தனித்தமைந்த வீட்டிற்புத் தகமும் நானும்
சையோகம்
புரிந்ததொரு வேளை தன்னில்
இனித்தபுவி இயற்கையெழில்
எல்லாம் கண்டேன்
இசைகேட்டேன், மணம்மோந்தேன் சுவைகள் உண்டேன்.
பாவேந்தர் பாரதிதாசன்
நண்பர்களே,
திருச்சி வாழ், வலையுலகப் பதிவர்,
திரு
தி.தமிழ் இளங்கோ அவர்கள்,
திருச்சி
புத்தகக் கண்காட்சி பற்றி, ஓர் அருமையான பதிவினை, தனது வலையில் பகிர்ந்திருந்தார்.
இப்பதிவினைக் கண்டு மகிழ்ந்தவாரே, கருத்துரைகளைப் படித்த எனக்கு, ஓர் இன்ப
அதிர்ச்சி காத்திருந்தது.
கருத்துரை
வழங்கியிருந்த,
திருச்சியினைப்
போலவே, தஞ்சையிலும் புத்தகக் கண்காட்சி நடைபெறவிருக்கிறது. தஞ்சைப் புத்தகக்
கண்காட்சி பற்றியும் எழுதுங்களேன் என்று கூறியிருந்தார்.
வலைச் சித்தரின் கருத்துரைக்கு, தஞ்சைப்
புத்தகக் கண்காட்சி பற்றி, கரந்தை ஜெயக்குமார் எழுதுவார் என எதிர்பார்க்கிறேன் என
மறுமொழியினை பதிவு செய்திருந்தார் திரு தி.தமிழ் இளங்கோ ஐயா அவர்கள்.
ஐயா அவர்களின் ஆணைக்கு, மறுப்பென்று ஒன்று
என்றும் உண்டோ. இதோ எழதத் தொடங்கிவிட்டேன்.
நண்பர்களே, சிறு வயதில் இருந்தே, என்னை
வெகுவாகக் கவர்ந்தவை புத்தகங்களே. இன்றும் நன்றாக நினைவிருக்கிறது. சிறுவனாக,
தஞ்சை, கரந்தை, மார்க்கெட்டில் இருந்த, ஒரு காய்கறிக் கடையில், காமிக்ஸ்
புத்தகங்களை 10 பைசா கொடுத்து, வாடகைக்கு எடுத்துப் படித்து ரசித்தது, இன்றும்
நீங்கா நினைவுகளாய் நெஞ்சில் பதிந்துள்ளது.
முத்து காமிக்ஸ்சின் கறுப்பு வெள்ளை மற்றும்
வண்ணப் புத்தகங்கள் அவை. இரும்புக் கை மாயாவி, ஜானி நீரோ, டார்ஜன் முதலான
கதாநாயகர்களைக் கொண்ட, கதைப் புத்தகங்களின் அன்றைய விலை ரூபாய் ஒன்றுதான். ஆனாலும்
ஒரு ரூபாய் கொடுத்து புத்தகங்களை விலைக்கு வாங்க இயலாத நிலை. கதைப் புத்தகம் வாங்க
வேண்டும், காசு கொடுங்கள் என்று வீட்டில் கேட்கவும் பயம். எனவே, பள்ளி நாட்களில்,
மிட்டாய் வாங்கித் திண்பதற்காக, அம்மாவிடம் பெறும் சில்லறைக் காசுகளைக் கொண்டு,
பத்து பைசா கொடுத்து, காமிக்ஸ் புத்தகங்களை வாடகைக்கு எடுத்துப் படிப்பேன்.
பத்து பைசா வாடகை கொடுத்து வாங்கும் ஒரு
புத்தகத்தை, ஒரு நாள் மட்டுமே வைத்துக் கொள்ளலாம். அடுத்த நாள் திருப்பிக்
கொடுத்துவிட வேண்டும். ஒரு நாள் தாமதமானாலும், கூடுதலாய் பத்து பைசா அபராதத் தொகை
கொடுக்க வேண்டியிருக்கும்.
சிறிது வளர்ந்ததும், காமிக்ஸ் போய்,
மாதாந்திர நாவல்கள் அந்த இடத்தைப் பிடித்தன.
முதன் முதலில் நான் படித்த கதை நைலான் கயிறு. சுஜாதாவின்
கதை. அன்று முதல் நான் சுஜாதாவின் ரசிகன். சுஜாதாவின் ரசிகன் என்பதைவிட, கணேஷ்
என்ற கதாபாத்திரத்தின் ரசிகன். பின்னர் வஸந்தும், கணேஷ் உடன் சேர்ந்த
பொழுது, என் மகிழ்ச்சி இரட்டிப்பாகியது.
