If you want to make peace with your enemy,
You have to work with your enemy.
Then he becomes your partner.
என் வாழ்நாள் முழுவதும் ஆப்பிரிக்க
மக்களின் போராட்டத்துக்காகவே என்னை அர்ப்பணித்திருக்கிறேன். வெள்ளை ஆதிக்கத்திற்கு எதிராக நான்
போராடியிருக்கிறேன். கருப்பர் ஆதிக்கத்துக்கு எதிராக நான் போராடியிருக்கிறேன்.
எல்லோரும் ஒற்றுமையாக வாழக்கூடிய, எல்லோருக்கும் சமமான வாய்ப்புகள் கிடைக்கக்
கூடிய, ஜனநாயகப் பூர்வமான, சுதந்திரமான சமூகம் என்ற இலட்சியத்தையே நான் போற்றி
வந்திருக்கிறேன். நான் அடைய நினைப்பது இந்த இலட்சியத்தைத்தான். நான் வாழ நினைப்பது
இந்த இலட்சியத்துக்காகத்தான். தேவை என்றால், என் உயிரையும் துறக்க நினைப்பது இந்த இலட்சியத்துக்காகத்தான்.
நண்பர்களே, நாச வேலையில் ஈடுபட்டதாகக்
குற்றம் சாட்டப் பெற்று, தென்னாப்பிரிக்க உச்ச நீதிமன்றத்தில் குற்றவாளிக்
கூண்டில் நிறுத்தப்பட்ட, நெல்சன் மண்டேலா அவர்கள், 1964 ஆம் ஆண்டு ஏப்ரல்
20 ஆம் நாள், நீதிபதி டி வெட் அவர்களைப் பார்த்து, நெஞ்சம் நிமிர்த்தி, நேர்கொண்ட பார்வையோடு, முழங்கிய வார்த்தைகள்தான்
இவை.
ஒன்றல்ல, இரண்டல்ல, 27 ஆண்டுகள் சிறையில்
இருந்த ஒரே தலைவர் நெல்சன் மண்டேலா மட்டும்தான்.
இரு தரப்பின்ர் இடையேயும், வெறுப்பையும்,
வன்முறையையும் தவிர்க்க இடைவிடாமல் பேசிக்கொண்டே இருந்தார். மண்டேலாவின் இந்த
அமைதிப் போராட்டம் உலகையே உலுக்கியது. உலகின் அனைத்து மூலை முடுக்குகளில் இருந்தும்
எழுந்த கண்டனக் குரலும், கொடுக்கப்பெற்ற அழுத்தமும் நிற வெறி அரசை அசைத்தது.
நண்பர்களே, 1994 ஆம் ஆண்டு, தென்னாப்பிரிக்காவில் இனப் பாகுபாடு
ஒழிந்தது. அனைவருக்கும் ஓட்டுரிமைக் கிடைத்தது. தேர்தல் நடைபெற்றது. மண்டேலா
குடியரசுத் தலைவர் ஆனார்.
நண்பர்களே, நெல்சன் மண்டேலா, குடியரசுத்
தலைவரானதும் என்ன செய்தார் தெரியுமா? அதுநாள் வரை தென்னாப்பிரிக்க நிற வெறி அரசின்
அதிபராக விளங்கிய, எஃப்.டபிள்யு.டி.கிளர்க் அவர்களையே, துணை குடியரசுத்
தலைவராக்கினார். வெள்ளையரை அன்போடு அரவணைத்தார்.
கருணை, பெருந்தன்மை, தாயுள்ளம், இன்னா
செய்தாரை ஒருத்தல், என்றெல்லாம் கூறுவோமே, அச்சொற்களின் முழுவடிவம் மண்டேலா. ஆம்
நண்பர்களே, 1994 இல் குடியரசுத் தலைவராகப் பதவி ஏற்றபோது, சிறப்பு அழைப்பாளராக
யாரை அழைத்தார் தெரியுமா? சொன்னால் நம்ப மாட்டீர்கள்.
இருபத்தேழு ஆண்டுகள் சிறையில் இருந்தார்
அல்லவா? அந்தச் சிறையின் ஜெயிலரை சிறப்பு அழைப்பாளராக அழைத்திருந்தார்.
தென்னாப்பிரிக்காவில் நிறவெறி அரசு
மறைந்து, ஜனநாயக அரசு மலர்ந்தபோதும, ஓர் நினைவு மண்டேலாவை வாட்டிக் கொண்டே இருந்தது.
ஆம் நண்பர்களே, ஒரு பெண்ணின் நினைவு. அவர் பெயர் சாரா.
சாரா அவர்களின் முழுப் பெயர் சாரா
பார்ட்மன். இவர் 1815 ஆம் ஆண்டே இறந்து விட்டார். ஆம் நண்பர்களே, மண்டேலா
பிறப்பதற்கு நூறு வருடங்களுக்கு முன்னரே சாரா மறைந்து விட்டார். ஆனாலும்
சாராவிற்கு நேர்ந்த அவலம் மண்டேலாவை வாட்டிக் கொண்டே இருந்தது.
தென்னாப்பிரிக்க பழங்குடி இனமான கோய்ஸன்
என்ற இனத்தைச் சார்ந்தவர் சாரா. இவர் பிறந்த ஆண்டு 1789. சிறு வயது முதலே,
கடுமையான உடலுழைப்பிற்கு ஆட்படுத்தப் பட்டார். ஓங்கி நெடிது உயர்ந்த உருவம்
இவருடையது. உயரத்திற்கேற்ற பருமனான உடல்.
நணபர்களே, தென்னாப்பிரிக்காவிற்கு வந்த
இங்கிலாந்து கப்பலின் மருத்துவர் வில்லியம் டன்லப் என்பவரின் கண்களில்
படுகிறார் இந்த சாரா. வித்தியாசமான உடலமைப்பைக் கொண்ட சாராவைப் பார்த்ததும்
மருத்துவரின் மனதில் ஒரு குரூர எண்ணம் தோன்றியது. சாராவிடம் பேசினார். ஆசை
வார்த்தைகளைக் கூறினார். வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஏமாற்றி, சாராவை இலண்டன்
அழைத்துச் சென்றார்.
நண்பர்களே, இலண்டன் சென்றதும் மருத்துவர்
என்ன செய்தார் தெரியுமா? சாராவை ஆடையின்றிக் காட்சிப் பொருளாக்கினார். பூதாகரமான
பெண் என விளம்பரம் செய்து கண்காட்சி நடத்தினார். சாராவைப் பார்க்க, கேடு கெட்ட
மக்கள் குவிந்தனர்.
நண்பர்களே, சாரா இறந்த பிறகாவது அவரது உடலை
நிம்மதியாக விட்டார்களா என்றால், இல்லை. சாராவின் உடலமைப்பின் மீது ஆர்வம் கொண்ட,
ஒரு மனிதத் தன்மையற்ற அறிவியலாளர், ஜார்ஜியல் குய்வர் என்பார், சாராவின்
உடலை ஆராய்ச்சி செய்ய விரும்பினார்.
பிளாஸ்டர் காஸ்ட் முறையில் பொம்மை போல்
வடித்தார். இதோடு திருப்தி அடைந்தாரா என்றால் இல்லை. நண்பர்களே, அடுத்து அவர்
செய்த செயலைக் கேட்டால், அதிர்ச்சியில் உறைந்து போவீர்கள். சாராவின் உடலில்
இருந்து, அவரது மூளை மற்றும் அந்தரங்கப் பாகங்களை வெட்டி எடுத்து, பாரிஸ் நகரில்
உள்ள, மியூசியத்தில் காட்சிக்கு வைத்தார்.
நண்பர்களே, சாரா இறந்தபிறகும், அவரது உடல்
உறுப்புகள், 160 ஆண்டுகள் அருங்காட்சியகத்தில் காட்சிப் பொருளாகவே இருந்தன.
பின்னர் எழுந்த எதிர்ப்பின் காரணமாக, 1974 முதல் பொது மக்கள் பார்வைக்குத் தடை
விதிக்கப் பட்டது.
தென்னாப்பிரிக்காவின் குடியரசுத் தலைவரான
பிறகு, நெல்சன் மண்டேலா, சாராவின் உடல் கண்ணியமான முறையில், அடக்கம் செய்யப்பட
வேண்டும் எனக் கூறி, சாராவின் உடலின் எஞ்சிய பாகங்களைத் தருமாறு, 1994 இல்
பிரான்சிடம் கோரிக்கை வைத்தார்.
நண்பர்களே, பிரான்ஸ் அசைந்து
கொடுக்கவில்லை. நெல்சன் மண்டேலாவின் அடுத்தப் போராட்டம் தொடங்கியது.
சாரா பிறந்த, அதே கோய்ஸன் இனத்தைச் சாரந்த
, பெண் உரிமைப் போராளியும், கவிஞருமான, டயானா ஃபெர்ரஸ் என்பவர், 1988 இல் ஒரு
கவிதை எழுதினார்.
பிறந்த நாட்டுக்குக் கண்ணியமாக அழைத்துச்
செல்வேன்
என ஒரு கவிதை
எழுதினார். உருக்கமான இக்கவிதை உலகின் உணர்வையே உலுக்கியது.
நண்பர்களே, சாராவின் எஞ்சிய உடல் பாகங்கள்
2002 ஆம் ஆண்டுதான், தென்னாப்பிரிக்கா வந்து சேர்ந்தன.
தென்னாப்பிரிக்க நாட்டின், பெண்கள்
தினமான ஆகஸ்ட் 9 ஆம் நாள், சாராவின் எஞ்சிய உடல் பாகங்கள் நல்லடக்கம்
செய்யப்பட்டன.
நண்பர்களே, இவர்தான் மண்டேலா. எந்த ஒரு
ஜனநாயக நாட்டுக்கும், ஒரே தலைவர், நீண்ட காலம் ஆட்சியில் இருப்பது நல்லதல்ல,
எனக்கூறி, இரண்டாம் முறை தேர்தலில் போட்டியிடாமலேயே ஒதுங்கியவர்தான் மண்டேலா.
மண்டேலா தான் கன்ட கனவை
நனவாக்கியிருக்கிறார். இனப் பாகுபாட்டிற்கும், வெறுப்பு அரசியலுக்கும்,
வன்முறைப் பாதைக்கும் எதிரான, ஓர் உயிரோட்டமானச் சின்னமாக, தனது
தென்னாப்பிரிக்காவை அவர் மாற்றியிருக்கிறார்.
நண்பர்களே, நெல்சன் மண்டேலா அவர்களின்
அமரத்துவச் செய்தியை, தென்னாப்பிரிக்க நாட்டின், தற்போதைய அதிபர் ஜேக்கப் ஜுமா
முறைப்படி அறிவித்தார்.
நமது அன்புக்குரியவரும், தென் ஆப்பிரிக்க
ஜனநாயகத்தின் நிறுவனரும், அதிபருமான நெல்சன் மண்டேலா காலமானார். அவர் இப்போது
நிரந்தரமாக ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கிறார். அவர் இப்போது அமைதியாக இருக்கிறார்.
நண்பர்களே,
தென்னாப்பிரிக்கக் காந்தி,
நெல்சன் மண்டேலா
ஓய்வெடுக்கட்டும். அமைதியாய் உறங்கட்டும்.