இந்தியா முழுமையும் 35 இலட்சம் ஓலைச் சுவடிகள் இருக்கின்றன.
தமிழ்
நாட்டில் மட்டும் 15 இலட்சத்திற்கும் அதிகமான தமிழ்ச் சுவடிகள் உள்ளன.
இந்தியா தவிர, 35 நாடுகளில் ஐம்பதாயிரத்திற்கும்
மேற்பட்ட, தமிழ்ச் சுவடிகள் இருக்கினறன.
இதில் வியப்பிற்குரிய செய்தி என்னவென்றால், தமிழ்ச் சுவடிகளில் 60 சதவீதச் சுவடிகள் மருத்துவச் சுவடிகள்.
வேதனைக்குரிய செய்தி என்னவென்றால், தமிழ்ச் சுவடிகளில், பத்து சதவீதச் சுவடிகள் மட்டுமே இதுநாள்வரை, பதிப்பிக்கப் பெற்று, நூல் வடிவம் பெற்றுள்ளன.
தொல்காப்பியம், நன்னூல், பத்துப் பாட்டு, எட்டுத்
தொகை, திருக்குறள், நாலடியார், தேவாரம், திருவாசகம், பன்னிரு திருமுறைகள், நாலாயிர
திவ்ய பிரபந்தம், இன்னும் பலப் பல இலக்கிய, இலக்கணங்கள் எல்லாம், இந்த 10 சதவீதத்திற்குள்
அடங்கும்.
பத்து சதவீதமே இப்படி என்றால், மீதமிருக்கும்
90 சதவீதமும் பதிப்பாக்கம் பெற்று, அச்சு வாகனம் ஏறி, நூல் வடிவம் பெறுமானால், நினைத்துப்
பாருங்கள்.
தமிழ் மொழியின் தொன்மையினை, பெருமையினை, இவ்வுலகே
கண்டு வியக்கும் அல்லவா.
அப்படியானால், மீதமிருக்கும் ஓலைச் சுவடிகளையும்
பதிப்பிக்க வேண்டியதுதானே, பதிப்பிப்பதில் அப்படி, என்னதான் தடை உள்ளது என்ற கேள்வி
எழுகிறதல்லவா?
தடை ஒன்றே ஒன்றுதான்.
ஓலைச் சுவடிகளைப் படிக்கத் தெரிந்தவர்கள் மிக,
மிக, மிகக் குறைவு.
வியப்பாக இருக்கிறதல்லவா?
தமிழ்ச் சுவடிகளில் இருப்பதைப் படிப்பதில் என்ன
கடினம் இருக்க முடியும்?, என்ற கேள்வி எழுகிறதல்லவா.
சுவடிகளைப் படித்துப் பார்த்து, எழுதுவதில் உள்ள
சிக்கல்களைப் பற்றி, தமிழ்த் தாத்தா உ.வே.சா.,
அவர்கள் கூறுவதைக் கேளுங்கள்.
இது
கொம்பு, இது சுழி என்று வேறு பிரித்து அறிய முடியாது.
மெய்யெழுத்துக்களுக்குப் புள்ளியே இருக்காது.
ரகரத்துக்கும், காலுக்கும் வேற்றுமை தெரியாது.
சாபம், சரபமாகத் தோன்றும்.
சரபம், சாபமாகத் தோன்றும்.
ஓரிடத்தில் சரடு என வந்திருந்த வார்த்தையை, நான்
சாடு என்றே பலகாலம் எண்ணி வந்தேன்.
தரன் என்பதை தான் என்று நினைத்தேன்.
இடையின ரகரத்துக்கும், வல்லின ரகரத்துக்கும்
பேதம் தெரியாமல் மயங்கிய இடங்கள் பல.
திருவாவடுதுறை மடாலயத்தில் ஒரு சுவடியின் மேல்
எட்டுத் தொகை என அதன் பெயர் குறிக்கப்
பெற்றிருந்ததாம். சங்க இலக்கியங்களாகிய எட்டுத் தொகைதான் அது. ஆனால் அப்படி ஒரு தொகுதி
உண்டு என்பதை அறியாத காரணத்தாலும், பண்டைய தமிழ் எழுத்துக்களில் எ, ஏ வித்தியாசம் இல்லாததாலும், ஏதோ ஏடுகளின்
தொகுதி என்ற கருத்தில் ஏட்டுத் தொகை என
எழுதப் பெற்றதாக நினைத்தாராம்.
