திருவையாறு.
நினைத்தாலே போதும் நெஞ்சமெல்லாம் இனிக்கும்.
என் தந்தை பிறந்து, தவழ்ந்து, வளர்ந்த ஊர்.
கரந்தையில் பிறந்தாலும், சின்னஞ்சிறு வயதில், என்னைத் தாலாட்டி வளர்த்த ஊர்.
மாலை நேரங்களில் காவிரி ஆற்று மணலில் ஓடி மகிழ்ந்த நினைவுகள், இன்றும் என் நினைவடுக்குகளில் பத்திரமாய் பதிந்து கிடக்கின்றன.
முதன் முதலாக, என் சித்தப்பாவின் கரம் பற்றி,
வரிசை வரிசையாய் அணிவகுத்து நிற்கும் நூல்களைக் கண்டு வியந்து, தயங்கித் தயங்கி, அருகில்
சென்று தொட்டுப் பார்த்து மகிழ்ந்த, திருவையாற்று நூலகத்தை நினைக்கும் பொழுதெல்லாம்,
இன்றும் அந்தப் புத்தக மணம் என் நாசிக்குள்
நுழைகிறது.
வடவாறு, வெண்ணாறு, வெட்டாறு, குடமுருட்டி, காவிரி
என ஐந்து ஆறுகளைக் கடந்து சென்றடைவதால் மட்டுமே, இவ்வூர் ஐயாறு, திருவையாறு எனப் பெயர் பெற்றது, என்றுதான் இன்றுவரை படித்து உணர்ந்திருந்தேன்.
வேறு ஒரு காரணத்தையும், இப்பொழுதுதான் அறிந்தேன்.
ஐ என்றால் அகன்ற என்ற ஒரு பொருளும் இருக்கிறதாம், எனவே ஐயாறு என்றால் அகன்ற ஆற்றினை உடைய ஊர் என்பதாலும் இவ்வூர்
திருவையாறு என அழைக்கப் பட்டிருக்கலாம் என்பதை அறிந்தேன்.
திருவையாறு.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன், முற்காலச் சோழர்கள் காலத்தில், நாற்பத்தி எட்டாயிரம் வெளிர்குல மக்கள் வாழ,
காவிரிக் கரையோரம் இருந்த காட்டை அழித்து, மனிதர்கள் வாழும் இடமாய் மாற்றிருக்கிறார்கள்.
இரண்டாயிரம் ஆண்டு பழமையான ஊர்.
இராஜேந்திர
சிம்ம வளநாடு.
திருவையாற்றின் முதல் பெயர் இதுதான்.
பின், திரிபுவன
மாதேவி வளநாடு.
பின்னர், ராஜராஜ வளநாடு.
இன்று திருவையாறு.
இன்று நம்மில் பெரும்பாலானோர் திருவையாறு சென்றிருப்போம்.
பேருந்தில், மகிழ்வுந்தில், இரு சக்கர வாகனத்தில்
எனப் பயணித்து திருவையாறு சென்றிருப்போம்.
காவிரி ஆற்றுப் பாலத்தைக் கடந்ததும், திருவையாற்றுப் பேருந்து நிலையம் நம்மை வரவேற்கும்.
கூட்ட நெரிசலில் சிக்கித் தவித்திருப்போம்.
காவிரி ஆற்றுப் பாலத்தில் இருந்து, நம்மை திருவையாற்றுப்
பேருந்து நிலையம் நோக்கி அழைத்துச் செல்லும் சாலையின் பெயர் என்ன தெரியுமா?
ஓடத்துறைத்
தெரு.
ஒரு காலத்தில், காவிரிப் பாலம் மட்டுமல்ல, இன்று
நாம் பயணிக்கும் சாலை கூட இல்லை.
மராட்டிய மன்னர் துளஜா ஆட்சி காலத்தில், 1776 ஆம் ஆண்டு,
திருவையாற்றில், காவிரி ஆற்றினைக் கடந்து செல்வதற்கு, எட்டு ஓடங்கள் இருந்திருக்கின்றன.
