நண்பர்களே, தாத்தா
தோட்டத்து வெள்ளரிக்காய். நூலின் பெயர் மட்டுமல்ல, நூலின் முகப்பு அட்டையும்
கூட, நம்மை, நமது கடந்த கால நினைவலைகளுக்கு, கைப்பிடித்து இழுத்துச் செல்லும்
வல்லமை வாய்ந்தவை. மீண்டும் ஒரு முறை அந்த
வசந்தம் திரும்பி வாராதா, என ஒவ்வொருவரையும், எண்ணி எண்ணி ஏங்க வைக்கும் தன்மை
வாய்ந்த சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல்.
இந்நூலின் ஆசிரியர் கவிஞர் இராய.
செல்லப்பா அவர்கள் ஒரு நவீன நாடோடி. ஆம் நவீன நாடோடிதான். இவர் இதுவரையிலான
தனது வாழ்க்கையின், முக்கால் பகுதியை, தமிழகத்திற்கு வெளியிலேயே செலவிட்டவர்.
இப்பொழுது மட்டுமென்ன, காடாறு மாதம், நாடாறு மாதம் என்று சொல்வார்கள் அல்லவா? அதைப் போலத்தான் வாழ்கிறார். காடு என்பதில் மட்டும் ஒரு சிறு மாற்றம். சென்னையில் ஆறுமாதம், நியூஜெர்சியில் ஆறுமாதம் என விமானத்தில் பறக்கிறது இவரின் வாழ்க்கை. கொடுத்து வைத்தவர்.
பள்ளி ஆசிரியராய் சில காலம், சென்னை சிட்டி
யூனியன் வாங்கி அதிகாரியாய் சில காலம், கார்ப்பரேசன் வங்கியில், கணினித் துறையில்,
உதவிப் பொது மேலாளராய் பல காலம் எனப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
கையெழுத்து மட்டுமே இட்டு, வாழ்ப்
பழகிவிட்ட வங்கி அதிகாரிகளுக்கு மத்தியில், கவிதை எழுதுத் தொடங்கியவர் இவர்.
மூன்றே ஆண்டுகள்தான் டெல்லி வாசம். அதற்குள் எத்தனை, எத்தனைக்
கவியரங்களுகள். அதன் விளைவு, எட்டயபுரத்து மீசைக்காரன், தலைநகரில் தமிழ்க்
குயில்கள் என்னும் இரு கவிதை நூல்கள்.
தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, கன்னடம்
என ஐந்து மொழிகளில் புலமை பெற்றும், இவரது மொழித் தாகம் இன்னும் அடங்கவில்லை.
தற்போது மலையாளமும், வங்காளமும் கற்று வருகிறார்.
நியூஜெர்சியில் மகள் வீட்டிலும்,
அட்லாண்டாவில் மகன் வீட்டிலும், நிம்மதியாய் ஓய்வெடுக்க வேண்டியவர், கணினியில் கை
வைத்தார். சுமார் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக, மனதில் சுமந்து கொண்டிருந்த
ஆயிரமாயிரம் நினைவுகளையும், எதிர் கொண்ட அனுபவங்களையும், அந்த அனுபவம் புகட்டியப்
பாடங்களையும், ஒவ்வொன்றாய், மனத்தில் இருந்து, கணினியில் இறக்கி வைக்கத்
தொடங்கினார்.
கதை, கட்டுரை, கவிதை, புத்தக விமர்சனம்,
பயணக் கட்டுரை என பல தளங்களிலும் பயணிக்கின்றன இவரது வலைப் பூக்கள். நாமெல்லாம்,
ஒரு வலைப் பூவில் எழுதுவதற்கே, மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்கும் நிலையில்
இருக்க, இந்த 64 வயது இளைஞரோ, இரண்டு வலைப் பூக்களை அநாசாயமாய் நடத்தி வருகிறார்.
இமயத்
தலைவன்
செல்லப்பா
தமிழ் டைரி
http://chellappatamildiary.blogspot.com/
கவிஞர் இராய. செல்லப்பா அவர்களின் கவிதை
நூல்கள் வெளிவந்து, இருபத்தியிரண்டு ஆண்டுகள் கடந்த நிலையில், இவரது தாத்தா
தோட்டத்தில் வெள்ளரிக்காய் முளைத்திருக்கிறது.
புத்தகத்தைத் திறந்தவுடன் கண்ணில் பட்டது,
இவரின் அன்புள்ளம்.
என்
இரண்டாவது தாயும்,
என்
மனைவியின் உயிர்த் தாயுமான
திருமதி
இராஜலட்சுமி சீதாராமன்அவர்களுக்கு
இந்நூல்.
