01 ஜூலை 2012

கணித மேதையின் தப்புக் கணக்கு


          உலகமே கண்டு வியந்த கணித மேதை சீனிவாச இராமானுஜன் ஆவார். ஆனால் இராமானுஜனின் வாழ்க்கைக் காலமோ மிகவும் குறுகியது. முப்பத்து மூன்று ஆண்டுகளே வாழ்ந்து, ஏகலைவனாய் வளர்ந்து, கணிதத்தின் உச்சியைத் தொட்டவர்.

          கணிதமெனும் ஆழ்கடலில் மூழ்கி முத்தெடுக்கத் தெரிந்த இராமானுஜனுக்கு, உலகமே வியக்கும் வன்னம் புத்தம் புதுக் கணிதத் தேற்றங்களை நாளும் கண்டுபிடித்த இராமானுஜனுக்கு, சாதாரண உடலியற் கணக்கு விளங்காமற் போனதுதான் விந்தையிலும் விந்தையாகும்.

                இராமானுஜனின் கணிதத் தேற்றங்களை அஞ்சல் வழிப் பெற்று ஆராய்ந்து, வியப்பின் விளிம்பிற்கேச் சென்ற, இலண்டன் கேம்ப்பிரிட்ஜ் பல்கலைக் கழகப் பேராசிரியர் ஜி.எச்.ஹார்டி அவர்கள்,1913 ஆம் ஆண்டு, இலண்டனுக்கு வருமாறு இராமானுஜனை அழைத்தார். அனால் இராமானுஜன் இந்த கிடைத்தற்கரிய அழைப்பினை ஏற்க மறுத்துவிட்டார். காரணம், அய்யங்கார் வகுப்பில் பிறந்தவர்கள், தங்கள் சமூக விதிகளின் படி கடல் கடந்து செல்லக் கூடாது என்பதுதான்.

     சில நாட்களில் கேம்ப்பிரிட்ஜ் பல்கலைக் கழகப் பேராசிரியர் நெவில் என்பார், ஒரு கணிதக் கருத்தரங்கில் கலந்து கொள்ளும் பொருட்டு சென்னைப் பல்கலைக் கழகத்திற்கு வருகை புரிந்தார். இவ்வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள எண்ணிய ஹார்டி அவர்கள், நெவிலிடம் ஒரு முக்கியப் பொறுப்பினை ஒப்படைத்தார். கணித மேதை இராமானுஜனை எப்படியாவது இலண்டனுக்கு வரச்  சம்மதிக்க வைக்க வேண்டும் என்பதே அப்பொறுப்பாகும்.

இலண்டனில் பி.ஏ., பட்டம் பெற்றபொழுது
         பேராசிரியர் நெவில் அவர்கள் சென்னைப் பல்கலைக் கழக ஆட்சிக் குழு அறையில் இராமானுஜனைச் சந்தித்து, இலண்டனுக்கு வருமாறு அழைத்தபோது, இலண்டனுக்கு வர தனது இசைவினை வழங்கி நெவிலை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார் இராமானுஜன். இதற்குக் காரணம், இராமானுஜன் எழுத்தராகப் பணியாற்றிய, சென்னைத் துறைமுகக் கழகத்தின் தலைவர் சர் பிரான்சிஸ் ஸ்பிரிங் மற்றும் நாராயண அய்யர் போன்றவர்கள், இந்தியாவில் இருக்கும் வரை உன் திறமை வெளிப்பட வாய்ப்பேயில்லை, இலண்டன் சென்றால்தான் உன் திறமையை இவ்வுலகு அறியும் என்று தொடர்ந்து வற்புறுத்தி வந்ததால், தனது கொள்கையை, சிறிது தளர்த்தி இலண்டன் சென்றார். உலக அளவிலான புகழ் அவரை நாடி வந்தடைந்தது.

      இராமானுஜன் இலண்டனுக்குச் சென்ற ஆண்டு 1914. இராமானுஜன் இலண்டன் சென்ற சில மாதங்களிலேயே முதலாம் உலகப் போர் தொடங்கியது. போரின் தொடக்கத்தில் இராமானுஜனுக்குப் பாலும், காய்,கனிகளும் தடையின்றிக் கிடைத்தன. நாட்கள் செல்லச் செல்ல சைவ உணவுப் பொருட்கள்  கிடைப்பது பெரிதும் கடினமாயிருந்தது. இதனால் குறிப்பிட்ட நேரத்தில் உணவு உண்ணும் பழக்கம் இராமானுஜனை விட்டு விலகத் தொடங்கியது.

      1917 ஆம் ஆண்டு, மிகவும் உடல் நலம் குன்றிய இராமானுஜன், ஹில் குரோப் நகருக்கு அருகே உள்ள, மென்டிப் சானிடோரியத்தில் சேர்க்கப் பட்டார். இங்கு, இராமானுஜனுக்குக் காசநோய் இருப்பது கண்டறியப்பட்டது.

      விட்டமின்-டி சத்துக்குறைவே காசநோய்க்குக் காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது. 18ஆம் நூற்றாண்டு வரை காசநோயினால் பாதிக்கப் பட்டவர்களுக்கு விட்டமின் டி சத்துக் குறைவினைத் தடுக்க முட்டையின் மஞ்சள் கரு, ஆட்டுக் கறி, மீன், மீன் எண்ணெய் மாத்திரைகள் போன்றவையே உணவாக உட்கொள்ள அறிவுறுத்தப் பட்டது. ஆனால் அய்யங்கார் வகுப்பினைச் சேர்ந்தவரான இராமானுஜன், இவ்வகை உணவுகளில் ஒன்றைக்கூட சாப்பிடாதவராக இருந்தார். மருத்துவர்கள் பலவாறு அறிவுறுத்தியும், மீன் எண்ணெய் மாத்திரைகளைக் கூட உட்கொள்ள அவர் தயாராக இல்லை. தனது உடல் நிலை தளர்வுற்ற போதிலும், சைவமே தன்னைக் காக்கும் என்று இராமானுஜன் போட்ட மனக் கணக்கு பெருந்த தவறாய் போனது. விபரீத முடிவினைத் தந்தது.

      சூரிய ஒளியானது நமக்கு வெளிச்சத்தை மட்டும் தருவதில்லை. சூரிய ஒளியிலிருந்து வெளிப்படும் புற ஊதாக் கதிர்கள் நம் தோலில் தொடர்ந்து படும்பொழுது, தோலில் உள்ள கொழுப்புக்களைத் தூண்டி, விட்டமின் டி உற்பத்தியை ஊக்குவிக்கும். ஆனால் இலண்டனில் வருடக் கணக்கில் நான்கு சுவர்களுக்குள்ளேயே  தனது  கணித வாழ்க்கையை அமைத்துக் கொண்ட இராமானுஜனுக்கு சூரிய ஒளியும் எட்டாக் கனியாய் மாறியது.

     இராமானுஜன் 1919 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 27 ஆம் நாள் இந்தியா திரும்பினார். இந்தியா திரும்பிய ஓராண்டிலேயே, 1920 ஆம் ஆண்டு ஏப்ரல் 26 ஆம் நாள், காசநோயே இராமானுஜனை மண்ணுலகிலிருந்து, விண்ணுலகிற்கு அழைத்தச் சென்றது.

     இராமானுஜன் தனது முதல் கொள்கையினைத் தளர்த்தியதைப் போலவே, தனது இரண்டாவது கொள்கையைப்  பிடிவாதத்தைச் சிறிது தளர்த்தியிருப்பாரேயானால், குறைந்த பட்சம் தனது உடல் நிலை முன்னேற்றம் அடையும் வரையிலாவது, மருத்துவர்களின் ஆலோசனையினைப் பின்பற்றி இருப்பாரேயானால், உடலியற் சூத்திரத்தினை உணர்ந்து, மருத்துவர்களின் ஆலோசனைகளைப் பின் பற்றி இருப்பாரேயானால், இராமானுஜனின் வாழ்வு எல்லையானது விரிந்து மலர்ந்திருக்கும்.

   இராமானுஜனும் நூறாண்டு வாழ்ந்து, கணித உலகில் ஆயிரமாண்டு முன்னேற்றத்திற்கானச் சாதனைகளைப் படைத்திருப்பார்.
----------------------------------

5 கருத்துகள்:

 1. Very nice article.ac csesable life give the
  more life .thanks sir.

  பதிலளிநீக்கு
 2. அருமையான தகவல்கள்.

  பதிலளிநீக்கு
 3. கணித மேதை தன் கொள்கைப்பிடிப்பால் மனதில் நிறைந்துவிட்டார். கணித ஈடுபாடு மட்டுமன்றி அவரது கொள்கைப்பிடிப்பும் உறுதியானது என்பதை கட்டுரை மூலம் உணர்த்திய உங்களுக்கு நன்றி. ஜம்புலிங்கம்

  பதிலளிநீக்கு
 4. அன்புள்ள ஜெயக்குமார்..

  உங்கள் புத்தகத்தைப் படித்தபோது எனக்குத் தோணியது. ஆனால் சைவப் பற்று உள்ளவர்கள் இப்படித்தான் இருப்பார்கள். ஆனால் நமது கொடுப்பினை அவ்வளவுதான். விதிவடிவில் அவரது உயிரைக் கவர்ந்துகொண்டுவிட்டது. எத்தனையோ பேர் காசநோயிலிருந்து மீண்டிருக்கிறார்கள். மீன் மாத்திரை சாப்பிடாமல் சரியாகியிருக்கும். ஆனால் இது விதியின் விளைவுதான். அவரது மன உளைச்சல் யார் அறியமுடியும்? ஒரு கணித மேதை தனது அறிவின் விலாசத்தை உலகுக்கு உணர்த்தியும் நாம் தந்த மரியாதை அவ்வளவுதான். அறிவாளிகள் எல்லோருமே இப்படித்தான் தரமாகக் கவனிக்கப்படாமல் நழுவவிட்டிருக்கிறோம். வருத்தம்தான்.

  பதிலளிநீக்கு
 5. கணித மேதை ராமானுஜன் அவர்களின் முழூ வரலாற்றையும் தங்களின் வலை தளத்தின் மூலம் அறிந்த நான், தற்போதைய தகவல்கள் கணித மேதையினை நாம் தவறவிட்டதனை உணர்த்தியுள்ள விதம் மிகவும் அருமை
  க.அரிசங்கர்பாபு

  பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு