலிமையான பதில்.

     நாம் சொல்வதை, நம் குழந்தைகள் கேட்க மாட்டார்கள். ஆனால், நாம் செய்வதை அப்படியேச் செய்வார்கள்.

     எனவே, நாம் படிக்கத் துவங்குவோம்.

     பிள்ளைகள் தானே படிப்பார்கள்.

     வீட்டில் சில நூல்களையாவது வாங்கி வையுங்கள்.

     குழந்தைகளின் முன் அந்நூல்களைப் படியுங்கள்.

     நூல்களில் இருந்து, நல்ல நல்லக் கதைகளை எடுத்துக் கூறுங்கள்.

     படிக்கும் ஆவலைத் தூண்டுங்கள்.

     படிக்கும் பொழுது, எழுத்துகள் எழுந்து வந்து, மனத்திரையில், காட்சிகளாய் ஓடும்.

     கற்பனையை வளர்க்கும்.

     கற்பனை.

     கற்பனை, சித்தனையை வளர்க்கும்.

     சிந்திப்பதற்கு புத்தக வாசிப்பு அவசியம்.

     இதில் இருந்துதான், பண்பாடு என்பது, நம் தலைமுறையில் இருந்து, அடுத்தத் தலைமுறைக்குக் கடத்தப் பட்டாக வேண்டும்.

     நாம் படிக்கும் புத்தகத்தை

     நாம் நடந்து கொள்ளும் விதத்தை

     நம் மொழியை

     அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி நமக்குச் சொல்லிக் கொடுத்த செய்திகளை எல்லாம், நாம், நம் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுப்போம்.

     நாம்தான், வாசிக்கவும், வாசிப்பை நேசிக்கவும், நம் குழந்தைகளுக்கு நல் வழி காட்டியாக வேண்டும்.

--

கடந்த 10.3.2024

ஞாயிற்றுக் கிழமை மாலை

ஏடகம்

ஞாயிறு முற்றம்.

தஞ்சாவூர், பூண்டி புட்பம் கல்லூரி விலங்கியல் துறை, உதவிப் பேராசிரியர்


முனைவர் கா.குமார் அவர்கள்

தலைமையில்,

திருவாரூர், வாசிப்புப் பேரியக்க, மாவட்ட ஒருங்கிணைப்பாளர்


நல்நூலகர் மா.ஆசைத்தம்பி அவர்கள்

பண்பாட்டு வளர்ச்சியில் நூலகங்கள்

எனும் தலைப்பில் உரையாற்றினார்.

பசுபதிகோயில்


திரு க.சிவசுப்பிரமணியன் அவர்கள்

நன்றிகூற, பொழிவு இனிது நிறைவுற்றது.

முனனதாக, அரசுப் போக்குவரத்துக் கழக, மேனாள் கண்காணிப்பாளர்


திரு ஜெ.எம்.ஆனந்த் அவர்கள்

பொழிவு கேட்க வந்திருந்தோரை வரவேற்றார்.

தஞ்சாவூர், இந்திய அஞ்சல் துறை அலுவலர்,

ஏடகம், சுவடியியல் மாணவர்


திரு சு.சரவணன் அவர்கள்

விழா நிகழ்வுகளை எழிழுறத்

தன் அழகுத் தமிழால் தொகுத்து வழங்கினார்.

எழுபத்து ஏழு மாதங்கள்

இடைவிடாச் சொற்பொழிவுகளால்,

ஏடகத்தை இனிதாக்கும்

ஏடக நிறுவுநர், தலைவர்


முனைவர் மணி.மாறன் அவர்களை

வாழ்த்துவோம், பாராட்டுவோம்.