சுஜாதாவின் கதைகளுக்காகவே, சாவி மற்றும்
குமுதம் வார இதழ்களை வாங்கி சேர்த்து வைப்பேன். தொடர் முடியும் வரை ஒவ்வொரு
இதழையும் பத்திரப் படுத்திப் பாதுகாப்பேன். தொடர் முடிந்ததும், அனைத்து இதழ்களில்
இருந்தும், சுஜாதாவின் கதையுள்ளப் பக்கங்களை மட்டும் கிழித்து எடுத்து, வரிசையாக
அடுக்கி, அச்சகத்தில் கொடுத்து பைண்டு செய்து வாங்குவேன். அம் மகிழ்ச்சிக்குத்தான்
ஈடு இணை ஏது?
பின்னர் சாண்டில்யன், பட்டுக்கோட்டை
பிரபாகர், கோவி.மணிசேகரன் எனத் தேடித் தேடி அலைந்தேன். கல்கியைக் கண்டதும்,
புதிதாய் பிறந்த ஓர் உணர்வு என்னை ஆட்கொண்டது. பொன்னியின் செல்வனையும்,
சிவகாமியின் சபதத்தையும், பார்த்திபன் கனவினையும், மீண்டும் மீண்டும் படித்தேன்.
இன்றும் படித்துக் கொண்டுதான் இருக்கிறேன். எத்தனை முறைப் படித்தாலும, சிறிதும்
அலுக்காத நூல்கள் அவை.
முதன் முதலில் புத்தகங்களை, ஒரு தகரப்
பெட்டியில் பாதுகாத்தேன். பின்னர் ஒரு மரச் சட்டங்களால் ஆன, சுவற்றில் தொங்க
விடப்படக் கூடிய, சிறு சிறு தட்டுகளில் அடுக்கி வைத்தேன். ஒவ்வொரு புத்தகமாய்
சேர்த்தேன்.
ஆசிரியர் வேலை கிடைத்து, சம்பாதிக்கத்
தொடங்கியவுடன், மாதந்தோறும் இயன்றவரை புத்தகங்களை வாங்கத் தொடங்கினேன். இன்று வரை
இரண்டாயிரத்து இருநூறு நூல்களைச் சேர்த்துள்ளேன். என் வாழ்நாளிற்குள் பத்தாயிரம்
புத்தகங்களைச் சேர்த்துவிட வேண்டும் என்ற ஒரு இலக்கினையும், மனதிற்குள் அடைகாத்து
வருகின்றேன்.
எனக்கு கல்வி தந்து, ஆசிரியர் பணியும்
தந்து, வாழ்வளித்த, கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் பெயரினையொட்டியே, கரந்தை
நூலகம் எனப் பெயரிட்டு, அனைத்து நூல்களுக்கும் வரிசையாய் எண் கொடுத்து, ஒரு
பதிவேட்டினையும் பராமரித்து வருகின்றேன்.
மனித்தரிலே
மிக்குயர்ந்த கவிஞர் நெஞ்சின்
மகாசோதி யிற்கலந்த தெனது நெஞ்சும்
சனித்ததங்கே
புத்துணர்வு, புத்த கங்கள்
தருமுதவி
பெரிது,மிகப் பெரிது காண்பீர்
எனப் பாடுவார்
பாவேந்தர். என் வீட்டு மாடியில் ஒரு சிறு அறை, நூலகம் போல் அமைத்துள்ளேன். நூல்கள்
புடை சூழ, நடுவில் அமர்ந்திருப்பதே ஒரு மகிழ்ச்சிதானே. மகிழ்ச்சி மட்டுமல்ல,
மிகவும் சோதனையான நேரங்களில், வேதனையான நொடிகளில், இவ்வறையில், ஒன்றும் செய்யாது,
சிறிது நேரம் அமைதியாய் அமர்ந்தாலே போதும், ஓர் இனம் புரியா ஆறுதல்.
தொடர்ந்து
பயணம் செல்
இதுவும் கடந்து
போகும்
என்பதை
உணர்த்தும், ஓர் உந்துதல், சோதனைகளில் இருந்து மீண்டு வருவதற்கான ஓர் வலிமை, ஓர்
தெளிவு, ஒரு புரிதல் எனக்கு இங்குதான் கிடைக்கிறது.
பொதுவாக நான் யாரையும், எதற்காகவும்
பார்த்து, பொறாமை பட்டது கிடையாது. முதன் முதலாக எழுத்தாளர், கவிஞர் இவையெல்லா
வற்றிற்கும் மேலாக, ஒரு மூத்த சகோதரராய் பழகும்
திரு
ஹரணி
அவர்களைப்
பார்த்த பிறகுதான், பொறாமை என்னுள் இருந்து சிறிது
எட்டிப் பார்த்தது.
திரு
ஜி.எம். பாலசுப்பிரமணியன் ஐயா அவர்களின்,
http://gmbat1649.blogspot.in/
தஞ்சை
வருகையின் போது, முதன் முதலாய், திரு ஹரணி அவர்களின் மாடி அறைக்குள் செல்லும்
வாய்ப்பு கிடைத்தது. சுவர் முழுவதும் சிமெண்டினால் ஆன அலமாரி.
பதினைந்தாயிரத்திற்கும் மேற்பட்ட நூல்கள், அந்த அறையெங்கும். நூல்களுடனேயே வசிப்பவர்
அவர்.
தஞ்சையில் ஒன்றிரண்டு புத்தகக் கடைகளே
எனக்குத் தெரிந்து இருந்தன. அவற்றிலும் பள்ளிப் பாட நூல்கள் மட்டுமே கிடைக்கும்.
இன்று பரவாயில்லை, பத்து கடைகள் இருக்கின்றன. இருப்பினும் நான்கு கடைகளில்தான்,
நாமே புத்தகங்களைக் கையில் எடுத்துப் புரட்டிப் பார்த்து தேர்வு செய்ய இயலும்.
தஞ்சையில் புத்தகக் கண்காட்சி என்பதே,
சமீபத்திய பத்து ஆண்டுகளில்தான். அதுவும் பெரிய அளவில்இருக்காது. ஏதாவது ஒரு
திருமண மண்டபத்தில், ஆடி மாதத்தில் நடைபெறும்.
அச்சு இயந்திரங்களைக் கண்டுபிடித்தவர் குட்டன்பர்க்
என்பதைத் தாங்கள் நன்கு அறிவீர்கள். குட்டன் பர்க் அவர்களின், ஓரிடத்தில் இருந்து,
வேறொரு இடத்திற்கு எளிதாக கொண்டு செல்லக் கூடிய, மொபைல் அச்சு இயந்திரங்களின்
உருவாக்கத்திற்குப் பிறகுதான், உலகின் முதல் புத்தகக் கண்காட்சி நடைபெற்றது.
நண்பர்களே, உலகின் முதல் புத்தகக்
கண்காட்சி எங்கு நடைபெற்றது தெரியுமா?
சொன்னால் நம்ப மாட்டீர்கள். இரண்டாம் உலகப் போருக்குப் பின், இவுலகப் போருக்குக்
காரணமான, ஜெர்மனியின், ப்ராங்பர்ட் நகரில், 1949 ஆம் ஆண்டு, முதல்
புத்தகக் கண்காட்சி நடைபெற்றது.
அறிவை விரிவு செய், அகண்டமாக்கு என்றாரே
பாரதிதாசன். அறிவை விரிவு செய்வதற்கானப் பயிற்சிப் பட்டறைகள் அல்லவா புத்தகங்கள்.
தஞ்சையில், ரோட்டரி கிங்ஸ் அமைப்பினர் கடந்த ஐந்து ஆண்டுகளாக, ரோட்டரி
புத்தகக் கண்காட்சியை சிறப்புடன் நடத்தி வருகின்றனர். ஐந்தாண்டுகளாகச் சென்று
வருகிறேன். அதிலும் கடந்த ஆண்டும், இவ்வாண்டும், புத்தகக் கண்காட்சியானது, என்
வீட்டில் இருந்து, ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்குள், மருத்துவக் கல்லூரி சாலையில்,
சாமியப்பா கூட்டுறவு மேலாண்மை நிலைய வளாகத்தில் நடைபெற்று வருகிறது.
தஞ்சை, ரோட்டரி புத்தகத் திருவிழா
நடைபெறும் வளாகத்திற்குள் நுழைந்தாலே, வேறொரு உலகில், காலடி எடுத்து வைத்த ஓர்
உணர்வு. அரங்கிற்கு முன்னால், ஓர் பெரிய அரச மரம். அரச மரத்தின் கிளைகள் எங்கும்,
புத்தகங்கள் காய்த்துத் தொங்குகின்றன. பாரதியார், பாரதிதாசன், புதுமைப் பித்தன்,
கண்ணதாசன், வைரமுத்து, சீவக, திருவள்ளுவர், என ஒவ்வொரு தமிழறிஞரின் படமும்
தொங்குகிறது.
