13 அக்டோபர் 2023

யாரையோ நீ


நீர்வார் கண்ணை எம்முன் வந்தோய்

யாரை யோநீ மடக்கொடி யோய்

பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன், தன் அவையில், தலைவிரி கோலமாய், கண்கள் கண்ணீர் சிந்த, வந்து நிற்கும், கண்ணகியைக் கண்டு, கண்களில் நீர் வடிய நிற்கும் பெண்ணே நீ யார் என்று கேட்டான்.

தேரா மன்னா செப்புவ துடையேன்

……….

வாழ்தல் வேண்டு, ஊழ்வினை துரப்ப

சூழ்கழல் மன்னா, நின்நகர் புகுந்து, இங்கு

என்கால் சிலம்பு பகர்தல் வேண்டி, நின்பால்

கொலைக்களப் பட்ட கோவலன் மனைவி

கண்ணகி என்பது என் பெயரே

     கள்வன் எனக் கருதி, உன்னால் கொல்லப்பட்ட கோவலன் மனைவி கண்ணகி நான் என முழங்கினாள். மன்னனோ,

கள்வனைக் கோறல் கடுங்கோல் அன்று

     கள்வனைக் கொல்லுதல் குற்றம் அல்லவே என்றான்.

     கண்ணகியின் சீற்றம் அதிகரித்தது.

நற்றிறம் படராக் கொற்கை வேந்தே

என்காற் பொறிசிலம்பு மணியுடைய அரியே

     என் கால் சிலம்பில் உள்ளது மாணிக்கப் பரல்கள் என்றாள்.

     மன்னனோ, என் தேவியின் சிலம்பில் உள்ளவை முத்துப் பரல்கள் எனக்கூறி, தன் ஏவலரை அழைத்து, கோவலனிடம் இருந்து கைப்பற்றிய, சிலம்பை எடுத்து வரச் செய்து, கண்ணகியின் முன் வைத்தான்.

     கண்ணகி அச்சிலம்பை எடுத்து, மன்னன் முன்னிலையில், ஓங்கி அடிக்க, அச்சிலம்பினுள் இருந்த மாணிக்கப் பரல்களுள் ஒன்று, மன்னனின் வாயிதழில் பட்டுத் தெறித்தது.

     மன்னன் உண்மை உணர்ந்தான்.

     அதிர்ந்தான்.

யானோ அரசன்? யானே கள்வன்.

கெடுக என் ஆயுள்

என்றான், அடுத்த நொடி மயங்கி வீழ்ந்தான், இறந்தான்.

     தன் கணவன், தன் கண் முன்னே இறந்தது கண்டு துடித்த, கோப்பெருந்தேவி, மன்னா எனக் கதறி, மன்னனை வாரி அணைத்தாள், தன் உயிரையும் துறந்தாள்.

இவன்தான்

அறம் வளர்த்த தமிழ் மன்னன்.

     பெரும் போர்.

     சோழன் செங்கணானுக்கும், சேரன் கணைக்கால் இரும்பொறைக்கும் இடையே ஒரு பெரும் போர்.

     சோழன் வென்றான்.

     தோல்வியைத் தழுவிய சேரன், குடவாயிற் கோட்டத்தில் அடைக்கப் பட்டான்.

     சிறையில் சேரனுக்குத் தாங்க இயலா தாகம்.

     சிறைக் காவலனை அழைத்து, தண்ணீர் கொடு என்றான்.

     தண்ணீர் கொண்டு வந்த காவலன், தண்ணீரைத் தன் இடக் கையால் கொடுத்தான்.

     இடக் கை நீள்வதைக் கண்ட சேரன், இடக் கையால் கொடுக்கப்படும்  தண்ணீரைக் குடித்து வாழ்வதை விட, செத்து மடிவதே மேல் என்று எண்ணினான்.

     உயிர் பிரிந்தது.

     செய்தியறிந்து ஓடோடி வந்தான் சோழன்.

     வருங்கால வரலாறு தன்னைத் தவறாய் காட்டுமே எனக் கலங்கினான். வேதனையில் வாடினான். வாடிய சோழனும் தன் உயிர் துறந்தான்.

இவன்தான்

அறம் வளர்த்த தமிழ் மன்னன்.

     கண்ணகியின் கதையினைக் கேட்ட சேரன் செங்குட்டுவன், இமயம் வரை படை எடுத்துச் சென்று, கணக விசயரை வென்று, கல் எடுத்து வந்து, கண்ணகிக்குக் கோயில் எழுப்பினான்.

இவன்

அறம் வளர்த்த தமிழ் மன்னன்.

     தன் தம்பி ஆதித்த கரிகாலனைக் கொன்றவர்களின் உறைவிடமாகவும், நஞ்சு தடவிய போர்க் கருவிகளை உருவாக்கும் இடமாகவும் விளங்கிய, காந்தளூர் சாலையை படை கொண்டு அழித்தான் சோழன் ராஜராஜ சோழன்.

திருமகள் போலப் பெருநிலச் செல்வியும்

தனக்கே உரிமை பூண்டமை மனக்கொளக்

காந்தளூர்ச் சாலை கலமருத் தருளி

இவன்

அறம் காத்த தமிழ் மன்னன்

அறம் வளர்த்த தமிழ் மன்னன்.

---

கடந்த 8.10.2023

ஞாயிற்றுக் கிழமை மாலை

ஏடகம்

ஞாயிறு முற்றம்

பொழிவில்

அறம் வளர்த்த தமிழ் மன்னர்கள்

எனும் தலைப்பில் உரையாற்றினார்


கவிஞர் தஞ்சை தீரன்

என்கிற

வழக்கறிஞர் நா.மருதையன் அவர்கள்.