யாருக்கு வரும்
இம்மனது? இதற்காகவே இந்நூலாசிரியரக்கு ஒரு தனி வணக்கம்.
சென்னையில், புத்தக வெளியீட்டு விழாவில், வலையுலக உறவுகளுடன் |
இந்நூலில் இருப்பதை சிறு கதைகள் என்று
கூறுவது கூடத் தவறுதான். தான் கண்டதை, தான் வாழ்ந்ததை, தான் அனுபவித்ததை,
தன்னுள்ளம் தக்க வைத்துக் கொண்டதை, அதன் இயல்பான போக்கில், உணர்வென்னும் நூலில்,
எழுத்து என்னும் உன்னதப் பூக்களைக் கோர்த்து, நறுமனம் வீசும் புத்தகமாக உருவாக்கியுள்ளார்.
அன்பின் மேன்மையை உணர்த்தும் சிறுவன்.
வாழ்க்கை என்பது நம்பிக்கைகளால் ஆனது என்பதை உணர்த்தும் ஓர் உள்ளம். உள்ளத்தனையது உயர்வென்ற வள்ளுவனின் வாய்மையைப்
புலப்படுத்தும் சாஸ்திரீயின் வாய்மையும், ஒழுக்கமும். குடும்ப அமைப்பின் முறிந்து
விடாத அச்சாணியை உணர்த்தும் முடிவற்ற தேடல், என ஒவ்வொரு சிறுகதையும் நம்மை
முழுமையாய் ஆட்கொள்ளும்.
மானுடத் தோட்டத்தில், எப்பொழுதும் பூச்சியரித்தலுக்கு
ஆளாகாமல், விளைந்திருக்கும் வெள்ளரிக் காய்கள் இவை.
தாத்தா என்னவோ நினைத்துக் கொண்டவராக, ஒரு
நிமிஷம் நில்லு என்று வயக்காட்டிற்குள் ஓடினார். திரும்பி வரும்பொழுது, கை நிறைய
வெள்ளரிப் பிஞ்சுகள், இந்தாடா, இதைச் சாப்பிட்டுக் கொண்டே போ. சந்தோஷமாக
இரு என்று ஒரு பிஞ்சை என் வாயிலிட்டார். இவ்வளவு நாள் இல்லாத இனிப்பை
உணர்ந்தேன். அதன் பெயர்தான் பாசம் என்று தெரிந்து கொள்ள பல வருடம் ஆனது.
பல வருடங்களுப்குப் பிறகு, கடைசி தடவையாக
நான் தாத்தாவைப் பார்க்கப்போன போது, எனக்குத் திருமணம் ஆகி ஐந்து மாதங்கள்
ஆகியிருந்தது. அவர் இறந்து போய் பத்து நாட்கள்.
நண்பர்களே, இந்த வெள்ளரிக்காயை, நீங்களும்
சுவைத்துத்தான் பாருங்களேன். ஒரு முறை சுவைத்தால், இதன் சுவையும், மனமும்,
குணமும், உங்கள் வாழ்நாள் முழுதும் உங்களுடனே நிழல்போல் இணைந்தே வரும்.
-------------------------------
எம். ஜி. ஆர் வாழ்கிறார்
உன் கண்ணில் ஒரு துளி - நீர்
வந்தாலும் உலகம் அழ வேண்டும்.
நண்பர்களே, 17.1.2014 வெள்ளிக் கிழமை.
பிற்பகல் 2.00 மணி, எம் பள்ளியில், தஞ்சை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திரு
தமிழரசு அவர்களின் தலைமையில், முதுகலை ஆங்கிலப் பாட ஆசிரியர்களுக்கான,
மீளாய்வுக் கூட்டம் நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டக் கல்வி அலுவலர் திரு ஜெயராஜ்,
கும்பகோணம் மாவட்டக் கல்வி அலுவலர் திரு டி.அண்ணா பிள்ளை
ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தஞ்சை மாவட்டம் முழுமையும் இருந்து
130க்கும் மேற்பட்ட, முதுகலை ஆங்கிலப் பாட ஆசிரியர்கள் , இக்கூட்டத்தில் கலந்து
கொண்டனர். மீளாய்வுக் கூட்டத்திற்கான ஏற்பாடுகளை, பள்ளித் தலைமையாசிரியர் திரு
வெ.சரவணன் அவர்கள் சிறப்பாகச் செய்திருந்தார்.
சங்க வளாகத்தில் இயங்கும் தேநீரகத்தில்
அனைவருக்கும், தேநீர் வழங்க ஏற்பாடு செய்திருந்தோம். பிஸ்கட் வாங்க வேண்டியிருந்தது.