தமிழ் மொழியென்பது, தொன்மையாய், மிகத்
தொன்மையான காலந்தொட்டே, பூமிக்குள் ஆழமாய், மிக ஆழமாய் வேர் விட்டு, நெடிது
வளர்ந்து, பரந்து விரிந்து, கிளைகள் பல பரப்பி, நீருள்ளளவும், நிலமுள்ளளவும்
நிலைத்து நிற்கும் தன்மை வாய்ந்தது என்பதைச் சொல்லாமல் சொல்லுகிறது, அரங்கின் முன்
நிற்கும் நெடிதுயர்ந்த அரச மரம்.
நீண்ட ப எழுத்து வடிவில் இருபுறமும்
கடைகள், கண்கொள்ளாக் காட்சியாய் தெரிகின்றன. ஒவ்வொரு கடையிலும் சுமார் ஒரு மணி
நேரமாவது செலவிட்டால்தான், அனைத்துப் புத்தகங்களையும், ஓரளவிற்காவது பார்க்கலாம்.
சந்தியா பதிப்பகத்தின் வாசலில், அப்பதிப்பக
எழுத்தாளர்களின் புகைப் படங்களைப் பாங்குற காட்சி படுத்தியிருந்தார்கள். அதிலொரு
அறிந்த முகம். நட்புடன் பழகும் முகம்.
தோழர்
இரா.எட்வின்
அவர்களைக் கண்டேன்.
நெஞ்சம்
மகிழ்ச்சியில் நிறைந்தது. எப்படியும் சொல்லலாம் என்னும் தோழரின் கவிதை நூல்
ஒன்றினை வாங்கி வந்தேன்.
தேடல்
நல்லது
தேடலாம்.
தேட
எதையேனும்
தொலைக்கலாம்.
முதலில்
தொலைக்க
எதையேனும்
தேடலாம்
---
இது
....
என்
மகன் வீடு
அவன்
நண்பர்களுக்கு.
என்
தங்கையின் வீடு
அவர்
தோழியர்க்கு.
என்
மனைவியின் வீடு
அவர்
அக்கா, அம்மா மற்றும்
தோழியர்க்கு.
என்
வீடுதான்
இது
என்
நண்பர்களுக்கு.
தொண்ணூறு
விழுக்காடு
இன்னமும்
கனரா
வங்கியின் வீடு
இது.
பொறுமையாய் ,தனிமையில் மீண்டும் மீண்டும்
படிக்க வேண்டும்.
முக்கியமான செய்தி ஒன்றினைச் சொல்ல மறந்து
விட்டேன். எதிர்வரும் 19.2.2014 புதன் கிழமை மாலை, இப் புத்தகத் திருவிழாவில்,
சமயம் கடந்த உ.வே.சா –வின் தமிழ்ப் பணிகள்
என்னும்
தலைப்பில்,
சொற்பொழிவாற்ற
வருகிறார்
நமது
வலையுலகச் சகோதரர்
கவிஞர் முத்து நிலவன் அவர்கள்.
புத்தகத் திருவிழா அழைப்பிதழில், ஐயா
அவர்களின் பெயரினைப் பார்த்த, அடுத்த நொடியே, அலைபேசியை எடுத்தேன், ஐயாவை
அழைத்தேன். புதன் கிழமை இரவு, தங்களுக்கு விருந்து, என் வீட்டில்தான் என்றேன்.
மகிழ்ந்து வருவதாய் உறுதியும் வழங்கியிருக்கிறார்.
நண்பர்களே, தஞ்சையின் ரோட்டரி புத்தகத்
திருவிழாவிற்கு வாருங்கள். விழா அரங்கில், தங்களின் பாதச் சுவடுகளைப் பதிய
வையுங்கள். நூல்களின் இனிய நறுமணத்தினை, நாசிகளில் ஏந்தி, இன்பக் கடலில் மிதக்க
வாருங்கள். வாருங்கள்.
மனிதரெலாம்
அன்புநெறி காண்ப தற்கும்
மனோபாவம் வானைப்போல் விரிவ டைந்து
தனிமனித
த்ததுவமாம் இருளைப் போக்கிச்
சகமக்கள் ஒன்றென்ப துணர்வ தற்கும்
இனிதினிதாய்
எழுந்தஉயர் எண்ண மெல்லாம்
இலகுவது புலவர்தரு சுவடிச் சாலை.
புனிதமுற்று
மக்கள்புது வாழ்வு வேண்டில்
புத்தகசா லைவேண்டும் நாட்டில் யாண்டும்.
- பாவேந்தர் பாரதிதாசன்.