பாபநாசம், உத்தமதானபுரம்,

பணிநிறைவு பெற்ற, மாவட்டக் கருவூல அலுவலர்


திரு சு.அன்பழகன் அவர்கள்

தலைமையில்

நடைபெற்ற பொழிவிற்கு

வந்திருந்தோரை

தஞ்சாவூர், பான்செக்கர்ஸ் மகளிர் கல்லூரி

இளம் அறிவியல், வேதியியல் துறை முதலாம் ஆண்டு மாணவி


செல்வி ச.காவியா அவர்கள்

வரவேற்றார்.

பொழிவின் நிறைவில்,

ஏடகம் சுவடியியல் மாணவி


செல்வி ந.யக்க்ஷினி அவர்கள்

நன்றி கூற விழா இனிது நிறைவுற்றது.

தஞ்சாவூர், பான்செக்கர்ஸ் மகளிர் கல்லூரி

இளங்கலைத் தமிழ் முதலாம் ஆண்டு மாணவி

செல்வி நா.சுபா அவர்கள்

விழா நிகழ்வுகளைத் தொகுத்து வழங்கினார்.

இப்பொழிவின் தொடக்கத்தில்,

     குமரிக் கண்ட வரலாற்றை முறையாக ஆய்வு செய்தால், உலக வரலாற்றில் தமிழர்களுக்கான மதிப்பு உயரும். மூன்று பக்கமும் அகண்ட பண்டைய தமிழகத்தில் உலகளாவிய வரலாற்றைத் தேடும் வகையில் ஆய்வுப் பணி இருக்கும். லெமூரிய என்ற கருதுகோள் தாவரம், விலங்குகள் சார்ந்ததாகவும், குமரிக் கண்டம் என்ற கருதுகோள், இலக்கியங்களில் சொல்லப்பட்ட தரவுகளின் அடிப்படையிலும் அமையும்.

      கடலுக்குள் இழந்த நிலப்பகுதி, மீன்கள் நிறைந்த பகுதி, மனிதர்கள் வாழ்ந்த மறைந்த இடம் போன்றவற்றையும் ஆய்வுக்கு உட்படுத்தினால் மட்டுமே உண்மைத் தகவல்களைப் பெறமுடியும் என்று தொடர்ந்து வற்புறுத்தி வந்தவரும்,

     கடல் மணலில் ஆமைகள் முட்டையிட வருவதன் வழித்தடத்தை பின்பற்றி, தமிழ் கடலோடிகள் உலகம் முழுவதும் பயணித்தது தொடர்பான ஆய்வுகளையும், அழிந்துபோனதாகக் கருதப்படுகிற குமரிக் கண்டம், லெமூரியக் கண்டம் பற்றிய ஆய்வுகளையுய்ம மேற்கொண்ட.

கடலியல் வரலாற்ற ஆய்வாளர்


ஒரிசா பாலு அவர்கள்,

கடந்த 6.10.2023 அன்று

மறைந்ததற்கு.,

இரண்டு நிமிடங்கள்

சொல்லற இருந்து

அஞ்சலி செலுத்தப்பட்டது.

திங்கள் தோறும்

தெவிட்டாதப் பொழிவுகளால்

தமிழமுது படைத்து

தமிழறம் காக்கும்

ஏடகம்,

ஆண்டுகள்

ஆறுதனைக் கடந்து

ஏழை எட்டிப் பிடித்திருக்கிறது.

ஏடகம்

நெஞ்சம் நிமிர்த்தி

தளராது நடைபயில

அயராது உழைக்கும்

ஏடக நிறுவுநர், தலைவர்


முனைவர் மணி.மாறன் அவர்களைப்

போற்றுவோம், வாழ்த்துவோம்.

 

12 கருத்துகள்:

  1. படித்த வரலாறு. நெஞ்சை உருக்கும் வரலாறு்

    பதிலளிநீக்கு
  2. வரலாற்று தகவல்கள் சொல்லிய விதம் அழகு..‌

    பதிலளிநீக்கு
  3. ஒரிசா பாலு அவர்களின் காணொளி ஒவ்வொன்றும் பற்பல தகவல்கள் கிடைக்கப் பெறும்... இரங்கல்...

    பதிலளிநீக்கு
  4. பெயரில்லா13 அக்டோபர், 2023

    காலத்தால் மறக்க முடியாத தமிழ் தொண்டாற்றிய ஐயா ஒரிசா பாலு அவர்களின் இறுதி மூச்சு உள்ளவரை ஆமைகள் சார்ந்த ஆய்வை தொடங்கிய அவர் தமிழுக்கு தொண்டாற்றி தமிழர்களை ஒன்றிணைத்து தமிழை நேசித்த இளைஞர்களை உருவாக்கி ஆய்வு சிந்தனையை அனைவருக்கும் உள்ளும் புகுத்தி விட்டு சென்றுள்ளார் அவர் சென்றார் என்பதை விட நம்மில் தமிழோடு நின்றார் என்று உணர்கிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை. தமிழாய், தமிழ் ஆய்வாய் என்றென்றும் வாழ்வார்

      நீக்கு
  5. ஒரிசா பாலு அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்

    பதிலளிநீக்கு
  6. ஒரிசா பாலு அவர்களுக்கு அஞ்சலிகள்.
    வரலாற்று தகவல் பகிர்வு அருமை.

    பதிலளிநீக்கு
  7. பெயரில்லா15 அக்டோபர், 2023

    அறம் வளர்த்த மன்னர்கள் அறிந்த வரலாறு. நீங்களும் சொன்ன விதம் சிறப்பு.

    கீதா

    பதிலளிநீக்கு
  8. அருமையான அற்புதமான பதிவு---வாழ்த்துகள் !

    "தில்லா"
    கொழும்பு-இலங்கை.

    பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு