30 டிசம்பர் 2014

வேலு நாச்சியார் 6


அத்தியாயம் 6 படை புறப்பட்டது



முதலில் பெரிய மருதுவின் தலைமையில் வாட் படை

குயிலியின் தலைமையில் உடையாள் பெண்கள் படை

சின்ன மருதுவின் தலைமையில் வளரிப் படை

ஒய்யாத் தேவர் படை

வெள்ளிக் கட்டி வைரவன் படை

சிறு வயல் மும்முடியான் படை

சேத்தூர் செம்பியன் படை

மறவமங்கலம் கொங்குத் தேவன் படை


பட்டமங்கலம் கோட்டையம்பலம் படை

திருப்பத்தூர் திருகப்பக் கோன் படை

உருவாட்டி சீமைச் சாமித் தேவர் படை

உறுதிக் கோட்டை ராமச் சந்திரசாமி படை

திருப்பாச் சேத்தி சேருவைகாரன் படை

வாராப்பூர் நன்னியம்பலம் படை

மல்லாக் கோட்டை சேதுபதி அம்பலம் படை

கொடை காத்த உடையான் படை

சமாலி உடையான் படை

சக்கத்தி வேங்கைப் பெரிய உடையாத் தேவர் படை

இறுதியில்

பீரங்கிப் படை

இரண்டு வரிசையாகப் பிரிக்கப் பட்ட, படை வீரர்களின் நடுவில், தேரில் வேலு நாச்சியார்.

படை புறப்பட்டது.

---

    மானா மதுரை வைகை ஆறு.

    ஒரு கரையில் வெள்ளையர் படை, மறு கரையில் வேலு நாச்சியார் படை.

     பிரைட்டன், மார்ட்டின்ஸ், பூரிகான் மூவரும் வெள்ளையர் படைக்குத் தலைமை. பெரிய மருது, சின்ன மருது, குயிலி மூவரும், வேலு நாச்சியாரின் படைக்குத் தலைமை.

       முப்பது பீரங்கிகள், ஆயிரம் துப்பாக்கிகள் வெள்ளையர் வசம். பன்னிரெண்டே பீரங்கிகள், நூறே நூறு துப்பாக்கிகள் வேலு நாச்சியார் வசம்.

      
மனாமதுரை வைகை இன்று




இருப்பினும் சளைக்கவில்லை, வேலு நாச்சியாரின் படை வீரர்கள். நேரம் ஆக, ஆக வைகை ஆற்றுத் தண்ணீரின் நிறம் மெல்ல, மெல்ல சிகப்பாக மாறத் தொடங்கியது. இரத்த ஆறு ஓடத் தொடங்கியது.

      யானையின் மீது வேலு நாச்சியார். இடது கையில் வாளும், வலது கையில் வேலுமாக களம் புகுந்தார்.

      வெள்ளையர்கள் உயிர் பிழைத்தால் போதுமென ஓடத் தொடங்கினர்.

      வேலு நாச்சியாரின் யானை, காளையார் கோயிலை நோக்கி நடை போடத் தொடங்கியது. படைகளும் வேலு நாச்சியாரைத் தொடர்ந்து, வீர முழுக்கம் இட்டபடி, வெற்றி நடை போட்டன.

     எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, காளையார் கோயிலில் காலடி வைக்கிறார் வேலு நாச்சியார்.

      காளையார் கோயில், காளேசன் ஆலயத்தின் முன், வேலு நாச்சியாரின் யானை சிறிது நேரம் நின்றது.

        இதோ, இந்த இடத்தில்தானே, எனது கணவர் முத்து வடுகநாதரும், கௌரி நாச்சியாரும், இரத்த வெள்ளத்தில் மிதந்தனர்.

         இதோ, இந்த மரத்தின் பின், ஒளிந்துதானே, அந்தக் கயவன், பான் ஜோர் சுட்டான்.

          வேலு நாச்சியாரின் விழிகளில்,  கண்ணீர் துளிகள். மறு நிமிடம் வாளை உயர்த்தி வீர முழக்கமிட்டார்.

       ஆங்கிலத் தளபதி ஜோசப் சுமித்துதான் காளையார் கோயிலை ஆண்டு வந்தான். வெறி கொண்டு நுழைந்த வேல நாச்சியாரின், வீரத் தாக்குதலைத் தாக்கு பிடிக்க முடியாமல், வெள்ளையர்கள் சிதறுண்டு ஓடினர்.

        ஆங்கிலத் தளபதி ஜோசப் சுமித், குதிரையில் ஏறி பறந்து மறைந்தான்.

      வேலு நாச்சியாரும், மருது சகோதரர்களும், முத்து வடுக நாதரும், கௌரி நாச்சியாரும் அடக்கம் செய்யப் பெற்ற இடத்திற்குச் சென்று, கண்ணீர் மழ்க அஞ்சலி செலுத்தினர்.

         வீரர்களே, நாம் இழந்த மூன்று பகுதிகளை, ஆங்கிலேயர்களிடமிருந்து கைபற்றியபின், மன்னரின் நினைவிடத்தில் நின்று கொண்டிருக்கிறோம்.

