01 மார்ச் 2012

எங்கே பாதை? எங்கே பயணம்?



                   என்னருந்  தமிழ்நாட்  டின்கண்
                          எல்லோரும்  கல்வி  கற்றுப்
                   பன்னருங்  கலைஞா   னத்தால்,
                           பராக்கிர  மத்தால்,  அன்பால்
                   உன்னத  இமயம  லைபோல்
                           ஓங்கிடும்   கீர்த்தி   யெய்தி
                   இன்புற்றார்   என்று  மற்றோர்
                           இயம்பக்கேட்  டிடல்எந்  நாளோ?
                                                           - பாரதிதாசன்

       1920 ஆம் ஆண்டு, மைசூர் பல்கலைக் கழகப் பேராசிரியர் ஒருவருக்கு, தங்கள் பல்கலைக் கழகத்திற்கு வந்து பணியாற்றுமாறு கல்கத்தா பல்கலைக் கழகத்தின் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பெற்றது. வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட அப் பேராசிரியர், மைசூர் பல்கலைக் கழகத்தில் தான் ஆற்றி வந்தப் பணியினைத் துறந்து, கல்கத்தா புறப்பட ஆயத்தமானார். புகை வண்டி மூலம் கல்கத்தா செல்ல ஏற்பாடு செய்திருந்தார். பயண நாளும் வந்தது.

       பயண நாளன்று, காலை முதலே, மைசூர் பல்கலைக் கழகத்தில், அப் பேராசிரியரிடம் பயின்ற மாணவர்கள், அவரின் இல்லத்திற்கு முன் குவியத் தொடங்கினர். நேரம் ஆக, ஆக மாணவர்களின் எண்ணிக்கையும் கூடிக் கொண்டே சென்றது. பேராசிரியரை அழைத்துச் செல்வதற்காக, குதிரைகள் பூட்டப்பட்ட கோச் வண்டி, வீட்டின் முன் தயார் நிலையில் நிறுத்திவைக்கப் பட்டிருந்தது.

          பேராசிரியர் வீட்டை விட்டு வெளியே வருகிறார். பேராசிரியர் வாழ்க வாழ்க என மாணவர்கள் முழக்கமிடத் தொடங்குகின்றனர். பேராசிரியரை கோச் வண்டியில் அமர வைக்கின்றனர். வண்டியிலிருந்த குதிரைகளைப் அவிழ்த்து விட்டுவிட்டு, மாணவர்களே கோச் வண்டியை இழுத்துக் கொண்டு புகை வண்டி நிலையம் நோக்கி, தங்கள் பேராசிரியரை ஊர்வலமாக அழைத்துச் செல்கின்றனர். பேராசிரியர் வாழ்க வாழ்க என்னும் முழக்கம் விண்ணை முட்டுகின்றது. இதுநாள் வரை உலகம் கண்டிராத அற்புதக் காட்சி. புகை வண்டி நிலையம் வந்தவுடன், கோச் வண்டியிலிருந்த தங்கள் ஆசிரியரை மாணவர்கள்,தங்களின் தோள்களில் சுமந்து செல்கின்றனர்.

     பேராசிரியர் பயணிக்க வேண்டிய தொடர் வண்டிப் பெட்டியை அடைந்தவுடன் கீழே இறக்கி, வாய் விட்டுக் கதறி அழுதவாறு பேராசிரியருக்கு பிரியா விடை தருகின்றனர். பேராசிரியரும் கலங்கிய விழிகளுடனும், குளிர்ந்த உள்ளத்துடனும், கையசைத்து விடைபெறுகின்றார்.

             குலன்  அருள்  தெய்வம்  கொள்கை  மேன்மை
             கலைபயில்  தெளிவு  கட்டுரை  வன்மை
             நிலம்  மலை  நிறைகோல்  மலர்  நிகர்மாட்சியும்
             உலகியல்  அறிவோடு  உயர்குணம்  யாவும்
             அமைபவன்  நூலறை  ஆசிரியனே
-          நன்னூல்

      பல்கலைக் கழகப் பேராசிரியராகவும், துணை வேந்தராகவும், இந்தியத் தூதராகவும் பணியாற்றி இந்தியக் குடியரசுத் தலைவராகவும் உயர்ந்த இம்மாமனிதர் டாக்டர் எஸ். இராதாகிருட்டினன் ஆவார். இவரது பிறந்த நாளை ஆசிரியர் தினமாக பாரதமே கொண்டாடி மகிழ்கின்றது.

