தொழில் நுட்ப வசதிகள் ஏதுமில்லா
அக்காலத்தில், ஆயிரமாண்டுகளுக்கு முன்னர், வானுயர எழுப்பப் பெற்ற, கற் கோயிலின்
எழிலில், கம்பீரத்தில் மயங்கி, கோயிலின் வளாகத்திலுள்ள சில காட்சிகளை காணாமலேயே
சென்று விடுவது இயல்புதான். அவ்வாறு பலரும் காணாத காட்சி ஒன்றினைத் தங்களுக்குக்
காட்டிட விரும்புகின்றேன்.
வாருங்கள் நண்பர்களே, தஞ்சைப் பெரியக்
கோயிலுக்குச் செல்வோம். நண்பர்களே உங்களுக்குத் தெரியுமா? சென்ற நூற்றாண்டு
மக்கள், இப்பெரியக் கோயிலைக் கட்டியவர் யார் என்பதைக் கூட அறியாதவர்களாகவே
இருந்துள்ளனர். கிருமி கண்ட சோழன் என்னும் கரிகாலனால் கட்டப்பெற்றது
என்று, பிரகதீஸ்வர மகாத்மியம் என்னும் வடமொழி புராணத்திலும், காடு
வெட்டிச் சோழன் என்பவரால் கட்டப் பெற்றது என்று ஜி.யு.போப் அவர்களாலும்
பதிவு செய்யப் பெற்றத் தகவல்களையே உண்மை என்று, நம் முன்னோர் நம்பி வந்தனர்.
ஆங்கிலேய ஆட்சியின்போது, கல்வெட்டு
ஆய்வாளராக நியமிக்கப் பெற்ற ஜெர்மன் அறிஞர் ஹுல்ஸ் என்பவரே, 1886 ஆம்
ஆண்டில், பெரியக் கோயில் கல்வெட்டுக்களைப் படியெடுத்துப் படித்து, இக் கோயிலைக்
கட்டியவர் இராஜராஜ சோழன் என முரசறைந்து அறிவித்த பெருமைக்கு உரியவராவார்.
ஆம் நண்பர்களே, ஒரு ஜெர்மானியர் வந்து சொன்ன
பிறகுதான், பெரிய கோயிலைக் கட்டியது யார் என்பதே இந்நூற்றாண்டு மக்களுக்குத்
தெரிந்தது. நமக்கும் புரிந்தது.
இராஜராஜன் திருவாயில் |
பன்னிரெண்டு அடி உயரமுள்ள, ஒரே கல்லினால் ஆன
நந்தி, கம்பீரமாய் அமர்ந்திருக்கும் காட்சியைக் காணுகின்றோம். இந்த நந்தியைப்
பற்றிப் பல கட்டுக் கதைகள் உலாவுகின்றன. அவை நமக்குத் தேவையில்லை நண்பர்களே.
நந்தியைப் பற்றி நாம் அறிய வேண்டிய செய்தி ஒன்று உள்ளது.
பன்னிரெண்டு அடி உயரமுள்ள இந்த
நந்தியையும், நந்தி மண்டபத்தினையும் கட்டியவர் இராஜராஜ சோழனல்ல. வியப்பாக
இருக்கின்றதா நண்பர்களே உண்மைதான்.
நந்தி மண்டபத்தில் இருந்து இடது புறம்
பாருங்கள். இடது புற பிரகாரத்தில், வராகி அம்மன் கோயில் தெரிகிறதல்லவா.
அந்த வராகி அம்மன் கோயிலுக்கு அடுத்துள்ள, பிரகார மண்டபத்தில், அளவில் சிறியதாய்
ஓர் நந்தி சோகமாய் அமர்ந்திருப்பது தெரிகிறதா? வாருங்கள் அருகில் சென்று
பார்ப்போம்.
வாருங்கள் நண்பர்களே, நந்தி மண்டபத்தைக்
கடந்து, பெருவுடையாரைத் தரிசிக்க, முக மண்டபத்தின் படிக் கட்டுக்களில் ஏறுவோம்
வாருங்கள். படிகளில் ஏறிவிட்டோம். ஓங்கி உயர்ந்த, முதல் நிலை வாயிலின் இடது புறம்
பாருங்கள். விநாயகர். வலது புறம் பாருங்கள் விஷ்ணு துர்க்கை.
நண்பர்களே, இதோ விநாயகருக்கு இடது
புறமாகவும், விஷ்ணு துர்க்கைக்கு வலது புறமாகவும், இரண்டு துவார பாலகர்கள்
நிற்கின்றார்களே பாருங்கள்.
வாருங்கள், நிலை வாயிலின் இடதுபுறம்,
விநாயகருக்கு அடுத்துள்ள துவார பாலகரின் அருகில் செல்வோம் வாருங்கள். பாருங்கள்
நண்பர்களே, நெடிதுயர்ந்த துவார பாலகர், பாம்பு ஒன்றினைத் தனது வலது காலால்
மிதித்துக் கொண்டிருப்பதைப் பாருங்கள். இதிலென்ன ஆச்சரியம் என்கிறீர்களா? நன்றாக
அந்த பாம்பினைக் கவனியுங்கள். அந்தப் பாம்பானது, ஒரு யானையினை விழுங்கிக்
கொண்டிருக்கும் காட்சி தெரிகிறதல்லவா?
யானையை விழுங்கும் பாம்பு. உலகின் எம்
மூலையிலும், காண இயலாத விசித்திரக் காட்சி. இதன் பொருள்தான் என்ன?
இராஜராஜசோழன் பெரியக் கோயிலைக் கட்டிய
காலத்தில் இருந்த பெரிய விலங்கு யானைதான். அந்த யானையினை ஒரு பாம்பு விழுங்குகிறது
என்றால், அந்தப் பாம்பு எவ்வளவு பெரியதாக இருக்க வேண்டும். எண்ணிப் பாருங்கள்
நண்பர்களே. அவ்வளவு பெரிய பாம்பு, துவார பாலகரின் காலடியில், ஒரு மண் புழுவினைப்
போல், சுருண்டு மிதிபட்டுக் கிடக்கிறது என்றால், அந்த துவார பாலகர் எவ்வளவு
உயரமானவராக இருக்க வேண்டும். ஒரு நிமிடம் கற்பனை செய்து பாருங்கள்.
நண்பர்களே, துவார பாலகரின் இடது கையினைப்
பாருங்கள். அவ்வளவு பெரிய துவார பாலகர், தனது இடது கையினை கோயிலின் உள்ளே
அமைந்திருக்கும், மகாலிங்கத்தை நோக்கி, வியப்புடன் காட்டுவதைப் பாருங்கள். நான்
ஒன்றும் பெரியவனல்ல, உள்ளே இருக்கின்றாரே, அவரே மிகப் பெரியவர் என்னும்
பொருள்பட கைகளைக் காட்டுவதைப் பாருங்கள்.
நண்பர்களே, தஞ்சையிலே ராஜராஜேஸ்வரமடைய
பரமசாமி அமர்ந்திருக்கும் விமானத்திற்குப் பெயர் தஷிணமேரு என்பதாகும். இக்
கோயிலின் விமானம் பேரம்பலம். பேரம்பலம் என்பது ஒரு கட்டுமானப் பகுதி மட்டுமல்ல,
பரவெளியாகிய அம்பலமாகும்.
சிவமாக விளங்குகின்ற, நமது பிரபஞ்சமாகிய
பரந்த வெளியை, பூஜிப்பதற்காக, ஒரு நிலைப் படுத்திக் கட்டப் பெற்றதே பெரியகோயிலின்
விமானத்துள் காணப்படும் வெளியாகும். இங்கு எல்லையில்லாப் பிரபஞ்சம் பரவெளி, ஒரு
எல்லைக்கு உட்பட்டு விமானத்தின் உட்கூடாகக் காட்சியளிக்கின்றது.
நண்பர்களே, தாங்கள் சிதம்பரத்திற்குச்
சென்றிருப்பீர்கள். சிதம்பரம் கோயிலில், நடராஜப் பெருமானை தரிசித்தவுடன், சிதம்பர
இரகசியம் என ஓரிடத்தை தீட்சிதர்கள் காட்டுவார்கள். பார்த்திருப்பீர்கள்.
அங்கு சுவற்றில் தங்கத்தால் ஆன, வில்வ
இலைகள் தொங்கிக் கொண்டிருக்கும். அடுக்குத் தீப ஒளியிலும், கற்பூர தீப ஒளியிலும்,
திரைச் சீலையை விலக்கிக் காட்டும் பொழுது, பிரபஞ்சத்தில் ஒளிரும் கோடானு கோடி
விண்மீன்கள், கிரகங்களின் பேரொளியை, நாம் அங்கு ஒளிரும் தங்க வில்வ இலைகளில்
கண்டு, பிரபஞ்சமாகத் திகழும் ஆடல் வல்லானின் பேராற்றலை, உருவத்தை உணரலாம். பிரபஞ்சத்தை
உணர்தலே சிதம்பர இரகசியமாகும்.
சிதம்பரத்தைப் போன்றே, ஆதி அந்தமில்லாத பர
வெளியின் பேராற்றலை உணர்த்துவதே தஞ்சைப் பெரியக் கோயிலாகும். ஆம் நண்பர்களே, இப்
பிரபஞ்சமானது முடிவில்லாதது, எல்லையில்லாதது, பிரபஞ்சத்தின் பேராற்றல்
அளவிடற்கரியது என்பதை உணர்த்துவதே, துவார பாலகர்களின் நோக்கமாகும். இதுவே பெரிய
கோயிலின் தத்துவமுமாகும்.
நண்பர்களே, இராஜராஜன் இச்செய்தியினை
உணர்த்த முற்பட்டது, இன்று நேற்றல்ல. விஞ்ஞானம் வளர்ச்சி அடையாத, தொழில் நுட்பம்
ஏதுமில்லாத, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்.
எனது அழைப்பினை ஏற்று, தஞ்சைப் பெரிய
கோயிலுக்கு வருகை தந்தமைக்கு நன்றி நண்பர்களே. தங்களின் பொன்னான நேரம்,
பயனுள்ளதாகவே கழிந்திருக்கும் என நம்புகிறேன். மீண்டும் சந்திப்போமா நண்பர்களே.