காவிரிக் கரையோரம், ஹீஜீர் தோட்டம் என்னும் பெயரில், மராட்டியர் தோட்டம் இருந்தது. இந்த ஹீஜீர் தோட்டத்திற்குள், இரண்டாம் சரபோசி மன்னர் காலத்தில், திவான் வாடா என்னும் பெயரில் ஒரு மாளிகை எழுந்தது.
அருகிலேயே ஒரு ஓடத்துறையும் உருவானது.
திவான் வாடா மாளிகையின் அருகில், ஓடத்துறை உருவான
பிறகு, அங்கொன்றும், இங்கொன்றுமாக இருந்த ஓடங்கள் எல்லாம், இங்கு வந்து ஒன்று கூடின.
பேருந்து நிறுத்தம் போல, ஓடங்களை நிறுத்த ஒரு
துறை, ஓடத்துறை தோன்றியது.
ஓடத்துறை தோன்றிய பிறகு, ஹீஜீர் தோட்டத்தை ஊடுருவி,
திருவையாறு செல்ல ஒரு பாதையை, புத்தம் புதிதாய் வடிவமைத்திருக்கிறார்கள்.
இதுதான்
ஓடத்துறைத் தெரு.
ஓடத்துறையில் இருந்து திருவையாறு செல்லும் தெரு.
இன்று ஓடங்கள் இல்லை.
பேருந்துகள் வந்துவிட்டன.
இருப்பினும், இத்தெரு இன்றும் ஓடத்துறைத் தெருதான்.
ஓடங்கள் மட்டுமே ஓடிய காவிரியில், பாலம் வந்தது
எப்பொழுது தெரியுமா?
திருவையாற்றின் அழகில் மயங்கிய இரண்டாம் சரபோசி, ஐந்து ஆறுகளைக் கடந்து,
காவிரிக் கரையோரம் எழில் மிகுந்த கட்டிடங்களை எழுப்பினார்.
இவரது மகன் இரண்டாம் சிவாஜிக்கும் திருவையாறு
பிடித்துப் போனது.
இவர்களும், இவர்களது சொந்தங்களும், திருவையாற்றில்
அரண்மனைகளையும், சத்திரங்களையும், கோயில்களையும், படித் துறைகளையும் அமைத்தனர். திருவையாற்றை
ஒரு நகரமய் வளர்த்தெடுத்தார்கள்.
அக்காலம், மேலை நாடுகளின் ஆறுகளில், பாலங்கள்
கட்டத் தொடங்கி இருந்த காலம்.
இதை அறிந்திருந்த இரண்டாம் சிவாஜிக்கு, காவிரி ஆற்றின் மீது பாலம் கட்ட வேண்டும் என்ற ஆசை.
ஆனால் அப்பொழுது ஆங்கிலேயர் ஆட்சி.
பாலத்தின் அவசியத்தை அன்றைய ஆங்கிலேயர்களும்
உணர்ந்திருந்தனர்.
பாலம்
கட்டுங்கள், செலவினத்தை நான் பார்த்துக் கொள்கிறேன் என்றார் இரண்டாம் சிவாஜி.
ஆனால், காவிரியானது குடகு தொடங்கி, காவிரிப்
பூம்பட்டினம் வரை, தனக்குத் தோன்றிய போக்கில், கட்டுப்பாடு எதுவும் இல்லாத காட்டு ஆறாக
ஓடிக் கொண்டிருந்த காலம்.
காட்டாறாய், வேகத்தோடும், வீரியத்தோடும் ஓடும்
காவிரியின் மேல் எப்படிப் பாலம் கட்டுவது?
மேஜர்
சிம் என்பவர், 1831 ஆம் ஆண்டு, திருவையாற்றிற்கு
மேற்கே இருக்கும், வடுகக்குடி எனப்படும்
வடக்குடியில், காவிரி ஆற்றில் ஒரு மணற் போக்கியினைக்
கட்டினார்.
இம்மணற் போக்கி இன்றும், வடுகக்குடியில் இருக்கிறது.
இதுதான் ஆங்கிலேயப் பொறியாளர்கள் காவிரி ஆற்றின்
மேல் கட்டிய முதல் கட்டுமானம்.
மணற் போக்கியினை வெற்றிகரமாகக் கட்டி முடித்த
அவ்வாண்டே, அகன்ற காவிரியில் பாலம் கட்டுவதற்கு முன், முன் முயற்சியாக, அகலம் குறைந்த,
கரந்தையின் வடவாற்றில், பாலம் கட்டுவதற்கான முயற்சி தொடங்கப் பெற்றது.
இதனைத் தொடர்ந்து, கரந்தையை அடுத்த பள்ளியக்கிரகாரம் வெண்ணாற்றிலும் ஒரு பாலம்
அமைப்பதற்கானக் கட்டுமானப் பணிகள் தொடங்கின.
ஐந்தாண்டுகள் கடந்த நிலையில், 1836 ஆம் ஆண்டுதான்,
இரு பாலங்களின் பணிகளும் நிறைவுற்றன.
இப்பாலங்கள் கட்டி முடிக்கப்பெற்று, பத்து ஆண்டுகள்
கடந்த நிலையில், 1846 ஆம் ஆண்டுதான், காவிரி ஆற்றில் பாலம் கட்டும் பணி தொடங்கியது.
காவிரியில் மட்டுமல்ல, வெட்டாறு, குடிமுருட்டி
ஆறுகளிலும் பாலங்கள் கட்டப்பெற்றன.
வடவாறு, வெண்ணாறு, வெட்டாறு, குடமுருட்டி, காவிரி
என இந்த ஐந்து ஆறுகளிலும் பாலம் அமைக்க, அன்று ஆன செலவு என்ன தெரியுமா?
ரூ.71,000
இத்தொகை
முழுவதையும், சிவாஜி மன்னரே ஏற்றுக் கொண்டார்.
The Bridge was erected at the exprence of his Highness Magaraja Sivajee Raja of Thanjore A.D 1846-47 Sir H.C.Mongomary Bari and G.F.Bishop Esq Officiating Residents. Captin E.Lawford, Civil Engineer. His Highness has thus by Four Bridges completed the communication between Thanjore and Tiruvaiyar for public good at an expenss of 71,000 rupees.
பல்லக்குகளைச் சுமந்து செல்லவும், புஷ் வண்டிகளும்,
கட்டை வண்டிகளும் ஊர்ந்து செல்வதற்காகவும் கட்டப்பெற்ற இப்பாலம், 150 ஆண்டுகள், இக்கால
கனரக வாகனப் படையெடுப்பையும் தாங்கித்தான் நின்றது.
2003 ஆம் ஆண்டுதான் பழுதடைந்தது.
மீண்டும் ஒரு புதுப்பாலம் கட்டப்பெற்றது.
இதில் சோகம் என்னவென்றால், ரூ.71,000 செலவில்,
சிவாஜி மன்னரின் சொந்தப் பணத்தில் இருந்து கட்டப்பெற்றப் பாலம் என்ற செய்தியினைச் சுமந்து
நின்ற, 150 ஆண்டுகாலக் கல்வெட்டு சிதைக்கப்பட்டு சின்னாபின்னப் படுத்தப் பட்டதுதான்
பெரும் சோகம்.
காவிரி ஆற்றைக் கடந்துவுடன், ஓடத்துறைத் தெருவின்
தொடக்கத்தில்,, இன்றும் உயர்ந்து நிற்கிறது ஒரு
புறாக் கூண்டு.
தஞ்சையை ஆண்டு இரண்டாம் சிவாஜி மன்னரின், முதல்
மனைவி காமாட்சியம்மா பாய் ஷாப்.
இவருக்குக் குழந்தை இல்லை.
குழந்தை பிறந்து, அதுவும் ஆண் குழந்தையாகப் பிறந்தால்தானே,
தனக்குப் பின் அரசாள முடியும்.
எனவே, இரண்டாம் சிவாஜி, சாஸ்திர விற்பன்னர்களை
அழைத்தார்.
அவர்கள் சொன்னப் பரிகாரங்களைச் செய்தார்.
யாகங்களைச் நடத்தினார்.
கோயில்களில் சிறப்பு பூசைகள் செய்தார்.
பிராமணர்களுக்கு அள்ளி அள்ளிக் கொடுத்தார்.
பயனேதும் இல்லை.
ஒரு சாஸ்திர பண்டிதர், ராணிக்கு பறவை தோஷம் இருக்கிறது.