      1944 ஆம் ஆண்டில் ஓர் நாள், இராமேசுவரத்தில் உள்ள ஒரு பள்ளியில், ஆசிரியர் சிவ சுப்பிரமணிய அய்யர் என்பவர் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்குப் பாடம் நடத்திக் கொண்டிருக்கிறார். அன்றைய தினம் கரும் பலகையில், ஒரு பறவையின் படத்தினை வரைந்து, அப்பறவை வானில் எவ்வாறு பறக்கிறது என்பதை மாணவர்களுக்கு விவரித்தார். இறுதியாக மாணவர்களைப் பார்த்து, இதுவரை நான் சொல்லித் தந்த செய்திகள் புரிந்தனவா? சந்தேகம் ஏதேனும் இருக்கின்றதா? என வினவுகிறார்.

     ஒரு பதிமூன்று வயது சிறுவன் எழுந்து. அய்யா தாங்கள் சொல்லிக் கொடுத்தது சரியாகப் புரியவில்லை என்கிறான். மேலும் சில மாணவர்களும் புரியவில்லை என்கின்றனர். மாணவர்களின் பதிலால் சற்றும் கோபமோ, குழப்பமோ அடையாத அவ்வாசிரியர், அன்று மாலையே மாணவர்கள் அனைவரையும், இராமேசுவரம் கடற்கரைக்கு அழைத்துச் செல்கிறார்.

     கடற்பரப்பில் கூட்டம் கூட்டமாய் பறவைகள் பறப்பதைக் காட்டுகிறார். இராணுவ அணி வகுப்பினைப் போல், பறவைகள் வரிசையாய், ஒழுங்குடன், ஆங்கில V எழுத்தின் வடிவத்தில் பறப்பதைக் காட்டுகிறார். பறவைகளின் இறக்கைகளையும், வால் பகுதிகளையும் உற்று நோக்கச் சொல்கிறார். பறவைகள் திரும்பும் பொழுது, இறக்கை மற்றும் வால் பகுதியின் மாற்றங்களை விளக்கி, மாணவர்கள் நேரிலேயே பார்த்து அறியச் செய்கிறார். அனைத்து மாணவர்களும் பறவைகள் பூமியிலிருந்த மேலெழும்பிச் செல்வது, பறப்பது, கீழிறங்குவது முதலான செயல்களையும், அச்செயல்களுக்கு அடிப்படைக் காரணமாக விளங்குகின்ற அறிவியல் உண்மைகளையும் உணர்கின்றனர்.

      அய்யா, தாங்கள் சொல்லிக் கொடுத்தது புரியவில்லை என்று முதன் முதலில் கூறினானே ஒரு சிறுவன், அச்சிறுவனுக்கு அன்றைய நிகழ்வுகள், ஓர் புதிய உலகத்திற்கானக் கதவுகளைத் திறந்து விடுகின்றன. சிறுவனின் கால்கள் கடற்கரை மணலில் பதிந்திருக்க, மனமோ, பறவையினைப் போல் வான் வெளியில் பறக்கத் தொடங்குகிறது. அன்று முதல், பறவைகளைப் போல் வானில் பறந்து திரியும், விமானங்களைப் பற்றியும், விமானத் தொழில் நுட்பம் பற்றியும் படிப்பதனையே, தன் வாழ்வின் நோக்கமாகக் கொண்டு படிக்கத் தொடங்குகின்றான்.

      இச்சிறுவன் பின்னாளில், உலகமே போற்றும் ராக்கெட் விஞ்ஞானியாய் வளருகிறார். இந்தியாவின் குடியரசுத் தலைவராய் உயருகிறார். ஆம், அவர்தான் நம் தாய்த்திருநாட்டின் முன்னாள் குடியரசுத் தலைவர் மேதகு ஏ.பி.ஜெ. அப்துல் கலாம்.

                    கனவு காணுங்கள்  கனவு காணுங்கள்
                    கனவு காணுங்கள் பின்னர்
                    கனவுகளை  எண்ணங்களாய்  மாற்றுங்கள்
                    பின்னர் எண்ணங்களைச் செயலாக்குங்கள்
                    செயலாக்குங்கள்  செயலாக்குங்கள்

என இளைஞர்களைக் கனவு காண அழைத்தாரே, அந்த மாமனிதர், அக்னிச் சிறகுகள் என்னும் தனது சுய சரிதையில் கூறுகிறார், சிவ சுப்பிரமணிய அய்யரும், அய்யாதுரை சாலமனும் பண்படுத்திய ஒரு மாணவனின் கதை இது.

     நல்லாசிரியர் ஒருவரையும், என்றுமே தனது ஆசிரியர்களை மறவாத நல் மாணவர் ஒருவரையும், குடியரசுத் தலைவர்களாய் உயர்த்தி அழகு பார்த்த புண்ணிய பூமி இது.
    
      மாதா, பிதா, குரு, தெய்வம்

      மானுடராய் பிறந்த ஒவ்வொருவரும் போற்றி வணங்க வேண்டியவர்களை வரிசைப் படுத்திய நம் முன்னோர்கள், தெய்வத்தைவிட ஆசிரியரைத்தான் முதன்மைப் படுத்தினர்.

                               கணபதியும் என்குருவும்
                         
                 கனவிலேயும் நான் மறவேன்
                     
         சொல்லிவைத்த வாத்தியாரைச்
                         
                 சொப்பனத்தும் நான் மறவேன்
                     
          நான் ஒரு நாள் மறந்தாலும்
                         
                 நாவொரு நாள் மறப்பதில்லை
                   
           நெஞ்சமொருநாள் மறந்தாலும்
                           
               நினைவொருநாள் மறப்பதில்லை.
                                        .      -தக்கை இராமாயனம்
                                            (நன்றி - ஹரனி பக்கங்கள்)
           ஆசிரியரை வணங்கிய, கல்வியில் சிறந்தோரைப் போற்றிய நமது புண்ணிய பூமியில், இன்று ஒரு ஒன்பதாம் வகுப்பு மாணவன், தனது ஆசிரியரை, வகுப்பறையிலேயே, கத்தியால் குத்தி படுகொலைச் செய்துள்ளான்.

     ஆசிரியரைத் தெய்வமாகவும், தனது வகுப்பறையினைக், கோவிலின் கருவறையாகவும் போற்ற வேண்டிய மாணவன், கோவிலின் கருவறையினையே, தெய்வத்தின் கல்லறையாக மாற்றியிருக்கின்றானே,ஏன்?

     ஏன் இந்த அவல நிலை? அரசுப் பொதுத் தேர்வுகள் நெருங்க, நெருங்க. இங்கொரு மாணவன் தற்கொலை, அங்கொரு மாணவி தற்கொலை என செய்தித் தாட்களில் செய்திகள் தொடர்ந்து வருகின்றனவே. ஏன் இந்த இழி நிலை?

     வாழக் கற்றுக் கொடுப்பதுதானே கல்வி. வாழ்வின் சவால்களையும், சறுக்கல்களையும் சந்திக்கத் தன்னம்பிக்கையினையும், தைரியத்தினையும் தருவதுதானே கல்வி.
 
    கல்வி என்பது ஒருவனின் அகத்து அறிவை மட்டும் வளர்ப்பதாக இருத்தல் கூடாது, கல்வியானது, நற்பண்புகளை வெளிப்படுத்த உதவுவதாக அமைய வேண்டும் என்றல்லவா நன்னூல் அறிவுறுத்துகிறது.

      பொல்ல மரத்ன்  கனக்கோட்டம் தீர்க்கும் நூல்

      அஃதேபோல்  மாந்தர்  மனக்கோட்டம்  தீர்க்கும் நூல்மாண்பு

அதாவது, தூய கல்வியின் நோக்கமே,  மனநலத்தை உருவாக்குவதுதான். ஆனால் இன்றைய மாணவர்களின் மனநலன் விபரீத முடிவுகனை நோக்கியல்லவா பயணிக்கிறது. ஏன்?

     நாடுகளின் தலையெழுத்து, கல்விக் கூடங்களில்தான் தீர்மானிக்கப் படுகிறது என்றாரே பண்டித ஜவகர்லால் நேரு. ஆனால் இன்று கல்விக் கூடங்களில் பயிலும் மாணவர்கள், தங்கள் தலையெழுத்தினைக் கூட நிர்ணயிக்க முடியாதவர்களாக மாறிப் போயிருக்கின்றார்களே, ஏன்?

     மனிதர்களிடம் இயல்பாகவே அமைந்துள்ள தெய்வத் தன்மையை வெளிப்படுத்துவதே கல்வி என்றாரே சுவாமி விவேகானந்தர். இன்று அரக்கத் தன்மையல்லவா வெளிப்பட்டள்ளது. ஏன்?

                   ஊறுகாய்,  உண்ட உணவு செரிக்க
                   உதவும், ஆனால் ஊறுகாய் மட்டும்
                   செரிக்காமல் இருக்கும்.

                   இவைபோலவே ஆசான்  ஆசிரியர்
                   எல்லோரும் மென்மேலும்  படிக்க
                   உதவுவார்.  தான் மட்டும்  அதே
                   வகுப்பாசிரியராய் வாழ்வார்

என்று ஆசிரியரைப் போற்றும் இப்பொன்னான பூமியின் சக்கரங்கள், தடம் மாறிப் பயணிக்கின்றனவே ஏன்?

     நமது கல்வி முறையை, மறு மதிப்பீடு செய்வதற்கான, சுய பரிசோதனை செய்வதற்கான, சீரமைப்பதற்கான காலம் வந்துவிட்டது என்பதனையே, மாணவனின் இக்கொடுஞ் செயல் நமக்கு உணர்த்துகின்றது.

     இன்றைய கல்வி முறையில் தேர்வில் வெற்றி பெறுகின்ற மாணவன், வாழ்வில் தோல்வியுறுகிறான். இந்திய நீதி மன்றங்களில் குவியும் விவாகரத்து வழக்குகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக் கொண்டே செல்கிறது. கல்வி அறிவு பெறாதவர்கள், விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை அணுகினர் என்ற செய்தியை என்றாவது நாம் கேட்டிருக்கின்றோமா? அல்லது செய்தித் தாட்களில்தான் படித்திருக்கின்றோமா? மெத்தப் படித்தவர்களும், இலட்சக் கணக்கில் சம்பாதிப்பவர்களும் மட்டும்தானே விவாகரத்துக் கேட்கிறார்கள். இது மட்டுமா? திருமணம் செய்து கொள்ளாமலேயே, சேர்ந்து வாழுதல் என்னும் புது முறையைத் தற்சமயம் கண்டுபிடித்திருப்பவர்களும் கற்றவர்கள்தானே.

     இப்பண்பாட்டுக் கலாச்சாரச் சிரழிவை, நமது கல்வி முறையால் தடுக்க முடியவில்லையே ஏன்?

     நட்போடு பழகுதல், மனித நேயத்தோடு வளர்தல், பிறர்க்கு உதவுதல், விட்டுக் கொடுத்தல், உடல் நலம் பேணுதல், உள்ளத் தூய்மை காத்தல் முதலான வாழ்வின் அதி முக்கியமான குண நலன்களை மாணவர்களின் உள்ளத்தில், விதைக்கவும் வளர்க்கவும் இன்றைய கல்வி முறை தவறிவிட்டது.

     ஒரு காலத்தில் நம்மை ஆண்ட ஆங்கிலேயர்கள் விட்டுச் சென்ற, கல்வி முறையினைத்தானே இன்றளவும் நாம் பின்பற்றி வருகிறோம். அதையாவது முறையாகப் பின்பற்றினோமா?

     வாரத்தில் ஐந்து நாள் படிப்பு, இரண்டு நாள் ஓய்வு. ஆண்டுக்கொரு முறை கோடை காலங்களில் கல்வித் துறைக்கும், நீதித் துறைக்கும் மட்டும்தான் விடுமுறை என விதிகளை வகுத்துக் கொடுத்தனரே ஆங்கிலேயர்கள். ஏன்?

      மாணவனால் ஓய்வின்றித் தொடர்ந்து கற்க இயலாது. நீதி மன்றங்கள் ஓய்வின்றிச் செயல்படுமேயானால், நீதி பிறழக்கூடும். உடல் உழைப்பை விட, மூளை உழைப்பே அதிகச் சோர்வைத் தரும் என்பதை உணர்ந்து, ஓய்வளித்து, உடலுக்கும் உள்ளத்திற்கும் புத்துணர்ச்சி  ஊட்ட விதிகளை வகுத்தனர் ஆங்கிலேயர்கள். இன்று நமது நாட்டில் கோயில் யானைகளுக்குக் கூட ஆண்டுக்கொரு முறை புத்துணர்வு முகாம் நடத்தப் பெறுகிறது. ஆனால் மாணவர்களுக்கு?

     அங்கிலேயன் வகுத்துக் கொடுத்த விதிகளைப் பின்பற்றாத நாம், என்ன செய்கிறோம்? 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தினை உயர்த்தும் பொருட்டு, தினமும் மாலை 6 அல்லது 7 மணி வரை சிறப்புப் பயிற்சி வகுப்புகள் என்னும் பெயரில், வகுப்புகளை நடத்துகின்றோம்.

      காலை 9 மணிக்குப் பள்ளிக்கு வரும் மாணவனுக்கு மாலை 7 மணி வரை வகுப்புகள், தினமும் ஒவ்வொரு குறுந்தேர்வுகள். ஒவ்வொரு மாணவனும், ஒவ்வொரு நாளும், பத்து மணி நேரங்களைப் பள்ளியில் செலவழிக்கின்றான்.  வீட்டிற்குச் சென்ற பிறகாவது அம்மாணவனுக்கு ஓய்வு உண்டா? வீட்டிற்குச் சென்றபின், பெற்றோர்கள் ஏற்பாடு செய்திருக்கும் தனிப் பயிற்சி வகுப்பிற்குச் சென்றாக வேண்டிய கட்டாயம். பிறகு பள்ளியிலும், தனிப் பயிற்சி வகுப்பிலும் கொடுக்கப்படும் வீட்டுப் பாடங்களை எழுத வேண்டும். மறுநாள் நடைபெறவிருக்கும் சிறு, சிறு தேர்வுகளுக்குப் படித்தாக வேண்டும். இந்நிலை வாரத்திற்கு ஐந்து நாட்களுக்கு மட்டும்தானா? என்றால் அதுதான் இல்லை. வார விடுமுறை நாட்களிலும் பள்ளியில் நடைபெறும் சிறப்புப் பயிற்சி வகுப்புகளுக்கும், தனிப் பயிற்சி வகுப்புகளுக்கும் சென்றாக வேண்டும்.

       முழு ஆண்டுத் தேர்வு முடிந்த பிறகாவது, பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை ஓய்வெடுக்க விடுகிறார்களா? இருக்கவே இருக்கிறது, கோடைகால சிறப்புப் பயிற்சி வகுப்புகள். ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி வகுப்பிற்குப் போ, இந்தி வகுப்பிற்குப் போ, கணிப்பொறி வகுப்பிற்குப் போ, அந்த வகுப்பிற்குப் போ, இந்த வகுப்பிற்குப் போ என துரத்துகின்றார்கள்.

      மாணவனுக்கு ஓய்விற்கு ஏது நேரம்? மாணவப் பருவம் என்பது கவலைகள் இன்றி, வாழ்க்கைச் சுமைகள் ஏதுமின்றி, பறவைகளாய் பறந்து, புள்ளி மான்களாய்த் துள்ளித் திரிய வேண்டிய பருவமல்லவா? சிரித்து மகிழ வேண்டிய பருவமல்லவா? மாணவர்களை சுதந்திரப் பறவைகளாய் பறக்க விட்டோமா? கூண்டுக் கிளிகளாக அல்லவா அடைத்து வைத்துள்ளோம். எத்தனை பெற்றோர்களுக்கு, தங்களது மகனின் ஆசைகள் என்ன?, விருப்பங்கள் என்ன?, எதிர்கால இலட்சியங்கள் என்ன? என்பது தெரியும். என்றாவது மாணவனின் விருப்பத்தைக் கேட்டிருக்கிறோமா? தங்களது விருப்பங்களையும், தங்களது ஆசைகளையும், தங்களது இலட்சியங்களையும் அல்லவா, அவனிடம் திணிக்கிறார்கள்.

        13 வயது முதல் 17 வயது வரையிலான பருவத்தைக் குமாரப் பருவம் என்று உளவியலாளர்கள் வரையறுத்துள்ளனர். இக்குமாரப் பருவம் என்பது, குழந்தையிலும் சேராத, வளர்ந்த மனிதனிலும் சேராத, ஒரு இடைநிலைப் பருவமாகும். இதனை ஒரு இரண்டும் கெட்டான் பருவம் என்று கூறலாம். உடல் ரீதியிலான பருவ மாற்றங்களை, மாணவ, மாணவியர் உணரத் தொடங்கும் காலம் இதுவேயாகும். மாணவர்களை ஒழுக்கமுள்ளவர்களாகவோ, ஒழுக்கம் குறைந்தவர்களாகவோ உருவாக்கி, அவர்களின் எதிர்கால வாழ்வை நிர்ணயிக்கின்ற பருவம் இது. ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களையும், பெற்றோர் தங்கள் குழந்தைகளையும், அதிக கவனத்துடன் கூர்ந்து நோக்கிச் செம்மைப் படுத்த வேண்டிய பருவம் இது.

          நமது மகன், நம்மைப் போலவே, தசையும், இரத்தமும், இதயமும், ஆசையும், உயிரும் உள்ள ஒரு மனிதப் பிறவி என்பதனை பெற்றோர்கள் உணர வேண்டும். அவன் பிறந்ததன் நோக்கமே, அவனது வாழ்வை, அவன் அனுபவிக்கத்தானே தவிர, நமது இலட்சியங்களை நிறைவேற்றுவதற்காக மட்டுமே அல்ல என்பதை உணர வேண்டும். பெரும்பாலான பெற்றோர்கள் இதனை மறந்து விடுகின்றனர் அல்லது உணர மறுக்கின்றனர்.

          பீலிபெய்  சாகாடும்  அச்சிறும்  அப்பண்டம்
          சால  மிகுத்துப்  பெயின்

என்று திருவள்ளுவர், இரண்டாயிரும் ஆண்டுகளுக்கு முன்னரே, இன்றைய பெற்றோர்களின் நிலையினை ஊகித்துக் கூறியுள்ளார்.

      மயிலிறகு என்பது மிகவும் மென்மையானது. எடையில்லாதது. எடையில்லாத மயிலிறகுதானே என்று எண்ணி, வண்டியின் மேல், அளவுக்கு அதிகமாக, மேன்மேலும் மயிலிறகை ஏற்றுவோமேயானால், வண்டியின் அச்சாணி முறியும் என்பதே இக்குறளின் பொருளாகும்.

     சின்னஞ்சிறு சிறுவர்களின் மீது, பாடச்சுமையானது, தொடர்ந்து ஏற்றப்படுமேயானால், திணிக்கப்படுமேயானால், மனம் என்னும் விந்தை வெளியின் எல்லைக் கோடு, மீறப்படுமேயானால், சிறுவர்களின் பிஞ்சு மனம் பேதலிக்கும், விபரீத முடிவினை எடுக்கும், செயற்படுத்தும் என்பதனையே, ஒன்பதாவது  மாணவனின் கொடுங்செயல் நமக்கு உணர்த்துகிறது.
   
     எனவே இன்றையக் கல்விக் சூழலில், மாணவர்கள் மகிழ்ச்சியாக இல்லை என்பது, உள்ளங்கை நெல்லிக் கனிபோல், தெள்ளத் தெளிவாக விளங்குகிறது.
 