    சிவகங்கைப் பகுதியின் மீதிப் பகுதிகளையும் கைப்பற்றியவுடன், மறைந்த மன்னருக்கும், இளைய ராணிக்கும், இவ்விடத்தில் நினைவாலயம் எழுப்புவோம்.

     இப்பொழுது சிவகங்கை நோக்கிப் புறப்படுவோம், வாருங்கள் வீரர்களே, வெற்றி நமதே.

      வேலு நாச்சியாரின் படை சிவகங்கை நோக்கிப் புறப்பட்டது.

                 வழியில் ஒரு காட்டுப் பகுதி. ஓர் பாழடைந்த கோயில். வேலு நாச்சியாரின் குதிரை நின்றது. அந்தப் பாழடைந்த கோயிலையே வேலு நாச்சியாரின் விழிகள், இமைக்க மறந்து உற்று நோக்குகின்றன.

      நினைவலைகள் பின்னோக்கிப் பறக்க, வேலு நாச்சியாரின் கண்கள் கலங்குகின்றன. விழிகளில் இருந்து வழிந்தோடும் நீர், கன்னங்களை நனைக்கின்றன.

     உட்ன் வந்த வீரர்கள், காரணம் புரியாது திகைக்கின்றனர். விழிகளின் கண்ணீரைத் துடைத்துக் கொண்ட வேலு நாச்சியார், வீரர்களின் பக்கம் திரும்பினார்.

    வீரர்களே, இந்த இடத்திற்கு வந்ததும், என்னால் கண்ணீரை அடக்க இயலவில்லை. என் கண்ணீருக்குக் காரணம் இருக்கிறது வீரர்களே, காரணம் இருக்கிறது. இக் கண்ணீரின் பின்னணியில் ஒரு தியாக வரலாறு ஒளிந்திருக்கிறது.

     வீரர்களே, நாம் நின்றிருக்கும் இவ்விடத்தின் பெயர் ஆரியாகுறிச்சி என்பதாகும். எட்டு ஆண்டுகளுக்கு முன், என் கணவரை, காளையார் கோயிலில் கொன்ற ஆங்கிலேயர்கள், என்னையும் தீர்த்துக் கட்ட திட்டம் போட்டனர்.

     அமைச்சர் தாண்டவராயன் பிள்ளையின் அறிவுரையின்படி, ஆளுக்கொரு திசையில் பிரிந்து சென்றோம். அப்பொழுது, இதோ, இந்த இடத்தில்தான், உடையாள் என்னும் ஒரு வீரப்பெண், என்னை வழிமறித்து, திசை மாறிச் செல்ல அறிவுறுத்தி, ஆங்கிலேயர்களிடமிருந்து என்னைக் காப்பாற்றினார்.

     அதற்காக அவளுக்கு, வெள்ளையர்கள் அளித்த பரிசு என்ன தெரியுமா? பெண் என்றும் பாராமல், அவரை தலைவேறு, முண்டம் வேறாக வெட்டிப் போட்டனர். இதோ, இந்த இடத்தில்தான், உடையாளின் தலை மண்ணில் உருண்டோடியது.

      அவ்வீர மங்கையின் நினைவாகத்தான், நமது பெண்கள் படைக்கு உடையாள் படை எனப் பெயரிட்டேன்.

      வீரர்களே, என்னைக் காக்க, தன் இன்னுயிரையே தந்த, இந்த வீர மங்கை என்றென்றும் போற்றப்பட வேண்டியவர். நாள் தோறும் கோயிலில் வைத்து வணங்கப்பட வேண்டியவர்.

       இவ்விடத்தில் நாள்தோறும் பூசைகள் நடத்தப்பட வேண்டும். உடனடியாக இங்கே ஒரு கோயில் எழுப்பப் பெற்றாக வேண்டும். அதற்காக இவ்விடத்தின் அருகிலுள்ள உடைவயல், கொல்லங்குடி, அரியாகுறிச்சி கிராமங்களைத் தானமாக வழங்குகின்றேன்.

      என் கணவர் இறந்த பிறகும், அவர் என் கழுத்தில் கட்டிய வைரத் தாலியை, உடையாளுக்காகத்தான், உடையாளுக்காக எழுப்பப்பெற இருக்கின்ற, இக்கோயிலுக்காகத்தான், இத்தனை ஆண்டுகளாய் பத்திரமாய் பாதுகாத்து வருகின்றேன்.

     இதோ என் தாலி. என் முதல் காணிக்கை.

                                                        - தொடரும்


வெட்டுடையாள் காளி அம்மன்
வெட்டுடையாள் காளியம்மன் கோயில்


குறிப்பு

       நண்பர்களே, உடையாளின் வீரத்தையும், தியாகத்தையும் போற்றும் வகையில், எழுப்பப் பெற்ற கோயில்தான்

அரியாக்குறிச்சி
வெட்டுடையாள் காளியம்மன் கோயில்.

      இக்கோயில், இன்றும் தலை நிமிர்ந்து கம்பீரமாய், உடையாளின் வீரத்திற்கு, தியாகத்திற்கு சாட்சியாய் விளங்கி வருகின்றது.

      வேலு நாச்சியார் வழங்கிய வைரத் தாலி,  இன்றும், இக்கோயிலில் போற்றி பாதுகாக்கப் பெற்று வருகிறது.