எனவே, அதற்குப் பரிகாரமாக, பறவைகளுக்குக் கூடு
கட்டிக் கொடுக்க வேண்டும்.
பறவைகள் அக்கூட்டில் தங்கி வாழ்ந்து, குஞ்சுகளைப் பொறித்தால், ராணியின் வயிற்றிலும் கரு தோன்றும் என்றார்.
உடனே, சிவாஜி, 1846 ஆம் ஆண்டு, இரு கோபுரங்களை அமைத்தார்.
நான்கு அடுக்குக் கோபுரங்கள்.
பறவைகள் வந்தன.
தங்கின.
மகிழ்ந்தன.
முட்டையிட்டு குஞ்சு பொறித்தன.
பறவை இனம் தழைத்தது.
ஆனால் ராணிக்கு ஆண் குழந்தை பிறக்கவே இல்லை.
அதுமட்டுமல்ல, மராட்டிய ஆட்சியும் தஞ்சை மண்ணில்
இருந்து மறைந்தது.
காவிரி ஆற்றையும், புறா கூண்டினையும், திவான்
வாடா கட்டடத்தையும் கடந்து, ஒடத்துறைத் தெருவில் நடந்து சென்றால், சிறிது தொலைவிலேயே,
வலது புறம் ஓங்கி உயர்ந்து நிற்கிறது சீனிவாச
ராவ் மேனிலைப் பள்ளி.
திரு டி.எஸ்.சீனிவாச ராவ்
1835 ஆம் ஆண்டு, மெக்காலே கல்வி முறை நடைமுறைக்கு வந்து, பள்ளிகள் தொடங்கப் பெற்ற காலத்தில்,
திருவையாறு, சாமராயர் அக்ரஹாரத்தில் வாழ்ந்து
வந்த, பெருநிலக்கிழார் சீனிவாச ராவ் அவர்களுக்கு,
திருவையாற்று மக்களுக்காக, ஒரு பள்ளித் தொடங்க வேண்டும் என்ற ஆவல்.
சீனிவாச ராவ் அவர்கள் பெருநிலக் கிழாராக இருந்த
போதிலும், அவரிடம் பள்ளித் தொடங்குவதற்கானப் போதிய பொருள் வசதி இல்லை.
இருப்பினும், திருவையாற்று மக்களுக்காக ஒரு பள்ளியினைத்
தொடங்கியே தீருவது என்று முடிவெடுத்தார்.
தன் மனைவியிடம் இருந்த, ஒன்றல்ல, இரண்டல்ல, முழுதாய்
125 பவுன் தங்க நகைகளை விற்றார். அப்பணத்தில்
ஒரு பள்ளியைக் கட்டி எழுப்பினார்.
சென்ட்ரல்
ஸ்கூல்.
1886 ஆம் ஆண்டு, மார்ச் மாதம் 3 ஆம் நாள், ஓடத்துறைத் தெருவில் இருந்த, அரண்மனைத் தோட்டத்தின் ஒரு சிறு பகுதியில், சென்ட்ரல் ஸ்கூல் தொடங்கப் பெற்றது.
137 ஆண்டுகள் கடந்த நிலையில், இன்று இப்பள்ளி, தன் நிறுவுநரின் பெயரைப் பெருமையுடன் சுமந்தவாறு, சீனிவாச ராய் மேனிலைப் பள்ளியாக மேன்மை அடைந்து நிற்கிறது.
---
தமிழகத்தின் கல்வி வளர்ச்சிக்கு அடிகோலிய கொடை வள்ளல் பச்சையப்பா முதலியாரை அறியாதவர்கள் இருக்க இயலாது.
ஆனால் பலரும் அறியாத செய்தி ஒன்று உண்டு.
பச்சையப்பா முதலியார், தன் இறுதிக் காலத்தை கழிக்க விரும்பித் தேர்ந்தெடுத்து வந்தது திருவையாற்றிற்குத்தான்.
திருவையாற்று திருமஞ்சன வீதி பச்சையப்பா முதலியார் சத்திரத்தில்தான், 1794 ஆம் ஆண்டு, மார்ச் 31 ஆம் நாள் இயற்கையோடு இணைந்தார்.
இன்றும் இந்தச் சத்திரம் இருக்கிறது.