             ஈதல்  இயல்பே  இயம்பும்  காலைக்
             காலமும், இடமும்  வாலிதின்  நோக்கி
             சிறந்து  இருந்துதன்  தெய்வம்  வாழ்த்தி
             உரைக்கப் படும்  பொருள்  உள்ளத்  தமைந்து
             விரையான்  வெகுளான்  விரும்பி  முகமலர்ந்து
             கொள்வோன்  கொள்வகை  அறிந்தவன்  உளங்கொள
             கோட்டமில்  மத்தின்கால்  கொடுத்தல்  என்ப
                                              (பொள் பாயிரம் 36)
     ஆசிரியர் என்பவர் பொழிவான தோற்றுத்துடன், பாடம் தொடங்கும் முன், இறைவனை வாழ்த்தி, மனதை ஒருமுகப்படுத்தித் தொடங்க வேண்டும். மாணவர்களின் இடையூறுகளுக்குக் கோபம் கொள்ளாமல், மாணவர்களைக் கவரும் வகையில், முக மலர்ச்சியுடன் கல்வி கற்பிக்க வேண்டும் என்றல்லவா நன்னூல் நயம்பட உரைக்கின்றது.

     எனவே, இன்றைய கல்வி முறையில் ஆசிரியர்களாவது முகமலர்ச்சியோடு, மகிழ்ச்சியாக இருக்கின்றார்களா? என்றால் அதுவும் இல்லை. மாணவன் நாளொன்றுக்கு பத்து மணி நேரத்தினைப் பள்ளியில் செலவிடுகிறான் என்றால், ஆசிரியர் பதினோரு மணி நேரத்தைச் செலவிட வேண்டியிருக்கிறது. மாணவர்கள் வருவதற்கு முன்பே, பள்ளிக்கு வர வேண்டும். மாணவர்கள் சென்ற பின் பள்ளியை விட்டுச் செல்ல வேண்டும். விடுமுறை நாள் என்பதே கிடையாது. அபூர்வமாய் என்றாவது விடுமறை கிடைத்தாலும், மாணவர்களின் விடைத்தாட்களை மதிப்பீடு செய்ய வேண்டிய பணி காத்திருக்கும். ஒவ்வொரு நாளும் வகுப்பறைச் செயற்பாடுகளைத் திட்டமிட்டாக வேண்டும். நாள்தோறும் சிறு, சிறு தேர்வுகள் நடத்தியாக வேண்டும், விடைத்தாட்களை மறுநாளேத் திருத்தி, மாணவர்களின் குறைகளைக் களைந்தாக வேண்டும், தவறுகளைத் திருத்தியாக வேண்டும்.

       தங்களுக்கும் ஒரு குடும்பம் இருக்கிறது, தங்கள் மகனும், மகளும் படிக்கின்றார்களே என்று எண்ணி, தங்களின் குடும்பத்திற்கு உதவக்கூட ஆசிரியர்களுக்கு நேரமில்லை என்பதே, இன்றைய நிதர்சன உண்மை.வாழ்வியல் யதார்த்தம்.

     காலாண்டுத் தேர்வில், அரையாண்டுத் தேர்வில், திருப்புதல் தேர்வில், மாதாந்திரத் தேர்வில் மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் குறைந்துள்ளதே ஏன்? தேர்ச்சி சதவீதத்தை உயர்த்த என்னென்ன நடவடிக்கைகளை எடுத்துள்ளீர்கள் என ஆசிரியரைத் தலைமையாசிரியர் கேட்கிறார். பள்ளி நிர்வாகம் கேட்கிறது. தொழிற்சாலைகளில் இயந்திரங்களின் உற்பத்தியைப் பெருக்க இலக்கு நிர்ணயிக்கலாம். மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்திற்கு இலக்கு நிர்ணயிக்கலாமா? இவர்கள் என்ன இயந்திரங்களா?

      ஆசிரியர் பாவம் என்ன செய்வார்? மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கிறார், பயிற்சி அளிக்கிறார், ஆறுதல் வார்த்தைகளால் உற்சாகப் படுத்துகிறார். ஆசிரியர் முயன்று கொண்டேயிருக்கிறார். ஓயாமல் உழைத்துக் கொண்டேயிருக்கிறார். எனவே இன்றைய கல்வி முறையில் ஆசிரியர்கள் மகிழ்ச்சியாக இல்லை.

      பள்ளி நிர்வாகமாவது மகிழ்ச்சியாக இருக்கிறதா என்றால் இல்லை. அந்தப் பள்ளி மாணவர்கள் நூறு சதவீத தேர்ச்சி பெற்றுள்ளார்களே? நம் பள்ளி மாணவர்கள் நூறு சதவீதத் தேர்ச்சி பெறவில்லையே என்ற வருத்தம். எனவே பள்ளி நிர்வாகமும் மகிழ்ச்சியாக இல்லை.

      கல்வி அலுவலர்களாவது மகிழ்வாக இருக்கின்றார்களா என்றால், அதுவும் இல்லை. தமிழ் நாட்டில் மொத்தம் 31 மாவட்டங்கள் இருக்கின்றன. மாவட்ட வாரியான தேர்ச்சி விழுக்காட்டில், நமது மாவட்டம் ஐந்தாவது இடத்தைத்தானே பிடித்துள்ளது, முதலிடத்திற்கு முன்னேறுவது எப்போது? என்ற கவலை. முதலிடம் பெற்ற மாவட்டத்திற்கோ, அதனைத் தக்கவைத்துக் கொள்ளவேண்டுமே என்ற கவலை.

     ஆக மொத்தத்தில் யாருமே மகிழ்ச்சியாக இல்லை. யாருக்குமே மகிழ்வளிக்காத, நிறைவளிக்காத இன்றைய கல்விக் சூழல் தேவையா? இது தொடர வேண்டுமா? ஒரு கனம் சிந்தியுங்கள்.

      மாணவர்களின் அறிவைத் தூண்டுகின்ற, ஆற்றலை வெளிப்படுத்துகின்ற, சிந்தனையினை வளர்க்கின்ற, உடல் நலத்தினைப் பேணிக் காக்கின்ற, மன நலத்தினைப் போற்றிப் பாதுகாக்கின்ற, வாழ்க்கையின் சவால்களைச் சந்திக்க மனத் தைரியத்தை அளிக்கின்ற, குழப்பமான சூழ்நிலையிலும் தெளிவாகச் சிந்திக்கக் கூடிய ஆற்றலை வழங்குகின்ற கல்விமுறை அல்லவா இன்றைய தேவை.

     கல்வியாளர் முனைவர் ச.முத்துக்குமரன் அவர்கள் கூறுவதைக் கேளுங்கள், கல்வி உரிமைச் சட்டத்தில், வயதிற்கு ஏற்ற வகுப்பில் ஒருவனைச் சேர்க்காமல், அறிவுக்குத் தகுந்த வகுப்பில் சேர்க்க வேண்டும் என்று உள்ளது. ஆனால், நாம் இதைத் தலைகீழாகச் செய்கிறோம். 10 வயது மாணவர் 5 ஆம் வகுப்புப் படிக்க வேண்டும்தான். ஆனால், அந்த வகுப்புப் பாடங்களைக் கற்றுக் கொள்ளும்  திறன் இல்லாவிட்டாலும், 5 ஆம் வகுப்பிலேயே உட்கார வைப்பதில் என்ன பயன்?

     தொடர்ந்த முழுமையான தேர்வு முறையை (Continuous and comprehensive Evaluation) அடுத்த ஆண்டிலிருந்து தமிழக அரசு கொண்டுவரப் போவதாக அறிவித்துள்ளது. இதனை முறையாகச் செயல்படுத்தினால் நல்ல பலன் இருக்கும்.

     அடுத்த ஆண்டிலிருந்து நடைமுறைக்கு வரவிருக்கின்ற தொடர்ந்த முழுமையானத் தேர்வு முறையாவது, நமது வருங்காலச் சந்ததிகளைக் காப்பாற்றட்டும், வாழவைக்கட்டும்.

      ஆசிரியர்களின் கொலைகளுக்கும், மாணவ, மாணவிகளின் தற்கொலைகளுக்கும் ஒரு முற்றுப் புள்ளி வைக்கட்டும். புதிய பாரதத்தை உருவாக்கட்டும்.