நானும், நண்பரும் ஓவிய ஆசிரியருமான திரு ஜி.கோவிந்தராஜ் அவர்களும், பிஸ்கட்
வாங்குவதற்காக, பள்ளிக்கு வெளியே, கடைத் தெருவிற்குச் சென்றோம். ஓம் சக்தி கடையில்
பிஸ்கட் வாங்கினோம்.
அருகிலேயே நண்பர் பாலுவின் தேநீர் கடை.
சாலையினை வேடிக்கைப் பார்த்துக் கொண்டே தேநீர் அருந்தினோம். அன்று மாண்புமிகு
தமிழக முன்னாள் முதல்வர், பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர் அவர்களின் 97 வது பிறந்த
நாள்.
பாலு தேநீர் கடைக்கு எதிரில், நண்பர் வக்கீல்
முருகேசன் அவர்கள், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் படத்தினை, ஒரு மண
மேடையில் அலங்கரித்து வைத்திருந்தார். எம்.ஜி.ஆர் அவர்களின் திரைப் படப் பாடல்,
ஒலி பெருக்கியில் ஒலித்துக் கொண்டிருந்தது.
நான்
ஆணையிட்டால், அது நடந்து விட்டால்
இங்கு ஏழைகள்
வேதனைப் படமாட்டார்
உயிர் உள்ளவரை
ஒரு துன்பமில்லை – அவர்
கண்ணீர் கடலிலே
விழமாட்டார் – அவர்
கண்ணீர் கடலிலே
விழமாட்டார்
பாடலை ரசித்தபடியே தேநீர் அருந்திக்
கொண்டிருந்தோம். அப்பொழுது, எதிரில் ஒருவர், முதியவர் என்று கூற முடியாது, ஐம்பது வயது இருக்கும். ஒரு தட்டு வண்டியைத் தள்ளிக்
கொண்டு வந்தார்.
நண்பர்களே, தட்டு வண்டி என்றால், மூன்று
மிதிவண்டிச் சக்கரங்களின் மீது, ஒரு பலகையினைப் பொறுத்தி வைத்திருப்பார்கள்
அல்லவா, தள்ளு வண்டியில் தினமும்
பழங்களையும், பூக்களையும், தெருவோரங்களில் நின்று விற்பனை செய்வார்களே, அது போன்ற
வண்டி.
வண்டி முழுதும் ஜவ்வந்திப் பூக்கள். தஞ்சைப்
பழைய பேரூந்து நிலையத்தில் விற்பனை செய்வதற்காகத், தள்ளிக் கொண்டு வந்தார்.
எம்.ஜி.ஆர் படத்தினையும், பாடலையும்
கேட்டவுடன், அவரையும் அறியாமல், வண்டியினைத் தள்ளுவதை நிறுத்தி, சில நொடிகள்
எம்.ஜி.ஆர் அவர்களின் படத்தினையே பார்த்துக் கொண்டிருந்தார். பிறகு தனது வண்டியில்
இருந்து, இரு கைகளாலும் பூக்களை அள்ளி, எம்.ஜி.ஆர் படத்திற்கு, பூக்களால் அபிசேகம்
செய்தார்.
மீண்டும் வண்டியிடம் வந்தவர், ஏதோ ஓர்
சிந்தனையின் வயப்பட்டவராக, வண்டியைத் தள்ளாமல், மீண்டும் எம்.ஜி.ஆர் படத்தையே
பார்த்துக் கொண்டு நின்றார்.
நண்பர்களே, அடுத்து அவர் செய்த செயலைக்
கண்டு மலைத்துப் போய்விட்டோம். நாங்கள் மட்டுமல்ல, அந்தச் சாலையில் நின்று
கொண்டிருந்தவர்கள், போய்க் கொண்டிருந்தவர்கள் என, அக்காட்சியைக் கண்டவர்கள் அனைவரும்
பேச்சற்றுப் போய்விட்டார்கள். கண்கலங்கித்தான் போய்விட்டோம்.
அடுத்த நொடி, தனது மூன்று சக்கரத் தள்ளு வண்டியைத்,
தலை கீழாகப் புரட்டிப் போட்டார். வண்டியில் இருந்த பூக்கள் அனைத்தும், எம்.ஜி.ஆர்
படத்தின் காலடியில் கொட்டிச் சிதறின.
வண்டிக்காரரின்
முகத்தில் இப்பொழுது ஓர் மகிழ்ச்சி.
வணக்கம் தலைவா
அன்றைய
வியாபாரத்திற்குச் செல்லாமல், மீண்டும் வண்டியை, வந்த வழியாகவே திருப்பிக் கொண்டு
சென்றார்.
எம்.ஜி.ஆர்
என்ற மூன்றெழுத்து மந்திரத்தின் பொருள் விளங்கியது.
வணக்கம்
தலைவா.