பாழடைந்து கிடக்கிறது.
இச்சத்திரத்தில் ஒரு கல்வெட்டு, வள்ளல் பச்சையப்பா
முதலியார் இங்குதான் இறந்தார் என்னும் செய்தியைத் தாங்கிவாறு சோகமே உருவாய் நிற்கிறது.
இதுதான் திருவையாறு.
---
என்னடா இவன், திடீரென்று திருவையாற்று புராணம்
பாடத் தொடங்கி விட்டானே என நீங்கள் நினைப்பது புரிகிறது.
கடந்த
21.10.2023 சனிக் கிழமை மாலை,
மக்கள் சிந்தனைப் பேரவையின்,
தஞ்சாவூர் நகர வாசகர் வட்டத்தின் சார்பில்,
மக்கள்
சிந்தனைப் பேரவையின்
மாநில
துணைத் தலைவர்
முயற்சியால்
எனும்
புத்தும் புது நூலின்
நூல்
ஆய்வரங்கம் நடைபெற்றது.
நூலாசிரியர்கள்
நீ.சீனிவாசன்
ஆகியோர்
முன்னிலையில்.
தில்லைத்தானம்
திருமிகு அ.இராமகிருட்டினன் அவர்கள்
நூல்
ஆய்வுரை நிகழ்த்தினார்.
அப்பொழுதே
நூலினை வாங்கி,
அன்றிரவே
படித்தும் முடித்துவிட்டேன்.
காவிரிக் கரையிலே
திருவையாறு
நெஞ்சுக்கு
நெருக்கமான
நூலாக
மாறிப்போனது.
நடந்தாய் வாழி காவேரி
இது
நடுவண் அரசின் ஒரு திட்டத்தின் பெயர்.
மேட்டூர் முதல் காவிரிப்பூம்பட்டினம் வரை, காவிரிக்
கரையோரம் உள்ள
பாரம்பரிய
கட்டிடங்களைப் பழமை மாறாமல் புதுப்பிக்கும் திட்டத்தின் பெயர்.
இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக, ஒரு நிபுணர்
குழு திருவையாறு வந்தபொழுது, வழக்குரைஞர் நா.பிரேமசாயி
அவர்கள், ஓடிப்போய், திருவையாற்றின் பழமையைத் தொன்மையைப் பட்டியல் இட்டிருக்கிறார்.
எழுத்து
வடிவிலான ஆதாரங்களோடு வேண்டுமே என்று கூறி இருக்கின்றனர் குழுவினர்.
அன்றே களத்தில் இறங்கினார்.
செய்திகளைத் திரட்டத் தொடங்கினார்.
ஆதாரங்கள், கல்வெட்டு ஆதாரங்கள், ஓலைச் சுவடி
ஆதாரங்கள், ஏற்கனவே திருவையாறு பற்றி வெளி வந்த நூல்கள் என ஒன்று விடாமல் சேகரிக்கத்
தொடங்கினார்.
இவருக்கு மேலும் ஒரு தணியாத ஆசை.
விரைவில் நடைபெற இருக்கும், இவரது மகன்
பி.அரவிந்தராஜன்
க.பிரியரர்ஷினி திருமணத்தின் போது,
மணமக்களை வாழ்த்த வருகை தரும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், இந்நூலைப் பரிசளித்து,
இதுதான் திருவையாறு, என் திருவையாறு, இப்படியும்
திருவையாறு இருந்தது என மட்டற்ற மகிழ்வோடு முழங்க வேண்டும் என்ற ஆசை.
தான் பிறந்த மண்ணை, இப்படியும் ஒருவர் நேசித்திருக்கிறார்,
நேசித்து வருகிறார் என்பதை எண்ணும்போது வியப்புதான் மேலிடுகிறது.
அலைந்து, அலைந்து, தேடித் தேடி செய்திகளைத் தொகுத்துத்
தொகுத்து, அழகு மிளிரும் படங்களையும் இணைத்து, ஆவணமாக்கி இருக்கிறார்.
படித்தேன்.
நெகிழ்ந்து போனேன்.
திருவையாறு.
என் திருவையாறு.
கும்பகோணத்தைக் கோயில்களின் நகரம் என்பார்கள்.