பண்டைத்
தமிழ் நூல்களைப் பதிப்பித்துப் புகழ் பெற்ற திரு
சி.வை.தாமோதரம் பிள்ளை அவர்கள் ஒரு இடத்தில், ஏட்டுச் சுவடிகள் படிக்கும்போது நான் பட்ட கஷ்டங்களைக் கூறி உணர்த்த இயலாது.
இந்த அனுபவங்களுக்கு எனக்கு ஐயர் அவர்களும், அவர்களுக்கு நானுமே சாட்சி எனக் குறிப்பிட்டுள்ளார்.
அச்சு நூல்கள் வராத அக்காலத்தில், ஏட்டில் எழுதியும்,
படித்தும் வந்தபோதே இந்தக் குழப்பங்கள் இருந்தன எனில் இக்காலத்தில், அச்சு நூல்களை
மட்டுமே படித்துப் பழக்கப்பட்ட மாணவர்களால், ஓலைச் சுவடிகளைப் படிக்க இயலுமா என்பதை
எண்ணிப் பாருங்கள்.
இயலாதுதான்.
ஓலைச் சுவடிகளைப் படிக்கத் தனியே பயிற்சி பெற
வேண்டும்.
இந்த மாபெரும் பணியினைச் செய்வதற்காக, ஓலைச்
சுவடிகளைப் படிப்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கத் தனியொரு மனிதராகக் களத்தில் இறங்கி,
ஓர் உயரிய, உன்னத அமைப்பினை நிறுவிப் போராடி வருகிறார் ஒருவர்.
முனைவர்
மணி.மாறன்.
இவர், உலகப் புகழ் பெற்ற, தஞ்சாவூர், சரசுவதி மகால் நூலகத்தில், தமிழ்ப்
பண்டிதராகப் பணியாற்றி வருகிறார்.
ஓலைச் சுவடிகளைப் படித்துப் படியெடுத்துப் பதிப்பித்து,
நூலாக்குவதில் வித்தகர்.
அழகரந்தாதி.
தமிழறி மடந்தை.
சரபேந்திர பூபாலக் குறவஞ்சி
அறப்பளீசுர சதகம்.
திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி.
வாகட அகராதி
முதலான நூல்களை சரசுவதி மகால் நூலகத்திற்காகப்
பதிப்பித்துள்ளார். இவை தவிர முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களின் ஆசிரியர்.
மேலும், இவர் தஞ்சை, தமிழ்ப் பல்கலைக் கழக, சுவடியியல் பாடத் திட்டக்குழு உறுப்பினர். தமிழ்நாடு
அரசு மாநில சுவடிகள் இயக்கக உறுப்பினர். தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை, திருக்கோயில்கள்
மறுசீரமைப்புக்குழு உறுப்பினர்.
கடந்த பத்து ஆண்டுகளாக, சரசுவதி மகால் நூலகத்தின்
சார்பில் நடத்தப்பெறும், தமிழ்ச் சுவடியியல்
பயிலரங்கின் ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றி, எண்ணற்ற இளைஞர்களுக்கு, சுவடி படிப்பு,
சுவடிப் பதிப்புப் பணியைக் கற்றுக் கொடுத்து வந்த இவருக்கு, திடீரென்று ஓர் எண்ணம்.
சுவடிப் பயிலரங்குப் பயிற்சியை ஆண்டுக்கு ஒரு
முறை நடத்துவதற்குப் பதிலாக, ஆண்டு முழுமையும் நடத்தினால் என்ன? என்ற எண்ணம்.
தண் பெண்டு, தன் பிள்ளை,
சோறு, வீடு, சம்பாத்தியம் இவையுண்டு
தானுண்டு
என்று
வாழும் எண்ணற்ற மனிதர்களுக்கு இடையில், தமிழுக்காக, ஓலைச் சுவடியில் உறங்கும் தமிழுக்காக
வாழ்வது என முடிவு செய்தார்.
சரசுவதி மகால் நூலகத்தில், தன் பணிநேரம் போக,
மீதமிருக்கும் மாலை நேரங்களில் விடுமுறை நாட்களில், தன் ஓய்வு நேரத்தில், ஆர்வமோடு
சுவடி படிக்க விரும்பும் மாணவர்களுக்குச், சுவடி படிக்கக் கற்றுத் தரத் தொடங்கினார்.
இதற்காகவே,
ஆறு ஆண்டுகளுக்கு முன், ஓர் அமைப்பை நிறுவினார்.
அமைப்பின் பெயரைக்கூட, ஆய்ந்துதான் தேர்ந்தெடுத்தார்.
கி.பி.7 ஆம் நூற்றாண்டில் சைவத்திற்கும், சமணத்திற்கும்
இடையே அனல் வாதம், புனல் வாதம் எற்பட்டபோது, வைகை ஆற்றில் விடப்பட்ட ஓலைச் சுவடிகள்,
நீரினை எதிர்த்துப் பயணித்துக் கரை சேர்ந்த இடம்தான் ஏடகம்.
இன்று இவ்வூர் திருவேடகம் என அழைக்கப்படுகிறது.
மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே, இன்றும் திருவேங்கடம்
தலை நிமிர்ந்து நிற்கிறது.
எனவே, ஓலைச் சுவடிகளில் உறங்கும் தமிழைத் தட்டித்
துயிலெழுப்ப, தோற்றுவிக்கப்படும் அமைப்பு ஆகையால், ஓலைச் சுவடிகள் கரையேறிய ஊரின் பெயரையே,
தன் அமைப்பின் பெயராக்கினார்.
ஏடகம்
பிறந்தது.
தஞ்சாவூர், தெற்கு ராஜ வீதி, ஜவுளி செட்டித்
தெருவில் அமைந்திருக்கும், விநாயகர் கோயிலின் சிறு வளாகத்தில் ஏடகம் பிறந்து, தவழ்ந்து,
வளரத் தொடங்கியது.
திங்கள்தோறும், இரண்டாம் ஞாயிற்றுக் கிழமை, ஞாயிறு முற்றம் என்னும் பெயரில், தமிழாய்ந்த
பெருமக்களைக் கொண்டு, சிறந்த பொழிவுகள்.
நாள்தோறும் மாலை நேரத்தில் ஓலைச் சுவடி வகுப்புகள்.
வயது வரம்பு கிடையாது.
ஆர்வம் ஒன்றே தகுதியானது.
பல ஆண்டுகள், கட்டணம் எதுவும் பெறாமல் பயிற்சி
அளித்தார்.
பணியும் பெற்றுக் கொடுத்தார்.
பின்னர், தமிழக அரசின் சான்றிதழோடு பயிற்சி வழங்கினால்,
பிற்காலத்தில், சான்றிதழ் உதவுமே என்னும் எண்ணத்தில், உலகத் தமிழராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து சான்றிதழ் வகுப்புகளை நடத்தினார்.
கடந்த ஆண்டு, திருச்சி, பாரதிதாசன் பல்கலைக் கழகத்தோடு இணைந்து, ஓலைச்
சுவடி வகுப்புகளைத் தொடங்கினார்.
திங்கள்தோறும் நடைபெறும், ஏடகப் பொழிவுகளில்
பங்கு பற்றி வந்த, என் அக்காவின் வாழ்க்கை இணையர், என் அத்தான், சிங்கப்பூர் மேனாள்
தமிழ் விரிவுரையாளர் கவிஞர் ப.திருநாவுக்கரசு
அவர்களுக்கு ஓர் ஆவல் உள்ளத்தே எழுந்தது.
தமிழ்ச் சுவடியியல் பயில வேண்டும் என்ற ஆர்வம்.
என்னையும் அழைத்தார்.
யோசித்தேன்.
நான் யோசிப்பதைக் கண்டவுடன், என்னிடம் சொல்லாமல்,
எனக்கும் சேர்த்துக் கட்டணத்தைச் செலுத்திவிட்டார்.
கட்டணம் கட்டிவிட்டேன் வாருங்கள் என்றார்.
ஆறு மாதங்கள்.
ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில்,
மாலையில் வகுப்பு.
முப்பதாண்டுகள் ஆசிரியராய் பணியாற்றிய நான்,
ஓர் ஆறு மாதங்கள் மீண்டும் மாணவனாய் அமர்ந்து பாடம் படித்தேன்.
ஒவ்வொரு வகுப்பும், தமிழோடு இனிமையாய் நகர்ந்தது.
ஓலைச் சுவடியினைக் கையில் எடுத்துத் தடவிப் பார்த்தபோது,
ஏதோ ஒரு மின்சாரம் உடலில் பாய்ந்தது போன்ற உணர்வு.
சிலிர்த்துப் போனேன்.
புத்தம் புது வகுப்புத் தோழர்கள், தோழியர்கள்
கிடைத்தனர்.
ஆறு மாதங்கள், ஆறு நிமிடமாய் கடந்து போயின.
தேர்வு எழுதினோம்.
வகுப்பு முழுமையும் வெற்றி பெற்றது.
வெற்றி
பெற்றவர்களுக்கானச் சான்றிதழ் வழங்கும் விழா,
கடந்த
15.10.2023 ஞாயிற்றுக் கிழமை மாலை,
ஏடக
நிறுவுநர், தலைவர்
தலைமையில்
நடைபெற்றது.
இவ்விழாவிற்கு
வந்திருந்தோரை,
ஏடகப்
பொருளாளர்,
வரவேற்றார்.
தஞ்சாவூர்,
தமிழ்ப் பல்கலைக் கழக
மேனாள்
உதவிப் பதிவாளர்
வாழ்த்துரை
வழங்கினார்.
ஏடகப்
புரவலர், சிங்கப்பூர் மேனாள் தமிழ் விரிவுரையாளர்
நன்றி
கூறினார்.
இவ்விழாவின்போது,
தஞ்சாவூர்,
தமிழ்ப் பல்கலைக் கழக
ஓலைச்
சுவடித் துறைத் தலைவைர்,
தமிழ்ச்
சுவடியியல் தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்குச்
சான்றிதழ்களை
வழங்கிச் சிறப்புரையாற்றினார்.
---
ஏடகம்
தலை
நிமிர்ந்து நிற்பதற்குக்
காரணம்
ஒரே
ஒருவர்தான்.
முனைவர் மணி.மாறன் அவர்களின் தமிழுள்ளம் அறிந்த
பலர், உறுதுணையாய் உடன் நிற்க முன் வந்தனர்.
திருமதி கோ.ஜெயலெட்சுமி என்பார், பட்டராரி ஆசிரியர்.
சுவடியியலில் புலமை பெற்றவர். இவர் ஏடகத்தின் பொருளாளர் பொறுப்பினை ஏற்றார். சுவடியியல்
வகுப்பில் உடனிருந்து உதவி வருகிறார்.
இவரது கணவர்திரு பி.கணேசன் அவர்கள், ஏடகப் பொறுப்பாளராய் தோள் கொடுத்து உதவி வருகிறார்.
உமா ஆர்ட்ஸ், திரு உ.செந்தில்குமார் என்பார், தன் குடும்பத்தோடு, ஏடகப் பணியில் இரண்டறக்
கலந்து உதவி வருகிறார்.
விநாயகர் கோயில் அறங்காவலர்கள், திரு அப்பாண்டைராஜ், முனைவர் பா.ஜம்புலிங்கம்,
பேராசிரியர் கோ.விஜயராமலிங்கம், திரு பே.வே.நவேந்திரன், திரு எஸ்.சமத்துவராஜன் சம்பத்,
முல்லை பாரதி அச்சகம் திரு வை.இராமமூர்த்தி, வின் பிளக்ஸ் திரு ஜெ.ஜேம்ஸ், அருள் நிதி
சங்கர், திரு வேம்பையன், திரு சு.வீரமணி
போன்ற தமிழன்பர்கள், தங்களின் ஆதரவுக் கரங்களால் ஏடகத்தை அரவணைத்து வளர்க்கப் பேருதவி
புரிந்து வருகின்றனர்.
கடந்த சில ஆண்டுகளாக, சிங்கப்பூர் மேனாள் தமிழ்
விரிவுரையாளர் கவிஞர் ப.திருநாவுக்கரசு
அவர்கள், தன் பொருளாதார உதவியால், ஏடகத்தின் நிதிச் சுமையைக் குறைக்கப் பெரிதும் உதவி
வருகிறார்.
உண்மைத் தமிழார்வத்தோடு, நேர்மையாகத் தமிழ்ப்
பணியாற்ற வருவோரை, தமிழன்பர்கள், தங்கள் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவார்கள் என்பதற்கு,
முனைவர் மணி.மாறன் அவர்களின் அயரா உழைப்பால்,
தளரா முயற்சியால், தன்னலமற்ற சேவையால், ஆறு ஆண்டுகளைக் கடந்திருக்கும் ஏடகம் மிகச்
சிறந்த உதாரணமாகும்.
ஏடகம்
தனித் தன்மையோடும்
தான் கொண்ட கொள்கையில்
சிறிதும் சமரசமின்றி
நெஞ்சம் நிமிர்த்தி
பீடு நடைபோட,
உண்ணும் போதும்
உறங்கிடும் போதும்,
உயிர் உள்ளம்
துடித்திடும்போதும்
சிந்தையெல்லாம்
ஏடகமாய்
செயலாற்றும்
ஏடக நிறுவுநர், தலைவர்
முனைவர் மணி.மாறன் அவர்களைப்
போற்றுவோம், வாழ்த்துவோம்.