இதுபோல், திருவையாற்றை அடையாளப்படுத்த முடியுமா?
முடியும் என்கிறார் இவர்.
படித்துறைகளின்
நகரம்.
திருவையாற்றினைத் தன் வடபுறக் கையால், அரவணைத்துச்
செல்லும் காவிரி ஆற்றின் நெடுகிலும், மனிதச் சங்கிலி போல், படித்துறைகள் தொடர்ந்து,
நிமிர்ந்து நிற்கின்றன.
நாயக்க மன்னர்களும், மராட்டிய மன்னர்களும், தங்களது
குடும்பத்திற்காகவும், பொது மக்களுக்காகவும், கட்டியப் படித்துறைகள் ஏராளம். ஆனால்
பல படித்துறைகள் காலவோட்டத்தில் கரைந்து போய்விட்டன.
சாமராயர் படித்துறை
பதினைந்து
மண்டபப் படித்துறை
ஓடத்துறைப் படித்துறை
சாகாஜி படித்துறை
கல்யாண மகால் படித்துறை
மோட்சப் படித்துறை
என
ஒன்றல்ல, இரண்டல்ல, இருபத்து நான்கு படித்துறைகளைப் படங்களோடு, தகுந்த தரவுகளோடு வரலாற்றுச்
செய்திகளோடு பட்டியலிட்டுள்ளார்.
கால வெள்ளத்தில் அடித்துச் சென்றதுபோக, மீதமிருப்பதே
24 படித்துறைகள் எனில், அன்றிருந்த படித்துறைகளின் எண்ணிக்கை நிச்சயமாக ஒரு நூறைக்
கடந்திருக்கும் என்பது திண்ணம்.
திருவையாறு.
படித்துறைகள் மட்டுமல்ல, சத்திரங்களும் ததும்பி
வழியும் ஊர்.
ஆங்கிலேயர் ஆட்சி காலக் கணக்கின்படி, திருவையாற்றில்
முப்பத்து மூன்று சத்திரங்கள் இருந்திருக்கின்றன.
அவற்றுள் மூன்று சத்திரங்கள், இருபத்துநான்கு
மணி நேரமும், அன்னதானம் வழங்கி, எண்ணற்றோரின் பசி போக்கி இருக்கின்றன.
இராமச்சந்திர மேத்தா சத்திரம், பச்சையப்பா முதலியார்
சத்திரம், கல்யாண மகால் என சில சத்திரங்கள் மட்டுமே, தங்களின் பொலிவினை இழந்தாலும்,
இன்றும் நெஞ்சம் நிமிர்த்தி கம்பீரமாய் நிற்கின்றன.
தியாகராஜ
சுவாமிகள் வாழ்ந்த வீடு
தியாகராஜ சுவாமிகள் சமாதி
தியாகராஜ ஆராதணை
தமிழிசை விழாக்கள்
என ஒன்று விடாமல், அனைத்தையும் தொகுத்து நூலாக்கி இருக்கிறார்
இவருக்கு
உடன் இருந்து பேருதவி புரிந்திருக்கிறார்,
தமிழும்,
வடமொழியும் நன்கறிந்த
திரு நீ.சீனிவாசன்.
காவிரிக் கரையிலே
திருவையாறு
ஒரு
வரலாற்று ஆவணம்.
வரும்
தலைமுறையினர்,
இப்படியும் இருந்ததா திருவையாறு
எனப்
படித்து மலைக்க,
உருவாக்கப்
பெற்ற காலப் பெட்டகம்.
படித்துப்
பாருங்கள்.
திருவையாற்றுப்
படித்துறைகளில் அமர்ந்து,
காவிரி
நீரில் கால் நனைத்து,
காவிரி
ஆற்றுக் குளிர்ச்சியும்
திருவையாற்று
வரலாறும்
உடல்
வழி உள்ளத்துள் புகுந்த உணர்வுடன்
வரலாற்று
நிகழ்வுகள் மனதில் ஓட
கரைந்து
போவீர்கள்.
காவிரிக் கரையில் திருவையாறு
பாரதி இலக்கியப் பயிலகம்,
பாரதி இயக்கம்,
19,
வடக்கு வீதி,
திருவையாறு
நூல்
பெற
94434 76740
ரூ.125